- பிரதீபா கனகா – தில்லைநாதன்
01
ஈழப் போராட்டம் முனைப்புற்ற 80களின் ஆரம்பத்தில் பிறந்த தலைமுறையைச் சேர்ந்தவளாக – எனது பெற்றோரில் ஒருவரைப் போராளியாகவும் கொண்டிருந்த எனக்கு – கவிதைகளுடனான முதல் பரிச்சயம் என்பது எனது தகப்பனார் இணைந்திருந்த ஈழவிடுதலை இயக்கங்களிலொன்றின் கவிஞர்களுடைய கவிதைகளுடன் தான் தொடங்கியது. கதிரையின் இருபுறப் பிடியிலும் பெண் குழந்தைகளாகிய எங்களை வைத்தவாறு அப்பா வாசித்த பல கவிதைகளுள் இன்னமும் ஞாபகத்திலுள்ளது அவரது இயக்கத் தோழர்களில் ஆளுமை மிகுந்த பெண் போராளியொருவரது கவிதை. கவிதை நெருக்கமாயிருந்தமைக்கு அது ஒரு சிறுமியின் பார்வையில் எழுதப்பட்டிருந்தது காரணமாக இருந்திருக்கலாம்.
‘குஞ்சு குஞ்சு மேகங்கள்
வானில் நெளிந்த நட்சத்திரம்
வட்டமான அம்புலியில்
அம்மா அனேக இரவுகள் சோறு ஊட்டியிருக்கிறாள்.” (வசந்தி, 1990)
இவ்வாறு தொடங்கும் அவரது கவிதை – ‘பக்கத்து வீட்டு அண்ணா காணாமற் போய் நாட்கள் ஆகின்றன’ என்று முடியும். சாதாரணமாகத் தென்பட்ட ஆனால் அடக்குமுறையும் அதற்கெதிரான எழுச்சியுமான ஒரு காலத்தில் – அடக்குமுறைக்கெதிராகவும் அடக்குமுறைக்கும் – இளைஞர்கள் காணாமற் போனதை கவிதை வெளிப்படுத்தி நின்றது.
அந்த இரவில்
இருள் வெளியே
உறைந்து கிடந்தது
ஐந்து ஜீப்புகள் ஒன்றாய்
புழுதி கிளப்பின.
சோளகம் விசிறி அடித்தது.
என் ஆழ்மனதில்
அச்சம் திரளாய் எழுந்து புரள
அவனை இழுத்துச் சென்றனர்
பல்லிகள் மட்டும் என்னவோ சொல்லின
கூரைத்தகரமும் அஞ்சி அஞ்சி
மெதுவாய் சடசடத்தது
காலைச் சுற்றிய குழந்தை
வீறிட்டழுதது. (ஊர்வசி , 1982)
‘….தோட்டவெளிகள் அதிர்ந்து நடுங்கின
அங்கு மிங்கும் காக்கி உடைகளாய்…
ஆட்கள் வெருண்டனர்
அள்ளி ஏற்றிய இளைஞர்கள்
மூச்சுத் திணறினர்.
…காகம் கரைவதும் நெருடலாய் ஒலித்தது.
மெல்லிய ஒலிகளும் பயத்தையே தூண்டின
எங்கும் அச்சம்; எதிலும் அமைதி.
தென்றல் சிலிர்ப்பில் உணர்வே இல்லை
காலைச் செம்மையை ரசிப்பதை மறந்தோம்…..
நேற்று வரையும்
அமைதியான காலைப்பொழுது.’ (செல்வி, 1986)
இத்தகைய பின்னணியில்தான் ‘பக்கத்து வீட்டு அண்ணாக்கள்’ மாத்திரமன்று பெண்களும் காணாமற் போனார்கள்; விடுதலை வேண்டி விடுதலை இயங்கங்களில் இணைந்தனர். மேலும் – திருமணம் தவிரவும் பெண்ணுக்கு பெரிதாய்த் தேர்வுகளற்ற ஆணாதிக்க சமூக கட்டமைப்பிலிருந்து ‘வெளியில் வர’ அன்றைய இளம் பெண்கள் முன் இருந்த மாற்றுக்களில் ஒன்றாக ஆயுதமேந்திய இயக்கங்கள் இருந்தன. பெண்கள் தமது இடம் குறித்த விழிப்புணர்வைப் பெறுதல் என்பது பதட்டம் மிகுந்ததான அக் காலத்தின் இயல்பாக இருந்தது. அவர்கள் ஆயுதம் ஏந்திய/ஏந்தாத சமூக – அரசியல் போராளிகளாக கலைஞர்களாக உருவானார்கள்; விடுதலையுணர்வுடன் பொதுவெளியில் தமதிருப்பை பதிவு செய்தார்கள். இதைத்தான் ‘இன்று பெண்கள் மத்தியில் தமது சமூக இருப்பு, பங்கு, பணி குறித்தும் தமது ஆற்றல்கள் ஆர்வங்கள் குறித்தும் புதியதோர் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. சமூகத்தில் தமது அந்தஸ்து, சமூகம் தம்மை நோக்கும் முறைமை, பெண் என்ற உடலியல் அம்சம் ஒன்றினால் தமது வாழ்க்கை விதி நிர்ணயிக்கப்படுவது ஆகியவை பற்றிப் பெண்கள் விமர்சிக்கத் தலைப்பட்டுள்ளனர்’ – என்று சொல்லாத சேதிகள்’ (1986) தொகுப்பில் சித்ரலேகா குறிப்பிட்டார். பெண்களது அத்தகு விமர்சனங்களடங்கிய ‘சொல்லாத சேதிகள்’ கவிதைத் தொகுப்பிலும் ஈழத்தின் மிக முக்கிய கவிஞர்களாக இன்றும் அறியப்படுகிற அ.சங்கரி – சிவரமணி – ஊர்வசி – செல்வி – ஔவை உட்பட 10 பெண் கவிஞர்கள் ‘தாய்மையின் அழுகையும் தங்கையின் விம்மலும்’ (செல்வி) ‘தொடரும் இரவின் இருளில் எதுவும் நடக்கலாம்’ (ஊர்வசி) என்பதான அவலமும் நிச்சயமின்மையும் நிறை காலத்தின் தம் காதலை புத்திரசோகத்தை விடுதலை விருப்பை, தீர்க்க தரிசனங்களை வெளிப்படுத்தி இருந்தனர்.
