`தமிழ்ப் பெண் எழுத்துக்களின் வரலாறு’ என்ற தலைப்பில் இரெ. மிதிலா, சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத் துறையில் செய்த ஆய்வு, `பெண் எழுத்து’ என்ற நூலாக வெளியாகியுள்ளது (வெளியீடு: அடையாளம் பதிப்பகம்). 1901 – 1950 வரையிலான காலகட்டத்தில் தமிழ் மொழியில் வெளிவந்த 58 இதழ்களிலிருந்து பெண்களால் எழுதப்பட்ட கதை, கட்டுரை முதலிய அனைத்து எழுத்து வகைகளும் ஆய்விற்குத் தரவுகளாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
இந்தியாவில் பெண் எழுத்துக்கள் சாத்தியமாவதற்கு மூல காரணமான பெண்கல்விக்கு ஆங்கிலேய அரசும் அவர்களைச் சார்ந்த கிறித்துவச் சபைகளுமே தொடக்கத்தில் தூண்டுதல் கொடுத்தனர் என்கிறார் மிதிலா. ஆங்கிலேய அரசின் முயற்சி கல்வியையும் எழுத்தறிவையும் ஒரு சிறிய வட்டத்திலிருந்து அனைவருக்குமானதாக மாற்றியது. பெண்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் அவ்வளவு எளிதாக அது நடைபெறவில்லை. ஏனெனில் அன்றைய சமூகத்தில் கல்வியும் எழுத்தறிவும் பெற்றிருந்த பெண்கள் தேவதாசிகளாவர். எனவே, கல்வி கற்ற, கல்வி கற்க விரும்பும் பெண்ணை இச்சமூகம் ஒழுக்கம் தவறியவளாகவேப் பார்த்தது. பெண்ணுக்கு கல்வி வேண்டும். ஆனால் அது `இந்தியப் பண்பாட்டு’க்குக் குந்தகம் விளைவிக்காததாய், `குடும்பப் பேணுகைக்கு’ பங்கம்வராததாய் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டதாக மிதிலா குறிப்பிடுகிறார்.
அத்தகைய சூழலில், கல்வி கற்று எழுதிய ஒவ்வொரு பெண்ணும் சாதனையாளராகவே எனக்குப் படுகின்றனர்.
இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஐந்து இதழாசியர்கள் பற்றிய செய்திகள் முக்கியமானவை.
1. பண்டிதை விசாலாட்சி அம்மாள் (ஹிதகாரிணி இதழ்) – கைம்பெண்ணான பின்பும் எதிர்ப்பினை மீறிப் படித்துப் பட்டம் பெற்று, தனியாகச் சென்னைக்கு வந்து, கிடைத்த ஆசிரியை வேலையை விட்டுவிட்டுத் தந்தை விரும்பாத நிலையிலும் எழுத்துப் பணியைச் செய்யத் துணிந்தார். தம்மை இதழாசிரியர் பணியிலிருந்து விலகச் செய்தவர்களுக்கு எதிராக `ஹிதகாரிணி’ இதழை 1909ல் தொடங்கினார்.
2. சகோதரி வி.பாலம்மாள் (சிந்தாமணி இதழ்) – இவர், 1924ல் வெளிவந்த சிந்தாமணி முதல் இதழிலேயே தமிழ்நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை முக்கிய நோக்கமாகக் கொண்டது என்று அறிவித்திருக்கிறார். கல்வி கற்கும் சுதந்திரமும், கற்ற பின்னர் திருமணத்தைத் தேர்ந்தெடுக்கிற சுதந்திரமும் பெண்களுக்கு வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் (அவர் சொல்லி 92 ஆண்டுகள் ஆகியும்… இன்னும் வலியுறுத்தும் நிலையில் தானே இருக்கிறோம் 🙁 ). ஓட்டுரிமை பெற்ற பெண்கள் அரசியலில் மக்கள் பிரதிநிதியாகப் பங்கேற்க வேண்டும் என்றும் பாலம்மாள் எழுதி வந்துள்ளார்.
