Thanks -https://www.facebook.com/anfa.athi.1/posts/2232090157015669
நான் அறிந்து சொந்த நாட்டில் சொந்த ஊரில் தொழில் வாய்ப்பின்றி இருக்கும் ஆண்கள் உரிய வயதில் திருமணம் முடிக்கும் நிகழ்வை கிட்டத்தட்ட தற்கொலைக்குச்சமமானதாக பார்க்கிறேன்.அது எவ்வகையானது என்பது பற்றி விளக்கிக்கொண்டிருக்க முடியாது.இது ஒரு வகை சமூகத்திணிப்பாகவும் பின்பற்றலாகவுமே உள்ளது.அதிகம் படித்த பெண் எனக்கு திருமணத்திற்கு வேண்டாம் என்ற நிலை மாறி பட்டப்படிப்பு மேற்கொண்ட பெண்தான் எனக்கு மனைவியாக வர வேண்டும்;ஆனால் வேலைக்குச்செல்லக்கூடாது என்ற ஒப்பந்த அடிப்படையிலான திருமணங்களும் மேற்கொள்ளப்படுகிறது.இதனை ஆணாதிக்கம் என்ற போர்வை தாங்கிப்பார்ப்பதை விட சமூகத்திணிப்பால் ஆண்களே தங்கள் மீது சுமைகளை வாரிகட்டிக்கொண்ட ஒன்றாக நோக்குகிறேன்.ஒரு புறம் ஆண்கள் மீது பரிதாபமும் கொள்கிறேன்.இது இவ்வாறிருக்க திருமணமான பின் கணவன் வெளி நாடு செல்வது பற்றி எவ்வித அபிப்பிராயாயமும் எனக்கில்லை.ஆளுக்கொரு காரணத்தை சொல்ல வரிந்து கட்டிக்கொண்டு வந்து நிற்க வேண்டாம்.குறித்த மத கலாச்சாரங்களினால் பின்னப்பட்ட சமூகத்தில் வாழும் சுதந்திரமாக வேலைக்குச்செல்லும் பெண்ணோ அல்லது வீட்டில் குழந்தை குட்டிகளைப்பார்த்துக்கொள்ளும் பெண்ணோ கணவன் தன் கண் படாதூரத்தில் உள்ள நிலையில் சமூகத்தில் எத்தகைய பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதையும் சமூகமே தீர்மானித்தும் விடுகிறது. இதில் விவாகரத்தான பெண்,விதவை பெண்களின் வாழ்வியல் பற்றி விளக்கம் தர வேண்டுமா என்ன??இதில் என்ன புதிர் என்றால்,பெண்ணைப்பற்றி தான்தோன்றித்தனமாக கற்பனை செய்வதும் சமூகமே.அந்தக்கற்பனைக்கேற்ப கிசுகிசுக்களைப்புனைவதும் சமூகமே.அந்த கிசுகிசுக்களை உண்மைப்படுத்தப் போராடுவதும் சமூகமே.அந்த கிசுகிசு நிரூபிக்கப்பட்டு உண்மைப்படுத்தப்பட்டதை அறிந்தால் அந்த சமூகத்தின் குரலிலும் மனதிலும் எழும் கம்பீரம், உற்சாகம் அவரவர் வாழ்வில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் காணமுடியாது.
நான் பார்த்த சமூகம் ,காலகட்டமும் வேறு,நான் பார்த்த பெண்ணும் வேறு.”மலேனா”(Malena).அழகிதான் அவள்.அவளது அழகிற்காகவே அந்தப்படத்தைப்பார்த்தேன்.அந்த அழகை முழுமையாக பார்த்ததில் இருந்து பொறாமை ஒன்றும் எனக்கு தோன்றவில்லை.பயமும் பரிதாபமும் மேலோங்கியது.இது 2000 ஆம் ஆண்டு வெளியான ஒரு இத்தாலிய திரைப்படம்.இது சமூகப்பார்வையில் ‘மேலோட்ட செக்ஸ்’திரைப்படமாகவே கணிக்கப்பட்டது.இத்திரைப்படம் 1940 ஆண்டு காலப்பகுதியில் பாசிச கொள்கையுடைய முசோலினியும்,ஹிட்லரும் இணைந்து யுத்தத்தை மேற்கொண்ட காலகட்டத்தில் கணவன் யுத்தத்திற்குச்சென்றதால் 27 வயது நிரம்பிய கவர்ச்சியான உடல் கட்டமைப்பைக்கொண்ட ஒரு ஆசிரியையின் வாழ்க்கை கிசுகிசுக்களினால் எவ்வாறு சிதைவுறுகின்றது என்பதைப் பிரதிபலிப்பதே இத்திரைப்படம்.கிசுகிசுக்கள் எவ்வளவு வேகமாக மனிதனது மனதை ஆட்க்கொண்டு விடுகின்றன?அதிலும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளவர்களது கிசுகிசு என்றாலே பார்வையாளர்களது நாவுக்கு கொண்டாட்டம் தான். இங்கே கிசுகிசுக்கள் மட்டுமல்ல ஒரு நிலை தாண்டி மலேனாவின் அழகு,பசி,வறுமை,சுற்றி உள்ள ஆண்களின் காம வெறி என்பன அவளை வேறொரு அசாதாரணமான நிலைக்குத்தள்ளி விட்டு வேடிக்கை பார்கின்றது.இப்படியான ஒரு நிகழ்வு தற்காலத்திலும் சாதாரணமாகவே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.அந்த ஊர் பெண்களிடம் மலேனாவின் அழகின் மீது மேலோங்கிய ஒரு வித பொறாமையும் கோபமும் கூட காணப்பட்டது.”ஒரு பெண்ணின் மனது பெண்ணுக்குத்தான் புரியும்” என்னும் பழமொழி இத்திரைப்படத்தில் பொய்யாகவே போய் விட்டது. ஒட்டு மொத்த பெண்களும் சேர்ந்து அடித்து துன்புறுத்தியும் அங்குள்ள ஆண்களால் எதுவுமே செய்ய முடியவில்லை.ஆண் சமூகத்தைப்பார்த்து ரத்தக்காயங்களுடன் மலேனாவின் கதறல் கண்ணீர் ஆதங்கம் அங்குள்ள எந்த ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை அந்த சிறுவனைத்தவிர. எந்த பெண்ணுக்கும் தன் வீட்டில் இருக்கும் ஆணை கட்டுப்பாடாக வைத்திருக்க முடியவில்லை.கணவனாக இருந்தாலும் சரி,பிள்ளையாக இருந்தாலும் சரி.பழி எல்லாமே மலேனா(பெண்) மீதுதான்.
இத்திரைப்படத்தின் கதையை நகர்த்திச்செல்லும் ஒரு மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்று உண்டு.
ரெனாடோ( Renato ).இவன்தான் இத்திரைப்படத்தின் கதை சொல்லி.முன்கட்டிளமைப்பருவத்தில் பல்வேறு உடலியல் உளவியல் மாற்றங்களை தன்னகத்தே கொண்டு அதற்கு தீர்வு காண முடியாமல் தவிக்கும் 12 வயது சிறுவன். இவனது கனவுக்கன்னி மலேனா.அவனது சுய இன்பத்திற்கு அவளது முகமும் உடலும் கற்பனையில் அவனுக்குச்சொந்தமானவை.இதையும் தாண்டி அவனுக்கு அவள் மீதான காதல் வார்த்தையால் விபரிக்க முடியாதவை.அவளை வற்புறுத்தி அடைந்து கொள்ள வேண்டும்,அனுபவிக்க வேண்டும் என்ற எந்த நோக்கமும் இன்றி அவனைச்சுற்றி உள்ளவர்கள் கூறும் கிசுகிசுக்களைப்பற்றிய உண்மை நிலையை அறிந்து கொள்ள அவளைப்பின் தொடர்கிறான்.சுற்றி உள்ள அவனது சமூகத்தையும் மலேனாவின் துன்பத்தையும் அவளது அசாதாரண மாற்றத்தையும் 12 வயதிலே புரிந்து கொள்கிறான்.
சிறுவனின் பழிவாங்குதல் என்னும் செயற்பாடானது(தேநீரீல் எச்சில் துப்பி கொடுத்தல்,அவதூறு பேசும் பெண்களின் கைப்பையில் சிறுநீர் கழித்தல்) சிரிப்பை மூட்டினாலும் மலேனாமீது கொண்ட அன்பையும் சமூகத்தவரின் மீது கொண்ட வெறுப்பையும் இலகுவாகவே வெளிப்படுத்தி நிற்கின்றது.
ஆண்கள் வயதுக்கு வருதல்,மற்றும் பிற செயற்பாடுகள் அனைத்தும் ஆண் உடல் மொழியிலேயே சொல்லப்பட்டுள்ளது.சில இடங்களில் ஆண்களுக்கு சிரிப்புக்கூட வந்திருக்கலாம்;ஆனால் வெட்கப்பட வாய்ப்பே இருந்திருக்காது என்று நினைக்கிறேன்.
சிறுவனின் தந்தையின் செயற்பாடு சில சமயம் கோபமூட்டினாலும் மகனைப்பற்றிய உடலியல் ரீதியான,உளவியல் ரீதியான புரிந்துணர்வு ஒவ்வொரு தந்தைக்குள்ளும் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று கூற தோன்றியது.பாலியல் தொழில் புரியும் பெண்களிடம் மகனை தந்தை ஒப்படைத்து ‘இந்த சிறுவனை வாலிபனாக்கி கொடுங்கள்’ என்பதில் உடலியல் தேவை அந்தந்த வயதில் தீர்க்காவிட்டால் எப்படிப்பட்ட சிக்கல்களை உடலும் உள்ளமும் சந்தித்திருக்கும் என்றே சிந்திக்க தோன்றுகின்றது.ஒரு புறம் இச்செயற்பாடு பாலியல் தொழிலை ஆதரிப்பது போல தோன்றினாலும் காலங்காலமாக ஏன் பாலியல் தொழில் முற்றாக தடை செய்யப்படவில்லை? இன்னும் பல நாடுகளில் அரசாங்க அனுமதியுடனேயே ஏன் நடாத்தப்படுகின்றன?போன்ற கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளதால் பாலியல் தொழில் பற்றி விவாதிக்கத்தோன்றவில்லை.
வழக்கமான என் கேள்வி ஒன்றையும் முன்வைத்து விடுகிறேன்.இதே இடத்தில் ஒரு பெண் பருவ வயதை அடைந்து உடலியல் உளவியல் ரீதியாக சிக்கல் கொண்டால் இதை ஒரு தாய் அல்லது தந்தை எவ்வாறு முகம் கொடுத்து இருப்பார்களோ ? திருமணம் ஒன்றே இதற்கான தீர்வாக இருந்திருக்கும்.பதிலில் கூட எந்த மாற்றமும் இல்லை.
தமிழ் சினிமாவில் வருவது போல அந்த அழகிக்கான ஏதும் தனிப்படட கவர்ச்சிக்காட்சிகள் இருக்குமா என்று சிலர் ஏங்கி தவித்து இருக்கலாம்.இல்லவே இல்லை.சமூகப்பார்வையில் இருந்து விலக்கி சிறுவனது கண்வழியே மட்டுமே பார்வையாளர்களுக்கு மலேனாவின் வாழ்வியலைப் புரிய வைத்துப் பார்க்கச்செய்து இருக்கிறார் இயக்குநர்(Giuseppe Tomatore).இப்படி ஒரு பார்வை வழி நம் சமூகத்திற்கு இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியதே! அது தனிமையில் வாழும் பெண்ணாக இருந்தாலும் சரி,கணவனை இழந்த அல்லது கைவிட்ட பெண்ணாக இருந்தாலும் சரி.இந்த திரைப்படத்தைக்கூட புரிந்து கொள்ள முடியாதவர்களா இந்த சமூகத்தையும் பெண்ணையும் புரிந்து கொள்ளப்போகிறார்கள்??.
Bulbul Esabella