வ. கீதா-கிறிஸ்டி சுபத்ரா, பாரதி புத்தகாலயம்
ஆண், பெண் கருத்துருவாக்கத்தின் வேர்களைத் தேடுகிறது இந்தப் புத்தகம். ஆண் – பெண் வேறுபாடு குறித்து மதம், அறிவியல், சமூகப் பின்னணியில் இந்த நூல் ஆராய்கிறது. கருத்துச் செறிவு மிக்க, ஆழமான அர்த்தம் தரும் நூல் இது. பெண்ணியம், பாலின பாகுபாடு குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு இந்த நூல் வழிகாட்டியாக அமையும்.
சுல்தானாவின் கனவு, ரொக்கையா சக்காவத் ஹூசைன், (தமிழில்: வ. கீதா, சாலை செல்வம்) தாரா வெளியீடு
ரொக்கையா சக்காவத் ஹூசைன் என்ற வங்க மொழி எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதிய முதல் நாவல் இது. போரும் ஆண்களின் அதிகாரமும் இல்லாத ஒரு லட்சிய உலகை முன்னிறுத்தும் பெண் விடுதலை சிந்தனையுடைய கதை. இந்தப் பாணியில் எழுதப்பட்ட முதன்மைக் கதைகளில் ஒன்று. கூட்டுறவுச் சமுதாயம், அறிவியல் பார்வை, இயற்கை நேசம், போரைத் தவிர்த்து அமைதி வழியை பின்பற்றுதல் போன்ற பின்னணிகளைக் கொண்ட மாறுபட்ட நாவல் இது. இந்தியத் துணைக்கண்டத்தின் பெண் விடுதலை மரபின் முக்கியப் பிரதிநிதியாக ரொக்கையா இன்றளவும் திகழ்கிறார்.