02
போராயுதங்களின் முன் பெண்களின் வல்லமை ஒன்றும் வரலாற்றில் புதியதல்ல. போர்முனையில் மட்டுமன்றி – அதற்கு வெளியேயும் இராணுவ வண்டிகள் மீது மண்ணள்ளி எறியும் தாய்மார்களாக; ஆயுத அதிகார அச்சுறுத்தல்களுக்குள்ளும் காணாமற்போன உறவுகளது படங்களை பதாகைகளாக ஏந்தி ஊர்வலம் போகும் பெண்களென அவர்கள் இன்றும் தான் நிற்கிறார்கள்.
இத்தகையதொரு கட்டுரையில் இப்பெண்களது பயணத்தை (அதன் இன்றைய நிலையுடன் இணைந்து) திரும்பிப் பார்க்கையில் தீவிரமாக பொதுவாழ்வில் இயங்கிய இந்தப் பெண்கள் சமரசமற்ற விடுதலையை அவாவியவர்களாகவே தென்படுகிறார்கள். கலை இலக்கியம் சாராத பெண்ணியவாதியும் சமூக உரிமை போராளியுமான ராஜினி ஆகட்டும் கவிஞர்கள் செல்வி, சிவரமணி ஆகட்டும் அவர்களுடைய அகால மரணங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் நிகழ்கின்றன என்பதும் அவதானத்துக்குரியது. அக் கால இடைவெளி ஈழப் போராட்ட வரலாற்றில் பல்வேறு பெறுமதி மிக்க மனிதர்களை இழந்தது. அக் காலத்தில் தான் இலங்கை-இந்திய ஆக்கிரமிப்பு இராணுவங்களால் மாத்திரமன்று போராடப் புறப்பட்ட தமது சகோதரர்களாலும் போராளிகள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டார்கள். தலைமறைவானார்கள். நாட்டை விட்டுத் துரத்தப்பட்டார்கள்.
‘என்றாவது ஒரு நாள் ஒரு துப்பாக்கி என்னை அமைதியாக்கிவிடும். ஆனால் அது வேற்று மனிதன் ஒருவனால் ஏந்தப்படும் ஒரு துப்பாக்கியாக இருக்காது. மாறாக எனது வரலாற்றைப் பகிர்ந்துகொள்ளும், இச்சமூகத்தில் வாழும் ஒரு பெண்ணின் கருவறையில் இருந்து பிரசவிக்கப்பட்ட ஒரு புத்திரனால் ஏந்தப்படும் துப்பாக்கியாகவே அது இருக்கும்’ என்று தனது நண்பருக்கு எழுதிய இறுதிக் கடிதத்தில் குறிப்பிட்ட – கொல்லப்படும் வாய்ப்பறிந்தும்; அதிலிருந்து தப்பிப் போய் ஏதோ ஒரு வெளிநாட்டின் மதிப்புக்குரிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராய் இருக்கும் வாய்ப்பிருந்தும்; ஈழத்திலேயே நின்று இந்திய இராணுவ மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்களது மனிதஉரிமைமீறல்களை ஆவணப்படுத்தியதனால் 1989 செப்டம்பர் 21 ராஜினி படுகொலை செய்யப்பட்டார் (ஆவணப்படுத்தியவை பின்னர் ‘முறிந்த பனை’ நூலாக வெளியானது). தீர்க்கதரிசிகளுக்கு ‘உரிய இடமும் காலமும் போதனையும்கூட இல்லாதொழிக்கப்பட்டு விட்ட’ வெற்றிடத்தில் 1991 மே 19 சிவரமணி தற்கொலை செய்துகொண்டார். 1991 ஆகஸ்ட் 30 செல்வி கடத்திச் செல்லப்பட்டு பின்னர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் பெண்கள் பெரும் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்ட ஓர் காலத்தின் சமரசமின்மையின் குறியீடாகவே தெரிகின்றனர். அதனாலேயே அவர்களது இருப்பும் இறப்பும் எக்காலத்திலும் சந்தர்ப்பவாதத்தை கொண்டு திரிபவர்களிடமிருந்து வேறுபடுவதாகின்றது. சமூக விடுதலையை அவாவுகின்றவர்களிடமேனும் பெயர்களாக அறியப்படுகிற இவர்களை ஒத்த சமூக விடுதலைப் போராளிகளைத் தொடர்ந்த எண்ணற்ற பெறுமதி வாய்ந்த உயிர்களை பலிவாங்கிய 30 வருட காலப் போராட்டம் இன்று மக்களை உளவியல் உடலியல் குறைபாடுகளுடன் சமூக பொருளாதார அடக்குமுறைகளுடனும் விட்டிருக்கின்றது. குறிப்பாக வெளிநாட்டுத் தொடர்புகளற்ற குடும்பங்கள் – போராளிகளது இன்றைய நிலை மிக மோசமானது.
