இன்றையநாளில்…

– ஆதிலட்சுமி

Female-The-World-War-on-Women-350
இன்றையநாளை உலகம் அனைத்துலகப் பெண்கள்நாளாக கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட நூறாண்டுகளாக இந்தநாளை உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கான உரிமைகளைப் போராடிப்பெற்றுக்கொண்டதாக வெற்றிமுரசுகொட்டும் இந்த உலகில், ஒடுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஓர் இனத்தில் நானும் ஒருத்தியாக இருக்கின்றேன். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்தில் பிறந்து, ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அங்கேயே வாழ்ந்தவள் என்கின்ற உரிமையோடு இதனை பதிவுசெய்கின்றேன். காலந்தோறும் நாட்டில் பெண்கள் நடத்தப்படும் விதங்களையும், பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளையும் கண்ணுற்று வளர்ந்திருக்கின்றேன். குடும்பரீதியாக, சமூகரீதியாக, இனரீதியாக பெண்கள் அனுபவித்துவரும் துன்பதுயரங்கள் என்நெஞ்சுக்குள் நிறையவே உண்டு. நானும் இவற்றில் சிலவற்றையாவது பட்டிருக்கின்றேன்.

பெண்களை கேலிப்பாருளாகவும், பாலியற்பண்டமாகவும், அடங்கிக்கிடக்கவேண்டிய உணர்வற்ற பொருளாகவும் எண்ணுவோரையிட்டு நான் பெரும்மனத்துயர் கொள்கின்றேன். பெண்ணின் உடல் என்பது படைப்பின் நியதி என்பதை புரிந்துகொள்ளாதவரை இத்தகைய மனநிலையிலிருந்து விடுபடமுடியாது. குடும்பமோ, சமுகமோ, நாடோ அமைதியாக இருக்கவும் முடியாது. புரிந்துகொள்ளப்படாத சில விதிவிலக்கான நடவடிக்கைகளை முன்னுதாரணமாக்கி அனைத்து பெண்களையும் நிறுத்துப்பார்க்கும் அல்லது உரைத்துப்பார்க்கும் மனநிலையை கண்ணுறுகின்ற தருணங்களில் மனதுவலித்துத்தான் போகின்றது. பெண்விடுதலை, பெண்ணின் சுதந்திரம் பற்றி பல்வேறு மனிதர்களிடம் பல்வேறு கருத்துக்களும், வரையறைகளும், முரண்நிலைகளும் இருக்கின்றன என்பதை நான்அறிவேன். அது அவர்களின் அறிவின்பாற்பட்டதும் அனுபவங்களின் வழிவந்ததுமாக இருக்கலாம். அதுபற்றி விவாதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. குறைந்தபட்சம் பெண் ஒரு மனிதப்பிறவி என்பதை உணர்ந்துகொள்வதும், அவளின் ஆற்றல், ஆளுமைகள் மதிக்கபப்படுவதும் அவசியம் என நான் எண்ணுகின்றேன்.

வீட்டை முன்னேற்றுவதானாலும் சரி நாட்டை முன்னேற்றுவதானாலும் சரி ஆண்களும் பெண்களும் ஒன்றிணைந்துசெயற்பட்டாலே அது சாத்தியமாகும். ஆண்களும் பெண்களும் இணைந்து ஒருவரை ஒருவர் புரிந்து வாழும் வாழ்க்கைதான் உன்னதமானது. ஆண்களைப் புறக்கணித்துப்பெண்களோ, பெண்களைப்புறக்கணித்து பெண்களோ வாழ்ந்துவிடமுடியாது. ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு வாழும் வாழ்க்கை உன்னதமானதென்பதில் நான் எப்போதும் தெளிவாக இருக்கிறேன். “அர்த்தநாரி” என்பதன் அர்த்தம் இதுவாகத்தான் இருக்கும் எனநான் நம்புகின்றேன். பெண்கள் தம்ஆளுமையில் அவர்களைவிடவும் ஒருபடி முன்னேநின்றாலும், அதையிட்டுப் பெருமிதப்படும் எத்தனையோ ஆண்களை நான் கண்டிருக்கிறேன். ஆண் பெண் என்ற பாலியல் வேறுபாட்டிற்கு அப்பால், அவரவர் ஆளுமைகளும் ஆற்றல்களும் மதிக்கப்படவேண்டும். இதே வேளை ஆற்றலும் ஆளுமையும் மிக்க பெண்களை அவதூறு பேசுபவர்களையும் பார்த்திருக்கின்றேன். தங்களை சுயபரிசீலனை செய்யாது பொத்தாம்பொதுவாக பெண்ணின்மீதே சுட்டுவரலை நீட்டிவிடுகின்ற மனநிலையுடையவர்களையும் கடந்துவந்திருக்கின்றேன்.

பெண்கள்மீதான ஒடுக்குமுறைகள் வெறுமனே ஆண்மனோநிலையில் அமைந்ததல்ல. பெண்களிடமிருந்தும் பெண்களுக்கான ஒடுக்குமுறைகள் வெளிப்படுத்தப்படுவதையும் மறுப்பதற்கில்லை. உண்மையில் பெண்விடுதலை என்பது ஆண்களுக்கு எதிரானதல்ல என்பதை பெண்களும் சரி ஆண்களும்சரி புரிந்துகொள்வதுதான் முழுமையான வாழ்விற்கு வழிவகுக்கும். வாழ்க்கையை நட்புணர்வோடு அணுகுபவர்களுக்கு இதன் இனிமை புரியும்.
இன்றைய நாளில் தமிழப்பெண்களின் நிலைபற்றி நான் எண்ணிப்பார்க்கிறேன். 69 ஆண்டுகளாக இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் தமது உரிமைகளுக்காக குரல் எழுப்பிவருகின்றார்கள். இதில் 30 ஆண்டுகளுக்கும்மேல் ஆயுதப்போராட்டம் நடந்திருக்கின்றது. ஆயுதப்போராட்ட காலத்திலும் அதற்கு முந்திய அமைதிவழிப்போராட்டகாலத்திலும் சரி தமிழினம் மிககொடூரமாக வதைபட்டிருக்கிறது. இன்றும் வதைபட்டுக்கொண்டிருக்கின்றது. 1958 இல் தமிழ்ப்பெண்களின் முதுகுகளில் சிங்களசிறி பொறிக்கப்பட்டதை வரலாறு கூறுகிறது. அந்த வரலாற்றின் நீட்சியில் தமிழ்ப்பெண்கள் மீதான ஒடுக்குமுறையின் சுவடுகள் காலந்தோறும் பதியப்பட்டே வந்திருக்கின்றன. வந்துகொண்டிருக்கின்றன.

inter2017

வரலாற்றின் ஒவ்வொருபடிநிலையிலும் தமிழ்ப்பெண்களை உளவியல் அடிப்படையில் அச்சுறுத்தும் நோக்கிலும், அவர்களை அவமானப்படுத்தும் நோக்கிலும் பல கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. நாடுமுழுவதும் பெண்கள் இம்சிக்கப்பட்டுள்ளார்கள். ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கி இன்றுவரையும் மலைத்தோட்டங்களில் தேயிலைச்செடிகளுக்குஇரத்தத்தை நீராகஇறைக்கும் பெண்களின் கதை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவர்களின் கண்ணீருக்கும் பதில்சொல்வாரில்லை. அந்தவலிமை நிறைந்த கைகளை கொண்ட பெண்களின் கண்களிலிருந்து பெருகும் கண்ணீர் எப்போதும் என் மனதைப்பிழியும்.பலவகையான வதைகளில் தமிழ்ப்பெண்களின் நிலை சொல்லில் வடித்துவிடமுடியாது. 69 ஆண்டுகால உரிமைப்போராட்டத்தின் உச்சக்கட்டமாக, 2009 முள்ளிவாய்க்கால் துயரம் அமைகிறது. 90 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ்ப்பெண்கள் இதுவரை தமது துணைவர்களை இழந்திருக்கின்றார்கள் என அறியமுடிகிறது. குழந்தைகள் பலர் பெற்றோரை இழந்திருக்கின்றனர்.

பெண்கள் பாலியல் வல்லுறவிற்கும், பாலியல் து~;பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள். படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பலபெண்கள் சிறைகளில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கின்றனர். இதனை மனிதஉரிமை அமைப்புகள் சான்றுகளுடன் வெளியிட்டிருக்கின்றன. வதைபடுவோருக்கான பட்டியல் இன்றும் நீண்டுகொண்டுசெல்கின்றது. சிறுமிகள், மாணவிகள் கூட இந்தபாலியல் வன் கொடுமையில் இருந்து தப்பிக்கமுடியவில்லை. தமிழ்ச்சமுகத்தில் பலவிதங்களில் சீரழிவுகள் மலிவடைந்துகொண்டிருக்கின்றன. இதன் விளைவாக, பிறக்கின்ற பச்சைக்குழந்தைகள் மண்ணுக்குள் புதைக்கப்படுவதும், அனாதரவாக கைவிடப்படுவதும் நடைபெறுகின்றது. அவை வெகுவேகமாக ஊடகங்களில் பரவிக்கொண்டபோதும் தீர்வுகள் இலேசானவையாக இல்லை என்பதே உண்மையாக உள்ளது.

எத்தனையோ புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில் பெண்களின் உடற்கூறுகள், அணிகலன்கள் கிடைத்திருப்பதை செய்திகளாக பார்த்துள்ளோம். 2009 இல், பன்முகத்திறமை கொண்ட இசைப்பிரியாவினதும் இன்னும் சில பெண்களதும் படுகொலை அனைத்திற்கும் உச்சமாக இருக்கிறது. இசைப்பிரியாவிற்குப்பிறகும் இத்தகையகொடூரங்கள் நிறுத்தப்பட்டதாக இல்லை. தமிழ்ப்பெண்களை வெற்றிகொண்டுவிட்டதான ஒரு குரூரமனவெளிப்பாட்டையே இந்தப் பாலியற்படுகொலைகள் உணர்த்திநிற்கின்றன. இந்த அளவிற்கு இராணுவத்தினர் இனவெறி ஊட்டப்பட்டிருக்கின்றார்கள் என்பதுதான் இதனுள்ளிருக்கும் செய்தியாக உள்ளது. சமுதாயத்தின் ஒடுக்குமுறைகளிலும் இராணுவஒடுக்குமுறைகளிலும் சிக்கி அதிகளவில் உடல்உபாதைகளுக்கும் மனஉளைச்சலுக்கும் உள்ளாகுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே உள்ளனர். தமிழ்ச்சமுகத்தில் இன்னமும் வௌ;வேறுவடிவங்களில் குடும்பவன்முறைகள் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. பெண்களின் உழைப்பை சுரண்டுபவர்களும் பெண்களின் இயலாமையை சாதகமாக பயன்படுத்துவோரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆறுதல்அளிக்கவேண்டியதை உணராது அவர்கள்மேல் மென்மேலும் காயத்தை ஏற்படுத்துகின்ற அறியாமை இருள் பலமனங்களை மூடிக்கிடக்கின்றது. வறுமையின்பிடியிற்சிக்கி வருமானமின்றித் தவிக்கும் பெண் வழிதவறிவிடவேண்டும் என்கின்ற மனோநிலையில் இருப்பவர்கள் சிலரை நான் அறிந்திருக்கின்றேன். ஆயுதப்போராட்டம் உச்சவெற்றிப்பாதையில் நடைபோட்டுக்கொண்டிருந்த வேளைகளில் விதந்துரைக்கப்பட்ட பல போராளிப்பெண்களின் அடையாளம் போராட்டம் நசுக்கப்பட்டபின், தமக்காகவும்தான் அவர்கள் களமுனையில் நின்றார்கள் என்பதைக்கூட மறந்துபோகச்செய்தது. அந்தளவிற்கு மனிதத்தை மாற்றும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுவிட்டது என்பது வேதனையானதுதான்.

