– வினோதினி –
யாரும் அற்ற பொழுதினில்
மௌனங்கள் பேசும்
பெருவெளியில்
மரணித்துப் போகின்றன
வார்த்தைகள்
வார்த்தைகளின் தொலைதலில்
வாழக்கற்றுக் கொள்கின்றது மௌனம்
மௌனம் ஒரு மொழி
மௌனம் ஒரு வார்த்தை
மௌனம் ஒரு குறிப்பு
மௌனங்களின் மொழி
வலிமையானது
மௌனங்களின் வெளி
எல்லைகள் அற்றது
சிலவேளைகளில் மௌனம்
அதீத அன்பின் மொழி
இன்னும் சிலவேளைகளில் மௌனம்
அதீத வெறுப்பின் மொழி
சிலரிற்கு மௌனம் தோழன்
சிலரிற்கு மௌனம் எதிரி
சிலரிற்கு மௌனம் வழிகாட்டி
சிலரிற்கு மௌனம் வாழ்க்கைத்துணை
மௌனங்களில் நான்
வாழக்கற்றுக் கொள்கின்றேன்
வாழ்க்கையை நான்
மௌனங்களால் அலங்கரிக்கின்றேன்
மௌனங்களின் மொழிகள்
என்னோடு பேசிக்கொள்கின்றன
மௌனங்களின் மொழிகள்
என்னோடு சண்டையிட்டுக் கொள்கின்றன
இப்பொழுதெல்லாம் மௌனங்கள்
வாழத்தலைப்படுகின்றன
நான் பயப்படத் தொடங்கியிருக்கின்றேன்
ஏனெனில் இப்பொழுது
மௌனங்களின் மொழிகள்
எனக்குப் புரிகின்றன…