இந்த பின்னணியில் தான், நாம் ‘கவிதை’களைப் பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது. அத்துடன் ”இன்று கவிதையை எழுதுகிற அல்லது ஈழத்தை பிரதிநித்துவப்படுத்துகிற சௌகரியம்/வசதி யாரிடம் உள்ளது” என்கிற தவிர்க்கவியலாத கேள்வியும் கூடவே எழுகின்றது.
03
ஈழத்துப் பெண் கவிதை வெளி எனப் பார்க்கின் அது பல திசைகளைக் கொண்டிருக்க வேண்டும். தென்னிலங்கையிலிருந்து, மலையகத்திலிருந்து, கிழக்கிலிருந்து எழுதும் பெண்கள்; வட பகுதியிலிருந்து – அதனுள்ளும் வன்னி – யாழ்ப்பாணம் – தீவுப் பகுதிகள் என வேறுபடும் நிலப் பிரிவுகள்; மற்றும் மேற்கூறிய பிரதேசங்களுள் இயங்கும் வர்க்க மற்றும் சாதீய பிளவுகள்; அதற்கமைந்த வாழ்வுப் பின்னணியைப் பிரதிபலிக்கும் பெண் வெளிப்பாடுகள் என விரிவாக நோக்குவது அவசியம் (புலம்பெயர் பெண் கவிதை வெளியை இங்கே எடுக்கவில்லை). அதுவே எப் பிரதேசமிருந்து எப் பின்னணியிருந்து கவிதைகள் வருகின்றன (அல்லது வரவில்லை) என்பதன் அரசியலை முழுமையாக ஆய்வு செய்ய உதவும். இங்கே கவனத்துக்குரிய விடயம் வெவ்வேறு நிலப்பிரிவுகளில் பெண்களின் வாழ்பனுபவங்கள் – பால்நிலைசார் பொதுத்தன்மைகளைக் பகிர்ந்துகொண்டிருப்பினும் (ஆணாதிக்க கட்டமைப்பு; இரட்டைச் சுமை) – அடிப்படையில் பிரத்தியேக வேறுபாடுகளைக் தம்முள் கொண்டிருப்பவை. இன்று பொதுவெளியில் பிரதிநித்துவப்படுத்தப்படுகிற ஈழத்துப் பெண் கவிதைகள் இப் பிரதேசங்கள் மற்றும் உள்ளூறும் வேறுபாடுகள் அனைத்தையும் கொண்டவையல்ல. ஆகவே இக் கட்டுரை அவை அனைத்தையும் முழுமையாய் உள்ளடக்கியதல்லாத சிறு வரைபு எனக் கூறுவதே பொருத்தமானது.
இன்றிரவில்
உன்னை நினைக்கிறேன் தாயே!
மண்டையோட்டில் மாறாத பள்ளத்தையும்
அடிவயிற்றில் ஆழியாத கோடுகளையும்
போட்டுக்கொண்ட தாயே (மீனாள் செல்வன், 2007)
என கொழுந்து பறிக்கும் தன் தாயை கவிதையில் விளிக்கும் மலையக கவிஞையும்;
யார் காலில் மிதிபடவும் தயாரில்லாமல்
எனை எவரும்
வேரோடு பிடுங்கியெறிய
அனுமதியாமலும்
நான் செய்யும் போரின் வேர்
உன்னுடையது தானேயம்மா
(மலைமகள் – 2001)
என தன் தாயிற்கு எழுதும் போராளிக் கவிஞர் மலைமகளும் இக் கவிதைகள் ஊடாக தம் வாழ்பனுபவத்தை தாமே வெளிப்படுத்தி நிற்பதானது அவர்களொத்த உழைப்புச் சுரண்டலை எதிர்கொள்ளாத மற்றும் இலங்கையில் போர் நடந்த பகுதிகளைச் சேராத இதர நடுமத்தியதர வர்க்க ஈழப் பெண்களுக்கும் அவர்களுக்குமான அடிப்படை வேறுபாடுகள் பேசப்பட வழிவகுக்கின்றன. முக்கியமாக மலையகப் பெண்களைப் பொறுத்தவரையிலும் மலையகம் உட்பட போராட்டத்தில் இணைந்தகொண்ட அனேக வறிய பெண்களைப் பொறுத்தளவிலும் இசை பிழியப்பட்ட வீணை – மலையகக் கவிஞைகளின் படைப்புகள் (ஊடறு 2007) – நூல் விமர்சனத்தில் ஆழியாள் கூறுவது போல ‘…இப் பெண்களுக்கு பொருளாதாரமே அடிப்படைப் பிரச்சனையாக உள்ளது. அது வர்க்க ரீதியில்,பால் ரீதியில், சமூக ரீதியில் (இலங்கை, இந்திய), இன ரீதியில், யாழ் வேளாள மேலாதிக்க உணர்வு ரீதியில் கடையிடத்துக்கு தள்ளப்பட்ட இம் மக்களை மேலும் சிதைத்துச் சின்னாபின்னமாக்குகிறது.’
ஈழ விடுதலைப் போராட்டத்திலும் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட போராளிகளில் பெரும்பான்மையினர் போரிலிருந்து தப்பி வெளிநாடுகளுக்குப் போக வசதி வாய்ப்பற்ற வறிய குடும்பங்களிலிருந்து வந்தவர்களே. ‘படித்த’ சலுகை மிக்க குடும்பப் பின்னணிகளில் இருந்து வராத இந்தப் போராளிப் பெண்களை கலைஇலக்கியக் கூட்டமொன்றில் புத்திசீவித பெண் ஒருவர் இட்ட கட்டளைகளைத் தொடரும் ‘மொக்குப் பெட்டைகள்’ என விளித்தார். இவ்வாறு – கண்மூடித்தனமாகத் தம் தலைமையை பின்தொடருபவர்கள் எனவும் தமக்கென செயலாண்மை (Agency) அற்றவர்கள் எனவுமே பெண் போராளிகள் அறிவுசீவி வட்டங்களில் பார்க்கப் பட்டார்கள். அவ்வட்டங்களது பாரபட்சமான எண்ணப்பாட்டுக்கு மாறாக மலைமகள் தனது வீீரத்தின் மூல வேர் என தனது தாயை அறிவிக்கின்ற போதும்; போராளியான கவிஞர் அம்புலி,
யுத்தம் எனக்குப் பிடிக்கவில்லை
குண்டுமழைக் குளிப்பில்
குருதியுறைந்த வீதிகளில்
நிணவாடை கலந்த சுவாசிப்புகளில்
வெறுப்படைகிறேன்
…
ஆயினும் அதன் முழக்கத்தினிடையே
எனது கோலம் மாற்றமடைந்தது,
கால நிர்ப்பந்தத்தில் (1997)
என்கின்ற போதும்; அங்கே அடக்குமுறை ஏற்படுத்திய காலநிர்ப்பந்தம் போராட்டத்தில் அவர்கள் இணைவதற்கான காரணியானதை பதிகின்றபோது தம் குறித்த பாரபட்சமான எண்ணப்பாடுகளை கேள்விக்குட்படுத்தினர்.
சக போராளிகளான ஆண்களைப் போலவே ஒரு இயக்கத்தின் கட்டிறுக்கங்களுக்குள் அவர்கள் இயங்கிய போதும் – அது பிரச்சாரங்களால் உருவான வரட்டு இலட்சியவாதமாகவே பார்க்கப்படினும் – வலுக்கட்டாய ஆட்சேர்ப்பாகவன்றி அனைவரும் சமமாய் வாழ முடிகின்ற தேசம் வேண்டி தூண்டல் பெற்று கடந்த காலத்தில் போராட்டத்தில் இணைந்த ஒரு தலைமுறையின் குரலாக இவர்களது கவிதைகள் தம்மை நிலைநாட்டுகின்றன.
‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ பெண் போராளிகளின் கவிதைகள் நூலில் தொகுப்பாளர்கள் கூறுவதுபோல பெண்களின் சாகசம் பேசப்படாத தமிழ் சமூகத்தில் அச் சமூகம் தமக்கென ‘கீறிவைத்திருக்கும் வழமையான சலிப்பான வாழ்க்கைப் பாதையின் வரைபடத்தைப்பொருட்படுத்தாது இந்தப் பெண்கள் சாகச மனதோடு பயணித்து வெளிச்சத் துணுக்குகள் நிறைந்த பல பத்துப் புதிய வழிகளை எமக்காக செப்பனிட்டுத் தந்திருக்கிறார்கள்’ (தேவா, றஞ்சி 2011). பெண்களால் இவையிவையே முடியும் என வரையறையிட்ட மரபு மனத்தின் நம்பிக்கைகளை உடைத்த பெண் போராளிகள், மேலும் ‘போர்க்களம் காணல், தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்ளல், உளவு பார்த்தல், பல்வேறுபட்ட நவீீன இயந்திரங்களை இயக்குதல், அவற்றைப் பழுதுபார்த்தல், சிக்கலான விடயங்களைத் தீர ஆராய்தல், முடிவுகளை எடுத்தல், இரவுக் காவல்களிலும் பணிகளிலும் ஈடுபடுதல், எல்லைக்காவல், தீவிர உடற்பயிற்சி, இரகசியங்களைப் பேணுதல், வரைபட வாசிப்பில் தேர்ச்சி என பல புதிய பரிமாணங்களை எட்டியிருக்கிறார்கள்’ (தேவா, றஞ்சி 2011).
04
பல வகையிலும் – ஈழப் போராட்டத்தின் தலைமைத்துவ சக்திகள் எவ்வாறு யாழ்ப்பாணத்தில் மையங் கொண்டிருந்தனவோ அவ்வாறே – ஈழத்துப் பெண்ணிலைவாதம் என இன்று அறியப்படுவதும் யாழ்ப்பாணத்தை ஒட்டியதே எனலாம். எழுச்சி மிகுந்த 1980கள்; அதன் அதிர்வோடு எழுந்த 1990கள்; போருள் வாழ்வும் தேங்கும் 2000கள்; பின்னரான 2002 – 2007 சமாதான(?) காலம்; அதன் பிறகான யுத்த காலம் (2007 – 2009) ; மற்றும் இவற்றின் தொடர்ச்சியான சமகாலம் என கவிதைக்கான கால வெளிகளைப் பிரிக்கின், 1986 ‘சொல்லாத சேதிகள்’ தொகுப்பு வெளிவந்து சரியாய் 30 வருடங்களுக்குப் பிறகு, பெண்களில் சிவரமணி செல்வி போன்ற சொல்லத்தக்க பெருங் கவிஞைகள் இந்தக் கால இடைவெளியில் வந்திருக்க வேண்டும். மாறாக, ஈழப்போராட்டத்தின் ஆரம்பத்தில் – மிகவும் பிற்போக்கான ‘ஒரு மூடுண்ட சமூகமான’ யாழ்ப்பாணத்திலிருந்தும்; பின்னர் தேசத்தின் பிற பகுதிகளிலிருந்து போரில் இணைந்த பெண் போராளிகளிடமிருந்தும் – கிழம்பிய பொறி வளர்த்தெடுக்கப் படவில்லை என்பதே சமகால நிகழ்வுகளில் எதிரொலிக்கிறது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள் ஒரு புறம் என்றால்; யாழ் பல்கலைக்கழக மாணவிகளது உடைக் கட்டுப்பாடு குறித்த சர்ச்சை போன்ற எம்மைப் பின்னோக்கி நகர்த்தும் பொதுவெளியில் பெண்களை முடக்கும் இறுக்கமான குறுகிய ஆணாதிக்கப் போக்கே திரும்பியிருக்கிறது. போரில் இருந்து திரும்பிய பெண் போராளி போலவே, இங்கு கவிதை எழுதுகிற, சுயமாய்ச் சிந்திக்கின்ற பெண்ணும் சமூகத்துக்கு உகந்தவளல்ல. உகந்தவளாய் இல்லாமல் போவது குறித்த அச்சம் பெண்கள் பொது வெளியில் இயல்பாய் இயங்குவதுக்குத் தடையாகின்றது. பொதுவெளியை தமதென ஒரு காலத்தில் கையப்படுத்திய சமூகமா இது எனத்தான் தற்சமயம் கேட்கத் தோன்றுகிறது.
பின்னோக்கிப் பார்க்கின் யுத்தமுனையில் சரிக்கு சமமாக பெண் போராளிகள் போரிட்டனர். ஆயினும் சமாதான பேச்சுவார்த்தை மேடைகளிலோ அதனை ஒத்த முடிவெடுக்கும் அதிகாரமுடைய பதவிகளிலோ அவர்கள் இருக்கவில்லை. 2009 யுத்தம் முடிந்த(?) பிறகு அரசியல் – சமூக – கலை இலக்கியத் தளங்களில் ஈழத்திலும் புலம்பெயர் சூழலிலும் ஆண்கள் தமது வீழ்ச்சிக்கான காரணங்களை அலசத் தொடங்கிய போதும் ‘முன்னாள்’ போராளிகளாய் பல தேசங்களிலும் அவர்களைப் போலவே புலம்பெயர்ந்திருந்த பெண் போராளிகளது குரல் கேட்கவில்லை. இதில் அப்போதுதான் முகாம்களில் இருந்து திரும்பிய பெண் போராளிகளைச் சொல்ல வேண்டியதில்லை; அவர்களானால் ஏற்கனவே ஓரங்கட்டப்பட்டிருந்தார்கள். எந்த மட்டுப்படுத்தப்பட்ட சமூக நியதிகளை மீறி வந்து இயக்கத்தில் இணைந்தார்களோ அவையே அவர்கள் முன் காலங் கடந்த தேர்வாகிப் போய் நின்றன. இத்தகையதொரு காலத்தை வீடு திரும்பிய சில பெண் போராளிகளது கவிதைகளில்அப்பட்டமாய்க் காண முடிகிறது.
” சாகத்தானே போனதுகள்,
சாகாமல் ஏன் வந்ததுகள்”
குறுக்குக்கேள்விகளால்
கூண்டுக்குள்ளேயே
பிணமாகிக் கனக்கிறது
போராடப்போன மனம். ( தமிழினி)
‘…தோழிகளின் குறும்புகளை வடித்த
எனது பேனாவுக்கு,
துயர்மிகுந்த அந்த வீழ்ச்சியை எழுத
பிடிக்குதேயில்லை.
துகிலுரியப்பட்ட பெண்களாய்
என் தோழிகளை பார்ப்பேன் என்று
நான் கனவிலும் நினைத்தவளில்லை.
… எனது முகத்தின் வடுக்களை பார்த்து
இன்னொருவர் அழுவாரா?
துடிப்பாரா?
யாருக்கு வேண்டும் அந்த வலியின் பிரதிபிம்பங்கள்?
உன்னையும் என்னையும் பெற்றதற்காக
பெருமைப்படவேண்டிய மண் இப்போதெம்மை
புனைபெயர்களில் ஒளித்துவைத்திருப்பதற்காக
அழுகிறேன்.’ (வெற்றிச்செல்வி)
…
இவ்வாறாய் ஏழாண்டுகளுக்கு முன் தப்பி வந்த போராளிகளைக் கூட மறந்தாகிவிட்ட சமூகம் கடந்த காலங்களில் சிறப்பாய் எழுதிய பெண்களை மறந்துவிட்டதொன்றும் ஆச்சரியமல்ல. அத்துடன் 2000களில் தமிழகத்தில் எழுந்த பெண் கவிஞர்களின் அலை போல ஒன்று 1980 – 1990களுக்குப் பின்னர் ஈழத்தில் நிகழவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆளுமைமிகு கவிஞர்கள் அவ்வப்போது அறியப்பட்டாலும் அவர்கள் ஆண்களைப் போல தொடர்ச்சியாக இயங்கவில்லை (தொடர்ச்சியாக இயங்குவதற்கான வெளி இருக்கவில்லை; இல்லை). கலைஇலக்கிய வட்டம் எப்போதும் இன்னொரு யுகக் கவிஞன் பிறக்கவே காத்திருக்கின்றது. இத்தகைய ‘காவிய’க் காத்திருப்புகளில் பெண் கவிஞர்களது வருகைக்கான எதிர்பார்ப்பில்லை. ஆதலால் எழுச்சிமிகுந்த 1980களின் தொடர்ச்சியை அறிவிக்கும் பெண் கவிஞைகளை நாம் தேடத்தான் வேண்டியிருக்கிறது.
நமது துரதிர்ஷ்டம் – தமிழ் சினிமாவில் வயதேறினாலும் மரத்தை சுற்றி ஓட ஹீரோவாய் வலம்வரும் கதாநாயகர்கள் போல – 1980களில் கவிஞராய் அறியப்பட்ட, அக்காலமே புலம்பெயர்ந்து சென்றுவிட்ட ஆண்கவிகளே தமிழகத்திலும் சமகால ஈழத்தை பிரதிநித்துவப்படுத்துவராய் இருக்கிறார்கள். அதே காலத்தில் அவர்களுடன் எழுதிய அவர்களிலும் பல ஆண்டுகள் இளையவராய் இருந்த பெண்கள் இன்றும் ஈழத்தை பிரதிநித்துவம் செய்யும் பிரமுகர்களாய் இயங்கவில்லை என்பதைக் கவனப்படுத்தின், குடும்பங் கட்டுதலும் பிள்ளை வளர்ப்பும் மாத்திரமா அவர்களது பங்களிப்பை தடுப்பவை?
நாமறிய ஆளுமை மிகுந்த பெண்களாய் விடுதலை வேண்டி எழுந்தவர்கள் போன இடம் தெரியவில்லை. இன்று போராடித் திரும்பியவர்களுக்காக மண்ணின் மைந்தர்கள் பெருமைப்படவுமில்லை. போராடியவர்கள் ஓரங்கட்டப்பட்டு அவர்களது காலத்தில் எந்த அமைப்புடனும் இணையாமல் மற்றவரைப் போராட கவிதை பாடிவிட்டு தாம்-தமது குடும்பம்-தமது உயர்கல்வி என நழுவி நழுவி பிழைப்பாய திரிந்தவர்கள் அறியப்பட மிக முக்கிய காரணம் தமிழக கலை இலக்கிய அரசியல் ஆர்வலர்கள் ஈழத்தைச் சேர்ந்த களத்தில் வேலை செய்கிற எழுத்தாளர்கள்-செயற்பாட்டாளர்கள் உடன் தொடர்பில் இருக்கத் தவறுதல் ஆகும். இதன் பலன் எனது தோழி ஒருத்தி கூறுவதுபோல ‘விழுந்த பல்லை’ எடுத்து மணக்கின்ற வேலையே நடந்துகொண்டிருக்கிறது.
05
ஈழத்தில் மிகச் சிறந்த கவிஞர்களாக தமை அடையாளங் காட்டிய கவிஞைகள் – 1990களில் சங்கரி, சுல்பிகா, மைதிலி அருளையா, ஆழியாள்,; 2000களில் ஆகர்சியா, கலா/ரேவதி, விஜயலக்சுமி, பெண்ணியா, ஆதிலட்சுமி கூடவே அம்புலி, மலைமகள் போன்ற போராளிகள் – ஆண்களுடன் ஒப்பிடுகிற போது எண்ணிக்கையில் குறைவாக எழுதியமையால் வாழ்வின் எக்கணத்தையும் தொடர்ந்தும் ‘கவிஞர்களாகவே’ வாழ வாய்க்கப் பெறாமையால் major poets-ஆக அவர்கள் வரிசைப் படுத்தப் படாமல் போயிருக்கலாம். ஆனால் பெண்கள் தாம் அப்படி அறியப்படுவதை முதன்மைப் படுத்தினார்களா? என்பதே இங்கே கவனத்துக்குரியது.
சுவாரசியமான வகையில் அவர்களது சமகால எழுத்தாளன்களைப் போலவன்றி சமூக மாற்றம் வேண்டி வேலைசெய்த அமைப்புகளுடன் இணைந்து இயங்கியமை ஈழத்தில் பெண்களது எழுத்துக்கான உந்துசக்தியாக இரு(ந்திரு)ப்பதை அவதானிக்க முடிகிறது. அப்படியமையாதபோது அதுவே தேக்கமாகவும் ஆகியிருக்கின்றது. ‘நான், நீ நினைக்கும் கவிஞன் அல்ல’ ‘கவிதை வெறிமூட்டி நான் கவிதை எழுதவில்லை’ (சிவரமணி) எனவே அவர்கள் எழுதினார்கள். தன்முனைப்பான கவிஞர்களாக அறியப்படுவதை விடவும் தமது சுதந்திரம் உறுதி செய்யப்படும் சமூக மாற்றங்களை அடைவதில் அவர்கள் கவனம் குவிந்திருந்தது.
‘அறிவால் முதிர்வு கொள்
என் அன்பே!
உன் அன்பை ஏற்றுக் கொள்ள
இப்போது முடியாதிருப்பதற்காக
என்னை மன்னித்துவிடு
தேடல்கள் புரிதல்கள்
வெறுத்தல்கள் மறுத்தல்கள்
கோரல்கள் போரிடல்கள்
எனப்பல வேலைகள் உள்ளன’ (சுல்பிகா 1999)
‘பொருந்தாத வேசங்கள்
வாழ்க்கையில் எதற்காக’ (ஊர்வசி 1999)
“மானுட நேயம் நோக்கிய வாழ்வை
படைத்திட முயல்கையில் எத்தனை தடைகள்
கொடூரம் மிகுந்த விழிகள் தொடர
வாழ்தலில் கசப்பு நெஞ்சை நெருடும்
மனிதம் மறந்து சவமாய்க் கிடந்து
வாழ்தலில் எனக்குப் பிரியமேயில்லை…’’ (செல்வி)
சமத்துவத்தை சமத்துவம்மிக்க வாழ்வை அடைவதற்கான கருவியாக கவிதை அவர்களுக்கிருந்தது. தனிப்பட்ட விடுதலை என்பது கூட்டான உரிமைகளை வெல்வதூடாகவே சாத்தியம் என்பதை கவிதைகள் வெளிப்படுத்தின. குறிப்பாக ஈழத்தின் நெருக்கடி மிக்க போராட்ட காலம் பிரசவித்த இரண்டு major poets-ஆன செல்வி – சிவரமணி படைப்புகளில் இப் பண்புகளை அதிகம் காணலாம்.