ஆனாலும் ஆற்றலும் ஆளுமைத்திறனும் மிக்க பலபெண்கள் இன்றும் தமது உளவலிமையை நிறுவி வாழ்க்கையுடன் போராடிக்கொண்டிருப்பதையும் மறுப்பதற்கில்லை. அனைத்தையும் தாண்டி இன்னமும் நீறுக்குள் இருக்கும் நெருப்பாக பெண்கள்மீதான ஒடுக்குமுறைகள் இருக்கின்றன. இலத்திரனியற் சாதனங்கள் பெருகிவிட்டசூழலில், அவற்றின் தவறான பயன்பாடுகள் பெருகி அவையும் இந்தப்பழியில் பங்கேற்பனவாக உள்ளன. பெண் என்ற ஒரேகாரணத்திற்காக பல்வேறு உளவியற்சிக்கல்களை சுமக்கின்ற நிலையில் எமதுபெண்கள் உள்ளனர். ஆதரவற்ற நிலையில் இருக்கும் அவர்களுக்கான குறைந்தபட்ச மனஆற்றுப்படுத்துகை கூட இல்லாதநிலை உள்ளது. கண்டுகொள்ளப்படாதவர்களாக பெண்களின் இன்றையநிலை காணப்படுகிறது. ஆதரவற்றுப்போன பெண்களை தீண்டத்தகாதவர்களாக ஒதுக்கும் மனநிலையில் மாற்றம் ஏற்படுவதுதான் இவர்களை அமைதிப்படுத்தும். எவ்வகையிலும் காலத்தினால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் ஆற்றுப்படுத்தப்படவேண்டும்.

பெண்ணுக்கும் மனம் என்கின்ற ஒன்று உள்ளது. அதற்குள்ளும் ஆசைகள், கனவுகள், எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள், கோபம், பாசம் எல்லாமும் இருக்கத்தான் செய்யும். இதை புரிந்துகொண்டுவாழ்தலே அமைதியான வாழ்வுக்கு வழிவகுக்கும்.
முழுஆதிக்கத்தோடு தொடுக்கப்பட்ட போர் தமிழ்ப்பெண்களை இன்று திக்கற்றவர்களாக்கியுள்ளது. நிராயுதபாணிகளான நிலையில் ஏராளம்பெண்கள் இன்று வெளித்தெரியாத்துயரத்தில் சிக்கிக்கிடக்கின்றார்கள். போர்க்காலத்தில் உறுப்புக்களை இழந்தவர்களும், வாழ்க்கைத்துணை இழந்தவர்களும், பிள்ளைகளை பறிகொடுத்தவர்களும், இன்னும் வாழ்வாதாரமின்றித் தவிப்பவர்களும் ஒருபுறமெனில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாக, அவர்களை தேடிஅலைபவர்களாக பல பெண்கள் காணப்படுகின்றார்கள். எத்தனை அறவழிப்போராட்டங்களை நடத்தினாலும் இதற்கான பதில் கிடைக்காதநிலையே தொடர்கிறது. இன்றுவரை கண்ணீர்மட்டுமே அவர்களின் கதியாக உள்ளது. நாளாந்த தோல்விகளும் நிச்சயமற்ற எதிர்காலம் குறித்த அச்சமும் பெண்களிடம் தமது வாழ்வுபற்றிய நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துகின்றது. எல்லாம் வல்லவளாகப்பார்க்கப்பட்ட பலபெண்கள் எதுவும் செய்யமுடியாத சூழலில் சிக்கியிருக்கின்றனர். நாளும் பொழுதும் பெண்கள் கண்னீரில் தத்தளிக்கும் செய்திகளும் அவர்களின் மனக்குமுறல்களுமே வந்தடைகின்றன. பெண் என்பவள் கல்வி, அரசியல், பொருளாதார, பண்பாட்டு விடுதலையையை எவ்வளவுதான் பெற்றுக்கொண்டாலும் அவள் ஒருமனிதப்பிறவி என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளாதவரை அல்லது உணர்ந்துகொள்ளாதவரை அவளின் விடுதலை என்பது வெறுமையுடையதாகவே இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *