ஆயுதங்களுடன் பெண்கள் இருந்தபோது பெண்களை ஏற்றுக்கொண்ட சமூகம், பின்னர் ஆயுதம் மௌனித்த பின் தனது சுய ரூபத்தைக் காட்டியிருக்கிறது –ஔவை – கனடா
நன்றி http://www.naduweb.net/article/avvai-interview/
வாசகர்கள் என்னை எனது கவிதைகளால் தான் அறிந்து கொள்ள முடியும். வேறெந்த விடயங்களாலும் வாசகர்களுடன் எனக்கு அறிமுகம் இருக்க வாய்ப்பில்லை. பெண்நிலை சார்ந்த ஓரிரு கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஆனாலும் என்னை அடையாளப்படுத்துபவை எனது கவிதைகள் என்றே நினைக்கிறேன். எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து, அவ்வப்போது ஆனால் தொடர்ச்சியாக பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் இன்றுவரை எழுதிவருகிறேன். எனது கவிதைகளில் சில, சொல்லாத சேதி, மரணத்துள் வாழ்வோம் ஆகிய கவிதை தொகுப்புக்களில் பின்னர் சேர்க்கப்பட்டிருந்தன. 2000 மாம் ஆண்டில், நண்பர் பௌசரின் முயற்சியால் மூன்றாவது மனிதன் பதிப்பக வெளியீடாக எனது எல்லை கடத்தல் என்ற தொகுதி வெளிவந்தது. 2013 இல், அதன் பின்னர் எழுதப்பட்ட கவிதைகளையும் சேர்த்து காலச்சுவடு வெளியீடாக “எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை” என்ற எனது இரண்டாவது தொகுப்பு வெளியானது. எண்பதுகளிலிருந்து அண்மைக்காலம் வரையான நமது காலத்தின் சமூக அரசியற் போக்கை ஓரளவுக்கு எனது பார்வையில் இவற்றின் மூலம் பதிவுசெய்துள்ளதாக நினைக்கிறேன்.
அடிப்படையில் ஆசிரியையாக இருந்த நீங்கள் கவிதை எழுதவேண்டிய பின்புலங்கள்தான் என்ன ?
இந்தக் கேள்வியில் சற்று திருத்தம் செய்யவேண்டும். நான் அடிப்படையில் ஒரு ஆசிரியராக இருந்துகொண்டு கவிதைகளை எழுதியதாக சொல்வது தவறு. நான் ஆசிரியத் தொழிலுக்கு வருவதற்கு முன்னரே எனது முதலாவது தொகுப்பின் பல கவிதைகள் எழுதப்பட்டு விட்டன. ஆசிரியத் தொழில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொழிலாக இருந்தது உண்மையாயினும் எனது கவிதை எழுதுவதற்கான உந்துதல் அந்தத் தொழிலின் தாக்கத்தால் எழுந்ததாக சொல்ல முடியாது. மறுதலையாக, எனது கவிதைகளை எழுதுவதற்கான உந்துதலுக்கு காரணமாக இருக்கும் எனது சமூக அரசியல் பார்வையும் அனுபவங்களும் ஒரு நல்ல ஆசிரியராக செயற்படுவதற்கு எனக்கு துணைசேர்த்தன என்றே சொல்ல வேண்டும். பாடசாலையில் எனது மாணவிகள் (எனது ஆசிரியப் பணி இருபத்தி இரண்டு வருடங்களாக முழுமையாக ஒரு பெண்கள் பாடசாலையிலேயே நிகழ்ந்தது) கற்றல் செயற்பாடுகளுடன் இணைந்து, சமூக கலாசார கலை இலக்கிய விடயங்களிலும் அக்கறை கொண்டவர்களாக ஆக்குவதில் எனது பங்களிப்பை வழங்கவும் இவை துணையாக இருந்தன. மாணவிகளை எழுத்துத்துறை மற்றும் நாடகத்துறையில் செயற்பட நான் முடிந்தளவு ஊக்குவித்தேன். பல நாடகங்களைத் தயாரித்து பாடசாலைகளுக்கிடையிலான பிரதேச, மாவட்ட அளவுகளிலான போட்டிகளில் மாணவிகள் பங்குபெற அவர்களுக்கு வழிகாட்டினேன். எனது தயாரிப்பில் உருவான நாடகங்கள் எல்லாமுமே பெண்களின் அடக்குமுறைக்கும், வன்முறைக்கும் எதிராக குரல் எழுப்பியவை. எனது கவிதை மீதான ஈடுபாடும், இயக்கமும் இதற்கான அடிப்படையாக இருந்தன என்பதே பொருத்தமானது.
