அவன், அவள் என்பதைத் தாண்டி ’அவர்கள்’ என்ற மரியாதை, மூன்றாம் பாலினத்தவர்களான திருநங்கைகளுக்கானது. எவ்வளவோ வலி, வேதனைகளைக் கடந்து இன்றுபல துறைகளிலும் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தினைத் தக்கவைத்துக் கொண்டுள்ளனர் திருநங்கைகள்.
பரதநாட்டியக் கலைஞர் நர்த்தகி நடராஜ் தொடங்கி, செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ், தொகுப்பாளர் ரோஸ், எழுத்தாளர் கல்கி, முதல் பெண் சப் இன்ஸ்பெக்டர் பிரித்திகா யாஷினிவரை தங்களுக்கான உரிமைகளை மீட்டெடுத்த திருநங்கைகள் ஏராளம். அவர்களுக்கு தன் பங்குக்கு
புடவைகள் மீது அவ்வளவு பிரியம் எனக்கு. விதவிதமாகப் புடவைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது எனக்குப் பிடிக்கும். புடவைகள் மீது இவ்வளவு ஆர்வம் கொண்ட நான் ஏன், ஒரு டிசைனர் பொட்டிக் ஆரம்பிக்கக்கூடாது என்று யோசித்தபோது உருவானதுதான் ‘ரெட் லோட்டஸ்’ நிறுவனம். ஆரம்பத்தில் என் நண்பர்களுக்கு மட்டுமே புடவைகளை வடிவமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அவர்களிடமிருந்து கிடைத்த உற்சாக வரவேற்பு காரணமாக, ஆன்லைன் மூலம் விற்பனையைத் துவக்கினேன்.
திருநங்கை மாடல்கள்… எண்ணம் எப்படி உதித்தது?
எப்போதுமே மாடல்களை தேர்ந்தெடுத்துவிட்டு புடவைகளை வடிவமைப்பவள் நான். ஒரு சமயம் திருநங்கை ஒருவரின் புடவை அணியும் நேர்த்தி மற்றும் அழகியலைக் கண்டு அசந்துவிட்டேன். பெண் மாடல்களைவிட அசத்தலாக தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தார் அவர். அந்த நொடிதான் வாய்ப்பு கிடைக்கும்போது, நம் புடவைகளுக்கும் திருநங்கைகளை மாடலாக வைக்கலாம் என முடிவெடுத்தேன். ஆனால் செயல்படுத்த நினைத்தசமயம், முதலில் சின்ன தயக்கம் இருந்தது. ஆனால், இந்த சமூகத்தில் தங்களுக்கான அடையாளத்துக்காகப் போராடும் அவர்களுக்கு என்னால் முடிந்த அங்கீகாரத்தினை அளிக்க நினைத்தே இந்த முடிவினை எடுத்தேன்.
உங்கள் மாடல்கள் கெளரி சாவித்ரி, மாயா மேனன் பற்றி சொல்லுங்கள்..
இருவருமே 29 வயதானவர்கள். கோட்டையத்தைச் சேர்ந்த கெளரி, வேலை தேடிக்கொண்டிருக்கிறார். மாயா மேனன், ஒரு சிறிய யோகா பயிற்சி நிலையத்தினை கொச்சியில் நடத்தி வருகின்றார். இருவருமே அழகானவர்கள் மட்டுமல்ல, அன்பானவர்களும் கூட. அவர்களுடன் பழகிய பொழுதுதான் திருநங்கைகள் உலகம் எவ்வளவு அழகானது என்பதை நான் தெரிந்து கொண்டேன். நானே அவர்களைப் பற்றி முழுமையாக அறிந்துகொண்டது அப்போதுதான்.
முதலில் அவர்களிடம் இதுபற்றி பேசியபோது, ‘எங்களைப் பயன்படுத்தினால் உங்கள் தயாரிப்புகள் விற்பனையாகாது என்று மறுத்தார்கள். இது, அவர்கள் எந்தளவிற்கு இந்த சமூகத்தினால் காயமடைந்திருக்கிறார்கள் என எனக்கு புரிய வைத்தது. நான் விடாப்பிடியாக நின்றேன். என்னுடைய உறுதியைக் கண்டு பின்னர் மாடல்களாக நடிக்க ஒப்புக் கொண்டனர்.
தோள் கொடுத்திருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த ஷர்மிளா நாயர்.
கொச்சியின் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான இவர், தன்னுடைய ’ரெட் லோட்டஸ்’ ஆடை வடிவமைப்பு நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ள ’மாழவி’ என்னும் சில்க் காட்டன் புடவைகளுக்கு திருநங்கைகளை மாடல்களாக பயன்படுத்தியுள்ளார். மாழவி என்றால் ‘வானவில்’ என்று அர்த்தம். இந்தப் புடவைகளில் வானவில்லின் ஏழு நிறங்களைப் பயன்படுத்தியுள்ளார் ஷர்மிளா. மேலும், இயற்கை வண்ணங்களைக் குழைத்து இந்தப் புடவைகளை உருவாக்கியுள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளுக்கு மாடல்களாக அழகான பெண்கள், ஹாண்ட்சம் ஆண்கள், பிரபலமானவர்கள் என ஒரு வழக்கமான வட்டத்திலேயே உழன்றுவரும் நிலையில் அந்த வட்டத்தினைத் தைரியமாக உடைத்து திருநங்கைகளை மாடல்களாக பயன்படுத்தி உள்ளார் ஷர்மிளா. அதைப்பற்றி ஷர்மிளாவிடமே கேட்டோம்.
உங்களைப் பற்றி…
’’நான் முதுநிலை இலக்கியம் முடித்தவள். முழுக்க, முழுக்க என்னுடைய ஆர்வத்தினால் மட்டுமே டிசைனர் உலகில் நுழைந்தேன். அழகான குழந்தையும், என் தொழிலுக்கு உறுதுணையாக நிற்கும் அன்பான கணவரும் எனக்கு கிடைத்த வரம்!
உங்கள் தயாரிப்பான இந்த சில்க் காட்டன் புடவைகளுக்கு வானவில் என்று குறிப்பாக பெயரிடக் காரணம் ஏதாவது உண்டா?
மூன்றாம் பாலினத்தவரைக் குறிக்கும் வண்ணங்கள் பொதுவாகவே வானவில்லின் ஏழு நிறங்கள்தான். அதனாலேயே இந்த புடவை கலெக்ஷனுக்கு மாழவி என்று பெயரிட்டோம். ஏழு வண்ணங்கள் நிறைந்த உலகம் அவர்களுடையது. அது நம் உலகையும் வண்ணமயமாகவே மாற்றும். வானவில்லின் ஏழு நிறங்களிலும் இந்த புடவைகள் கிடைக்கும் என்பது இதன் சிறப்பு.
திருநங்கைகளை மாடல்களாக பயன்படுத்தி புடவைகளை அறிமுகப்படுத்தியபோது கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது?
முதலில் இந்த ஐடியா மக்களிடம் சரியாக சென்றடையுமா என்று நான் பயந்தது உண்மைதான். ஆனால், இந்த புடவைகளை அறிமுகப்படுத்தியவுடன் எனக்கு கிடைத்த வரவேற்பு ஆச்சரியமோ, ஆச்சரியம். பாராட்டுக்களில் மூழ்கியே போய்விட்டோம், என்றால் பாருங்கள். மாயாவுக்கும், கெளரிக்கும் வெளிநாடுகளில் இருந்தெல்லாம் வாழ்த்துக்கள் குவிந்தன. சரியான ஒன்றைத்தான் நான் கையில் எடுத்திருக்கின்றேன் என பெருமைப்பட்ட தருணம் அது. இன்னும் சிலர் ஒருபடி மேலே போய், புடவைகளுடன் கெளரி, மாயா அணிந்திருந்தது போன்றே பிளவுஸ்களும் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொண்டனர். முக்கியமாக கெளரி அணிந்திருந்த புடவைகளுக்கு அமெரிக்கா மற்றும் துபாய் வாடிக்கையாளர்களிடம் பெரிய கிரேஸ்.
திருநங்கைகள் குறித்த மாற்றுப் பார்வையை ஏற்படுத்தியிருப்பதாக நம்புகின்றீர்களா?
ஆம்..கண்டிப்பாக. மூன்றாம் பாலினத்தவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள்தான். அவர்களுக்கான அடையாளம் இந்த சமூகத்தில் கிடைத்தே தீர வேண்டும். அதில் ஒரு விதையைத்தான் நான் இந்த முயற்சியால் விதைத்திருக்கின்றேன். அது வளர்ந்து மரமாக எல்லாரும் உழைக்க வேண்டும். அவர்களை மதியுங்கள்…அவர்களுக்கான உரிமைகளை தயவு செய்து பறிக்க நினைக்காதீர்கள்“…என்று உணர்ச்சிவயப்படுகிறார் ஷர்மிளா.
கேரளாவில் கடந்த நவம்பர் 2015 ஆம் ஆண்டு, மூன்றாம் பாலினத்தவர்களும் சமூகத்தில் பொருளாதார மற்றும் தனிமனித சுதந்திரம் முழுமையாகக் கொண்டவர்கள் என்று அம்மாநில அரசு அறிவித்தது. அதுவே தனக்கு உந்துதலாக அமைந்ததாக கூறும் ஷர்மிளா, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த புடவைகளுக்கான வரவேற்பு இருந்ததாகவும் பூரிக்கிறார். 1500 முதல் 2500 வரையிலான விலைகளில் இந்த புடவைகள் அவருடைய ஆன்லைன் பொட்டிக்கில் கிடைக்கின்றது.
மாடல்களில் ஒருவரான மாயா மேனன் என்ன சொல்கிறார்?
“எம்.ஏ., லிட்ரேச்சர் படிச்சுட்டு இருக்கேன். யோகா வகுப்புகளும் எடுத்துட்டு இருக்கேன். இந்த மாடலிங் வாய்ப்பு கிடைச்சப்போ நிறைய எதிர்ப்புகள். திருநங்கையை எப்படி புடவை விளம்பரத்திற்கு நடிக்கவைக்கலாம்னு எதிர்ப்பு கிளம்பியது. எனக்குமே தயக்கம்தான். ஆனா, அதையும் தாண்டி ஷர்மிளா கொடுத்த ஊக்கம் எனக்கு பெரிய பூஸ்ட். ஷூட் முடிஞ்சு வெளியான போட்டோக்களில் நான் எனக்கே அவ்ளோ அழகா தெரிஞ்சப்போ வானத்தில் பறக்கற மாதிரி இருந்தது. எதிர்காலத்தில் இதையும் தாண்டி உலகமே திரும்பிப் பார்க்கிற மாதிரி ஏதாவது செய்யணும்” மாயாவின் முகத்தில் பெருமித ரேகைகள் படர்கிறது.