அழகென்ற குற்றத்திற்கான தண்டனை மரணமாகும்

பிரேமவதி மனம்பேரியின் கதை- தமிழில் : ஃபஹீமாஜஹான்

dharman18091605

நன்றி: சட்டத்தரணிபிரியலால் சிரிசேன மனோரி கலுகம்பிட்டிய(சமபிம 2010 ஆகஸ்ட்)

எதுவரை இதழ்

maxresdefault

 maxresdefault1ஹெந்திரிக் அப்புஹாமி கதிர்காம வனப் பாதுகாப்புத் திணைக்களத்தில் காவல் உத்தியோகத்தராகப் பணிபுரிந்து தனது சீவனோபாயத்தை நடத்திச் சென்றார். பத்து பிள்ளைகளைக் கொண்ட ஹெந்திரிக் அப்புஹாமி – லீலாவதி தம்பதியினர் 1951ம் ஆண்டில் பிறந்த தமது முதலாவது குழந்தைக்கு ‘பிரேமவதி மனம்பேரி’ எனப் பெயர் சூட்டினர். அவர்களது ஏழைக்குடிசையினுள் காண்போரைக் கொள்ளை கொள்ளும் மலரொன்றாக ‘பிரேமவதி மனம்பேரி’ நாளுக்கு நாள் வண்ணம் பெற்று வளர்ந்தாள். இளமைப் பருவம் அவளது அழகை மென்மேலும் கூட்டியது. 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கதிர்காமத்தில் இடம்பெற்ற புத்தாண்டு அழகுராணிப் போட்டியில் கலந்து கொண்டபோது கதிர்காமத்து அழகுராணியாகக் கிரீடம் சூட்டப்பட்டாள். இந்த நிகழ்வு இடம்பெற்று நாள், வாரம், மாதமென ஓராண்டு கடந்தது.

1971 ஆம்ஆண்டு ஏப்ரல் மாதம் கொழுந்து விட்டெரிகின்ற அரசியல் சூழ்நிலைகளோடு உதயமானது. மக்கள் விடுதலை முன்னணியின் முதல் கிளர்ச்சி ஆரம்பித்ததோடு, இலங்கையின் பல்வேறு பிரதேசங்களையும் போலவே கதிர்காமத்திலும் அதன் தாக்கம் உணரப்பட்டது. கிளர்ச்சியில் ஈடுபடுகின்றவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் 1947 இலக்கம் 25, இலங்கை பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசர காலச் சட்டமொன்றை அறிவித்து, அவசர காலச் சட்ட நடைமுறைகளைக்கொண்டுவந்தது.

அதனால், பின்னடைவு காணாத கிளர்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கி மூலம் கதிர்காம பொலிஸ் நிலையத்தின் மீது இரு தாக்குதல்களைப் பிரயோகித்தனர். மறு நாள் மீண்டும் பொலிஸ் நிலையம் மீது தாக்குதலை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, பொலிஸ் நிலையத்தை விட்டுவிட்டு அங்கிருந்து அம்பாந்தோட்டை வரை பின்வாங்கிச் செல்லவேண்டுமென கதிர்காமப் பொலிஸ் நிலையப் பொலிஸ் அத்தியட்சகரான உடவத்த தீர்மானித்தார்.

கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இராணுவத்தைக் களமிறக்கியது. ஏப்ரல 12 ஆம் திகதியையடைந்தபோதுசில நாட்களுக்கேனும் இராணுவம் பின்வாங்கவேண்டும் என அப் பிரதேசத்துக்குப் பொறுப்பாகவிருந்த இராணுவ அதிகாரி கர்னல் நுகவெல தீர்மானித்தார். இவ்வாறு இருக்க மூன்றாவது கெமுணு படைப்பிரிவின் லுதினன் ஏ.விஜேசூரிய உள்ளிட்ட இராணுவப் பிரிவொன்று ஏப்ரல் 10 -12 வரை திஸ்ஸமஹாராம நகருக்கு அண்மையில் முகாம் அமைத்துத் தங்கிஇருந்திடத் துணிந்தனர்.

சரியாக ஏப்ரல் மாதம் 16ம் திகதி காலை 5.30 மணியளவில் கர்னல் நுகவெல கட்டளையொன்றை விடுத்தார். அதன்படி விஜேசூரிய உள்ளிட்ட இருபத்தைந்து பேர்களடங்கிய இராணுவ வீரர்கள் குழுவொன்று கதிர்காம நகரைக் கிளர்ச்சியாளர்களிடமிருந்து மீட்டெடுக்கும் நடவடிக்கையில் இறங்கியது. அவர்கள் எவ்வளவு துரிதமாகச் செயற்பட்டார்களெனின் அன்றைய காலைச் சூரியன் கதிர்காமத்திற்கு உதயமாகும் வேளையில், நகரமானது இராணுவத்தின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தது. அதுமாத்திரமன்றி, அந்த விடிகாலையிலேயே கிளர்ச்சியுடன் தொடர்புபட்டவர்களெனக் கூறி, சந்தேகத்தின் பேரில் அனேக இளைஞர் யுவதிகளும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

மீசையரும்பத் தொடங்கியிருந்த பள்ளிக்கூட மாணவர் தொடக்கம் திருமணமாகி ஒருநாள் கூடக் கடந்திராத இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட அனேகர் கைது செய்யப்பட்டோரில் இருந்தனர். துரதிஷ்டவசமாக அப்போது 22 வயதையடைந்திருந்த இளம் யுவதியான கதிர்காம அழகுராணியின் பெயரும் கைது செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலில் காணப்பட்டது.

காலை 9 மணியளவில் பொலிஸ் ஜீப் வண்டியொன்று தமது வீட்டின் முன்னால் வந்து நிற்பதைப் பார்த்த கணத்தில் பிரேமவதியின் தாயாரின் விழிகளில் ஏதோவொரு தீய நிழலொன்றின் சுவடு தென்படலாயிற்று. பொலிஸ் அதிகாரி உடவத்த உள்ளிட்ட குழுவொன்று வீட்டுக்கு வந்தது. கணப்பொழுதில் கதிர்காம அழகு ராணியை அவர்கள் கைது செய்தனர்.

எந்தத் தவறைச் செய்ததற்காக தனது மகளைக் கொண்டு போகிறீர்கள் எனக் கேட்டழுத அந்தத் தாயாருக்கு  

“அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் நாங்களும் இவளைக் கொண்டு போகிறோம்”

என்றபதில்உடவத்தவிடமிருந்துகிடைத்தது.

பிரேமவதியுடன் மேலும் நான்கு இளம்பெண்கள் பொலீசாரினால் கைது செய்யப் பட்டு இராணுவ முகாமுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தனர்.

அன்று மாலை கர்னல் நுகவெல இராணுவ முகாமுக்கு வருகை தந்தார். அவ்வேளையில் லுதினன் விஜேசூரிய இந்த ஐந்து யுவதிகளையும் ‘கைது செய்யப்பட்ட பெண் கிளர்ச்சியாளர்கள்’ என்று கூறி அவரின் முன்னிலைக்குக் கொண்டு வந்தான். எனினும் பிரேமவதி அத்தகைய செயலொன்றில் ஈடுபட்டதற்கான அத்தாட்சியாகக் காண்பிப்பதற்கு எந்தவொரு சாட்சியும் அவனிடம் காணப்படவில்லை. ஏப்ரல் 16ம் திகதிக்குப் பின்னர் கிளர்ச்சியாளர்களின் எந்தவொரு தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை.

பிரேமவதியைக் கைது செய்த மறுதினம் அதாவது 17 ஆம் திகதியன்று காலையில் லுதினன் விஜேசூரிய பிரேமவதியை நீண்ட நேரம் விசாரணை செய்தான். எனினும் அவளிடமிருந்து எந்தவொரு விடயத்தையும் வெளிக்கொண்டு வர முடியாமற்போகவே அவள் அணிந்திருக்கும் ஆடைகளைக் களையுமாறு கட்டளையிட்டான். வாழ்வில்ஒருபோதும்நடக்கும் என எதிர்பார்த்திராத நிகழ்ச்சிகளால் அதிர்ச்சியும் களைப்பும் அடைந்திருந்த அவள் அதைக் கேட்டதும் மிகவும் கலக்கமடைந்தாள். அவள் ஆடைகளைக் களைய முடியாதென மறுத்தாள். ஆனாலும் அவளது மறுப்பினால் எந்தவொரு பலனும் கிட்டவில்லை. அவளுக்கு தனது அழகு மேனியை மறைத்துக் கொண்டிருந்த ஆடைகளைக் களைய நேர்ந்தது.

லுதினன் விஜேசூரியவின் கட்டளைகள் அத்துடன் நின்றுவிடவில்லை. நிர்வாணமாக்கப்பட்ட யுவதிக்கு, கைகள் இரண்டையும் மேலுயர்த்தியவண்ணம் கதிர்காம நகரம் பூராகவும் நடந்து செல்லுமாறு அடுத்த கட்டளை விடுக்கப்பட்டது. அவ்வாறு செல்கையில் “நான் ஐந்து வகுப்புகளுக்கும் போனேன்” (கதிர்காமத்தில்மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யினரால் நடத்தப்பட்ட 5 வகுப்புகள்) என்பதை இடைவிடாது கூறிக் கொண்டு போகுமாறும் கட்டளையிட்டான். அத்துடன் லுதினன் விஜேசூரிய, இராணுவ வீரன் அமரதாச ரத்நாயக்க, மற்றொரு இராணுவ வீரன் ஆகியமூவரும் ஆயுதங்களோடு அவளைப் பின்தொடர்ந்து சென்றனர்.அந்த அப்பாவி யுவதி சுமார் இருநூறுயார் தூரம் நடந்து சென்றதும் அவளருகே வந்த லுதினன் விஜேசூரிய அவளை உதைத்தான். அதன் பிறகு அவளருகே நின்றவாறே அவள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தான். வெடிபட்டு கீழே விழுந்த அவள் மேலும்சிறிதுதூரம் நிலத்திலே தவழ்ந்தவாறு முன்னோக்கிச் சென்றாள். அதன் பிறகு எழுப்புவதற்கு முயற்சி செய்தாலும் மீண்டும் கீழே சரிந்து வீழ்ந்த அவள் இறந்து விட்டாளென நினைத்த இராணுவக் குழு அவளை அவ்விடத்திலேயே போட்டுவிட்டு முகாமுக்குத் திரும்பியது.

இறந்துவிட்டதாக நினைத்துத் தெருவில் விட்டு வந்த பிரேமவதி இன்னும் இறந்து விடவில்லை என்ற தகவல் முகாமுக்குச் சென்று சிறிது நேரத்தின் பின்னர் அந்தக் குழுவை எட்டியது. உடனடியாக துப்பாக்கியுடன் வந்த இராணுவ வீரன் ரத்நாயக்க, உயிருக்காகப் போராடியவாறு தெருவில் வீழ்ந்து கிடந்த அவள் மீது மீண்டும் துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினான். அதன் பின்னர் எலடின் எனும் நபரிடம் குழியொன்றைத் தோண்டி அவளைப் புதைக்குமாறு கூறிவிட்டு இராணுவ வீரன் ரத்நாயக்கா முகாமுக்குத் திரும்பியிருந்தான்.

இறந்து போன யுவதியின் உடலைப் புதைப்பதற்காகச் சென்ற எலடின், இன்னும் அவளது உடலில் உயிர் இருப்பதை அவதானித்தான். உடனடியாக இராணுவவீரனைப்பின்தொடர்ந்து முகாமுக்கு ஓடி வந்த எலடின் பிரேமவதி இன்னும் இறந்து விடவில்லை என்பதைத் தெரிவித்தான். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இராணுவத்தினர் அவளைக் கொலைசெய்வதற்காக இன்னொரு இராணுவ வீரனை அனுப்பினர். அவன் தனக்குக் கிடைத்த கட்டளையின் பிரகாரம், பிரேமவதியின் தலையை நோக்கி வெடிவைத்ததோடு அவ் வேட்டினால் ஹெந்திரிக் அப்புஹாமி – லீலாவதி தம்பதியினரின் மூத்த மகள், கதிர்காம அழகுராணி நிரந்தரமாகவே விழிகளை மூடிக் கொண்டாள். எவ்வாறாயினும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த அவளது உடலிலில் இறுதியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவளது உயிரைப்போக்கிய இராணுவ வீரன் யார் என்பது இறுதிவரைக்கும் அறிந்து கொள்ள முடியாமற் போனதால் அவன் “அறிமுகமற்ற துப்பாக்கிதாரி” என வரலாற்றில் பதிவானதோடு அவன் ஒருபோதும் கைது செய்யப் படவும் இல்லை.

கிளர்ச்சியின் பின்னர் லுதினன் விஜேசூரிய, இராணுவ வீரன் அமரதாச ரத்நாயக்க ஆகிய இருவரும் கொலைசெய்வதற்கு முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்கள். நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அவ்விருவரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத்தாக்கல் செய்தனர். பி.ஈ.செட்டி, அர்ட்லிபெரேரா .ஆர்.எஸ்.ஆர்.குமாரஸ்வாமி ஆகிய சட்டத்தரணிகள் குழுவொன்று இவர்கள் சார்பில் தோன்றினர். லுதினன் விஜேசூரிய எதிர்ப்புமனுவொன்றை முன்வைத்துத் தனது பக்க நியாயங்களைக் குறிப்பிட்டிருந்தான். அதில் கர்னல் நுகவெல மூலம் அவனுக்கு கிளர்ச்சியாளர்களை அழித்துவிடுமாறு கட்டளை கிடைக்கப் பெற்றிருந்தபடியால்தான் கிளர்ச்சியாளர்களை அழித்து மேலதிகாரியின் கட்டளையை நிறைவேற்றியதாகக் குறிப்பிட்டிருந்தான். அவ்வாறே சட்டத்தரணி செட்டியும் அப்போது காணப்பட்டசாட்சிக் கோவையின் 114 ஆவது வாசகத்தின் பிரகாரம் அரசபணியின் செயற்பாடுகள் யாவும் சட்டபூர்வமானவை என்று வாதிட்டார்.

இந்த அனைத்து நிகழ்வுகளும் அவசர காலச் சட்டம் நிலவிய சூழலிலேயே இடம்பெற்றிருந்தது. இச் சம்பவம் நிகழ்ந்த சமயத்திலும் மோதல் ஏற்படுவதற்கான சூழல் கதிர்காமத்தில் நிலவியதாகச் சட்டத்தரணி செட்டியின் வாதம் அமைந்திருந்தது. எனினும் ஏப்ரல் 17ம் திகதி ஆகும் போது கதிர்காமத்தில் ஆயுத மோதல் ஒன்று நடைபெற்றிருக்காததோடு, அவ்வாறு நடைபெற்றிருந்தாலும் அல்லது இல்லாவிடினும் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப் பட்ட நபரொருவரைக் கொலை செய்வதனை நியாயப்படுத்த முடியாதென்பது மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவாக அமைந்திருந்தது. இராணுவ வீரனொருவன், மேலதிகாரியின் கட்டளையின் படி செயற்பட்டிருந்தாலும் இச் சட்ட விரோதச் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு மேலதிகாரியொருவரின் கட்டளையைப் பின்பற்ற வேண்டியது அக் கட்டளையானது சட்டபூர்வமானதாக இருந்தால் மாத்திரமாகும். வேறு சொற்களில் கூறுவதானால் மேலதிகாரியொருவராக இருந்தாலும் அவர் சட்டத்திற்கு முரணான செயலொன்றைச் செய்யக் கோரும்போது அதனைப் புறக்கணிக்கவே வேண்டும்.

இங்கு இவ்விருஇராணுவ வீரர்களினது சட்டத்தரணிகள் தண்டனைச் சட்டக் கோவையின் 69 வது அதிகாரத்தைப் பயன்படுத்தி இராணுவத்தின் செயல்களை நியாயப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டனர். அதாவது, ஒன்றைச் செய்வதற்கு சட்டத்தின் மூலம் கட்டுப்பட்டிருப்பதாக ‘உளப்பூர்வமாகவே’ நம்பிக்கை வைத்துள்ள ஒருவர் செய்கின்ற செயலொன்றானது தவறாகாது என்பதாகும். தண்டனைச் சட்டக் கோவையானது இவ்விடயத்தை மேலும்’சட்டத்தின் நியமங்களுக்கமைய தனது மேலதிகாரியின் கட்டளையின்படி யுத்த வீரனொருவன் கிளர்ச்சிக் குழுவொன்றைக் நோக்கிச் சுடுவதானது, அந்த வீரனின் எந்தவொரு தவறுமாகாது’ எனத்தெளிவுபடுத்துகிறது. ஆனாலும் அவசரகாலச் சட்டத்தின்கீழ் என்றபோதும் ‘உளப்பூர்வமாக’ என்பதனூடாகச் சட்டவிரோதச் செயல்களுக்கு எந்தஅங்கீகாரமும்கிடையாது.

இறுதியில் மேன்முறையீட்டு நீதிமன்றம் மூலம் பிரதிவாதிகள் இருவருக்கும்16 வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப் பட்டது. 1973 நவம்பர் மாதம்ஐந்தாம் திகதி நடைபெற்றஎதிர்ப்புமனு மீதான வழக்குவிசாரணையின் போதுநீதிபதி அலஸ் உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதென்று தீர்ப்பளித்தனர். பின்னர், அதாவது 1988 ஆம் ஆண்டு ஜே.வி.பி. உறுப்பினர் குழுவொன்றினால் பிரேமவதியைக் கொலை செய்ததற்கான தண்டனையாக லுதினன் விஜேசூரிய மாத்தறையில் வைத்துக் கொலை செய்யப்பட்டான்.

 

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *