என் தோழி என்ன தவறு செய்தாள்? – உழைக்கும் மகளிர் தினச் சிறப்புக் கட்டுரை – 2

சந்தனமுல்லை -Thanks (http://www.vinavu.com/2010/03/09/sandana-mullai/)

international_womens_dayசந்திராவை தெரியுமா உங்களுக்கு…சத்தமாக்கூட பேசமாட்டா. பேசறதே அவ்வளவு மெலிதான குரலா இருக்கும். ‘கோவம் வந்தா கூட உன் குரல் இப்படித்தான் இருக்குமா சந்திரா’- ன்னுக்கூட கேட்டிருக்கேன்…அதுக்கும் ஒரு சின்ன புன்னகைதான். எங்க பேட்ச்லே எல்லோரும் வேலைக்குப் போகணும்ன்ற லட்சியத்தோடவெல்லாம் படிக்கலை. படிச்சுட்டு முதல்லே கல்யாணம், அப்புறம் சூழ்நிலை அனுமதிச்சா வேலைன்ற மாதிரி சில பேரு இருந்தாங்க. அந்த சில பேருலே சந்திராவும் ஒருத்தி. அவங்களோட அந்த மாதிரி மனநிலைக்கு நிறைய காரணங்கள் இருந்தது. சந்திராவுக்கு அப்பாவோட ரிடையர்மெண்ட் காரணமா இருந்துச்சு. ரிடயர்டு ஆகிறதுக்குள்ளே பொண்ணோட கல்யாணத்தை முடிச்சுடணும்னு எல்லா மத்திய தர பெற்றோருக்கும் இருக்கும் நெருக்குதல்தான்.

கடைசி செமஸ்டர் நெருங்கும்போதே சிலருக்கு ‘சிங்கப்பூர் மாப்பிள்ளை, அமெரிக்க மாப்பிள்ளை’ன்னு ஃபிக்ஸ் ஆகி இருந்தது. எல்லோரும் எல்லோருடைய கல்யாணத்துக்கும் கண்டிப்பா போகணும்-ன்ற ப்ராமிஸோட பிரிஞ்சோம். அதே மாதிரி ஆரம்பத்துலே நடந்த மூணு நாலு கல்யாணத்துக்கு ஒண்ணா போனோம். கல்யாணம் ஆனவங்கள்ளாம், அதுக்கு அப்புறம் நடந்த கல்யாணங்களுக்கு வரலை. ஒண்ணு கண்டம் தாண்டி போயிருப்பாங்க இல்லேன்னா உடல்நிலை இடம் கொடுக்காது. இதுலே ஒரு ஆச்சர்யம், யாருக்கெல்லாம் முதல்லே கல்யாணம் நடக்கும்னு கணக்கு பண்ணி வைச்சிருந்தாங்களோ அதுலே சிலருக்கு மாப்பிள்ளை அமையாம இருந்துச்சு. சந்திராவும் மாப்பிள்ளை அமையாத  லிஸ்ட்லே இருந்தா.

நானும் லதாவும் வேலை தேடி சென்னை வந்துட்டோம். எங்க ஆஃபிஸிலே ஏதாவது வேலை காலி ஆகற மாதிரி அல்லது புது வேலை வாய்ப்பு உருவாகற மாதிரி இருந்தா எல்லோருக்கும் ஃபோன் பண்ணி சொல்வோம். சந்திராவோட ஊர் உடுமலைபேட்டை. அவங்கப்பாவோட வேலைன்னாலே ஆழியார்ன்ற ஊரிலே இருந்தாங்க. நாங்க சந்திராவை கூப்பிடும்போதெல்லாம், ‘எங்க அம்மா அனுப்ப மாட்டேங்கறாங்கப்பா, யாராவது பார்க்கணும்னா உடனே ஊருக்கு வர முடியாது’ -ன்னு சொல்லி மறுத்துடுவா. கல்யாணமே பண்ணிக்க மாட்டேன்னு சவால் விட்டிருந்த நானும் வீட்டுக்கு அடங்கி கல்யாணமாகி பெங்களூர் போயிருந்தேன்.

எங்கள் க்ரூப் மெயில்லே சந்திரா ஒரு மெயில் அனுப்பியிருந்தா. ‘நானும் பெங்களூரிலேதான் இருக்கேன், நீ எங்கே இருக்கே’ன்னு அவ தங்கியிருந்த முகவரி,மொபைல் நம்பர் எல்லாம் கொடுத்திருந்தா. ஏதோவொரு கம்ப்யூட்டர் பயிற்சி நிலையத்துலே டெஸ்டிங் கோர்ஸ் படிச்சுக்கிட்டிருக்கா. அவங்களே வேலைக்காக நேர்முகத்தேர்வு ஏற்பாடு செய்வாங்க. அதில் தேர்ச்சி அடைந்து வேலை பெறுவது நமது சாமர்த்தியம்.  ஒருநாள், வீட்டுக்கு வந்து கொஞ்சம் டாக்குமெண்ட்ஸ், நேர்முகத்தேர்வுக்கு தயார்படுத்திக்கற மாதிரி எல்லாம் பேசிட்டு போனா. அப்போ சந்திரா சொன்னது என்னன்னா, ஜாதகம் பொருந்தி வர்ற எல்லா மாப்பிள்ளைங்களும் பொண்ணு வேலைக்கு போகலைன்னு நிராகரிக்கறாங்க. ஒரு சிலர் நேரடியாகவே நிராகரிக்கறாங்க. அதனாலே அம்மாவே என்னை ஏதாவது வேலை தேட சொல்றாங்க. ஆனால், இவ்ளோ நாள் வேலை செய்யாமல் இரண்டு வருட இடைவெளிதான் ரொம்ப இடிக்குது.

இதைச் சொல்லும்போதும் சந்திராக்கிட்டே கோவத்தையோ இல்லே எரிச்சலையோ பார்க்கலை. அதே சமயம், நம்பிக்கை இல்லாமலும் இல்லை. இதை எல்லாம் அனுபவிக்கறதுதான் நம்ம வாழ்க்கைன்னு அவ அமைதியா ஏத்துக்கிட்ட மாதிரிதான் இருந்தது. நானா இருந்தா, அம்மாக்கிட்டே எரிஞ்சு விழுந்திருப்பேன். என் கல்யாணத்துக்கு வச்சிருக்கற காசை தாங்க, ஏதாவது பேங்க்லே போட்டுட்டு வட்டியை வச்சு ஜாலியா இருப்பேன்னு சண்டை போட்டிருப்பேன். சந்திராவுக்கு விதவிதமா ட்ரெஸ் செஞ்சுக்கறதுலே ஆர்வம், என்னை மாதிரியே. நாங்க ரெண்டு பேரும் அம்மா புடவையை ஹாஸ்டலுக்கு எடுத்துட்டு வந்து நாங்களே டிசைன் செஞ்சு தைக்க கொடுப்போம். பெங்களூர்லேயும் சந்திரா நல்ல டைலரை கண்டுபிடிச்சிருந்தா. வாரா வாரம் எங்கேயாவது போய் துணி வாங்கிட்டு வர்றதுதான் அவளுடைய பொழுதுபோக்கா இருந்துச்சு. அவளுக்கு ரொம்ப ஈடுபாடுன்னா – அந்த ட்ரெஸ் டிசைனிங்தான்.

அந்த கோர்ஸ் முடியறப்போவே சந்திராவுக்கு கோயமுத்தூர்லேயே வேலையும் கிடைச்சது. ஊருக்குப் போன ஆறுமாசத்துலே அவளுக்கு நிச்சயமும் ஆயிடுச்சு. மாப்பிள்ளையும் உடுமலைப்பேட்டைதான். ஆனா, அவர் வேலை செய்றது சென்னையிலே தாம்பரத்துலே ஆஃபிஸ். குடியிருக்கிறது பெருங்களத்தூர். அதனாலே இப்போ சந்திரா சென்னையிலே வேலை தேட ஆரம்பிச்சா. ஆனா, எதுவும் அமையலை. இப்போ வேலை செய்யிற இடத்துலே, வீட்டுலே இருந்துக்கூட வேலை செய்யலாம்னு வசதி இருந்தது போல. அதனாலே கல்யாணமாகி பெருங்களத்தூர் வந்தப்பறம் சந்திரா வீட்டுலே இருந்து வேலை தொடர்ந்துக்கிட்டு இருந்தா. அப்புறம், எப்போவாவது ஒரு வாரம் மட்டும் கோயமுத்தூர் போய் ஆஃபிஸிலே வேலை செய்யணும். அந்த சமயங்கள்லே மட்டும் அம்மா வீட்டுக்கு போய்ட்டு அங்கிருந்து ஆஃபிஸ் போய்ட்டு வர ஏற்பாடு.

