-தேன்மொழி சதாசிவம்-
நான் சாத்தானுடன்
பேசிக் கொண்டிருந்ததைக்
கடவுள்
பார்த்து விட்டார்.
பன்றியுடன் சேராதே
கன்றுக் குட்டியே
எனக் கத்தினார்.
என்னுடன் சேர்ந்த நார்
மணக்குமென்று
முணுமுணுத்தேன்.
அதைக்கூட உன்னால்
சத்தமாகச்
சொல்ல முடியவில்லை பார்
என்று அதட்டினார்.
கடவுளிடம்
நான் பேசுவதில்
சாத்தானுக்கேதும் சங்கடங்களில்லை.
கடவுளுக்கு
விளக்கேற்றும் போது
காத்திருக்கிறேன் என்கிறான்.
வேடிக்கை பார்ப்பதுபோல்
முறுவலித்துச் சிரிக்கிறான்.
கடவுள் உன் தகப்பன்,
நானே உன் காதலன்
என்று
இரகசியமாய் காதில்
வேதம் ஓதுகிறான்.
பின்னாட்களில்
நான் சாத்தானுடனான
உறவைத் தொடர்ந்த போது
கடவுள்
பயந்து சாக ஆரம்பித்தார்.
சாத்தானுடன்
பழக வேண்டாமென
சதா மன்றாடினார்.
உன்னுடனான உறவு
அலுப்பூட்டும் உணவு.
சாத்தானுடன் உறவாடுதல்
கஞ்சா என்றேன்.
இன்று இறுதி முடிவெடு.
அவனா நானா?
கடவுளின் கண்களில் இரத்தம்.
வாசலில் நின்றொரு
ருத்ர தாண்டவம்.
நேரமாகுது
அந்தாள சீக்கிரம் அனுப்பு
என் கன்னத்தில் முத்தமிட்டு
வீட்டிற்குள் சென்றான் சாத்தான்.
சற்று நேரம் வாசலில்
நின்று கொண்டேயிருந்துவிட்டு
கண்ணீருடன்
சென்றார் கடவுள்.
யாரேனும்
பின்சென்று
கடவுளைக்
காப்பாற்றுங்கள்.