கக்கூஸ்: தமிழ் ஆவணப்பட உலகின் ‘கல்ட்’ ஆக்கம்!

அண்மையில் பெண் இயக்குனர் திவ்யா பாரதி இயக்கி வெளிவந்துள்ள தமிழ் ஆவணப்படம் ’கக்கூஸ்’ குறித்த கருத்துக்களை தன் முகநூல் பக்கத்தில் படிவிட்டிருந்தார் சினிமா ஆர்வலரும், பத்திரிகையாளரும் ஆன சரா. அதன் தொகுப்பு இதோ…

 
 
 

என் கவர் போட்டோவில் மாட்டப்பட்ட முதல் ஆவணப்படம் இதுதான் என்று நினைக்கிறேன். #கக்கூஸ் ஆவணப்படத்தின் ட்ரெய்லரே பல வகையில் அச்சுறுத்தியது. அதன் தொடர்ச்சியாகவே வலி உடனான கோபத்தையும், குற்ற உணர்வையும் வலுவாகக் கூட்டியது முழு ஆவணப்படம்.

இரண்டு மணி நேர திரைப்படத்தையே உட்கார்ந்து பார்க்க முடியாத அளவுக்கான தமிழ் சினிமா சூழலில் சிக்கியுள்ளவர்களை, ஒன்றே முக்கால் மணி நேரம் ஓடும் ஓர் ஆவணப்படம் முழுக்க முழுக்க கட்டிப்போட்டு கலங்கடிப்பதன் பின்னணியில் என்ன இருக்கும் என்று யோசித்தால் கிடைத்த பதில்: உண்மையும் நேர்மையும்.

கக்கூஸ் படக்குழுவின் உண்மையும் நேர்மையும் கொண்ட உழைப்பின் விளைவுதான், அந்த ஆவணப்படத்துக்கு கிடைக்கும் வரவேற்பு!

மலம் – மனிதக் கழிவுகளை கரங்களால் அள்ளும் மனிதர்களின் பின்னால் இருக்கும் சாதி அரசியல் பிற்போக்குகள், சமூக அவலங்கள், சுரண்டல்கள், தீண்டாமைக் கொடுமைகள் முதலான ஒட்டுமொத்த உண்மைகளையும் பாதிக்கப்பட்டோரின் வாக்குமூலங்கள் வாயிலாகவும், உண்மைக் காட்சிகள் மூலமாகவும் ‘ரா’வாக பதிவு செய்யப்பட்ட விதத்தில் மட்டுமின்றி, சமரசமற்ற ‘துணிச்சல்’ மிகுதியுடன் களம் கண்ட விதத்தில், தமிழ் ஆவணப்பட உலகில் ‘கக்கூஸ்’ ஒரு ‘கல்ட்’ ஆக்கம்.

நாம் தினம் தினம் கடக்கும் மனிதர்களும் குழந்தைகளும் நவீன அடிமைகளாக நாம் வாழும் சமூகத்திலேயே கிடந்து சாகிறார்கள் என்பது தெரியாமலேயே நம்மில் பலரும் இயல்பு வாழ்க்கையை ரசித்து வாழ்கிறோம் என்பதை சொல்லாமல் சொல்லி, நம் முகத்தில் கக்கூஸில் உள்ளவற்றை வாரியடித்த உணர்வு மேலிட்டது எனக்கு மட்டும்தானா?

ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு சாதி அடிப்படையில் இழைக்கப்படும் ‘அதிகாரபூர்வ’ கொடுமையின் விளைவுதான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. சாதி என்பது இங்கே வேர்க் காரணம் என்பது தெளிவு. சாதி ஒழிப்பு மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு என்பதும் தெளிவு. ஆனால், இதைப் போலவே பல சமூகப் பிரச்சினைகளுக்கும் சாதிதான் வேர்க் காரணம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சாதி ஒழிப்பை நோக்கிதான் நகர வேண்டும் என்றாலும், அந்தப் பயணத்தின் தூரத்தை சம்பந்தப்பட்ட அனைவருமே கணிக்க முடியும்.

 

ஒரு குறிப்பிட்ட நோய்க்கு ‘ரூட் காஸ்’ அறியும் மருத்துவர் ஒருவர், அந்த ரூட் காஸை முறியடிக்க நேரடியாக சிகிச்சை அளிப்பதில்லை. அந்த வேர்க்காரணம் ஏற்படுத்திய நோயின் பக்க விளைவுகள் ஒவ்வொன்றையும் சரிசெய்ய சிகிச்சை அளித்து, அந்நோயை முழுமையாக குணப்படுத்துவார் என நம்புகிறேன். அதுபோலவே, எந்தப் பிரச்சினையில் எல்லாம் சாதி என்பது வேர்க்காரணமாக இருக்கிறதோ அந்தப் பிரச்சினைகளில் எல்லாம் பக்கவிளைவுகள் ஒவ்வொன்றையும் தகர்த்தெறிந்துவிட்டால் வேர்க்காரணத்தை முழுமையாக அகற்றிவிடலாம் என இந்த எளிய புத்தி நம்புகிறது.

இல்லையேல், சாதியை வைத்து மக்களை ஒடுக்கி ஒரு கூட்டம் லாபம் கொழிக்கும்; அந்த ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தே போலிப் போராளிகள் கூட்டம் வாழ்நாள் முழுவதும் பிழைக்கும் என்றே கருதுகிறேன்.

நம் தூய்மைப் பணியாளர்களின் துயர்மிகு வாழ்க்கைக்குப் பின்னால் இருக்கும் வேர்க்காரணமும் சாதிதான் என்பதை அப்பட்டமாக புட்டுவைத்திருக்கிறது கக்கூஸ். அதேநேரத்தில், பாதிக்கப்பட்ட சமூகத்தினர் தங்களின் துயரங்களுக்கான காரணிகளை அடுக்கியபோது, அவற்றில் பெரும்பாலானவற்றை அரசோ அதிகாரமோ எவரது துணையுமின்றி சகமனிதர்களாகிய நம்மாலேயே களைத்திட முடியும் என்ற நம்பிக்கையையும் அழுத்தமாகத் தருகிறது.

ஒரு காலத்தில் கூத்தாடிகள் என சினிமாக்காரர்களை ஒதுக்கியதையும், சமையல்காரர்களை ஏளனமாக பார்ப்பதையும் அறிந்திருக்கிறேன். ஆனால் இன்று அங்கிங்கெனதாபடி கடைவிரிக்கப்பட்டுள்ள விஷுவல் கம்யூனிகேஷனிலாவது படித்துவிட்டு சினிமா பக்கம் போவதற்கு எல்லா தரப்பு பெற்றோர்களுமே தங்கள் பிள்ளைகளை ஊக்குவிக்கிறார்கள். கேட்டரிங் இன்டஸ்ட்ரீ வேற லெவலில் போய்விட்டதும் உலகம் அறியும்.

அதுபோலவே, இந்தத் தூய்மைப் பணியையும் மக்கள் மேன்மையாகக் கருதும் வகையில், அதன் தரம் உயர்த்தப்பட வேண்டும். எல்லா தரப்பு மக்களையும் தூய்மைப் பணியை தங்கள் தொழிலாக தெரிவு செய்யக் கூடிய நிலையை எட்ட வேண்டும். அதற்கு ஒரு வீட்டின் கட்டுமானப் பணியில் தொடங்கி கிராமம், சிறு நகரம், நகரம், மாநகரங்களின் கட்டமைப்புகளில் மறுசீரமைப்பு நிகழ்த்தப்பட வேண்டும் என்பதை ஆட்சியாளர்களுக்கும் சாமானிய மக்களுக்கும் இந்த கக்கூஸ் எளிதில் புரியவைப்பதாகவே கருதுகிறேன்.

வந்த நோயைத் தீர்க்கும் மருத்துவப் பணி புனிதமானது என்றால், அந்த நோய் வராமல் தடுக்கக் கூடிய சுகாதார – தூய்மைப் பணியை மேற்கொள்ளும் உன்னதப் பணியை செய்வோருக்கு மிக அதிக ஊதியம் அல்லவா தரப்பட வேண்டும்?

கக்கூஸ் விவகாரத்தைப் பொறுத்தவரையில் மக்களின் மனமாற்றத்தில் இருந்துதான் எல்லாம் தொடங்கவேண்டும் என்பதை அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற தூய்மைப் பணியாளர்களின் குரல்களில் இருந்தே தெரிந்துகொள்ள முடிகிறது.

இதுபோன்ற பிரச்சினைகள் அனைத்துமே 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம்தான் போய் சேரவேண்டும். அவர்களுக்கு ஏற்படுத்துகின்ற தாக்கம்தான், சமூக மாற்றத்துக்கான விளைவுகளைத் தரும் என்று நம்புகிறேன். என்னைப் போன்ற பெரும்பாலானவருக்கு நிச்சயம் தாக்கம் ஏற்படும். அந்தத் தாக்கம் என்பது நாளை காலை தோழர் நயன்தாரா குறித்த ஸ்டேட்டஸ் பதிவிடும் வரை மட்டுமே நீடிக்கக் கூடும். எல்லா சமூகப் பிரச்சினைகளையும் மாணவர்களிடம் மிகச் சரியான பாதையிலும் வடிவத்திலும் கொண்டுசெல்லும் பட்சத்தில்தான் நீண்ட கால பலன் சாத்தியமாகும். மற்றவை எல்லாம் குறுகியகால பலனுக்கே வித்திடும் என்பதும் என் தனிப்பட்ட எண்ணம்.