3. வை.மு. கோதைநாயகி அம்மாள் (ஜகன்மோகினி இதழ்) – இவர் ஏறத்தாழ 35 ஆண்டுகாலம் பத்திரிகை துறையில் பணியாற்றியவர். தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தும், இவருக்கு 20 வயது வரை தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது, அவர் சொல்ல தோழி பட்டம்மாள் எழுதியதுதான் வை.மு.கோவின் முதல் படைப்பு `இந்திரமோகனா’. ஜகன்மோகினி இதழின் முதல் 13 ஆண்டுகள் வை.மு.கோவின் எழுத்துக்கள் மட்டுமே (தொடர்கதைகள், புதினங்கள், அனுபவ மொழிகள், ஹாஸ்யக் குறிப்புகள்) இடம்பெற்றன. `பயனுள்ள பொழுதுபோக்கு, சமூக சீர்திருத்தம் மற்றும் மறுமலர்ச்சி’ என்பது ஜகன்மோகினியின் முகப்பு வாசகமாக இருந்தது. சமையல் குறிப்புகள், அழகுக்குறிப்புகள், கோலப்பகுதி, ஜோதிடம் போன்றவை இதழில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
4. மு.மரகதவல்லி (மாதர் மறுமணம் இதழ்) – இந்த 5 இதழாசியர்களில் இவர் ஒருவரே பார்ப்பனல்லாதவர். கணவனை இழந்து மறுமணம் புரிந்தவரும் கூட. மாதர் மறுமண சகாய சங்கத்தின் செயலர் முருகப்பாவை மணந்து கொண்டார். இந்த சங்கத்தின் சார்பாக, விதவை மறுமணத்தை வலியுறுத்துவதை நோக்கமாக கொண்டு, 1936ல் காரைக்குடியில் மாதர் மறுமணம் இதழ் தொடங்கப்பட்டது. இதழ் முழுவதும் மாதர் மறுமணம் பற்றிய செய்திகள் கட்டுரைகளாகவும், கவிதைகளாகவும், கதைகளாகவும், ஆசிரியர் குறிப்புகளாகவும், நிகழ்ச்சி துணுக்குகளாகவும் அமைந்துள்ளன. இந்த இதழில் வெளிவந்த பால்ய விதவைகளைப் பற்றிய 1936ம் ஆண்டு புள்ளிவிவரம் (1 வயதுக்குட்பட்ட விதவைகள் – 1515 என்று ஆரம்பித்து 2, 3, 4, 5, 10, 15 வயதுக்குட்ட விதவைகள் மொத்தம் 3,21,701) அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. விதவைகளுக்கு சொத்துரிமை வேண்டும் என்ற குரல் எழுந்த போது அதற்கு ஆதரவு தெரிவித்தவர் மரகதவல்லி. பெண்களுக்கு பொருளாதார சுயசார்பு வேண்டுமென்று வலியுறுத்தினார். அத்துடன், ஹிந்து விதவை சொத்துரிமை மசோதாவை நடைமுறைப்படுத்தலில் உள்ள அலட்சியத்தையும் எதிர்ப்பையும், அவை பெண்ணுக்கு / விதவைக்கு சொத்துரிமை கொடுப்பதனாலேயே எதிர்க்கப்பட்ட நிலையையும் பதிவு செய்கிறார். இதே பொருளில், சாதிமத பேதத்தைப் பாராட்டும் வைதீகர்களையும் நையாண்டி செய்கிறார். கலப்பு மணத்தில் பிறந்த குழந்தைகளின் உரிமையைக் குறித்தும் குரல் கொடுத்துள்ளார். மரகதவல்லி அம்மாளின் துணிவும், பணிகளும் அபாரம் !
5.குகப்பிரியை (மங்கை இதழ்) – இவர் இதழாசிரியர் மட்டுமல்ல எழுத்தாளரும் கூட. கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று பல துறைகளிலும் ஈடுபட்டவர். பெண்கல்வி, ஆண்-பெண் சமத்துவம், பெண்களுக்கு சொத்துரிமை தேவை, பொருளாதாரச் சுதந்திரம் தேவை எனப் பெண்ணியத்திற்கு நெருக்கமான கருத்துகள் பலவற்றைக் கட்டுரை வடிவில் பரவலாக வெளியிட்டு, மங்கையை முக்கியமான இதழாக கொண்டு வந்தவர் குகப்பிரியை.
பெண் எழுத்தின் பல பரிமாணங்களையும், இதழாசியர்கள், எழுத்தாளர்கள் எதிர்கொண்ட சவால்கள், அன்றைய காலத்தின் கட்டுப்பாடுகள் என்று பல தகவல்களைத் தரும் `பெண் எழுத்து’ நூல் அரிய ஆவணம். ஆய்வை மேற்கொண்ட நூலாசியர் இரெ.மிதிலாவுக்கு அன்பும் வாழ்த்துக்களும்.
Thanks – https://www.facebook.com/search/top/?q=penn%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D