ஆனால்,படிக்கப்போன இடத்தில்,படிப்பைக் காட்டிலும் கிண்டல்களும் கேலிகளும் அவமானங்களும் மட்டுமே அவளைச் சூழ்ந்திருந்தன.”நீ தீண்டத்தகாதவள்” என்று சொல்லிச் சொல்லியே அவளை ஆசிரியர்களும் உடன்படித்தவர்களும் குத்திக் கிழித்தனர். கொஞ்சம் நட்பாகப் பழகிய தோழிகள் சிலர்கூட,அவளைத் தொட்டு பேச மறுத்தனர். தோழிகளின் வீட்டுக்குச் செல்ல அவளுக்கு ஆசை. ஆனால்,அந்த ஆசை அவளுக்கு கடைசிவரை நிறைவேறவே இல்லை. ஆனாலும் அத்தனையையும் சகித்துக்கொண்டு அந்தப் பெண் படிக்க ஆரம்பித்தாள்.
ஆனால்,ஒரு கட்டத்தில் அந்த அப்பாவிப் பெண்ணின் படிப்பு நிறுத்தப்பட்டு அவளுக்கு பால்ய விவாஹம் (குழந்தைத் திருமணம்) நடந்தது. அதன்பிறகு வாழ்க்கையின் அத்தனை துயரங்களும் அவளைத் துரத்தித் துரத்தி அடிக்க ஆரம்பித்தன. நிலைகுலைந்து போனாள். ஆனாலும் நமக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று அவள் அப்படியே சும்மா இருந்து விடவில்லை. போராடினாள். தான் புதைந்திருந்த துன்பங்களில் இருந்து பீனிக்ஸ் பறவை போல ஒரு கட்டத்தில் உயிர்த்தெழுந்தாள். சாப்பாட்டுக்கே வழியின்றித் தவித்த அந்தப் பெண் இன்றைக்கு மும்பையின் குறிப்பிடத்தகுந்த பிஸினஸ் ஆளுமை.
அவர்தான் கல்பனா சரோஜ்!
சுமார் முன்னூற்றி ஐம்பது கோடி ரூபாய் மதிப்பிலான “காமனி டியூப்ஸ் லிமிடட்” என்கிற அலுமினியம் மற்றும் காப்பர் பைப்புகளைத் தயாரிக்கும் நிறுவனத்தின் தலைவர் இவர்.
வட இந்திய மீடியாக்கள் கல்பனாவை டார்க் ஹார்ஸ்(dark horse) என்றே அழைக்கின்றன. வெளிநாட்டு ஊடகங்களோ இவரை “the real slumdog millionare” என்று கொண்டாடுகின்றன. இந்திய அரசின் மரியாதைக்குரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, கடந்த ஆண்டு இவரை அலங்கரித்திருக்கிறது.“வெற்றிக்கு உயர்ந்த ஜாதி,தாழ்ந்த ஜாதி என்பதெல்லாம் தெரியாது.மனிதர்கள் தான் அதைக்கட்டிக்கொண்டு அழுகிறோம் என்பது, நான் ஜெயித்த பிறகே எனக்குப் புரிந்தது” என்கிறார் கல்பனா.
“இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால்,என்னுடைய அப்பா ஓரளவு படித்தவர்.அவர் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக இருந்தார். ஆனாலும் என்னைப் படிக்க வைப்பதில் அவர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.குடும்பத்தின் மூத்த மகள் நான் என்பதால்,குடும்ப வறுமையைக் காரணம் காட்டி,என்னுடைய அப்பாவே எனக்கு சிறு வயதில் செய்து வைத்தார். அப்போது என்னுடைய வயது பன்னிரண்டு. கல்யாணத்தின் அர்த்தம் கூட சரியாகப் புரியாத வயது அது. என்னுடைய கணவர் மும்பையில் வாழ்ந்ததால் மும்பைக்குப் பயணமானேன். அதுவரை எந்த ஒரு பெரிய நகரத்தையும் நான் பார்த்ததில்லை.அதனால் சிறுமிக்கே உரிய ஒரு மகிழ்ச்சியான மனநிலையோடு மும்பையைப் பார்ப்பதற்காகவே வந்தேன்.
