இலங்கையின் தமிழர் தாயக பகுதிகளில் சிங்கள இராணுவத்தினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளினை முன்னிட்டு இனப்படுகொலைகள் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் 1985 ஆம் ஆண்டு இதேநாளில் மே மாதம் 15 ஆம் திகதி குமுதினி படகில் சென்ற தமிழர்கள் 72 பேரில் 36 பேர் கொல்லப்பட்டும் 30 பேர்வரை படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் இன்றும் தமிழர்கள் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளது. யாழ்ப்பாணம் நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவு குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினி படகில் சென்ற பயணிகளை இடைமறித்த சிங்கள கடற்படையினர் நடுக்கடலில் வைத்து கூரிய கத்திகள் கோடரிகளால் வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்றாகும். 7 மாத குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை படுகொலை செய்யப்பட்டதன் 32 ஆவது ஆண்டு நினைவு நாளில் படுகொலை செய்யப்பட்டவர்களோடு காயங்களுடன் இறந்தவர்களாகவே கிடந்த நிலையில் உயிர் தப்பியவர்களின் சாட்சியங்கள் பதிவாகியுள்ளன. ஒவ்வொருதராக வெட்டியும் குத்தியும் படுகொலை செய்யும்போது குரல் எழுப்பியவர்கள் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நேரில் கண்ட சாட்சியங்கள் அன்று பதிலளித்துள்ளனர். அதேநேரம் தப்பித்துக்கொள்ள சிலர் கடலில் குதித்து நீந்தி செல்லவே அவர்களை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
http://tamilarasial.com/2017/05/15/