கல்யாணத்துக்கு போக முடியாததாலே, சென்னையிலே இருக்கற நண்பர்கள் எல்லோரும் ஒரு நாள் சந்திராவை நேரிலே போய் பார்த்துட்டு வரலாம்னு பேசிக்கிட்டோம். ‘நீ எந்த வாரம் இருப்பேன்னு சொல்லு சந்திரா, நாங்க வந்து பாக்கறோம்’- னு சொல்லியிருந்தோம். ஒரு ஆறு மாசம் போயிருக்கும். நடுவிலே பேசிக்கிட்டு இருந்தப்போ தெரிஞ்சது, சந்திரா கருவுற்றிருப்பது. இப்போ போலாம், அப்போ போலாம்னு கடைசிலே ஒரு சில வாரங்கள் கழிந்தன. கடைசியா ஒருநாள் போன் பண்ணினா மொபைல் ரீச் ஆகவே இல்லை. ஒரு சில வாரங்கள் கழிச்சு, விஷயம்  தெரிஞ்சது, சந்திரா ஒரேயடியா உடுமலைக்கே போயிட்டான்னு .

சந்திரா சொன்னதெல்லாம் இதுதான் – டைவோர்ஸுக்கு அப்ளை பண்ணியிருக்கா. அவ ஹஸ்பண்ட் ஒரு சந்தேகப்பேர்வழி, அவ சம்பாரிக்கிறதை அவங்க அம்மா வீட்டுக்கு கொடுக்கறதா சண்டை போட்டிருக்கான். ஏடிஎம் கார்டு, அதோட கடவு எண் எல்லாத்தையும் வாங்கிக்கிட்டு அவளுடைய அத்தியாவசிய தேவைக்குக் கூட அவன் கிட்டேதான் கேக்க வேண்டிய நிலை. வீட்டு வேலைக்கு உதவியா யாரையும் வேலைக்கு வைச்சுக்கக் கூடாது. அவ ப்ரெக்னெண்டா இருந்தாலும் மெட்ரோ வாட்டர் எல்லாம் சந்திராவே போய்தான் தெருமுனையிலிருந்து எடுத்துக்கிட்டு வரணும். யாருக்கிட்டேயும் மொபைல்லே பேசக்கூடாது. வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது. ஒரு கட்டத்தில் இதையெல்லா தாங்க முடியாமல் சந்திரா திணறி போயிருக்கிறாள். மீறி கேட்டதற்கு சண்டை வந்திருக்கிறது. சண்டை வலுத்து, ‘என் வீட்டை விட்டு போ’ -ன்னு ராத்திரி 12 மணிக்கு வெளியே தள்ளி கதவை சாத்தியிருக்கிறான்.

கையில் மொபைலோ,காசோ எதுவும் இல்லாத நிலையில், சந்திரா அவளோட குடும்ப நண்பருக்கு ஃபோன் பண்ணியிருக்கா. அவர்,  கிண்டியிலிருக்கும் அவரது வீட்டுக்கு கூப்பிட்டுட்டு போயிருக்கார். உடனே ஊருக்குப் போகணும்னு சந்திரா அப்போவே பஸ் ஏத்திவிட சொல்லியிருக்கா. மறுநாள் மதியம் வீட்டுக்கு வந்து சேர்ந்த சந்திராவுக்கு இந்த உளைச்சல், அலைச்சல் காரணமா கருக்கலைந்து ஒரு வாரம் நர்சிங் ஹோம்லே இருந்துருக்கா. அவன்கிட்டே, சந்திராவோட அப்பா பேசினதுக்கு மரியாதை இல்லாமே சந்திராவைப் பத்தி தப்பா பேசியிருக்கான். அவங்க சீர்வரிசையா கொடுத்த எந்த பொருளையும் திருப்பி தர முடியாது, கோர்ட் கேஸுன்னு போனா எனக்கு சாதகமாத்தான் வரும், உனக்குத்தான் வீண் செலவு, எந்த நகையும் கொடுக்க முடியாது, என்ன பண்ணனுமோ பண்ணிக்கோன்னும் சொல்லியிருக்கான்.