செல்வி ஈழ விடுதலை வேண்டிப் போராடிய அமைப்புகளொன்றில் இருந்தவர். அதன் மகளிர் அமைப்பில் தீவிரமாக செயற்பட்டவரென்பதோடு ‘தோழி’ என்றவொரு சஞ்சிகையை அவ் அமைப்பின் சார்பில் வெளியிட்டவர். சிவரமணியும் செல்வி போலவே பூரணி போன்ற பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்தவர். தமது நிலத்தில் நிகழ்கிறவை தொடர்பான – களத்தில் திரிந்து பெற்ற – பட்டறிவு தந்த விமர்சனங்கள் இவர்களது படைப்புகளில் எதிர்காலம் குறித்த தீீர்க்க தரிசனங்களாய் பதிவாகியுள்ளன.
இன்று சமகாலத்தில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பவர்களில் சிலராய் அனார், கமலா வாசுகி, ஸர்மிளா ஸெய்யித், விசயலக்சுமி, பஹீமா ஜகான், சிமோன்தீ, லுணுகல சிறி, பிரியாந்தி, வெற்றிச் செல்வி போன்றோரைக் கூறலாம். போராட்டத்துக்கு முந்தைய காலங்களை ஒத்து மீண்டும் பொதுவெளியில் பெண்கள் ஊடாட்டம் குறைந்துள்ளது என்பதோடு வீரத்துக்கும் வெற்றிப் பரணிகளுக்கும் பதில் புத்திர சோகம் – போராளிகள் வீடு திரும்புதல் – அவலங்கள் குறித்த உடல் உளப் பாதிப்புகள் சமகாலக் கவிதைகளின் உள்ளடக்கமாகவுள்ளன. மற்றொரு புறம் 2001இற்குப் பிறகு வலுப்பெற்ற இஸ்லாமியர்மீதான வெறுப்பு (Islamophobia) போலவே இலங்கையில் தீவிரம் பெறும் இஷ்லாமிய அடிப்படைவாதத்தின் தாக்கங்களை அதன் சில பக்கங்களை முஸ்லிம் பெண்ணாய் தனிநபராய் எதிர்கொண்ட ஸர்மிளா ஸெய்யித்தின் படைப்புகள் பதிவுசெய்துள்ளன. அவை –
‘… காதல் அடிமையாய் இருக்கலாம்
புணர்ச்சியைப் பேசுதல் குற்றமென்கிறார்கள்
பிள்ளை பெறலாம்
எந்தத் துவாரம் வழி அதுவென
கூறுதல் குற்றமென்கிறார்கள்’ (ஸர்மிளா ஸெய்யித், ‘ஒவ்வா’ 2014)
என்றும்; இத்தகு தனது விமர்சனங்கள் காரணமாக செல்லத் தடைவிதிக்கப்பட்ட புராதன ஊரை,
‘பிரியத்துக்குரிய ஊரே
நான் சலிப்படையவில்லை
பின்வாங்கவுமில்லை
அறுவடையின் காலம் வரும்போது
பைத்திய நிலை தெளிந்து மனப்பாங்கு மாறும்
எனக்குரிய ஆடைகளை நீ நெய்கிற பொழுதுகள் வரும்’
என்று பாடியும் எடுத்துச் சொல்கின்றன.
மொத்தமாக பாக்கின்ற போது கபடங்கள் வேசங்கள் கொண்ட பாவனை மிகுந்த தமது சமூகத்தோடான பெண்களின் தொடர் முரண்நிலையை மாத்திரமன்று சமூக மாற்றத்துக்காக இணைந்து போராட ஆரம்பித்த சக ஆண்களின் அரசியல் போதாமைகள் தரிசனமின்மைகள் குறித்த விசனங்களையும் பெண்களது படைப்புகள் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வந்திருக்கின்றன. குறிப்பாக போர்க்காலத்தில் இருந்து கள செயற்பாட்டாளராக இயங்கிய-இயங்கிக்கொண்டிருக்கும் கமலா வாசுகி போன்றவர்களிடம் சிவரமணி போன்றோரின் தொடர்ச்சி, ஒத்த தன்மை தென்படுவதைக் காணலாம். மட்டக்களப்பிலிருந்து இயங்கி வரும் சூரியா பெண்கள் அமைப்புடன் இணைந்து செயல்படுபவரான வாசுகி சமூகத்தின் அடிமட்டங்களிலிருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகளின் பல்வேறு பரிமாணங்களை அறிந்தவர். என்பதாலும் அவரது கவிதைகள் தீவிரத் தன்மையைக் கொண்டிருக்கின்றன.
2006இன் வன்னி மற்றும் மட்டக்களப்பு போராளிகளுக்கிடையேயான பிளவுகளது நேரடியான சாட்சியாயிருந்த வாசுகி அக் காலப் பகுதியில் எழுதிய கவிதைகளில் அதன் தாக்கத்தை வெளிப்படுத்தி இருப்பார்.
‘அல்லைப்பிட்டியோ, மன்னாரோ அல்லது கெப்பிட்டிக்கொல்லாவவிலோ
அவர்கள் கடலால் சூழப்பட்ட இந்த நிலத்தின்
எந்தப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருந்தாலும்,
அவர்கள் தமிழ், சிங்களம் அல்லது
எந்த ஒரு சாத்தானின் மொழியைப் பேசுகிறவனால்
கொலை செய்யப்பட்டிருந்தாலும்
அவர்கள் கடவுளரை, மதத்தை அல்லது
எந்த கருத்தியல்களை
நம்பிய ஒருவரால் கொல்லப்பட்டிருந்தாலும்
அவர்கள் பெண்களின் குழந்தைகள்
…
பெண்கள் நாங்கள்,
பிற பெண்களின் குழந்தைகளைக் கொல்வதற்காய்
குழந்தைகளைப் பெற்றாக வேண்டுமா?
வேறு யாராலோ கொல்லப்படப் போவதற்காய்
நாங்கள் குழந்தைகளைப் பெற்றாக வேண்டுமா?’ (2006)
இதில் சமரசங்களையும் மனித இழப்புகளையும் கொண்டுவரும் ஆண்களின் யுத்தத்தின் மீீதான வெறுப்பினைக் காணலாம். பெண்கள் போர்வீரர்களை பெற்றுத் தரும் வெறும் இயந்திரங்களா என்கிற அயற்சியைக் காணலாம். மேலும், இவ்வாறான ஈழக் கவிதைகளில் உள்ள விடுதலைக் கோசங்கள் பிரகடனங்கள் கவித்துவம் சார்ந்து எதிர்மறையாகப் பார்க்கப்பட்டாலும் – கவிதைகளில் உள்ள ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் அதன் வரலாற்றுக்கும் உரியதான ஒரு சிறப்பம்சமாகவே இதனைப் பார்க்க வேண்டும்.
‘தீச்சுவாலை போல போரின் குரூரக் கரங்கள் எழுகின்றன – அவை
எனது குழந்தையைத் தீண்டிவிட
தீநாவின் நுனியை ஒருபொழுதும் அனுமதியேன்
இனியொரு பொழுதும்
எந்த வகையிலும்
இது நடைபெறுவதை அனுமதியேன்.
என் குழந்தை போருக்கல்ல!!!!!!’ (கமலா வாசுகி 2010)
இலக்கை மறந்த போராட்டத்தில் பெண்களும் பெண்களின் குழந்தைகளும் பலியிடப்படுவதை பந்தாடப்படுவதை விரும்பாத குரலாக அது ஒலித்தது. ஈழத்தில் ஆரம்பித்திலும் சமகாலத்திலும் எழுந்த பெண் கவிதைக் குரல் இனத்துவ அடக்குமுறையை மறுதலித்தனவோ போராட்டத்தின் நியாயத்தினை நிராகரித்தனவோ அல்ல. சமூகப் பிரச்சினைகளை பேசும்போதும் போராட்ட பொறிமுறைகளை விமர்சிக்கின்ற போதும் ‘இப்போது வேண்டாம் இதுவல்ல நேரம்’ என எப்போதும் சலாப்புக் கட்டும் தள்ளிப் போடும் ‘சமரசம் செய்யும் விடுதலை’ என்பதே வேண்டாம் என்றே இக் குரல்கள் ஒலித்தன. அத்தகைய சமரசக் போக்கு மேலும் தவறுகளுக்கே வழிவகுக்கும் என்பதுடன் எதிர்காலத்தில் இன்னமும் அழிவுகளையே கொண்டு வரும் என்கிற பதைபதைப்பே அவற்றில் இருந்தன.
முள்ளிவாய்க்கால் போரும் படுகொலைகளும் நடந்து ஏழு+ வருடங்கள் முடிந்துவிட்டன… இன்றும் போரிட்டு இறந்தவர்களுக்கான அஞ்சலியை செய்யவியலாதவர்களாக தரப்பட்டதை ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியவர்களாக தோற்கடிக்கப்பட்ட தரப்பாகவே தம் பிள்ளைகளை போருக்குக் கொடுத்த வறிய மக்கள் உள்ளார்கள். ஒரு 30 வருடங்கள் போராடி ஈற்றில் இழப்புகளைத் தவிர பெற்றதென்ன என்கிற அயர்ச்சி தோன்றுகையில் நடந்தவை தொடர்பில் திரும்பிப் பார்த்தலும் தவறுகளை சுயவிமர்சனம் செய்தலும் அதிலிருந்து கற்றுக்கொள்தலும் மிக அவசியமானது. அந்த வகையில் பெண்களது கவிதைகளின் பங்களிப்பும் குரலும் சமரசமற்ற விடுதலையை வேண்டியதாலும்; தலைமுறைகளை போர் புரியுமாறு கவிஞன்கள் பாடிக்கொண்டிருந்த அதே காலம் தீர்க்கதரிசனத்துடன் விலங்குகளற்ற விடுதலையை வேண்டி நின்றதாலும் வேறுபட்டு நிற்கின்றன. முக்கியம் பெறுகின்றன.
‘விடுதலை என்றீர்
சுதந்திரம் என்றீர்
எம் இனம் என்றீர்
எம் மண் என்றீர்
தேசங்கள் பலதிலும்
விடுதலை வந்தது இன்று
சுதந்திரம் கிடைத்தது
எனினும்
தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப் பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சைப் பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை?
நாம் எல்லாம் இழந்தோம்
எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்;
விலங்கொடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்!
தோழர்களே
விலங்குகளுக்கெல்லாம்
விலங்கொன்றைச் செய்தபின்
நாங்கள் பெறுவோம்
விடுதலை ஒன்றை. ‘
(1986, சிவரமணி)
___________________________________________________________________________
இவ்வரைபுக்கு எடுத்தாண்ட நூல்கள்:
சொல்லாத சேதிகள் (இலங்கை, 1986 – பெண்கள் ஆய்வு வட்ட வெளியீடு-2)
உயிர்வெளி- பெண்களின் காதற் கவிதைகள் (கிழக்கிலங்கை, 1999)
எழுதாத உன் கவிதை – தமிழீழப் பெண்களின் கவிதைகள் (வட இலங்கை, 2001)
பெயரிடாத நட்சத்திரங்கள் (ஈழப் பெண் போராளிகளின் கவிதைகள் – ஊடறு+விடியல் வெளியீடு 2011)
இசை பிழியப்பட்ட வீணை (ஊடறு 2007)
ஒவ்வா – ஸர்மிளா ஸெய்யித் (காலச்சுவடு 2014)
thanks -http://misfitsforchange.org/