பெண்களின் குரலை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் ‘தாகம்’ அமைப்பு, நம் சமூகத்தில் பெண்கள் ஆக்கப்பூர்வமாக செயல்பட தேவையான உதவிகளை ஆராயும் விதமாக ‘அவள்’ என்ற ஆய்வு ஒன்றை அண்மையில் சென்னையில் மேற்கொண்டுள்ளது. பெண்களின் பிரச்சனைகளை கண்டெடுத்து அதை சரிசெய்ய செயல்படுவதாக கூறுகின்றனர் இந்த அமைப்பினர். தாகம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்த் முருகன் கூறுகையில்,
”அவள்’ என்பது பெண் குழந்தைகளின் அறிவு, ஆற்றல் முனேற்றத்திற்கு கல்வி கொடுப்பதும், பெண்கள் சுயமாக முன்னேற வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுப்பதையும், அவர்களுக்கு தங்களை பாதுகாத்துகொள்ளும் தற்காப்புக்கலைகளை சொல்லிக் கொடுப்பத்தையும், முதன்மையாகக் கொண்டு அவர்களுக்கு மனதைரியத்தை உண்டாக்கி இந்த சமூகத்தை எதிர்த்து போராடும் வல்லமை பெற்ற பெண்களாக உயர்த்த பாடுபடும் திட்டமாகும்.”
இப்போது எங்கள் ஆய்வானது சென்னையில் சேரி பகுதிகளில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு சரிய ஆரம்பமே, இனி வரும் காலங்களில் அனைத்து தரப்பினர்களையும் நாங்கள் ஆய்வு செய்யவிருக்கிறோம். இப்போது சென்னையை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுகிறோம் இதற்கு ஆதரவு பெருகும் போது எங்கள் செயல்பாடை விரிவடையச் செய்வோம்,” என்கிறார் அவர் மேலும்.
தற்போதைய பெண்களின் நிலைக் குறித்த கேளிவிக்கு பதிலளித்த கோவிந்த் முருகன், பெண்களுக்கு எதிரான சமூகம் தான் இங்கு உள்ளது என்று கூறமுடியாது, இருப்பினும் அவர்கள் பாதுகாப்பை, அவர்கள் தைரியத்தை உயர்த்திபிடிக்க அவர்களுக்கு ஊக்குவிப்பு அவசியமாக உள்ளதாக கருதுகிறோம். கல்வி மூலம் இதை அவர்கள் எளிதில் அடையமுடியும் என்றும் நம்புகிறோம் என்கிறார்.
’அவள்’ திட்டம் மற்றும் ஆய்வு முடிவுகள்
சென்னையின் பெசன்ட் நகர், சைதாபேட்டை, வியாசர்பாடி, செம்மஞ்சேரி, காசிமேடு, ராமாபுரம் முதலான பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் ஆய்வு மேற்கொண்டனர் ‘தாகம்’ குழுவினர். அந்தப் பெண்களின் வாழ்க்கை முறை, கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு, பாலியல் பிரச்சினைகள் உள்ளிட்டவை பற்றி இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளில் மதுப்பழக்கம், சாதி – மத வேறுபாடுகள் முக்கியப் பிரச்சினையாக இருப்பதை உணர முடிந்தது என்ற ஆய்வுக் குழுவினர், கழிவறை வசதிகள் இல்லாததால் பல வீடுகளின் அருகே சுகாதார சீர்கேடு நிலவுகிறது என்றும், அனைத்துப் பகுதிகளிலும் கொசுத்தொல்லையால் மக்கள் அவதிப் படுகின்றனர் என்றும் தெரிவித்தனர்.
போதைப்பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாவது, பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள், குழந்தைத் திருமணங்கள், சுகாதாரமற்ற சூழ்நிலை முதலானவையும் முக்கியப் பிரச்சினைகளில் அடங்கும் என்கிறது ஆய்வுக் குழு.
சுமார் 150 தன்னார்வர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து, 1000-க்கும் மேற்பட்ட பெண்களிடம் இரண்டு மாதங்களாக மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் இதோ:
பள்ளி வாசனை அறியாத 24% பெண்கள்
சென்னையின் குடிசைப் பகுதிகளில் 24% பெண்கள் பள்ளிக்கே செல்லாதவர்கள். 33% பெண்களுக்கு ஆரம்பக் கல்வி கிடைத்துள்ளது. 21% பெண்கள் இளங்கலைப் பட்டத்தையும், வெறும் 2% பெண்கள் மட்டுமே முதுகலைப் பட்டத்தைப் பெற்றுள்ளனர்.
மாதவிடா காலம், பெற்றோர்களின் கட்டுப்பாடு, வறுமை மற்றும் குழந்தைத் திருமணம் முதலானவையே இந்தப் பெண்களுக்கு போதிய கல்வி வசதியைப் பெற முடியாததற்கு காரணம் என்கிறது இந்த ஆய்வு.
பள்ளிக்குப் பெண்கள் செல்லாததற்கும், இடைநிற்றலுக்கும் காரணங்களின் விதிகம்: மாதவிடாய் மற்றும் பெற்றோரின் கட்டுப்பாடு 41%, வறுமைச் சூழல் 25%, திருமணக் கட்டுப்பாடு 9%, பள்ளி செல்லும் ஆர்வமின்மை 6%.
59% பெண்களுக்கு குழந்தைத் திருமணம்
குடிசைப் பகுதிகள் பெண்களின் திருமணத்தைப் பார்க்கும்போது, 21% பெண்களுக்கு 15 வயதுக்குள்ளும், 38% பெண்களுக்கு 20 வயதுக்குள்ளும் திருமணம் நடந்துள்ளது. இதனால், குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை 59% என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைத் திருமணம் செய்தவர்களில் 36% பேர் பிரிந்து வாழ்கின்றனர். மண வாழ்க்கையில் பக்குவம் இல்லாமையே இதற்குக் காரணம். கணவர் – மாமியார் கொடுமையால் பிரிந்தவர்கள் 65%, வரதட்சிணை கொடுமையால் 20%, குழந்தையின்மையால் 5% பேர் பிரிய நேர்ந்ததும் தெரியவந்துள்ளது. எஞ்சிய 10% பேர் வெவ்வேறு காரணங்களைக் கூறினர்.
ஆண்களின் வருவாயை நம்பி 59% பெண்கள்
குடிசைப் பகுதி குடும்பங்களைப் பொறுத்தவரை, ஆண்களை நம்பியே 59% குடும்பங்கள் வாழ்க்கை நடத்துகின்றன. ஆண்களும் பெண்களும் சேர்ந்த வருவாய் ஈட்டுவது 26%, பெண்களின் சுய சம்பாத்தியம் 15% என்பது தெரியவந்துள்ளது.
பெண்கள் வேலைக்குச் செல்லாததற்கான காரணம் குறித்து கேட்கப்பட்டபோது, 63% பெண்கள் வேலைக்குச் செல்ல ஆர்வம் கொண்டிருப்பதாகவும், 20% பெண்களுக்கு ஆர்வமில்லை எனவும் கூறினர். ஆர்வம் இருந்தும் வேலைக்குச் செல்ல முடியாததற்கு குடும்பத்தின் கட்டுப்பாடுகளே காரணம் என்று 52% பெண்கள் தெரிவித்தனர். குழந்தைகளைப் பராமரிப்பதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்று 32% பெண்களும், வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்று 13% பெண்களும் தெரிவித்தனர்.
பெண்களிடம் மதுப்பழக்கம்
தங்கள் கணவருக்கு மது, புகைப் பழக்கம் உள்ளதா என்ற கேள்விக்கு 68% பெண்கள் ஆம் என்ற பதிலைச் சொல்லியிருக்கார்கள். கணவரின் குடிப் பழக்கத்தால் குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளதாக 69% பெண்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கள் கணவரின் வலிறுத்தலாலும், துப்புரவு தொழில் செய்வதாலும் பெண்கள் மதுப் பழக்கத்துக்கு ஆளாகும் நிலையும் உருவாகிறது. குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பெண்களில் 22%-க்கு மதுப் பழக்கம் உள்ளதும், எஞ்சிய 78% பெண்களுக்கு அத்தகைய பழக்கம் ஏதுமில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
பள்ளி முதல் பணியிடம் வரை பாலியல் தொந்தரவுகள்
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் – சிறுமிகளில் 35% பேர் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளானதாகவும், 7% பேர் தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகி வருவதாகவும், 58% பேருக்கு இந்தப் பிரச்சினை ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளானவர்களில் 18% பணியிடங்களிலும், 10% பேர் பொது இடங்களிலும், 7% பேர் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களிலும், 6% பேர் பள்ளிகளிலும், 8% வெவ்வேறு இடங்களிலும், எஞ்சிய 41% பேர் இந்த அனைத்து இடங்களிலுமே பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளானதாக பதிவு செய்துள்ளனர்.
பாலியல் தொல்லைகளுக்கு ஆளானவர்களில் 89% பெண்கள் யாரிடமும் புகார் அளித்தது இல்லை என்று கூறியிருப்பது அதிர்ச்சிக்குரியது. தங்களுக்காக ஆதரவுக் குரல் கொடுக்க எவரும் இல்லை என்ற பாதுகாப்பின்மையை இதற்கு காரணம் என்பதும் தெரியவந்துள்ளது.
சேனிடரி நாப்கின்கள் பயன்படுத்தாத 32% பெண்கள்
சென்னை குடிசைப் பகுதி பெண்களில் 68% மட்டுமே மாதவிடாய் காலங்களில் சேனிடரி நாப்கின் பயன்படுத்துகின்றனர்.
அதைப் பயன்படுத்தாத 32% பெண்கள் கூறும் காரணங்கள்: நாப்கின் விலை – 75%. துணியே வசதியாக உள்ளது – 19%, வேறு காரணங்கள் – 6%.
மேலும், 68% பெண்களுக்கு மட்டுமே வீட்டிலேயே கழிப்பிட வசதி இருப்பதும், பொதுக் கழிப்பிடத்தை 17% பெண்களும், திறந்தவெளியை 15% பெண்களும் பயன்படுத்துவது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள், அரசின் திட்டங்கள் குறித்து தெரியுமா என்ற கேள்விக்கு 70% பெண்களிடம் இருந்து வந்த பதில்: இல்லை. இவை குறித்து 15% பெண்களுக்கும் முழுமையாகவும், 15% பெண்களுக்கு ஓரளவுக்கும் தெரிந்துள்ளது.
குடிசைப் பகுதிகளில் பாலின சமத்துவம் இருக்கிறதா என்றால், 57% பெண்கள் ‘இல்லை’ என்றே பதிலளித்தனர். நாங்கள் சாதிக்க, பாலின சமத்துவமும் சுதந்திரமும் தேவை என்பது அவர்களின் மனமார்ந்த விருப்பமாக இருக்கிறது.
பெண்களுக்கு உரிய கல்வி – வேலைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தி, அவர்கள் சுயமாக முன்னேற வழிவகுப்பதுடன், சமூகத்தில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துவதுதான் அவர்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும் என்கிறது ‘அவள்’ ஆய்வை மேற்கொண்ட ‘தாகம்’ குழு.
தாகம் குறித்து மேலும் அறிய: www.dhagam.org.in | https://www.facebook.com/dhagam1