-ச. விஜயலட்சுமி-
தமிழ்நாடு பெண்ணுரிமைக் கழகத் தோழர் அஜிதா
1.12.2016
தமிழ்நாடு பெண்ணுரிமைக் கழகம் என்கிற பெண்கள் அமைப்பின் மூலமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் அஜிதா.முகநூலில் பலரும் அஜிதா மறைவைக் கேள்விப்பட்டு பதிவுகளைப் பகிர்ந்திருந்தனர்.தண்டர் போல்ட் போலி மோதலை ஜோடித்திருப்பதாக மலையாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.இவரின் உடல் வைக்கப் பட்டிருந்த மருத்துவமனைக்கு முன் 150க்கும் மேற்பட்டோர் காத்திருப்பதாக புகைப்படங்களோடு செய்திகள் வெளியாகின்றன.
அஜிதா வழக்கறிஞராக வேண்டுமென கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது நான் மாநிலக்கல்லூரியின் இளங்கலை மாணவி.அவ்வப்போது மாநிலக்கல்லூரியில் தோழிகளைப் பார்க்க வருபவர் எனக்கும் அறிமுகமானார்.1995 இல் உருவாக்கப்பட்ட அமைப்பு தமிழ்நாடு பெண்ணுரிமைக் கழகம் .
அஜிதா தோழர் இன்குலாப் தலைமையில் பல கூட்டங்களை ஏற்பாடு செய்திருக்கிறார். நானும் தோழர் இன்குலாப் இருவரும் பல கூட்டங்களில் பேசி இருக்கிறோம்.
சில துண்டறிக்கைகளோடு அரசியல் பேசுவதுமாக இருக்கிற அஜிதாவை அரசியல் மற்றும் இலக்கிய கூட்டங்களில் சந்தித்திருக்கிறேன்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையை ஒட்டிய பழைய ஆசிரியர் சங்கக் கட்டிடம் ஒன்றில் பெண்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.அக்கூட்டத்தில் பெண்களின் அடிப்படைத்தேவைகள் பொருளாதாரம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதெல்லாம் பேசப்பட்டது.
பெண் உரிமை இதழுக்கு ஆசிரியரான இவர். இதழுக்கு மெய்ப்புத்திருத்தும் படி கேட்டிருக்கிறார்.அப்போது புனைப் பெயரில் எழுதிக் கொண்டிருந்தேன். பொன்னி என்ற பெயரில் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி இருக்கிறேன்.ஆந்திராவில் பொட்டுக்கட்டும் முறை இருப்பதை வெளிக்கொணர்ந்த எனது கட்டுரை பரவலான பாராட்டைப் பெற்றது.அஜிதா மிக மென்மையானவர்.உறுதியானவர்.அவரது கண்ணில் பிரச்சனை இருப்பதாக அதிகம் வாசிக்க முடியவில்லை என்றபோதும் தொடர்ந்து இதழ் பணியை செய்திருக்கிறார். இராமச்சந்திரா மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கேள்விபட்டிருக்கிறேன்.உடல்நிலை மோசமான நிலையிலும் தன் உடல்நிலையைக் கருதாது தொடர்ந்து செயல்பட்டவர்.
கே.கே.நகர் முகவரியில் இருந்து பெண் உரிமை இதழ் வெளிவந்து கொண்டிருந்தது.பெண்ணுரிமை இதழ் மிக சொற்பமான அளவில் உருட்டச்சில் வெளிவந்தது.பின்னர் 2000 பிரதிகள் வரை விடாமுயற்சியோடு உயர்த்தியவர்.உண்டி குலுக்கி மக்கள் கொடுத்த சில்லறைக்காசில் வெளிவந்த இதழ் இது.
பெண் உரிமை இதழ்ப் பணியைத் தாண்டி அவர் சில போராட்டங்களை ஒருங்கிணைத்து இருக்கிறார்.ஒவ்வொரு பெண் உரிமை இதழிலும் த.பெ.கவின் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.என்னிடம் அந்த இதழ்கள் இல்லை என்பது வருத்தமளிக்கிறது.இருந்திருந்தால் அவரின் செயல்பாடுகளை இங்கு விரிவாக எழுத உதவியிருக்கும்.
மதுரையில் தீபா-ரூபா திரையரங்கில் ஆபாசப்படக் காட்சிகள் காண்பிக்கிறார்கள் என்பதைக் கண்டித்த த.பெ.க நிறுத்தாமல் இச்செயல் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் தீபா-ரூபா திரையரங்கின் உள் நுழைந்து படச்சுருளைக் கைப்பற்றி சாலையில் தீயிட்டு எரித்த புகைப்படங்கள் பெண் உரிமை இதழில் பார்த்திருக்கிறேன்.சென்னையில் அண்ணாசாலையில் பிளாட்பாரத்தில் இருக்கும் பல கடைகளில் மஞ்சள் பத்திரிகை மறைத்து வைத்து விற்கப்பட்டு வந்தது. இப்பத்திரிகைகளை விற்கவேண்டாம் என்று துண்டு சீட்டு வழங்கி கண்டித்தபோதும் விற்பனை அமோகமாக இருந்த்தால் மஞ்சள் பத்திரிகை எரித்தல் என்கிற போராட்டத்தை செய்தது. அதுவும் பெண்ணுரிமை இதழில் படங்களோடு சிறப்புக் கட்டுரையாக வந்திருந்தது.
கோடம்பாக்கத்திலும் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் பெண்கள் உரிமையை மையப்படுத்தி பேரணிகளை நடத்தி இருக்கிறார்.எல்லோரோடும் மிகஎளிமையாக பழகும் குணம் இவரின் சிறப்பு.வாஞ்சையோடான இவரின் பேச்சு பாதிக்கப் பட்ட பெண்களுக்கு மருந்தாக இருக்கும் என நினைத்துக் கொள்வேன்.என் குடும்பத்தின் முதல் தலைமுறை மாணவியாக நான் படித்துக் கொண்டிருந்ததால் குழந்தை நிவேதிதாவை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு குடும்பம்சார்ந்த வேலைகள்,என் படிப்பு செலவுக்காக குடும்பத்தை எதிர்பார்க்க்க் கூடாது என வானொலி தொலைக்காட்சி கவியரங்கங்களில் பங்கேற்றல் என என் தினசரிகள் இருந்ததால் பெண்ணுரிமை இதழின் மெய்புத்திருத்தும் பணியும் சில கூட்டங்களில் பேசுவதும் கூட என்னளவில் பெரும் போராட்டமாக இருந்தது.
நிற்க ( இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறேன் .தோழர் இன்குலாப் மறைவுச் செய்தி கிடைக்கிறது.கண்ணீர் வழிவதைத் தடுக்க முடியவில்லை)
2.12.2016
கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மக்கள் கோரிக்கைகள் அடங்கிய துண்டுச்சீட்டை சட்டமன்றத்தில் பார்வையாளர் பகுதியில் இருந்து வீசி கோஷம்எழுப்பிய பெண்கள் ஜாமீன் பெற சட்டரீதியாக நடவடிக்கை எடுத்தார்.துண்டறிக்கைகள் தருவது சுவரொட்டிகள் ஒட்டுவது என அனைத்துப் பணிகளையும் செய்தார்.
நான்கு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கை சிறுமியின் பெற்றோருடன் துணைநின்று நடத்தினார்.தளி கல்பனா சுமதி வழக்கு,தளி,வாச்சாத்தி வழக்குகளில் ஆர்வம் செலுத்தினார்.
பிரேமானந்தா வழக்கு பதிவு பொது மக்கள் கவனம் பெறுவது ஆகியவற்றிலும் அஜிதா தன்னை பல பெண் செயற்பாட்டாளர்களோடு இணைத்து செயல் பட்டிருக்கிறார்.பிரேமானந்தா கைது செய்யப் பட்ட பின்பும் சுகபோகமாக இருப்பதை வெளிக்கொண்டுவந்து பல பெண்களை கொன்று சீரழித்து புதைத்த சுடுகாடாக இவரது ஆசிரம வளாகம் இருப்பதை துண்டு சீட்டுகள் போட்டு பேருந்து இரயில்களில் விநியோகித்தார்.நீதிமன்றத்தில் பிரேமானந்தாவுக்கு செருப்புமாலை அணிவித்து அழுகிய முட்டை வீசியிருக்கிறார்.
அஜிதாவின் தந்தை பரந்தாமன் இரயில்வேயில் குரூப் 3 பணியிலிருந்து உயர்ந்து இன்ஜினியர் ஆனவர்.இரயில்வே தொழிற்சங்க போராட்டங்களில் தீவிரமாக செயல்பட்டவர்1974 இரயிவே ஸ்ட்ரைக்கில் தீவிரமாக செயல்பட்டிருக்கிறார்.
.இரயில் விபத்து நடந்ததற்கான காரணத்தை ஐந்து நிமிடங்களில் கண்டறியக்கூடிய திறமை பெற்றவர். வியட்நாம் இரயிவே ஊழியர்களுக்காக பயிற்சி தந்தவர்.இவரது நண்பர் தோழர் ரவீந்திரன்.இவர்கள் இருவரும் தான் அஜிதா களப்பணியில் இறங்குவதற்குக் காரணம் என கேள்விப்பட்டிருக்கிறேன்.அப்போது மாவோயிஸ்ட் இயக்கம் இல்லை.மக்கள் யுத்தம் என்ற பெயரில் இருந்தது.அஜிதாவின் தந்தை மக்கள் யுத்த இயக்கத்தில் இருந்திருக்கிறார் என அறிய வருகிறது.
1998 இல் அஜிதா மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்து முழுநேர ஊழியராக இருந்திருக்கிறார்.கவிதா,சூர்யா எனும் மாநில நிர்வாகிகளுக்கு அடுத்து மூன்றாவது பொதுச்செயலாளர் ஆனவர்.தன்னை குடும்பத்திலிருந்து வர்க்கப்பின்னணியை நீக்கிக் கொண்டவர் . .திருமணவாழ்வில் முதலில் தேர்ந்தெடுத்து நிச்சயம் நடத்தப்பட இருந்தவரின் அரசியல் நிலைப்பாடு மாறியதால் நிச்சயத்தை இரத்து செய்திருக்கிறார்.மீண்டும் வேறொரு தோழரைத் திருமணம் செய்திருக்கிறார்.இணையும் இவர் ஏற்றுக்கொண்ட அரசியலில் இருந்து வெளிவந்தபோது அவரை விவாகரத்து செய்திருக்கிறார்.தனிப்பட்ட வாழ்க்கையைவிட தான் மேற்கொண்ட அரசியல் வாழ்க்கையில் தன்னைக் கரைத்துக் கொண்டவர்.பலநாட்கள் போதிய உணவும் உறக்கமும் குடிநீரும் கூட இல்லாததொரு மாவோயிஸ்ட் வாழ்க்கையை நடுத்தர வர்கத்தை சேர்ந்த பெண்கள் ஏற்றுக் கொள்வது என்பது மிக அரிதானது.
மாவோயிஸ்ட்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் உரிமைகளுக்கும் குரல்கொடுப்பவர்கள் இவர்களின் கொரிக்கைகளை சமூக பிரச்சனைகளாக்க் கருதி அரசு தீர்க்க முயலவேண்டும்.அரசியல் நடவடிக்கையாக பார்க்க்க் கூடாது என பலர் கருத்து கூறுவதையும் அரசு பரீசீலிக்க வேண்டும் .
-ச.விசயலட்சுமி
குறிப்பு :
- கட்டுரைக்கான தகவல்களைத் தந்த தோழர்களுக்கு நன்றி
.
2.வடசென்னை த.மு.எ.க.ச. 27.11.2016 நடத்திய ஸ்வாதிமுகிலின் கவிதைத் தொகுப்பு அறிமுகக் கூட்டத்தில் தோழர் பிடல் காஸ்ட்ராவுக்கும் தோழர் அஜிதாவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஜிதா மரணம் கேரளாவில் நடந்துள்ள போது தமிழகத்தில் மரணம் அடைந்த முதல் பெண் போராளி என்பது சரியா ??