அங்காடித் தெரு’ – மந்தைகளும்,வதைக்கூடங்களும்…தஸ்தயெவ்ஸ்கியும்’விண்ணைத் தாண்டி’யும்…’

எம் .ஏ. சுசீலா (இந்தியா)

ankaditheru கைப்பிடி உப்பு,கைக்குள் அடங்கும் தீப்பெட்டி இவற்றுக்குப் பின்னாலுள்ள கண்ணீர்க்கதைகள், உழைப்புச் சுரண்டல்கள்,மனிதப் பாடுகள் இவையெல்லாம் பொதுவாக நம் கவனத்துக்கு அதிகம் வருவதே இல்லை

கைப்பிடி உப்பு,கைக்குள் அடங்கும் தீப்பெட்டி இவற்றுக்குப் பின்னாலுள்ள கண்ணீர்க்கதைகள், உழைப்புச் சுரண்டல்கள்,மனிதப் பாடுகள் இவையெல்லாம் பொதுவாக நம் கவனத்துக்கு அதிகம் வருவதே இல்லை.செய்தித்தாள்களில் எப்போதாவது அவை பற்றிய அதிர்ச்சித் தகவல்களைக் காண நேரும்போது மட்டும் ஒரு உச்சுக் கொட்டலோடு…கணநேர அனுதாபத்தை நம் பங்குக்குக் காணிக்கையாக்கியபடி அடுத்த நொடியே அதிலிருந்து நம் கவனத்தை மிகுந்த அவசரத்தோடு மீட்டுக் கொண்டு விடுகிறோம்.குறிப்பிட்ட அந்தக் களங்களின் உழைப்பாளிகள் படும் அவத்தைகளை ஓரளவு அறிந்திருந்தாலும் விரிவான பின்புலத்தோடும்,தகிக்கும் நிஜங்களோடும்- மெய்யான கள ஆய்வில் கிட்டிய தகவல்களோடும் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவற்றை நாவலாக்கியபோது(‘கரிப்பு மணிகள்’,’கூட்டுக் குஞ்சுகள்’) மனம் கனத்துப் போய்….மலிவான அந்தப் பொருட்களை  சரளமாக..சகஜமாகப் பயன்படுத்தக் கூட இயலாத கூச்சம் கலந்த ஒரு குற்ற உணர்வு நெடுநாள் இருந்து கொண்டிருந்தது.

திரு ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’நாவல் பிச்சைக்காரர்களின் குரூர வாழ்வியல் அவலங்களைத் தோலுரித்துக் காட்டியபோது -வழக்கமாக முன்பெல்லாம் செய்ததுபோல் சில சில்லறைக் காசுகளை மட்டும் வீசிவிட்டு அவர்களைக் கடந்து சென்றுவிடுவதென்பது இயலாமல் போயிற்று

வசந்தபாலனின் இயக்கத்திலும், ஜெயமோகனின் உரையாடல் நயத்துடனும் அண்மையில் வெளிவந்திருக்கும் திரைப்படமான அங்காடித் தெரு’  பெருநகரங்களில் மட்டுமன்றிச் சிறு நகரங்களிலும் தற்போது வானுயர வளர்ந்து நிற்கும் பல்பொருள் அங்காடிகளைச் சற்றும் தயவு தாட்சணியமின்றிப் புறக்கணிக்கத் தூண்டும் உக்கிரமானதொரு மனநிலையை மனதிற்குள் அழுத்தமாகப் பதித்து விட்டிருக்கிறது.

‘திருமணத்துக்கு நாள் மட்டும் குறித்து விட்டுக் குறிப்பிட்ட கடைக்குள் நுழைந்தால் போதும்,திருமணத்தை முடித்து..சீர் செனத்தி செய்து தனிக்குடித்தனம் வைக்கும் வரை உள்ள எல்லாப் பொருட்களையும் வேறெங்கும் அலையத் தேவை இல்லாதபடி அந்த ஒரே இடத்தில் அள்ளிக் கொண்டு வந்து விடலாம்’என்ற கவர்ச்சியான விளம்பரத் தூண்டிலுக்கு ஆளாகும் மக்கள்  பேரங்காடிகளில் மந்தையாய்க் குவிகிறார்கள்…குவிகிறார்கள்…..குவிந்து கொண்டே இருக்கிறார்கள்.அது, முதல் குவியல்…..

பணத்தை மூட்டை கட்டி வைத்துக்கொண்டு நுகர்ச்சிக்கான பொருளை வாரிக் கொள்ளத் துடிக்கும்  அந்தக் கும்பலின் தேவைக்கேற்ற தீனி  சரக்கறையில் குவியல் குவியலாகக் கிடக்கிறது. அது, இரண்டாம் குவியல்.வாங்கும் கூட்டத்தின் ரசனையறிந்து தேவை உணர்ந்து சரக்குக் குவியலைத் தரம் பிரித்துக் கொடுக்க இன்னுமொரு கும்பல் தேவைப்படுகிறது. நிலம் வறண்டதால் வாழ்க்கை வறண்டு போனவர்களாய்ப் பஞ்சம் பிழைக்க வந்த பராரிகளின் கும்பல் அது. குறிப்பிட்ட அந்தக் கூட்டத்துக்கு நேரும் உழைப்புச் சுரண்டலும்,அடிப்படை மனித உரிமை மீறல்களும்….அந்தச் சூழலையும் கடந்ததாய்  மானுட உணர்வுகள் இன்னும் கூட மரத்துப் போகாதபடி அதில் சஞ்சரிப்பவர்களுக்குள்  சம்பவிக்கும் மெல்லிய காதல்,ஆழ்ந்த நட்பு முதலிய உணர்வுகளுமே ‘அங்காடித் தெருவி’ன் அடிநாதங்கள்.

இவை தவிர இன்னும் சில குவியல்களும் கூடப் படத்தில் பதிவு செய்யப்படுகின்றன.

மிதமிஞ்சிய பொருள் நுகர்ச்சியால் எஞ்சும் அளவு மீறிய குப்பை கூளங்கள்.படத்தின் முதல் காட்சிதொடங்கி இறுதி வரை அவற்றின் நெடி அடித்துக் கொண்டே இருக்கிறது. அவற்றையும் கூட ஜீவனத்துக்கு முதலாக்கும் சாமானியஜனங்கள்..!குப்பை பொறுக்கியும், குப்பைகளில் அரிதாய்க் கிடைக்கும் ஓரளவு நல்ல துணிகளைப் புதியதாக்கியும், பாழடைந்த கழிப்பறையைக் கட்டணக் கழிப்பறையாக்கியும் எப்படியோ பிழைப்பு நடத்தும் மனிதர்கள் !
(எப்படியும் பிழைத்துக் கொள்ளும் அந்தவகை உத்திகள்தான் கதையின் நாயக நாயகிக்கு நம்பிக்கையளித்து,  வாழ்ந்துவிடமுடியும் என்ற உத்வேகத்தை இறுதியில் அளிப்பவை.‘’விக்கத் தெரிஞ்சவன் வாழத் தெரிஞ்சவன்’’என்கிறார் வசன நெசவுசெய்த ஜெயமோகன்)

வளரிளம் பருவத்தில் வறுமையால் பெருவணிக அங்காடிகளில் வேலைக்குச் சேர்ந்து…உடலின் சக்தி ஒட்டுமொத்தமாகப் பிழிந்தெடுக்கப்பட்டபின் குப்பையாகவே மாறித் தெருவில் வீழ்ந்து கிடக்கும் வேறு சில மனித மாதிரிகள்!பல்பொருள் அங்காடிகளின் தினசரி ஓட்ட கோரப் பற்சக்கரங்களுக்கடியே  சிக்கிச் சிதறுண்டு கூழாய்ப் போகும் விற்பனைப் பையன்களுக்கும்,பெண்களுக்கும் வாய்த்திருக்கும் இரண்டு வதைக்கூடங்களை நெஞ்சைச் சுடும் குரூர யதார்த்தமாக முன் வைத்திருப்பதே இத் திரைப்படத்தின் தனிப்பட்டுச் சொல்லத்தக்க பங்களிப்பு.

ஒரு வதைக்கூடம், அவர்களின் பணியிடம். அது அவர்களைக் கசக்கிப் பிழிவதோடு …… அவர்கள் சோர்ந்து போகும் வேளைகளில் கங்காணிகளாக நியமிக்கப்பட்டிருக்கும் மேற்பார்வைக் கருங்காலிகளால் கொடூரக் கசையடிகளுக்கும் ஆட்படுத்துகிறது.ஒவ்வொரு தளத்திலும் அதற்கென்றே உள்ள திரையிட்ட தடுப்பு. அந்தத் திரை மறைவில் ஆண் தொழிலாளர்கள் அறை வாங்குகிறார்கள் ; விற்பனைப் பெண்களோ பெண் என்ற அடையாளத்தாலேயே மானக் கேடான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆட்படுகிறார்கள்.(வாடிக்கையாளரின் குறிப்பிட்ட ஒரு ரசனையைத் திருப்திப்படுத்த மேல்மாடியிலுள்ள சரக்கறை வரையில் பல முறை அலுக்காமல் ஓட வேண்டிய நிலையிலுள்ள சிறுவர்களைப் பார்த்த பிறகு …அந்தக் காட்சியைக் கண்ட பிறகு  எந்தக் கடைக்குள் நுழைந்தாலும் இருப்பதில் ஒன்றை எடுத்துக் கொண்டு விரைவாக நடையைக் கட்டிவிட வேண்டுமென்ற எண்ணம் மனச்சாட்சி உள்ள எவருக்கும் தோன்றாமலிருக்க முடியாது.)

அடுத்த வதைக்கூடம் , வறட்சியான கிராமங்களிலே இருந்து மந்தைகளாகக் கொண்டு வந்து கொட்டப்பட்டிருக்கும் பணியாட்களின் தங்குமிடம் ஹிட்லரின் ‘கான்ஸண்ட்ரேஷன் கேம்ப்’பை நினைவூட்டும் அடைசலும் நெரிசலுமான பொதுக்கூடங்கள்,அடுத்தவரின் எச்சில் தட்டைக்கழுவக்கூட முடியாமல் அவசர கதியில் உணவை அள்ளிவிழுங்கும் சாப்பாட்டுக் கூடங்கள்.இந்த இரு வதைக் கூடங்களை மட்டுமே சார்ந்து…அவற்றை மட்டுமே  நம்பியதாய் மனித வாழ்வு முடங்கிப் போய்விடக் கூடாது என்ற நம்பிக்கை ஒளியை விதைத்திருப்பதே இப் படத்தின் உச்ச கட்ட உணர்த்தல்.

‘யானை வாழும் காட்டிலேதான் எறும்பும் வாழ்கிறது’ என்ற ஜெயமோகனின் வசனம் அங்காடித் தெருவின் முழுமையான சாரத்தையும் உள் பொதிந்திருக்கிறது. கண் பார்வையற்ற நிலையிலும் தெருவோரமாய்ச் சிறு சிறு பொருட்களை விற்றுப் பிழைக்கும்முதியவரில் தொடங்கி வாழ்வதற்கான பல வழிகளை ஒரு வகுப்பறைப் பாடம் போலப் போதிக்கும் அந்தத் தெருவே இந்தப் படத்தின் மையப் பாத்திரமுமாகிறது.

அந்தப் புரிதலும் தெளிதலும் இன்றி அடுத்தவரின் அடக்குமுறைக்கு ஆட்பட்டுக் கிடக்கும் அடிமைத் தளையிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு சில அவலச் சம்பவங்களுக்குப் பிறகு, சுதந்திரமான சிறு வணிகர்களாகக் கதை மாந்தர்கள் மாற்றம் பெறுகிறார்கள். வாழ்வதற்கான உரத்தைச் சாமானியர்கள்  பெறும்போது அவர்கள் வாழ்வில் நிகழும் அவல நிகழ்வுகளை  நாடகத் தன்மையானவை  என்று புறந்தள்ளிவிடமுடியாதபடி இயல்பான யதார்த்த நிகழ்வுகளாகவே அவை  படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. வழக்கமான ஒரு காதல் கதைக்கு வித்தியாசமானதொரு பின்புலம்  என்று சில விமரிசனங்கள் இப் படம் பற்றிக் குறிப்பிட்டாலும் அதை அவ்வாறு கொள்ள முடியாதென்றே சொல்லத் தோன்றுகிறது. காதலை…நெகிழ்ச்சியை..நட்பை உணரும் பருவத்தில்  குடும்ப உறவுகளிலிருந்து வெகுதூரம் அந்நியப்பட்டுப் போய் -ஆணும் பெண்ணும் அடுத்தடுத்துப் பணியாற்ற வேண்டிய வேலைச் சூழலில் ஒருவருக்கொருவர் ஆதுரமாய் ஆதரவாய் இருப்பதும் அவர்களிடையே காதல் முகிழ்ப்பதும் கதைக் கருவை ஒட்டியதாகவே அமைந்திருக்கிறது. சொல்லப் போனால் அனல் காற்று வீசும் அந்தச் சூழலில் காதல் ஒரு மெல்லிய பூங்காற்றாய் அந்த இளைஞர்களைத் தழுவி ஆர அணைத்தபடி ஆறுதல் தருகிறதென்றுகூடக் கூறலாம்.

மொத்தத்தில் இதுவரை சொல்லப்படாத களம் ….. !
முறைப்படுத்தப்படாத தொழிற்களத்தை வரித்துக் கொண்டிருக்கும் பேசப்படாத மனிதர்கள் !
சமூக மனச்சாட்சியை ஆழத்திலிருந்து அகழ்ந்தெடுத்துப் பிடரி பிடித்து உலுக்குகிறது அங்காடித் தெரு.

பின் குறிப்பு;
புது தில்லியின் சூழலில் புதிய தமிழ்ப்படங்களை சட்டத்துக்குப் புறம்பான…தரம் குறைவான சி.டிக்களில் மட்டுமே பொதுவாகப் பார்க்க முடியும்.இம்முறை ‘அங்காடித் தெரு’ வெளிவந்த ஒரு சில வாரங்களிலேயே – சித்திரைத் திருநாளன்று – தில்லித் தமிழ்ச்சங்கம் அதைத் திரையிட்டுவிட்டதால் இத்தனை தரமான ஒரு படத்தைத் தெளிவான முறையில் பார்த்து விமரிசனம் எழுதுவது சாத்தியப்பட்டிருக்கிறது.அதற்காகத் தில்லி தமிழ்ச்சங்கத்துக்கு ஒரு கை கூப்பு.

படத்தில் பணியாட்களுக்கு அறை விழும்போதெல்லாம் அரங்கில் சின்னச் சலசலப்பும் ’இது கொஞ்சம் ஓவர்’போன்ற வார்த்தைகளும் காதில் விழுந்து கொண்டே இருந்தன. கும்பமேளாவுக்காக அப்போது வடக்கில் இருந்த படத்தின் வசனகர்த்தாவான எழுத்தாளர் திரு ஜெயமோகனோடு உடன் இது பற்றித் தொலைபேசியில் பகிர்ந்தபோது அவர் சிரித்தபடி ‘’நிஜத்திலே இன்னும் அதிகமாவே அடிப்பாங்க’’என்றார் சுருக்கமாக.சோகத்தின் கனம் தாங்காமல் அரங்கைவிட்டுப் பாதியில் வெளியேறிய கூட்டமும் உண்டு.ஜிகினா சுற்றிய சினிமாவையே நாடுபவர்களும்,பிறர் துன்பத்தைத் தாங்க முடியாத பேரருளாளர்களாகப் பாவனை செய்தபடி – உண்மையில் தங்களை வருத்தப்படுத்திக் கொள்ள விரும்பாதவர்களுமே இப்படிப்பட்ட எதிர்வினை ஆற்றுபவர்கள்.இந்தக் கூட்டத்தில் மேல்மட்ட கீழ்மட்ட பேதங்களோ – வர்க்க வேறுபாடுகளோ இருப்பதில்லை .இவர்கள் ஒரு தனி வர்க்கம்…அவ்வளவுதான்.இந்தப் போக்கு தில்லிக்கு மட்டும் உரியதென்றும் சொல்லி விடமுடியாது.மதுரையில் பல்லாண்டுகள் வசித்தபோதும் இப்படிப்பட்ட கூட்டத்தைக் கண்ட அனுபவம் உண்டு.பம்பாய் படத்தில் அரவிந்தசாமிக்குக் கல்யாணம் முடிந்தவுடனும்,சேது படத்தில் சேதுவுக்கு மன நிலைப் பிறழ்ச்சி ஏற்பட்டவுடனும்…அடுத்த நிமிடமே அரங்கைக் காலி செய்து விடுபவர்கள் இவர்கள்.இப்படிப்பட்ட பார்வையாளர்களே மிகுதியாக உள்ள தமிழ்ச் சூழலில்
 சுடும் உண்மைகளைத் துணிவாக முன் வைத்துக் குத்துப்பாட்டு..இரட்டை அர்த்தம்…அரிவாள்வீச்சு..தெருச்சண்டை தவிர்த்த நல்லதொரு யதார்த்தப் படமாக ‘அங்காடித் தெரு’வை உருவாக்கித் தமிழ்ப் படங்களின் தரம் ஓரளவேனும் உயர உதவியிருக்கும் படக் குழுவினருக்குப் பாராட்டுக்கள்.

  

 ‘விண்ணைத் தாண்டி வருவாயா’

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இதற்குள் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ஒரு பழைய படமாகியிருக்கக் கூடும். ஆனால் தில்லி வாழ் தமிழர்களுக்கு இத்தனை சீக்கிரம் இப் படத்தை அகலத் திரையில் காண வாய்ப்புக் கிட்டியதே பேரதிசயம்தான்.
அங்காடித் தெருவை வெளியிட்ட சில நாட்களிலேயே ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தையும் வரவழைத்து வெளியிட்டு இங்குள்ள தமிழ் மக்களுக்கு அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது,தில்லி தமிழ்ச்சங்கம்.

 படத்தைப் பற்றிய விமரிசனங்கள் எக்கச் சக்கமான வலைகளை ஏற்கனவே நிரப்பி முடித்துவிட்டதால் அதிகம்

 சொல்ல ஏதுமில்லை என்றாலும் ஓரிரு எதிர்வினைகளை வெளியிட்டே ஆக வேண்டும்.எல்லை தாண்டி ,குடும்ப வரையறை தாண்டி…சில மனத்தடைகளைத்  தாண்டி வர இயலாத பெண்ணின் மன அமைப்பை அதன் உளவியலை மிக நேர்த்தியாக இப்படம் பதிவு செய்திருக்கிறது.அப்படித் தானும் அலைக்கழிவுபட்டு அவனையும் ஏன் அவள் அலைக்கழிக்கவேண்டும் என்ற சில எரிச்சலான முணுமுணுப்புக்களும் அரங்கிலும்,வெளியிலும் கேட்காமலில்லை.தனது இடியட் நாவலில் , மிஷ்கினை அலைக்கழிக்கும் இரண்டு பெண்களையும்….அவர்களின் மன அமைப்பையும் துருவித் துருவிப் படம் பிடித்து அற்புதமாகச் சித்தரித்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.‘காதலுக்கு மரியாதை’ ‘ராஜ பார்வை’ முதலிய படங்களைத் திரும்பப் பார்ப்பதான உணர்வு சில இடங்களில் தலை தூக்கினாலும் ….

 அண்மைக் காலப் படங்களில் காதலின் தவிப்பை அவஸ்தையை அதனால் விளையும் பரிதவிப்புக்களை இந்த அளவு யதார்த்தத்தோடும்….கலைநயத்தோடும்…அழகியல் உணர்வோடும் பதிவு செய்துள்ள படம் ’விண்ணைத் தாண்டி வருவாயா’ மட்டுமே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

 ஒருத்தி ஒழுக்கத்தை அரணாகப் பூண்டு மிகப் பாதுகாப்பான சூழலில் வாழும் வாய்ப்புக் கிடைத்தவள்;(அக்லேயா இவாநோவ்னா)மற்றொருத்தி, சந்தர்ப்ப சூழலால் சீரழிவுகளுக்கு ஆளாகி  அதன் காரணமாகவே ஒருபுறம் வஞ்சத்தோடும் , மறுபுறம் தாழ்வு மனப்பான்மையோடும் தவித்துக் கொண்டிருப்பவள்.(நஸ்டாஸ்யா பிலிப்போவ்னா)
இருவருமே இடியட் மிஷ்கினை நேசிக்கவும் செய்கிறார்கள்; அவனை அலைக்கழிப்புக்கும் ஆளாக்குகிறார்கள்.
மிஷ்கினும் அவர்கள் இருவரையும் வெவ்வேறு கண்ணோட்டங்களோடு அணுகிப் பரிவும் பாசமும் காட்டுகிறான்.
ஆனால்  ஏற்கனவே சற்று மனப்பிறழ்வுக்கு ஆட்பட்டிருந்த அவனை மேலும் பைத்தியமாக்கி வேடிக்கை பார்ப்பதே அவர்கள் இருவரின் வாடிக்கையாக இருக்கிறது.ஒருத்தி திருமண நிச்சயம் வரை சென்றுவிட்டு அவனை மறுதலிக்கிறாள்.இன்னொருத்தியோ மணமேடையில் அவனைக் காத்திருக்க வைத்து விட்டு ஓடிப் போகிறாள்.

மனித மனத்தின் புரியாத பக்கங்களை….இண்டு இடுக்குகளைப் புறவயப் பார்வையோடு வாசகர் முன் வைத்து விட்டுத்  தீர்ப்பை அவரவர் ஏற்புத் திறனுக்கே விட்டு விடுகிறார் தஸ்தயெவ்ஸ்கி.

விண்ணைத் தாண்டி வருவாயா நாயகியின் உள அமைப்பும் அது போன்றதுதான்.
அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்றால் ….
‘அவள் அப்படித்தான்’ என்பதற்கு மேல் பதிலில்லை.

 அந்தக் கேள்விக்கு உடனே எனக்குத் துணை வந்தவர் தஸ்தயெவ்ஸ்கி.

தமிழ்ப்படத்துக்கும் தஸ்தயெவ்ஸ்கிக்கும் என்ன சம்பந்தம் என்றோ…தஸ்தயெவ்ஸ்கியைக் கொச்சைப்படுத்துகிறேன் என்றோ தீவிர தஸ்தயெவ்ஸ்கி ரசிகர்கள் சண்டைக்கு வந்து விட வேண்டாம்.நடுநிலை ரசனையோடு பார்த்தால் நமக்கு தஸ்தயெவ்ஸ்கியும் வேண்டும் ; தரமான தமிழ்ப்படங்களும் வேண்டும் என்பதுதானே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும் ?தஸ்தயெவ்ஸ்கியின் ‘இடியட்’நாவலை நான் முழுமையாக மொழிபெயர்த்து முடித்திருக்கும் இந்தத் தருணத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா நாயகியின் உளவியலை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.
                                                                       

 

மிஷ்கின் susilama2      susilama நஸ்டாஸ்யா     
 
                                                          

கேரளத்துக் காட்சிகளின் பசுமை அழகுக்காக…..தானும் ஒரு பாத்திரமாகவே மாறிப் போய்விட்டிருக்கும்  ரஹ்மானின் இசை நுட்பத்தை முழுமையாக உணர்வதற்காக…..இப் படத்தைக் காட்சி அரங்குகளில் மட்டுமே பார்த்தாக வேண்டும்.

http://www.oodaru.com/?p=992#more-992

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *