—
யாழினி யோகேஸ்வரன்
திறந்து போனதாய்ச் சொன்ன கதவுகள் எல்லாம்
ஒரே நடையில் அடைத்துப் போயின
அறையெங்கும் நாற்றம் பெருக்கெடுக்கிறது
மூடிய அறைகள்
மனித இரத்தங்களையும்
சதைப் பிண்டங்களையும்
எலும்புக்கூடுகளையும்
ஒரு சேர கடை பரப்பியுள்ளன
உள்ளே வாழ முடியாததாயும்
வெளியே சாக முடியாததாயும்
திணறிப் போகிறது
மனம்
கழுவித் துடைத்துவிட
இவை ஒன்றும்
கறை படிந்த சட்டை அல்ல
துயரக்கிடங்கின் முதுகு மேலேறி
தலை மெல்ல எட்டி நீட்ட
மேலும் துயர்
மேனியெங்கும் துயர்
விரைந்தோடி வருகிறது
ஒரு குண்டடி பட்டவளின்
குருதியைப் போல
குருதி திண்மப்பட
உயிரும் உறைந்துவிடும்
உலகும் ஆழ்ந்து விடும்
உறக்கத்தின் பொருட்டு