– திவினோதினி
உங்களுக்கும் எனக்குமான தேடலில்
நிரம்பிக்கிடக்கிறது மன அறை
யாரும் அறியாத நமக்கான சந்திப்புக்கள்
ஊரடங்கு இரவொன்றின் வெறுமையைப் போலவும்
அதனால் அமைதியான சாலையைப் போலவும்
நிசப்பதம் கொள்கின்றன
மழைக்கால இரவொன்றின் இருள் கிழிக்கும்
மின்மினியைப்போல ஒற்றி நகர்கின்றன
வெளிச்சக்கீற்றுக்கள்
உங்கள் சமூகசட்டப் பிரவாகத்தில் தத்தழிக்கும்
சிறு எறும்பாய் மாட்டிக்கொண்ட எனக்கு
இரவோடும் பகலோடும் போராடுதல்
கட்டளையிடப்பட்டதாயும் சபிக்கப்பட்டதாயும்
பிறப்பெடுத்திருத்தல் சாபமே
காரிருளை கலங்கடிக்கும்
மேகங்களின் மோதல்களில்
எழுப்பப்படும் இடியோசைகளுக்கு
உங்கள் சத்தங்கள் ஒன்றும்
சழைத்தவைகளல்ல
சோவெனப் பொழியும்
மழையின் துளிகளாலும்
எட்டியெட்டி ஓடிமறையும்
மின்னல் கீற்றுக்களாலும்
அழித்துவிடமுடியாது
நிரம்பிக்கிடக்கும் – என்
மன அறையின் தேடல்களை
உங்களுக்கும் எனக்குமான தேடல்கள்
முற்றிலும் வேறுபட்டவை
இருப்பினும்
ஏதேனும் ஒரு புள்ளியில்
நானும் நீங்களும் சந்திக்கக்கூடும்
அப்போது சம்பாசித்துக்கொள்வோம்
நமக்கான நம் வரலாறுகளை.