தாயகத்திலேயே பல இடங்களுக்குப் புலம் பெயர்ந்திருக்கின்றீர்கள் அப்பொழுது நீங்கள் சந்தித்த சவால்கள் எப்படியாக இருந்தது ?
உண்மையில் தாயகத்தில் பல இடங்களுக்கு நான் புலம்பெயர்ந்ததென்று சொல்ல முடியாது. ஆனால் யுத்தம் காரணமாக பலதடவைகள் வீட்டை விட்டு உடுத்த உடுப்புடன் தற்காலிகமாக இடம்பெயர்ந்திருக்கிறோம். குறிப்பாக இந்தியன் ஆமிக்காலத்தில் (இப்படித்தான் நாங்கள் சொல்லுவோம். இந்திய அமைதி காக்கும் படை என்று சொல்லத் தொடங்கிய ஒரு சில மாதங்களுக்குள்ளேயே அது வெறும் இந்தியன் ஆமியாகிவிட்டது.) அடிக்கடி இப்படியான இடப்பெயர்வுகள் நடந்தன. எங்கள் கண்களின் முன்பாகவே பல அநியாயங்களை பார்க்கவேண்டிய துர்ப்பாக்கியநிலை இருந்தது. உணவுப்பொட்டலம் எறிவதில் தொடங்கிய இந்தியன் ஆமிக்காலம் எங்கள் அயலவர்களை அநியாயமாக சுட்டும், எங்கள் பெண்களை வன்புணர்வு செய்தும், எங்கள் உடைமைகளை அழித்தும் வன்முறை செய்தது. அப்போது நான் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தேன். மாணவர் விடுதியில் தங்கி இருந்தேன். பல்கலைக்கழகத்திற்கு அருகில் விடுதலைப்புலிகளுடன் நடந்த சண்டையின் பின் விடுதியில் இருந்த எங்கள் உடைமைகள் எல்லாம் அழிக்கப்பட்டிருந்தன. அதே போல அளவெட்டியில் இருந்த எங்கள் வீட்டின் நூல்கள் எல்லாம் முற்றத்தில் போடப்பட்டு கொழுத்தப்பட்டிருந்தன. எல்லாம் இந்தியன் ஆமியின் கைங்கரியங்கள். அதுமட்டுமல்ல, எங்கள் அயல் ஊரில் இருந்த வேறு இயக்க உறுப்பினர்களுடன் வந்து அயல் வீடுகளில் கோழிகளைப் பிடித்து எங்கள் வீட்டில் மிளகாய்த்தூள் எடுத்து கோழிக்கறி சமைப்பார்கள். அக்காலம் மிகவும் கொடுமையானது. நீண்ட முழுப்பாவாடை போடவேண்டும். அயலவர்கள், அம்மா எல்லோரும் இந்தியன் ஆமிக்கு மிகவும் பயந்தார்கள். பெண்களாக இருந்ததால் நாமும் மிகவும் பயந்தோம். இப்படிபல கதைகள் இருக்கின்றன.
நீங்கள் தாயகத்தில் இருந்தபொழுது பல மகளிர் செயல்பாடுகளில் ஈடுபட்டதாக அறிந்தேன். அது பற்றி ………..?
ஆரம்பத்தில் விடுதலைப் போராட்ட அரசியலை அறிவதற்காக நானும் எனது நண்பிகளும் சேர்ந்து ஒரு சிறு குழுவாக இருந்தோம். தமிழ் ஈழ தேசியவிடுதலை முன்னணியுடன் இணைந்து சில காலம் வேலை செய்தோம். பல கிராமங்களுக்கு சென்று பெண்கள் அமைப்புகள் கட்டினோம்., பெண்விடுதலைக் கருத்துகளை பகிர்ந்தோம். அதே நேரம் பெண்கள் ஆய்வு வட்டத்திலும் நடைபெறும் கூட்டங்களிலும் பங்கு கொண்டோம். அந்த நேரத்தில் தான் செல்வி, சிவரமணி ஆகியோரின் நட்புக்கிடைத்தது. பல விடயங்களை ஒரு தளத்தில் இருந்து கதைப்பதற்கான வாய்ப்பான காலம் அது.
போராட்டம் இளம்தலைமுறையினரை அலை அலையாக உள்வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில் ஓர் பெண்ணாக, பெண்கள் சந்தித்த சவால்கள் எப்படியாக இருந்தது ?
ஆரம்பத்தில் பெண்கள் போராட்டத்தில் உள்வாங்கப்பட்ட போதும் அவர்கள் அரசியல் வேலைகள், பத்திரிகை வெளியிடல், அவற்றை விநியோகித்தல் போன்ற வேலைகளில் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டார்கள். அப்போது பெண்கள் இயக்கங்களுக்கு போவது குடும்பங்களில் பெரும் சவாலாக இருந்தது. அடக்கம் இல்லாமல் திரிவதாக சிலர் பேசிக்கொண்டார்கள். மரியாதைகுறைவாகக் கதைத்தார்கள். ஆனால் விரைவிலேயே எல்லா இயக்கங்களிலும் பெண்கள் இணைத்துக் கொள்ளப்பட்டார்கள்; ஆயுதப்போராட்ட அணியிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இதன் பின் நான் ஏற்கனவே எழுதியது போல ‘சொல்லாமல் போகும் புதல்வர்கள்’ மட்டுமல்லாமல் புதல்விகளும் ‘சொல்லாமல் போகத்’ தொடங்கினர்’. போராட்ட காலம் வரையும் பெண்போராளிகள் பெரிதாக பெண்ணிலை சார்ந்த சவால்களை எதிர்கொண்டதாக நான் அறியவில்லை. ஆயுதங்களுடன் பெண்கள் இருந்தபோது பெண்களை ஏற்றுக்கொண்ட சமூகம், பின்னர் ஆயுதம் மௌனித்த பின் தனது சுயரூபத்தைக் காட்டியிருக்கிறது.
உங்களுடைய கருத்துக்கள் அல்லது உணர்வுகள் ஓர் பெண் என்ற காரணத்துக்காக மறுதலிக்கப்பட்டிருக்கின்றதா ?
பலமுறைகள்.
நீண்ட நெடிய போர் முடிவடைந்ததின் பின்னர் பெண்கள் அதிலும் பெண்போராளிகள் அடைந்த உளவியல் தாக்கங்கள் எப்படியாக இருந்தது ?
அவர்கள் எந்த மக்களின் விடுதலைக்காக போராட என்று தமது உயிரையும் உறவுகளையும் துச்சமாக மதித்து களத்தில் இறங்கினார்களோ அந்த மக்கள் மத்தியில், யுத்த முடிவின் பின் சாதாரண வாழ்க்கையை வாழ வரும்போது, பலவிதத்திலும் பெண் என்ற ரீதியில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்களது சமூகமே அவர்களை தம்முடன் இணைத்துக் கொள்ள தயங்குகிறது. அல்லது அவர்களைப் புறக்கணிக்கிறது. இவற்றை எதிர்கொண்டு வாழ்வதற்கான பல சவால்களை அவர்கள் எதிர்கொள்ளுகிறார்கள். வதிவிடம், வாழ்வாதாரம், திருமணம் என்று எல்லாவற்றிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பல. அதிலும் அங்கவீனப்பட்ட பெண்போராளிகளின் நிலை மிக மோசமானது. இது பற்றி நிறைய பேசலாம். தனியாகப் பேசப்படவேண்டிய விடயம்.
எங்கள் சமூகத்தில் பெண்படைப்பாளியின் பங்கு எப்படியாக இருக்கின்றது ?
80 களுக்குப் பின்வந்த காலங்களில் பெண்கள் அதிகளவில் கவிதைகள் மூலம் இலக்கிய உலகினுள் பிரவேசித்திருக்கிறார்கள். அவர்கள் சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் ஆணாதிக்க சிந்தனைகளை தமது படைப்புகள் மூலம் கேள்விக்குள்ளாக்கி வந்திருக்கிறார்கள். அதன் அவலத்தை சித்தரித்திருக்கிறார்கள். பெண்களின் வலிகளைப் பற்றி உரக்கப் பேசியிருக்கிறார்கள். துவக்குகள் மனிதருடன் பேசிக்கொண்டிருந்த காலத்திலும் கூட பெண்கள் அடக்குமுறைக்கும், அதிகாரத்துக்கும் எதிரான, சமூகத்துக்கான தமது குரல்களை ஒலித்தவண்ணமே இருந்திருக்கின்றனர்!
இப்போது நாவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. முப்பது வருடகால யுத்தவாழ்வில் மூழ்கி இருந்த பலருக்கு 2009 க்குப் பின்னான காலம் எழுதுவதற்கான அவகாசத்தைக் கொடுத்திருக்கிறது. நாம் இன்னும் பல படைப்புக்களை எதிர்பார்க்கலாம்.
உங்கள் தந்தையாரும் கவிஞர் இ முருகையனும் சமகாலத்தவர்கள். இவர்களுக்குள்ளான தொடர்புகள் எப்படியாக இருந்தது ?
அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். எவ்வளவு நடைமுறைச் சிக்கல்கள் இருந்த போதும் அவர்கள் அடிக்கடி சந்தித்துப் பேசுவார்கள். உண்மையில் முருகையன் மாமா மட்டுமல்ல, அப்பாவின் இலக்கிய நண்பர்கள் அனைவருமே எங்கள் குடும்ப நண்பர்களாக இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். எனது தந்தை வீட்டுக்கு வெளியில் தனது இலக்கிய உறவுகளை வைத்திருந்ததில்லை. எல்லோருமே அப்பாவை சந்திப்பதற்கு வீட்டுக்கே வருவார்கள். இரவு 12-1 மணிவரை வீட்டில் நண்பர்கள் இருப்பார்கள். இந்த இடத்தில் எனது அம்மாவை நான் பெருமையாக நினைத்துக் கொள்கிறேன். அப்பாவின் ஆளுமையைவிட அம்மாவின் ஆளுமை மிக அதிகம். வீடு, பிள்ளைகள், உறவுகள் எல்லாவற்றையும் சமநிலையில் பேணி அப்பாவின் ஆளுமைக்கு ஆதாரமாக வாழ்ந்திருக்கிறார். எங்கள் வாழ்வினதும், உயர்வினதும் ஆதார சுருதி எங்கள் அம்மா தான்.
துப்பாக்கிகள் பேசிய காலகட்டங்களிலும் அதன் பின்னர் பேசாத கட்டங்களிலும் ஈழத்து கவிப்பரப்பானது எப்படியாக இருக்கின்றது ?
துப்பாக்கிகள் பேசிய காலத்தில் பேசியவர்கள் மிகச் சிலரே. ஆனால் துப்பாக்கிகள் மௌனித்த பின்னர் பரவலாக நிறையப்பேர் பேசமுனைந்துள்ளார்கள். உண்மையில் ஈழக்கவிதைகள் நமது குரல்களை ஒலித்தபடியே இருந்திருக்கின்றன. ஈழத்தின் கவிதைப்பரப்பில் பேசப்படும் விடயம் தொடர்பாகப் பெரிய மாற்றம் இல்லை. சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பேசும் மொழிசார்ந்து ஏற்பட்டிருக்கின்றன. ஆனால். சிறுகதை, நாவல் போன்ற பிற படைப்பு முயற்சிகளில் பேசும் பொருள், பேசும் மொழி என்பவற்றில் நிச்சயமாக பெரியளவு மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அவை பற்றிய உரையாடல்களும் இப்போது நடைபெற்று வருகின்றன. வெளிவந்து கொண்டிருக்கும் படைப்புகளுக்கும், அவை பற்றிய உரையாடல்களுக்கும் இடையில் நடைபெறும் பரிமாற்றங்கள் திருப்தி தரக் கூடிய அளவு இருப்பதாக சொல்ல முடியாவிட்டாலும் அவை நடப்பதே ஒரு நல்ல ஆரம்பம் என்றே நினக்கிறேன்.
ஈழத்துக்கவிதாயினிகளின் கவிதைப்படைப்புகளானது சமகாலத்தில் எத்தகைய வீச்சுகளைக் கொண்டிருக்கின்றன ?
பரந்த வீச்சைக் கொண்டிருக்கின்றன என்று சொல்ல முடியும். பெருமைப்படக் கூடிய நிறைய அம்சங்கள் உண்டு. பாவிக்கும் மொழி, பேசும் பொருளும் அதன் அரசியலும், சொல்லும் முறை மூலமாக வெளிப்படும் அழகியல் என்று அனைத்துப் பரப்பிலும் அவை பல புதுமைகளை நிகழ்த்தி வருகின்றன. ஈழத்துக் கவிதை உலகில் பெருமை கொள்ளத் தக்க மாற்றங்கள் நடக்கின்றன என்று சொல்லலாம். இவை மேலும் ஆழமும் விரிவும் கொண்டு வளரும் என்பதை கடந்த கால மாற்றங்கள் உணர்த்துகின்றன.
ஈழத்து கவிதைப்பரப்பில் கவிதாயினிகளின் அதிக பங்களிப்பும், மாற்றுக்குரலும், வடிவச்செழுமையும் எத்தகைய காலகட்டத்தில் உச்சம் பெற்றன?
என்னைப் பொறுத்தளவில், 80களில் எழுதத் தொடங்கிய பெண்களின் கவிதைகளுடன் தான் மாற்றுக் குரலும் அதிகளவிலான பங்குபற்றுகையும் நடக்கத் தொடங்கியிருக்கிறது என்று நினைக்கிறேன். மாற்றுக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், பெண்நிலை சார்ந்து நின்று, பெண்கள் தமது உணர்வுகளை, கேள்விகளை, நியாயங்களைப் பேசத் தொடங்கிய காலகட்டம் அது என்று நினைக்கிறேன். இந்தக்காலம் தான், பெண் கவிஞர்கள் முன்னெப்போதுமில்லாத அளவில் அதிகமாக எழுதிய காலகட்டம் என்று சொல்லலாம். கவிதை மொழியிலும் கவனிக்கத்தக்க மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிய காலம் அது. பெண்களின் கவிதைகளை மட்டும் கொண்ட ‘ சொல்லாத சேதிகள்’ என்ற ஒரு தொகுப்பு முதன் முறையாக ஈழத்தில் வெளியிடப்பட்ட காலமும் அதுதான். அதன் தொடர்ச்சியாக பல விதமான வளர்ச்சிகளுடன் கவிதைப் போக்கு வளர்ந்துள்ளதாயினும், 80 களில் நடந்த மாற்றம் போன்று, அரசியல், மொழி, சொல்லும் முறை என்று அனைத்திலும் ஏற்பட்ட ஒரு மாற்றம் என்று சொல்ல முடியாது. இதற்கு அன்று ஏற்பட்ட சமூக, அரசியல் மாற்றங்களும், இவை ஏற்படுத்திய விழிப்புணர்வும் ஒரு காரணமாக இருக்கலாம்.
கவிதைக்குப் பால்வேறுபாடுகள் உண்டா ?
கவிதை பற்றிய உங்களது இந்தக் கேள்வியின் அர்த்தமும் நோக்கமும் எனக்குப் புரியவில்லை. அதன் நேரடியான அர்த்தத்தின் அடிப்படையில் பதில் சொல்வதானால், எனது பதில் ஆம். அதற்குப் பால் வேறுபாடு மட்டுமல்ல, சாதி, மத, இன, நிற மொழி வேறுபாடுகள் எல்லாமே இருக்கின்றன. அதற்குக் குறி இருப்பதாக சொல்வதும் கூட பொருத்தமானது தான்!. ஆனால் இந்த எல்லா வேறுபாடுகளிலும், அடிநாதமாக சமூக நீதிக்கான குரல் இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.
உங்களைப் பொறுத்தவரையில் கவிதையானது எப்படியாக இருக்கவேண்டும்?
கவிதை கவிதையாக இருக்க வேண்டும். படிக்கும் போது மனதையோ, அறிவையோ அதிர்வுக்குட்படுத்த வேண்டும். அது எத்தகைய அதிர்வாக இருப்பினும் சரி. வாசித்த பின்னரும் அந்த அதிர்வு என்னுள் இருக்க வேண்டும். அது எனக்குள் பேசவேண்டும். அதன் பின்னர்தான் மற்ற விடையங்கள். வேறெதுவும் இல்லாவிட்டாலும் சரிதான்.
கவிதை இனி மெல்ல மெல்லச் சாகும் என்ற எண்ணப்பாடு பொதுவெளியில் உண்டு .இது பற்றி………… ?
அப்படியா ? நான் அப்படி ஒரு எண்ணப்பாடு பற்றிக் கேள்விப்படவில்லை. கவிதை அழிந்து போவதற்கான எந்த நியாயங்களும் உருவாகிவிட்டதாக நான் நினைக்கவில்லை. மனித மனமும், அறிவும், மொழியும் இருக்கும் வரை, கவிதை இல்லாமல் போகும் வாய்ப்பு வருவதற்கு நியாயமில்லை. அதன் வடிவமும், சொல்லும் முறையும், பேசும் பொருளும் மாறலாம். மாறத்தான் செய்யும். அதற்கான காரணங்கள் காலத்தின் போக்குடன் உருவாகி வரத்தான் செய்கின்றன.
பெண்ணியம் அல்லது பெண்விடுதலை என்பது உங்கள் பார்வையில் எப்படியாக இருக்கின்றது ?
நான் எழுதத் தொடங்கிய எண்பதுகளில், அதன் தேவையும் முக்கியத்துவமும் பேசப்படுவது எவ்வளவு அவசியம் என்று கருதினேனோ, அதே பார்வையை நான் இன்றும் கொண்டிருக்கிறேன்.
வெளியே பெண்விடுதலை பேசிக்கொண்டும் பெண்ணியம் கதைத்துக்கொண்டும் தங்கள் சொந்த வாழ்க்கையில் அதற்கு நேரெதிராக இருக்கும் பெண்கள் பற்றிய உங்கள் எண்ணப்பாடுதான் என்ன ?
பல பெண்கள் இன்றும் கூட சூழ்நிலையின் கைதிகளாக இருக்கின்றார்கள். இது அவர்களின் தனிப்பட்ட பிழையல்ல. சமூகத்தின் பிழை. ஆணாதிக்க சமூக அமைப்பின் வேர்கள் மிக ஆழமானவை. ஆண்டாண்டு கால அடக்குமுறையின் வெளிப்பாடுகள் இன்னும் அழியவில்லை.
ஆனால் சாதி ஒழிப்பு, விடுதலை, சுதந்திரம், ஆன்மீகம் பரோபகாரம், சகோதரத்துவம், ஏழைக்கு உதவுதல் என்று இப்படி வாய்கிழியப் பேசும் பலர் அவற்றுக்கு நேர்எதிராக நடக்கிறார்களே ?
இன்னும் அடக்குமுறைக்குள்ளும், அச்சத்துக்குள்ளும் இருந்து பல பெண்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் சொல்வது போல நேரெதிராக இருப்பவர்களை இதுவரை நான் கண்டதில்லை.
பெண் கவிதாயினிகள் தங்கள் கவிதைகளில் பெண்ணரசியல், உடலைக்கொண்டாடுதல் போன்றவற்றை வெளிப்படுத்துவது பற்றி……..?
இந்தக் கேள்வியில் உள்ள தொனி எனக்குப் புரிகிறது. ஆனாலும் அவர்கள் தமது அரசியலை தாமே பேசாமல், தங்கள் உடலைத் தாமே கொண்டாடாமல் வேறு யார் அதை செய்வது? ஆண்களா?ஆம் பெண்கள் தம் உடலைக் கொண்டாடத் தெரியாமல் இருந்த காலத்திலெல்லாம் அவை கவிதைகளில் எப்படிப் பேசப்பட்டன என்பதை நீங்கள் அறிவீர்கள். திருப்புகழில் இருந்து சினிமாப் பாடல்கள் வரை ஆண்கள் தமது பார்வையில் பெண்கள் உடலைக் கொண்டாடினார்கள். இப்போது பெண்கள் பேசத் தொடங்கியுள்ளார்கள். அது நியாயமும் தேவையும் கொண்ட தொடக்கம். பெண்நிலை சிந்தனையின் வளர்ச்சியின் பயனால் வந்த விடயம் இது. இது வரவேற்கப்பட வேண்டியது! பயப்பட வேண்டியதல்ல!
ஒருவர் பெண்ணியக் கருத்துகளைப் பேசும்வதற்கும் பெண்ணுறுப்புகளைக் கவிதையில் உச்சரிப்பதற்கும் என்ன சம்பந்தம் இருக்கின்றது ?
மொட்டம் தலைக்கும் முழங்காலுக்கும் உள்ள சம்பந்தம் தான். கவிதையில் பெண்ணுறுப்புக்களை உச்சரிப்பது ஒன்றும் தீட்டான விடயம் அல்ல. கவிதையின் தேவை கருதிப் பாவிக்கப்படுதல் தமிழிற்குப் புதிதல்ல. ஆண் புலவர்கள் தேவைக்கும் அதிகமாகவே (பக்தி இலக்கியங்கள் என்று சொல்லப்படுபவை உள்ளிட்டு) பெண்ணுறுப்புக்களைப் பற்றிப் பாடியுள்ளார்கள். இப்போது அவை வேறு அர்த்தத்தில், வேறு அரசியல் நோக்குடன் பேசப்படும்போது தான் பிரச்சினை எழுகிறது. உண்மையில் உறுப்புக்களைக் கவிதையில் பேசுவது அல்ல, அவை எந்த அரசியலுக்காகப் பேசப் படுகின்றன என்பது தான் இங்கு பிரச்சினையாகியுள்ளது.
போராளிப் பெண்கள் எழுதிய கவிதைகள் ஈழத்து கவிதைப் பரப்பில் எப்படியான வீச்சுகளைப் பெற்றன ?
இந்தக் கவிதைகளில் பல போராட்ட காலத்தில் வெளியே பரவலாக அறியப்பட்டிருக்கவில்லை. அறியப்பட்ட அளவில், அவை மற்றைய பெண் கவிஞர்களுக்கில்லாத புதிய அனுபவத்தைக் கொண்டவையாக வெளிப்பட்டிருக்கின்றன. ஈழத்தின் கவிதைப்பரப்பில் அவையும் இணைந்து கொண்டன என்றே சொல்ல வேண்டும். அவை பாரிய தாக்கத்தைக் கொடுத்து ஈழத்துக் கவிதைப் போக்கில் புதிய வீச்சுக்களை தருமளவுக்கு பெருமளவில் வரவில்லை. போர்ச்சுழல் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் வந்த கவிதைகள் குறிப்பாக தமிழினி, கப்டன் வானதி ஆகியோரின் கவிதைகள் ஈழத்துத் தமிழ்க் கவிதை உலகிற்கு புதிய ஒரு பரிமாணத்தை வழங்கியுள்ளன என்றே நான் நினைக்கிறேன்.
ஓர் கவிதைத் தொகுதியின் வெளிப்பாட்டுடன் உங்கள் எழுத்துப்பணி தேக்கமான நிலைக்கு வந்துவிட்டது. இதற்கு என்னதான் காரணம் ?
நான் அப்படி நினைக்கவில்லை. நான் விரும்பினால் எழுதுகிறேன். இல்லாவிட்டால் அமைதியாக இருக்கிறேன். எனது மனதைத் தொடுகிற, எழுதியாக வேண்டுமென்று எனது மனதில் படுகின்ற விடயங்கள் பற்றி நான் தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறேன், எனது இரண்டாவது தொகுதி, புதிதாக நான் எழுதிய கவிதைகளையும் சேர்த்து வந்தது. அவ்வப்போது எனது கவிதைகள் சஞ்சிகைகளில் வந்துள்ளன. கற்குதிரை, காலச்சுவடு என்று பல சஞ்சிகைகளிலும் வந்திருக்கின்றன. பல கவிதைகள் முதல் வரைவுடன் இருக்கின்றன. அவற்றை திருத்தி செப்பனிடும் அவகாசம் இல்லாததும் ஒரு காரணம். வாழ்வுடன் போராடுவதில் நேரம் தொலைந்து விடுகிறது. அதுவும் ஒரு காரணம் தான்.
சமூக வலைத்ததளங்கள் அதிகரித்துவிட்ட சமகாலத்தில் சிற்றிதழ்களின் பங்களிப்பும் தேவையும் எப்படியாக இருக்கின்றது ?
சமூக வலைத்தளங்கள் ஆயிரக் கணக்கில் பெருகிவிட்டன. அவற்றையெல்லாம் பார்க்கவும் படிக்கவும் எல்லோருக்கும் அவகாசம் கிடைப்பதில்லை. தவிரவும் அவை ஒரு வகையில் போகிற போக்கில் கடந்துபோகிற விடயங்களாகவும் மாறி விடுகின்றன. சிற்றிதழ்கள் அப்படியல்ல. அவை எமது தெரிவுக்கேற்ப வாங்கிப் படிக்கக் கூடியவை. எனவே அவற்றுக்கு, இன்னமும் எமது பரம்பரையினர் இருக்கும்வரையாவது, ஒரு தேவை இருக்கத்தான் செய்கிறது. அடுத்தடுத்த பரம்பரையினரிடம் இது எவ்வளவு முக்கியமானதாக இருக்கும் என்று சொல்லத் தெரியவில்லை
அதிகரித்துவிட்ட கணனி தொழில் நுட்பத்தினால் வருங்காலத்தில் தமிழ் இலக்கியமானது எப்படியாக இருக்கும் என்று எண்ணுகின்றீர்கள் ?
தொழில் நுட்பம் இலக்கியத்தை புதிய வடிவங்களை நோக்கி நிச்சயம் எடுத்துச் செல்லும். அச்சில் நூல்களாகப் பதிப்பிக்கும் நிலைகள் இல்லாமல் போகலாம். ஆனால் தமிழ் இலக்கியம் மேலும் மேலும் வழமை போல வளரவே செய்யும் என்று நினைக்கிறேன். உரைநடை, மொழிப்பாவனை என்பன மாறுபடக் கூடும்.
மாற்றுப்பால் திருமணம் பற்றி உங்களுடைய புரிதல் எப்படியாக இருக்கின்றது ?
மாற்றுப்பால் இனத்தவரை ஏற்றுக்கொள்ளும் ஒருவரால் எப்படி அவர்கள் திருமணம் செய்வதை மறுக்க முடியும் ? திருமணம் என்பது உண்மையில் இருவர் இணைந்து வாழும் ஒரு வாழ்கை முறையை குறிப்பது. காலம் காலமாய் ஆணும் பென்ணும் சேர்ந்து வாழ்வதை குறிக்க இச் சொல் பயன்பட்டதால், இப்போது மாற்று பாலினர், ஒருபால் உறவு என்பன எல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட்டுவரும் ஒரு நிலையில், அவர்கள் சேர்ந்து வாழ்தல் என்பதும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஆயினும் இன்னமும் பல நாடுகளில் இதற்கேற்ற சட்டங்கள் இன்னமும் கொண்டுவரப்படவில்லை. சட்டம் கொண்டுவரப்பட்ட நாடுகளில் அவை இயல்பாக நடக்கின்றன. இவை நியாயமானவை என்பதே எனது புரிதல்.
தாயகத்திலே மாற்றுப்பால் இனத்தவரின் விழிப்புணர்வானது எப்படியாக இருக்கின்றது ?
குறிப்பிடத் தக்க அளவு முன்னேற்றம் இருக்கிறது. அண்மையில் அங்கிருந்து வந்த வாரப் பத்திரிகை ஒன்றில் தனது கதையை ஒரு மாற்றுப் பாலினத்தவரான பெண் எழுதியிருந்தார். இன்னொருவர் எழுதிய நூல் ஒன்றும் அங்கு வெளியிடப்படதாக அறிந்தேன். அவர்கள் பற்றிய பரவலான விழிப்புணர்வேற்பட்டு வருவதாக தான் நான் நினைக்கிறேன்.
சட்டப்படி திருமணம் செய்யாது ஒன்றாக வாழும் முறைமையானது ஆசிய சமூகத்திலும் புலம் பெயர் நாடுகளிலும் இருக்கின்றது . இது பற்றி………. ?
திருமணத்தில் சட்டத்தின் பங்கு என்பது ஒரு வகையிலும் அவர்களது வாழ்வின் தன்மையை தீர்மானிக்கிற ஒரு விடயம் அல்ல. அதாவது அவர்களிடையேயான உறவின் தன்மையை அது தீர்மானிப்பதில்லை. ஆனால் அது அவர்களுக்கு இந்த சமூகத்தில் சட்டரீதியான பாதுகாப்பையும், சில சட்ட பூர்வ உரிமைகளையும் வழங்குகிறது. மற்றப்படி மகிழ்ச்சியுடன் ஒன்றாக வாழ்வதற்கு அது எத்தகைய பங்களிப்பையும் தருவதில்லை. மகிழ்சியாக வாழ அவசியமில்லாத ஒன்றை எதற்காக கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதுபவர்களும், மகிழ்சியாக வாழ முடியாத ஒரு நிலை வரும் பட்சத்தில், சட்டரீதியான நெருக்கடிகள் ஏதுமின்றி பிரிந்து செல்லவும் வசதியாக சிலர் இதை பயன் படுத்துகின்றனர். இதில் எந்தத் தவறையும் நான் காணவில்லை. இது இரு தனிப்பட்ட நபர்களுக்கிடையிலான தெரிவு மட்டுமே. இதை பல நாடுகள் சட்டரீதியாக அங்கீகரித்தும் உள்ளன. ஆனால் இதை முற்போக்கானது என்றோ, ஒருவரை ஒருவரில் ஒருவர் நம்பிக்கை இல்லாததால் இப்படி நடக்கிறார்கள் என்றோ சொல்வதில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை.
ஔவை – கனடா.