ஆனால் நடந்ததோ வேறு…..கணவர் மற்றும் அவரது குடும்பத்தாரின் சித்ரவதைகளால் மும்பை எனக்கு நரகமாகத் மாறியது. புகுந்த வீட்டினரால் தினம் தினம் அடி,உதை…….என் கணவர்,அவரது சகோதரர்,அவரது மனைவி என்று யாரும் என்னை ஒரு மனிதப் பிறவியாகப் கூடப் பார்க்கவில்லை. என் தலைமுடியை கொத்தாகப் பிடித்து சுவரில் மோதச் செய்வார்கள். காரணமே இல்லாமல்,அடித்து மிதிப்பார்கள். கிழிந்த ஆடைகளோடு, உடல் முழுக்கக் காயங்களோடு தான் என்னுடைய ஒவ்வொரு நாட்களும் அப்போது நகர்ந்தன” என்று தன்னுடைய துயர வாழ்க்கையை அசை போடுகிறார் கல்பனா.
“இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருந்திருந்தால்,நான் செத்தே போயிருப்பேன்.நல்ல வேளை…எதேச்சையாய் என்னைப் பார்க்க வந்த அப்பா என்னுடைய நிலையைப் பார்த்து ஆடிப்போய் விட்டார். வாழ்ந்தவரை போதும் என்று என்னை எங்கள் வீட்டுக்கே அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். சரி இனிமேலாவது நம்முடைய வாழ்க்கை விடிந்துவிடும் என்று நம்பினேன்.
ஆனால் பாழாய்ப் போன சாதி என்னை அப்போதும் வாழ விடவில்லை. எனது கிராமத்தில் இருந்த உயர்சாதி வகுப்பினர் என்னை வாழாவெட்டி என்று கிண்டல் செய்து, காயப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். கூனிக்குறுகிப் போய்க் கிடந்தேன்.
சரி…..மனதை வேறு பக்கம் திசை திருப்பலாம் என்று முடிவு செய்து தையல் கற்றுக் கொண்டேன்.தையல் மிஷின் ஒன்றை வாங்கி வீட்டிலிருந்தபடியே தைத்துக் கொடுக்கவும் ஆரம்பித்தேன்.சொற்ப வருமானம் கிடைத்தது. என்னை மட்டுமல்லாது என்னுடன் பிறந்தவர்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் அப்பாவுக்கு. அதனால் வீட்டில் பணத் தேவை அதிகமானது.அத்தனை விஷயங்களும் என்னை ஒரு சேர அழுத்த ஒரு கட்டத்தில் தற்கொலைக்கும் முயன்றேன்” என்கிறார்.
“நாங்கள் விவசாயக் குடும்பம் என்பதால்,வீடுகளில் சர்வசாதாரணமாக பூச்சி மருந்துகள் இருக்கும். அப்படி, விவசாயத்துக்காக வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றேன். நுரை தள்ளக் கிடந்தேன். ஆனால் எப்படியோ வீட்டில் உள்ளவர்களால் நான் கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனையில் உயிர் பிழைத்தேன்.
ஆனால் இந்த சம்பவம் தான் என் வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைத்தது. சாவதற்கு இவ்வளவு துணிச்சல் நமக்கு இருக்கும்போது,அதே துணிச்சலை ஏன் வாழ்வதற்குப் பயன்படுத்தக்கூடாது என்று தோன்றியது. அதனால்,வாழ முடிவெடுத்தேன். தொலைத்த இடத்தில்தானே தேடவேண்டும். அதனால் என்னுடைய வாழ்க்கையைத் தொலைத்த மும்பைக்கே மறுபடியும் பயணமானேன்” என்று சொல்லும் கல்பனாவுக்கு இந்த முறை மும்பையில் அவரது உறவினர் குடும்பம் ஒன்று அடைக்கலம் கொடுத்திருக்கிறது.
“அதன் பிறகு எனது வேலை தேடும் படலம் ஆரம்பமானது.எனக்கு தையல் வேலை தெரியும் என்பதால், ஒரு சாக்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை கிடைத்தது.ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய் கூலி. சாதி பற்றிய கவலைகள் எதுவும் இல்லாமல்,என் உழைப்பை மட்டுமே நம்பி அந்த வேலையில் இறங்கினேன். கவனமாக உழைத்தேன்.என்னுடைய பொறுப்பான வேலையைப் பார்த்த எனது முதலாளி, என்னை மாதச் சம்பளத்திற்கு பணியமர்த்தினார். வாழ்க்கை சற்று சீரானது” என்று சொல்லும் இவர் அதன் பிறகு இரண்டாவது திருமணம் செய்து தனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழத்தொடங்கியிருக்கிறார்.
”இந்த முறை நல்ல வாழ்க்கை எனக்குக் கிடைத்தது.இரண்டு குழந்தைகள் பிறந்தனர். மகிழ்ச்சி என் வாசலில் லேசாய் எட்டிப் பார்த்தது. ஆனால் சற்றும் எதிர்பாராத வண்ணம் என் கணவர் இறந்து விட, மறுபடியும் பூஜ்ஜியத்துக்குத் தள்ளப்பட்டேன். பிரியமானவரை இழந்த துக்கம் ஒரு புறம் என்றால், மறுபுறம் குழந்தைகளை காப்பற்ற போதுமான பணம் என்னிடம் இல்லை. ஆனால் இந்தமுறை நான் சோர்ந்து போகவில்லை.அதுவரை நான் பட்ட கஷ்டங்கள் என் வாழ்க்கையை பக்குவப்படுத்தி இருந்தன. அதனால்,மிக விரைவாக அந்த துக்கத்திலிருந்து மீண்டேன்.
என் கணவர் அதுவரை நடத்தி வந்த இரும்பு அலமாரிகள் செய்யும் பிசினஸை நானே துணிந்து எடுத்து நடத்த ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்தது.ஆனால், போகப் போக வியாபாரத்தின் நீக்குப் போக்கு கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது. பிஸினஸ் என் வசப்பட ஆரம்பித்தது” என்கிற கல்பனா இந்த வியாபாரத்தின் மூலம் கிடைத்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து மும்பையிலேயே நிலம் ஒன்றை வாங்கி, அதில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஒன்றைக் கட்டி அதை மறுபடியும் மிக நல்ல விலைக்கு விற்றிருக்கிறார்.
அதன் மூலம் இவருக்கு நல்ல லாபமும் கிடைத்திருக்கிறது. மறுபடியும் இந்த லாபத்தை முதலீடாகப் போட்டு மற்றுமொரு பிஸினஸ் ஆரம்பிப்பது,பிறகு அதில் லாபம் பார்ப்பது என்று சங்கிலித் தொடர்போல வேலைகளை செய்து,கல்பனா பட்டையைக் கிளப்ப ஆரம்பித்திருக்கிறார்.
இருப்பவன் தான் இழப்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்கிறபோது எதற்காகக் கவலைப்படவேண்டும் என்று நினைத்த கல்பனா, அப்போது கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த மும்பையின் பிரபலமான நிறுவனமான “காமனி டியூப்ஸ் லிமிடெட்” கம்பெனியை தைரியமாக விலைக்கு வாங்கியிருக்கிறார்.
“இந்தப் பொண்ணுக்கு இதெல்லாம் தேவையா?” என்று முணுமுணுக்காதவர்கள் இல்லை. ஆனால்,மறுபடியும் அசுரத்தனமாக உழைத்து, ’தேறாது’ என்று கணிக்கப்பட்ட அந்த நிறுவனத்தை சரிவிலிருந்தும் மீட்டு சாதனை புரிந்திருக்கிறார். இன்று, மும்பையின் முக்கியமான தொழில் நிறுவனங்களில் ஒன்றாக “காமனி டியூப்ஸ் லிமிடெட்” ஜொலிக்கிறது.
ஆரம்பத்தில் வெறும் இரண்டு ரூபாயை சம்பளமாகப் பெற்ற கல்பனா, இன்றைக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இவரின் சொத்து மதிப்போ பல நூறு கோடிகளைத் தாண்டியிருக்கிறது.
கிடைத்த பணத்தைக் கொண்டு, தான் மட்டும் சுகவாசியாக வாழாமல் தன் குடும்பத்தைக் கரையேற்றியிருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் எண்ணற்ற ஏழை,மற்றும் பழங்குடி மக்களின் கல்வி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகவும் பணத்தை செலவிடுகிறார்.
சொல்ல மறந்துவிட்டேனே…..எந்த கிராமத்தின் உயர் சாதி மக்கள் கல்பனாவை தீண்டத்தகாதவள் என்று ஒதுக்கினார்களோ,அவர்கள் இன்று கல்பனாவை தங்கள் கிராமத்தின் தேவதையாகப் பார்க்கிறார்கள். ஒரு விளிம்பு நிலைப் பெண்ணின் இந்த விஸ்வரூபம் துயரங்களிலிருந்து வெளி வரத் தெரியாமல் தவிக்கும் பெண்களுக்கு நிச்சயம் நல்லதொரு வாழ்க்கைப் பாடமாக இருக்கும்!!!
(நன்றி