கக்கூஸ் படத்தை 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பார்க்கத்தக்க வகையிலான தனி வெர்ஷன் ஒன்று தயார் செய்து, அதை பள்ளிதோறும் மாணவர்களுக்குப் போட்டுக் காட்டினால், அது ஏற்படுத்தும் தாக்கத்தில் லெவலே வேறு என்று கருதுகிறேன். 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு இப்போதுள்ள வெர்ஷனில் எதையும் வெட்டாமல் அப்படியே வைத்தல் சிறப்பு.

எம்.எம். ப்ரிவ்யூ தியேட்டரில் நான் பார்த்த ‘கக்கூஸ்’ ஆவணப்படமானது இறுதி வடிவத்துக்கு முந்தையது. இறுதி வடிவத்தில் பிஜிஎம் சேர்த்திருப்பதாகச் சொல்கிறார்கள். என் தனிப்பட்ட கருத்து, இந்தப் படத்துக்கு பிஜிஎம் தேவையில்லை. படக்குழு காட்டிய உண்மைக் காட்சிகளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்தத் தாக்கம் அப்படியே இருந்தாலே போதுமானது. பிஜிஎம் மூலம் அந்தத் தாக்கம் கூடினாலோ குறைந்தாலோ அது ஒரு பின்னடைவாக ஆகிவிடுமோ என அஞ்சுகிறேன். படம் முழுவதுமே கட்டியிழுத்துச் செல்லும் ‘சைராட்’ படத்தின் கடைசி காட்சியில் இசை இருக்காது. அந்த இடம்தான் நம்மை பெரும் தாக்கத்துடன் குத்தும். கக்கூஸ் முழுவதுமே அப்படி ஒரு வீரியமான தாக்கத்தைத் தந்ததன் பின்னணியில் பின்னணி இசை ஏதுமின்றி நேரடியாக நிஜத்துக்குள் நுழைந்து பார்த்த அனுபவத்தை தந்தது எனக்கு.

ஒரு பிரச்சினை சார்ந்த ஆவணப்படத்தில் சம்பந்தப்பட்ட எல்லா தரப்பின் கோணங்களும் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பர். கக்கூஸில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பும், பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தரப்பும் முழுமையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தூய்மைப் பணியாளர்கள் தங்கள் சமூகத்தில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை அவர்களே சொல்வது காட்டப்பட்டது போலவே அவர்களை பலதரப்பட்ட பொதுமக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும் பதிவு செய்திருந்தால், அதிலேயே மக்களின் பார்வையையும் கண்டுகொண்டிருக்க முடிந்திருக்கும்.

அதேபோல், அரசு – அதிகாரிகள் – நிர்வாகங்கள் தரப்பில் இருந்தும் கேட்டு எதையும் பதிவு செய்யவில்லை. ஒருவேளை, அவர்களைக் கேட்டு, அவர்களிடம் இருந்து வந்தவை எல்லாம் வழக்கமான மொக்கை சமாளிப்பு பதில்கள்தான் என்பதாலேயோ அல்லது ‘அரசும் அதிகாரிகளும் என்ன சொல்வார்கள் என்பது பார்வையாளர்களாகிய நமக்கு தெளிவாகத் தெரியும். எனவே நேரத்தை வீணடிக்க வேண்டாம்’ என்று புத்திசாலித்தனமாக விட்டுவிட்டார்களோ என்னவோ!

எல்லாம் கடந்து, ஓர் ஆவணப்படம் இவ்வளவு நீளமா? – இப்படியும் ஒரு கேள்வி எழலாம். ஒரு நொடி கூட நான் அசதியுறவில்லை. இதைவிட வேறென்ன வேண்டும், ஆவணப் படத்துக்கான திரை மொழிக்கு?

 

 

 

கக்கூஸ் ஆவணப்படத்தின் ட்ரெய்லர்
 

ஆம்… மலமும் மலம் சார்ந்த உண்மைக் காட்சிகளும், மலம் அள்ளும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையும்தான் ‘கக்கூஸ்’. இதைப் பார்க்கும்போது பார்வையாளர்களாகிய நம்மில் பலருக்கும் வாந்தியெடுக்கும் உணர்வு வரலாம். முகம் சுளிக்கலாம். கண்களை மூடிக்கொள்ளலாம். இத்தனையும் நடக்கலாம்.

சகமனிதர்களாகிய இவர்களையும், இவர்களது வாழ்க்கையையும் ஒண்ணே முக்கால் மணி நேரம் கூட நிழலில் நம்மால் பார்க்க முடியவில்லையே, அதையே தங்கள் இயல்பு வாழ்க்கையாக நிஜத்தில் சாகும் இவர்களது நிலையை உணரவைக்க வேறென்ன வேண்டும்?

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *