தனது முதலாவது திரைவெளியீடாக இரு சினிமாக்கள் நேற்றைய இரவு சுவிஸ் செங்காலன் மாநகரில் எமைச் சந்தித்தன. “கண்டம்” மற்றும் Broken Dreams என்ற இரு திரைப்படங்கள் பிராஸ் லிங்கம் என்ற புகலிடத்து இளம்தலைமுறை இயக்குநரை எமக்கு அறிமுகப்படுத்தின. A Gun and A Ring படத்தின மீதான உரையாடலின் சொற்கள் இன்னமும் கரைந்துபோகாத கால இடைவெளிக்குள் கனடாவில் வசிக்கும் இந்த இன்னொரு இளம் படைப்பாளியின் இரு படங்களும் அறிமுகமாகின. மிகை எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத நிலையில், வித்தியாசமாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடனும், ஒருவேளை தமிழகச் சினிமாவின் கள்ளக் காதலாக இருந்துவிடுமோ என்ற மென் அச்சமும் அயர்ச்சியும் குழைந்து குந்தியிருந்த எம்மை (நான், றஞ்சி, சுரேஸ், ஆனந்தி) கார் அழைத்துச் சென்று தியேட்டர் முன்னால் இறக்கிவிட்டது.
“கண்டம்” ஒரு விஞ்ஞானப் புனைவாக சினிமாவுக்கேயுரிய குறைநிறைகளுடன் திரையுண்டது. காலை நிலத்திலூன்றி பார்க்காது இறகாகி கொஞ்சம் பறப்பு நிலையில் நின்று பார்க்கக் கோருகிற புனைவுக்கு இப் படம் இரத்தம் பாய்ச்சிக் காட்டியது. பாட்டு இல்லை, சுழன்றடிக்கும் சண்டைக் காட்சியுமில்லை. காதலை வெளிப்படுத்திய ஒரு காட்சியின் அமைப்பும் அதில் தேனுகாவின் நடிப்பும் காதலிக்க பக்கத்து சீற்றில் யாரும் இருக்கிறார்களா என கள்ளமாய் திரும்பிப் பார்க்க வைத்தது.
முன்னரெல்லாம் என்ரை சினிமா ‘வில்லனாக’ இருந்த சிவாஜி ரசிகன் “தெய்வம்” படத்தை பார்த்துவிட்டு வந்து சிவாஜியின் விதவிதமான நடை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருக்காலும் முன்னுக்கு (கலரியிலை) இருந்து காசை எறிஞ்சுகொண்டிருக்கலாம் என்று கையை வீசிக் காட்டி என்னை கடுப்பேத்துவான். “கண்டம்” திரைப்படத்தில் வரும் மக்சல் (Nico Birnbaum) “உன்ரை பால்ய காலத்து நண்பனைக் கூட்டிக்கொண்டுவந்து என்ரை நடையைக் காட்டு” என்பதுபோல் ஒரு காலை இழுத்திழுத்து அவன் நடந்து வருகிற காட்சியில் இரண்டு முறை அவன் மகிழ்வதிர்ச்சியை மனதைத் திறந்து உள்ளே ஊதிவிடுகிறான்.
இப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் யாழ்ப்பாணத்திலும் மிகுதிக் காட்சிகள் யேர்மனிலும் படமாக்கப்பட்டிருக்கின்றன. திரைவெளியீடு என்றளவில் இத் திரைப்படம் குறித்து உடனடியாகவே விமர்சனம் எழுத இருக்கிற தயக்கத்துடன் இப்போதைக்கு கண்டத்திலிருந்து விலகுகிறேன்.
அடுத்து Broken Dreams என்ற திரைப்படம் 30 நிமிடம் கொண்டது. யேர்மன் மொழியில் போகிறது. ஒரு ‘விளிம்புநிலை’ பெண் ஒருத்தியின் கனவும் நிசமும் பிணைந்த கதை. பேர்லினில் படமாக்கப்பட்டுள்ளது. தேனுகாவின் அற்புதமான நடிப்பு நான் எதிர்பார்த்த எல்லையை மேவியது. மனைவிமீது தாக்குதல் தொடுக்கும் கணவனின் ஒரு கோரமான வன்முறையை காட்சியாக்கியிருக்கிற உத்தி வன்முறைகளை -குருதியாலும் சதைத் துண்டங்களாலும் சிதைத்துக் காட்டுகிற குரூர- மாதிரி தழிச் சினிமாவின் கோவணத்தை உருவி எறிந்திருக்கிறது. இதில் இயக்குநரின் பொறுப்புணர்வு தெரிகிறது. Broken Dreams புகலிட சினிமாவா இல்லையா புகலிட சினிமாவாக இருக்கத்தான் வேண்டுமா இல்லையா என்பதை திரையில் பாருங்கள். இதுகுறித்தும் இப்போதைக்கு விமர்சனம் எழுதும் யோசனை இல்லை.
பிரசன்ன விதானகேயின் With You Without You, லெனின் சிவத்தின் A Gun and A Ring படங்களையும், நேற்று “கண்டம்”, Broken Dreams படங்களையும் எமக்குக் காட்டிய இந்த வாரம் பெறுமதியானது. தமிழகத்து சினிமாவின் தத்துப் பிள்ளையாக புகலிடச் சினிமாவை பிசைந்து ஊட்டுபவர்கள் இந்தவகை ஈழத்து அல்லது புகலிட சினிமாக்களை பார்த்து புதிய தடங்களில் பயணிக்க முயற்சியுங்கள். இரசிகர்கள் இதைத்தான் விரும்புகிறார்கள் என்றெல்லாம் உங்கள் இயலாமையை ஒளித்துவைத்து ‘றீல்’ விடாதிருக்கக் கடவராக. திரைத்துறையிலிருந்து தனித்துறையாக இலங்கையின் பொப் இசைப் பாடல்கள் ஒரு யுகத்தை ஏற்படுத்திக் காட்டிய முன்னுதாரணம் எம்முன் உள்ளது. இந்திய, தமிழ்த் திரைப்படங்கள் பாடல் இசையை தத்தெடுத்து அதன் தனியான வளர்ச்சிக்கு நலமடித்த அடிச்சுவடியோடு நாமும் கேள்விகளின்றி பயணிக்கத்தான் வேண்டுமா. ‘காதல்’ என்ற ஒற்றை வார்த்தையை உருவியெடுத்தால் திரையிசைப் பாடல்கள் பல செத்தே போயிடும் அவலம்தான் உள்ளது.
இந்த வாடையை தொட்டுக்கூட முகராமல் வருகிற ஈழத்து அல்லது புகலிட திரைப் படங்கள் ஒரு தனித்துவமான போக்கை அரும்பச் செய்கின்றன. இந்த நம்பிக்கையை கனடாவின் லெனின் சிவம் மற்றும் பிராஸ் லிங்கம் போன்ற இளைய தலைமுறைகள் தக்கவைத்து தனித்துவமான பாதையில் பயணிக்கிறார்கள் என இப்போதைக்கு சொல்லிக்கொள்ள துணியலாம். தயாரிப்பாளர்கள் தாம் ‘போட்ட காசை’ எடுக்க இந்த மாற்றுவழிச் சினிமாக்களை மாதிரித் தமிழ்ச் சினிமாவின் பாதைக்குள் முதுகைப்பிடித்து தள்ளிவிடாமலிருக்க வேண்டும் என்பது முக்கியம். லெனின் சிவத்தின் A Gun and A Ring படமும் பிராஸ் லிங்கத்தின் கண்டம் மற்றும் Broken Dreams படங்களும் வீரியமான இளந்தலைமுறை இயக்குநர்களை மட்டுமல்ல தேனுகா என்ற ஓர் அற்புதமான நடிகையையும் அடையாளம் காட்டிநிற்கிறது.
ஐரோப்பாவெங்கும் தமது திரையிடலை அறிமுகம்செய்யும் இந்த குழுவினரை உற்சாகப்படுத்தி, புகலிட சினிமாவின் புதிய போக்கை ஊக்குவிப்பவர்களாக நாம் இருக்க வேண்டியது எல்லாவகை விமர்சனங்களுக்கும் முன்நிபந்தனையானது என சொல்வேன்.