இது எல்லாம் நடந்தது ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி. இப்போ சந்திரா கோயமுத்தூர்லே வேலை செய்றா. அம்மா-அப்பா கூட உடுமலையிலே இருக்கா. அம்மா கவலையிலே உடம்பு அடிக்கடி சரியில்லாமே போகுதுன்னு கவலைப்பட்டா. கேட்டுக்கிட்டிருந்த எனக்கு ஒரு சுனாமி வந்து போன மாதிரி இருந்தது. அப்புறம் சொன்னாள், ‘நல்ல வேளை நீங்கெல்லாம் வராதது, வந்திருந்தா அதுக்கும் என்னை டார்ச்சர் பண்ணியிருப்பான், ஏன் வந்தாங்க எதுக்கு வந்தாங்கன்னு’. ஆனா, அதே ஊரிலே இருந்தும் சந்திராக்கு தேவைப்பட்டப்போ உதவ முடியலையேன்னு கஷ்டமா இருந்தாலும், எல்லார்மேலேயும் எனக்கு கோவமா வந்தது.

சந்திரா சொல்லும் வரை ‘யாரு இப்போல்லாம் வரதட்சிணை வாங்கறாங்க’ ன்னுதான் மேம்போக்கா நினைச்சுக்கிட்டிருந்தேன். போடறதை போடுங்கன்னு சொன்னாலும் வேலைக்கு போனா வர்ற காசும் (மறைமுகமான ) வரதட்சிணையாதானே கணக்காகுது.பொண்ணு வேலைக்குப் போகணுமா இல்லையான்னு மாப்பிள்ளைகள்தான் முடிவு செய்கிறார்கள், சந்திராவின் அனுபவப்படி. வரதட்சிணை வாங்கினா வர்ற காசை விட சம்பளமா நிறைய காசு வருதேன்னு கணக்கு பண்றதை நினைச்சு எரிச்சலா வந்தது. என்னதான் பொண்ணுங்க படிச்சு வேலைக்குப் போனாலும் சம்பாரிக்கிற காசை கணவன் கையிலே கொடுத்துட்டு வீட்டு வேலை செஞ்சுக்கிட்டு இருக்க வேண்டிய நிலைமை இருக்கத்தான் செய்யுது.

இன்றைய இளைஞர்களுக்கு திருமணத்தின் மூலமாக கிடைப்பது கூடுதலான ஒரு ஏடிஎம் கார்டு – அதை முன்வைத்தே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன.

சந்திராவின் கணவனது அருவருப்பான நடத்தையைப் பற்றி  சொல்வதற்கு என்ன இருக்கிறது….அதைப்பற்றிய கேள்விகளையும் பதில்களையும் உங்களிடமே விட்டு விடுகிறேன்.

என்னதான் பொண்ணை படிக்க வைச்சாலும், வேலைக்குப் போய் சுயமா இருக்கறதை விட கல்யாணம்தான் முக்கியம்னு நம் சமூகத்து பெற்றோர்கள்  நினைப்பது ஏன்?

பொண்ணை ஏன் தன்னோட கடமையா, குடும்பத்து மானமா, கௌரவமா இன்னொரு வீட்டுக்கு போக வேண்டியவளா, சுமையா, செலவா நினைக்கறாங்க? (என்னோட  ஃப்ரெண்ட் லஷ்மி சொன்னது இது, கசின்ஸ் எல்லாம் சேர்ந்தால்  லஷ்மிதேவி ஈக்வல் டூ செலவுன்னு சொல்லுவாங்க-ன்னு)

பெண்கள் வேலைக்கு போறாங்க, வெளியுலகத்தை பார்க்கறாங்க என்றதையெல்லாம் தாண்டி உண்மையான் பொருளாதார விடுதலை கிடைச்சிருக்கான்னா சந்தேகம்தான். வீட்டில் நிலைமை அப்படியேதான் இருக்கு. ஐடியில் வேலைப் பார்க்கும் பெண்களைத்தான் மணமகன் சமூகம் எதிர்பாக்குது. ‘உன்னோட  சம்பளத்தை என் கையிலே வர வைக்கறேனா இல்லையா பார்’-ன்னு மருமகள்கிட்டே சண்டை போட்டு மகனைப் பிரிச்சு வைச்ச மாமியாரை எனக்கு தெரியும். உண்மையில் பொருளாதார சுமைகளை சுமப்பதில் இருவருக்கும் சம உரிமை கிடைத்திருக்கிறதுன்னு வேணும்னா சொல்லிக்கலாம். மத்தபடி, பெண்கள் நிலை வீட்டில் இன்னும் மாறலை.

இது சந்திராவின் வாழ்க்கை மட்டுமல்ல. தேவிகாக்கள், அனுக்களின் கதையும் இதுதான். அவர்களின் வாழ்க்கை உணர்த்துவதெல்லாம் ‘இந்த பொருளாதார சந்தையில் பெண்ணும் ஒரு சரக்கு. அவளும் ஒரு நுகர்பொருள்’ என்ற எண்ணத்தைத்தான்.

இதற்காக குடும்பம் என்ற ஒன்றே தேவையில்லை என்றெல்லாம் சொல்ல வரவில்லை.  எந்த சராசரி மனிதருக்கும், பெண்ணுக்கும் சரி – ஆணுக்கும் சரி குடும்பம் இல்லாத வாழ்க்கை என்பது நடைமுறையில் சிக்கலானது. ஆணுக்கு குடும்பத்துக்குள் இருக்கும் அதே உரிமைகள் பெண்ணுக்கும் இருக்கட்டுமே. பெண்ணும் அதே சுதந்திர காற்றை சுவாசிக்கட்டுமே.

சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவைப் பாத்த்தேன். ஆணும் பெண்ணுக்கு சமையல் வேலைகளில் உதவ வேண்டுமென்பதாக. அதில் காணக்கிடைக்கும் சில பின்னூட்டங்கள் கொஞ்சம் சமையலறையிலிருந்து வெளியில் வந்திருக்கும் பெண்ணை  திரும்ப சமையலறைக்கு எடுத்துச் செல்வதாக இருந்தன.  ‘ஆண் சமையலில் உதவலாம், தப்பில்லை, எப்போதெனில்  மனைவிக்கு உடல்நலம் சரியில்லா வேளைகளில் உதவலாம், மற்ற நேரங்களில் மனைவியே சமையலுக்கு பொறுப்பு, என்ற ரீதியில்! இது வெளியிலே ஜான்நாயகம்..ஆனால் உள்ளுக்குள்ளே  சர்வாதிகாரம். ‘கொஞ்சம் உதவுவோம்’ என்ற சொல்லுவதில் வெளிக்காட்டிக்கொள்ளப்படும் ‘பெருந்தன்மை’!!

அதுக்காக ஆண்கள் சமையல் வேலைகளில் உதவுவதே இல்லையா என்று சண்டைக்கு வராதீர்கள்.

‘இது என் ஹஸ்பெண்ட் செஞ்ச சாம்பார் சாதம்’னு நண்பர்களுடன் ஒன்றாக லஞ்ச் சாப்பிடும்போது சொல்கிறேனென்று வைத்துக்கொள்ளுங்கள். ரியாக்ஷன் என்னவாக இருக்கும்? அடிபபாவி என்றோ அல்லது கிண்டல் தொனியோதான் பதிலாக கிடைக்கும். ஏதோ செய்யக்கூடத மகாபாவத்தை நாம் செய்ய வைத்துவிட்டது போல. கொஞ்சம் நஞ்சம் வரும் ஆண்களையும் இப்படிக் கிண்டல் செய்து ஓட்டிவிட்டால்…..ம்ம்…சில சமயங்களில் ஆண்களின் ரெப்-ஆக  பெண்களே  இருக்கிறார்கள்.

இன்று இவ்வளவு பேசிக்கொண்டிருக்குபோது NDTV-யில் நடந்துக் கொண்டிருப்பது என்ன?  ராகுல் மகாஜன் மூன்று பெண்களில் எந்த பெண்ணை தேர்ந்தெடுப்பார் என்றுதானே?

–          சந்தனமுல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *