1983 ஆம் ஆண்டு இந்தியா தேசமானது, கிரிக்கெட்டுக்கான முதலாவது உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. ரமேஷுக்கு அப்பொழுது பத்து வயது. எல்லாச் சிறுவர்களையும் போலவே கிரிக்கட்டின் மீது மோகித்துத் திரிகிறான். கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள பேராவலால் கல்வியை, காதலை, எதிர்காலத்தையே இழப்பவன் என்னவாகிறான்?
நன்றாகப் படிக்கும் மாணவனாக அபாரமான கண்டுபிடிப்புக்களைச் செய்யும் சிறுவனை ஆசிரியர்கள் பாராட்டுவதைக் கேள்வியுற்று அவனை ஒரு இயந்திரவியல் பொறியிலாளராக கல்வி கற்கச் செய்ய வேண்டுமெனப் பாடுபடுகிறார் ஏழைத் தந்தை. சிறு வயது முதற்கொண்டே நட்பாகி, ஒன்றாகக் கல்வி கற்ற தோழி, தான் பட்டதாரியான பின்பும் அவனையே திருமணம் செய்து, அவனுடன் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக இருக்க விரும்புகிறாள். அவர்களது விருப்பங்கள் என்னவாகின்றன?
எப்பொழுதும் கிரிக்கெட் விளையாட்டிலேயே காலம் கடத்தி, கல்வியில் கோட்டை விட்ட மகனின் கிரிக்கெட் மட்டையை கோபத்தில் கத்தியால் வெட்டும் தந்தை, கிரிக்கெட் உட்பட உலகப் புகழ்பெற்ற சச்சின் டென்டுல்கரையே அறிந்திராத மக்குப் பெண்டாட்டி, ஏழ்மையோடு போராடும் குடும்பம். இவர்களுக்கு மத்தியில் ஒருவன், தனது மகனை இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெறச் செய்வது எவ்வாறு?
இவ் வருட ஆரம்பத்திலேயே வந்திருக்கும் மலையாளத் திரைப்படமான ‘1983’ இதைத்தான் சொல்கிறது. தன்னம்பிக்கையும், முயற்சியும், திறமையும் இருந்தால் எவ்வளவுதான் எதிர்ப்பு வந்தாலும் எவரும் சாதிக்கலாம் என எடுத்துக் கூறும் ஒரு நல்ல திரைப்படம். குடும்பத்துடன் பார்க்கக் கூடிய, பார்க்க வேண்டிய திரைப்படமாக எடுத்துக் காட்டக் கூடிய ஒரு நல்ல படம். யதார்த்தமான கதை. யாரையும் இம்சிக்காத நகைச்சுவை. திறம்பட்ட நடிப்பு. தேவையான இடங்களில் இசை. வேறென்ன வேண்டும் இத் திரைப்படத்தின் வெற்றிக்கு?
வெற்றித் திரைப்படங்களைத் தந்துகொண்டிருக்கும் இள வயது கதாநாயக நடிகர் நிவின் பாலி, நாற்பது வயதினனாக நடித்திருக்கும் படம். நடிப்பு அனுபவமோ, எந்த சினிமா பின்புலமுமோ அற்ற நிவின் பாலிக்கு 2010 ஆம் ஆண்டு ஒரு மலையாளத் திரைப்படத்தில் நடிக்க தற்செயலாக ஒரு வாய்ப்புக் கிடைத்தது. பற்றிப் பிடித்துக் கொண்டார். நல்ல நடிப்பின் மூலமாக தொடர்ச்சியாக வெற்றிகள். 2014 ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் இத் திரைப்படமும் இன்னுமொரு வெற்றி. கதாநாயகிகளாக இருவர். அதிலும் மனைவியாக வரும் ஷ்ரிந்தாவுக்கு நல்ல வாய்ப்பு. அனேகமாக மலையாளத்தில் வெற்றி பெற்றுள்ள எல்லாத் திரைப்படங்களிலும் இந்தப் பெண் சிறிய கதாபாத்திரத்திலேனும் இருப்பார். திறமை மிக்கவர்.
புகைப்படக் கலைஞரான இயக்குனர் அப்ரித் ஷைனின் முதல் திரைப்படம் இது. இவ்வாறான திரைப்படத்தை ஆரம்பத்திரைப்படமாக முயற்சித்துப் பார்க்கவே தைரியம் வேண்டும். இத் திரைப்படத்தைத் தமிழில் நேரடியாக மொழிமாற்றம் செய்து வெளியிடப் போவதாக அறிகிறேன். அப்படியே வரட்டும். தமிழில் வெற்றி பெற்ற நடிகர்கள் யாரும் நடிக்கத் தயங்கும் கதாபாத்திரம் இது. டூயட் பாடல்கள், சண்டைக்காட்சிகள், குத்துப்பாடல்கள் இல்லை. வயதான கதாநாயகன். இவ்வாறான கதாபாத்திரத்தைத் தமிழில் எவர் ஏற்று நடிப்பர்? நடிகர் விஜய் சேதுபதியைத் தவிர வேறெவரும் மனதில் தோன்றவில்லை.
இங்கு இன்னுமொரு மலையாளத் திரைப்படத்தைப் பற்றியும் சொல்லவேண்டும். படத்தின் பெயர் ‘ஸக்கரியாயுடே கர்ப்பிணிகள்’. படத்தின் தலைப்பைப் பார்த்தவுடனேயே ஸக்கரியா எனும் ஒருவனால் கர்ப்பிணியானவர்களின் கதையென நீங்கள் நினைத்தால் அது தவறு. இதுவும் ஒரு குடும்பச் சித்திரம். இதிலும் கதாநாயகன் நாற்பது வயதுகளைத் தாண்டியவர். முன் சொன்னது போல குத்துப் பாடல்களோ, சண்டைக்காட்சிகளோ இல்லை. ஆனால் நம் இந்திய, இலங்கை சமூகங்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கும் நான்கு கர்ப்பிணிகளைப் பற்றிய கதை இது. திரைப்படமாக எடுக்கக் கடும் துணிவு வேண்டும். நான்கு கர்ப்பிணிகளையும் பாருங்கள்.
1. ஆண்களுடன் எந்தத் தொடர்புமற்ற ஒரு கிறிஸ்தவக் கன்னியாஸ்திரி
2. ஒரு பள்ளிக்கூடச் சிறுமி
3. வருடக் கணக்கில் கோமாவிலிருக்கும் ஒரு புகழ்பெற்ற விளையாட்டு வீரரின் மனைவி
4. காதலனுமில்லாத, திருமணமுமாகாத ஒரு இளம் முஸ்லிம் பெண்
இந் நான்கு கதாநாயகிகளோடு திரைப்படத்தில் இன்னுமொரு கதாநாயகியும் இருக்கிறார். அவர் திருமணமாகியும் பல வருடங்களாகக் குழந்தையில்லாத ஒரு பெண். எனில் கதாநாயகன் ஸக்கரியா யார்? அவருக்கும் இப் பெண்களுக்கும் என்ன தொடர்பு?
ஒரு துளி ஆபாசம் கூட இல்லாது, நல்லதொரு திரைப்படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் அனீஸ் அன்வர். கதாநாயகிகளாக ரீமா கலிங்கல், ஆஷா சரத், சான்ட்ரா தோமஸ் இவர்களோடு நமது தமிழ் நடிகைகள் கீதா, சனுஜாவிற்கு வாழ்நாள் முழுவதும் மெச்சத் தகுந்த கதாபாத்திரங்கள்.
தமிழ்த் திரைப்படங்களில் வில்லன்களில் ஒருவராகப் பயன்படுத்தப்படும், தேசிய விருது பெற்ற நடிகரும் இயக்குனருமான லால் இத் திரைப்படத்தில் ஸக்கரியாவாக அசத்தியிருக்கிறார். இத் திரைப்படத்தில் நடித்தமைக்காக கடந்த வருடத்தில் சிறந்த நடிகருக்கான கேரள மாநில விருதும் இவருக்குக் கிடைத்திருக்கிறது. இவர் நடித்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த 14 திரைப்படங்களில் ‘ஷட்டர்’ திரைப்படத்தோடு, இன்னும் பெயர் வாங்கித் தந்த திரைப்படமாக இதனையும் குறிப்பிடலாம்.
தமிழில் கடந்த வருடம் வெற்றி பெற்ற திரைப்படங்களின் எண்ணிக்கையே சராசரியாக 14 ஆகத்தான் இருக்கக் கூடும். அதிலும் ஒரே நடிகரின் 14 படங்கள் என்பது தமிழில் நினைத்துப் பார்க்கக் கூடச் சாத்தியமற்றது. தமிழோடு ஒப்பிடுகையில் அண்மைக் காலமாக மலையாளத் திரைப்படங்கள் நாம் எல்லோரும் கொண்டாடும் உலகத் திரைப்படங்களுக்கு ஈடான கதையம்சங்களுடன் வெளிவரத் தொடங்கியிருப்பது நல்ல முன்னேற்றத்தைக் காட்டுகிறது. மலையாள சினிமா ரசிகர்களும் நல்ல கதையம்சத்துடன் கூடிய திரைப்படங்களையே கொண்டாடுகிறார்கள். மலையாள முன்னணி நடிகர், நடிகைகளும் கூட தமது வயதையும், உடல் மொழியையும் உணர்ந்து அதற்கேற்றவாறான கதாபாத்திரங்களையே தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி பெறுகின்றனர். தமிழில் இவ்வாறு எதிர்பார்ப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை எனத் தோன்றுகிறது.
ஒரு நடிகராக மட்டும் பார்க்கப்பட வேண்டிய ரஜினிகாந்தின் அண்மைய அனிமேஷன் திரைப்பட வெளியீட்டுக்குக் கூட, குடம் குடமாகப் பாலூற்றி அபிஷேகம் செய்யச் செலவாகும் பணத்தைச் சேகரித்தால் கூட ஒரு மலையாளப் படத்தினை எடுத்துவிடலாம். மலையாள நடிகர் மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மானும் அதைத்தான் சொல்கிறார். மலையாளப் படங்கள் குறைந்த பட்ஜெட்டில், குறைந்த நாட்களில் எடுக்கப்பட்டு முடித்துவிடுவதால், ஒரு வருடத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகருக்குக் கூட நான்கு, ஐந்து எனப் பல படங்களில் நடித்து வெற்றிகரமாக வெளியிட்டு விட முடிகிறது. தமிழில் ஒரு நடிகருக்கு, ஒரு படத்தை நடித்து வெளியிடவே இரண்டு வருடங்களுக்கும் மேலாகிறது என்றால் தமிழ் சினிமாவின் போக்கு நல்ல நிலையிலில்லை என்பதைத்தானே இது காட்டுகிறது?
மிகைத்த ஹீரோயிசம் இல்லாத படங்களில் நம் தமிழ் கதாநாயக நடிகர்கள் நடிக்க மாட்டார்கள். எண்ணிக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய ஓரிரு நடிகர்கள் தவிர, தமிழ் கதாநாயக நடிகர்கள் எல்லோருக்குமே அறிமுகப் பாடல்கள், பஞ்ச் வசனங்கள், குத்துப் பாடல்கள், அதிபல சூரத்தைக் காட்டும் வீரச் சண்டைக்காட்சிகள், அடுத்தவர் குறையைச் சுட்டிக் காட்டிச் சிரிக்க வைக்கும் அபத்தமான நகைச்சுவைக் காட்சிகள் எனப் பலதும் அவசியமாகின்றன. யதார்த்தத்தைத் தாண்டிய சினிமாக்களைக் காட்டி மக்களை ஏமாற்றுவதில் வல்லமை பெற்றதாக தமிழ் சினிமா ஆகிக் கொண்டிருக்கிறது.
நல்ல கதையம்சத்தோடு, யதார்த்தமான படங்களைக் கொடுத்தால் தமிழ் சினிமா ரசிகர்கள் வேண்டாமெனச் சொல்லமாட்டார்கள். தமிழ் சினிமா பெருந்தலைகள் எல்லோருமே ஒரு கற்பிதத்தை வைத்துக் கொண்டு அதனைத் தமிழ் சினிமா ரசிகர்கள் மேல் சுமத்தியிருக்கிறார்கள். அது ‘பஞ்ச் வசனங்களோ, பாடலோ, சண்டைக்காட்சிகளோ இல்லாமல் படமெடுத்தால் யாரும் பார்க்க மாட்டார்கள்’ என்பது. தம் மேல் திணிக்கப்பட்டுள்ள அக் குற்றச்சாட்டையும் ஏற்றுக் கொண்டபடி தொடர்ந்தும் ‘இதுதான் நல்ல சினிமா’ என உச்ச நடிகர்களுக்காக தற்கொலை வரை போகும் தீவிர ரசிகர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள் மக்கள்.
நல்ல தமிழ் சினிமாவை நோக்கிய, நல்ல மாற்றங்களைக் கொண்டு வர முதலில் தமிழ் சினிமா பெருந்தலைகள் முன் வரவேண்டும். இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பு வரை கூட, மலையாளத் திரைப்படங்களென்றாலே மூன்றாந்தர காமத்தைத் தூண்டும் படங்கள் என்ற கருதுகோளை அண்மையில் மலையாளத்தில் வெளிவந்த பல வெற்றித் திரைப்படங்கள் முறியடிக்கவில்லையா என்ன? நடிகருக்கான திரைப்படங்கள் என்பதைத் தவிர்த்து, நல்ல திரைப்படத்துக்குப் பொருத்தமான நடிகர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டால் மாத்திரமே தமிழ் சினிமாவின் நிலைமை நல்லவிதமாக மாறும். தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் இதை உணர்ந்து மாற வேண்டும். அவர்கள் மாத்திரமல்லாது, நடிகர், நடிகைகளை உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்துக் கொண்டாடி பணமீட்டும் தமிழ் சினிமா ஊடகங்களும் மாறவேண்டும். அப்போதுதான் அந்த ஊடகங்களைப் பின்பற்றும், நம்பும் தமிழ் சினிமா ரசிகர்களிடத்திலும் நல்ல சினிமாவை நோக்கிய மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
mrishanshareef@gmail.com