-காஞ்சனா சந்திரன் –
ஒரு பெருமழைக்கும் பேரலைகளுக்கும்
இடையிலான அந்த நிசப்த வெளியில்
நீ எனை கடந்து சென்று கொண்டிருந்தாய்
ஒரு புத்தனைப் போல..
நான் அங்கேயேதான் அமர்ந்திருந்தேன்
நினைவுகளின் பிடியிலிருந்து தன்னை
விடுவித்துக்கொள்ள விரும்பாத
இந்த பின்னிரவை சபித்த படி ..
அன்றொரு நாள் அந்திப்பொழுதில்
எனை உடைந்தழச்செய்த
செல்லோவின் பெருந்துயரை மீட்டியபடி..
கரையில் அமர்ந்து ரசித்திருக்கையில்
கரைந்துபோன அந்த ஒற்றைச்சூரியனை
மீண்டும் உதிக்கச்செய்து
பின் அது மறைந்து போவதை பார்த்தபடி..
நீயோ இப்போது இன்னும் தொலைவில்
கடந்து போய் கொண்டிருக்கிறாய் பின் தொடர்ந்து வா..
என்றெனை அழைப்பது போல..
இந்த துயரம் கூட ஒருவகை தெரிவு தான்
அதுவுனக்கு வேண்டாமே
என்றெனக்கு கூறுவது போல..
பின்னிரவின் இருள் மெல்ல விலக,
களையயர்ந்து நான் கண் மூடியபோது முத்தமிடத் தொடங்கியிருந்தாய் நீயென்னை
அந்த புத்தனின் புன்முறுவலோடு…!
காஞ்சனாவின் முகநூலிலிருந்து