– பேரா. சோ. மோகனா-
நன்றி -http://maattru.com/குழந்தை-உலகை-சந்தித்த-மு
பேறு காலப் பேறு
குழந்தைப் பிறப்பு என்பது இந்த பிரபஞ்சத்தில் அற்புதமான, திரை நிகழ்வு போன்ற ஆச்சரியமான எண்ணி எண்ணி மாளாத வியப்பு கொண்ட விஷயம்..ஒரு பெண் தன் உயிரை /தன் குழந்தையை ஈனும்போது, அவள் கிட்டத்தட்ட 22 எலும்புகளை உடைக்கும்போது ஏற்படும் ஒட்டுமொத்த வலியை உணருகிறாள் என்று அறிவியல் சொல்கிறது.அத்தனை வலியையும், மகவைப் பார்த்த சந்தோஷம் விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகிறது
பூவுலகின் தரிசனம்
அம்மாவின் இருட்டான கருவறையைவிட்டு வெளியேறி இந்த புவியைத் தரிசித்த புத்தம் புதிய மலரின் விரிதலில் உருவாகும் மாற்றங்கள்..அப்பப்பா சொல்லி மாளாது. அத்தனை அற்புதங்கள் அதன் உடலில். கற்பனைக் கெட்டாத அதிசயங்கள் நிகழும் கணங்கள் அவை. அனைத்தும் வாழ்வதற்கான போராட்டமும், அதன் புதிய சூழலுக்கான தற்காப்பு நிகழ்வுகளும், தகவமைப்பும் தான். அனைத்தும் இயற்கையின் கொடைகள்தான்.பரிணாமத்தின் சங்கதி இது.
குழந்தையின் முதல் குரல்
புதிய உலகை சந்தித்த உங்களின் அற்புத உயிர் கொடுக்கும் முதல் குரல்,ஒலி, அழுகை, கத்தல் எது வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். அந்த “மா” என்ற பீரிட்டு எழும் அழுகை ஒலிதான் அந்த சத்தம்தான் குழந்தையை இந்த உலகில் தக்க வைக்கிறது. குழந்தை பிறப்பை ஒட்டி நாம் சந்தோஷப்படுவதும்,கொண்டாடுவதும் அது பிறந்ததால் அ ல்ல,பிறந்த குழந்தை வாய்விட்டு வீரிட்டு அழுவதால்தான்.
அதுவரை நீர்நிறைந்த உலகில், நீர்ச்சூழலில் அம்மாவிடம் வசதியாய் வாழ்ந்த கரு, புதிதாக காற்று நிறைந்த உலகை தரிசனம் செய்கிறது. முதல் காற்றை சுவாசிக்கும் அனுபவம் மழலைக்கு நிறைய சங்கடங்களை உருவாக்குகிறது.அதன் விளைவாக பல உடலியல் மாற்றங்கள் நிகழ்கிறது. கருவறையில் ஓடித்திரிந்த இந்த சின்ன குழந்தைதான் இப்பூமியில் கீழே விழுந்தவுடன் இதனை மாற்றங்களை தன்னுள் நடத்துகிறது. இதோ குழந்தையே பேசுகிறது. கேளுங்கள்
தன்னந்தனியாய் தாக்குப் பிடிக்க
நான் அம்மா கருவறையை விட்டு அவருடைய முயற்சியினாலும், என் முயற்சியினாலும், இந்த வெளிச்சம் நிறைந்த உலகைப் பார்க்க முதன் முதலில் வெளியே வருகிறேன்.என்னை உருவாக்கி, நான் வயித்துக்குள்ளே இருந்து படுத்திய பாடுகளையெல்லாம், வெளியே சொல்லாமல், என்னைத் தூக்கி வெளியேயும் போடாமல், மனசுக்குள் வைத்து, எனது படுத்தல்களை அணு அணுவாய் 39 வாரங்கள் வரை சுமந்து மகிழ்ந்த என் அன்னைதானே எனக்கு எல்லாமும். நான் வெளியே வந்தால் அவர் என்னைப் பார்த்துக் கொள்வார். இருந்தாலும், என்னைப் பார்த்துக் கொள்ள நானும் கொஞ்சம் முயற்சி எடுத்துக் கொண்டு கற்றுக் கொள்ள வேண்டுமல்லவா? அதன் முதல் சுற்றுதான்.இது. தனியாய் தன் காலில் நிற்பதற்கான முதல் முயற்சிதான் என் முதல் சுவாசம்.
அம்மா உடம்பிலிருந்து வெளியே வந்ததும், புவியின் காற்று என் மூக்குக்குள் நுழைந்து, பின்னர் என் நுரையீரலுக்குள் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்கிறது. என்னால் அந்த வேதனையைத் தாங்க முடியவில்லை. நான் இந்த உலகில் உயிர்வாழ இது அத்தியாவசியம்
எனது முதன் முதல் முயற்சி
அம்மாவின் கருவறையில் இருந்த வரை வரை என நுரையீரலுக்கு வேலையே இல்லை.இதுவரை என் நுரையீரல் புதிதாய் கடையில் வாங்கிய பலூன் போல சப்பிக் கிடந்தது.அம்மாவின் இருட்டு கருவறையில் நான் இருந்த போது, அவங்க சுத்தம் செஞ்ச ரத்தத்தை நேரடியா எனக்கு நஞ்சுக் கொடி வழியா கொடுத்துடுவாங்க. என் சுத்த ரத்தம் நேரடியா இருதயத்துக்குப் போய்விட்டு, பின் எனது உடம்பு முழுவதும் வரும். எங்கிட்ட சேர்ந்த அசுத்த ரத்தம், சுத்தப் படுத்த அம்மாவோட நஞ்சுக்கொடி வழிய அம்மா கிட்டே போகும். எனக்கு ஜம்முனு தூங்கறத தவிர வேற வேலையே இல்லை. இப்ப நான் வெளியே வந்ததும் நானே சுவாசிக்க வேண்டி இருக்கிறது. அதற்கான முயற்சிகள் தான் இவை.
முதல் வலி
நுரையீரலுக்குள் நுழைந்த காற்று என்னை மூச்சு முட்டச் செய்கிறது. நுரையீரலின் சுவரை முட்டிய காற்று என்னைத் திணற வைக்கிறது. அதனால் தான் நான் “ம்..மா.மா ” என வாய்விட்டு அலறுகிறேன்.. அந்த சத்தம்தான் என்னை இந்த உலகில் வாழ வைக்கும் முதல் குரல், முதல் உதவி, என் உயிர்ச் சக்கரத்தின் அச்சாணி அதுதான். இது வரை சுத்த ரத்தம் அம்மா மூலம். இப்ப நானே ரத்தத்தை சுத்தம் செய்ய வேண்டும். அதற்கான பிரயத்தனம்தான் இந்த முயற்சிகள்
உயிர் வாழ்தலின் முதல் பத்து நொடிகள்
பிறக்கும்போது என் நுரையீரலுக்குள் பனிக்குட நீர் இருக்கும். அம்மாவிடம் இருக்கும்போது என் நுரையீரலுக்கு வேலை இல்லை.இப்ப நான் அம்மா கிட்ட இருந்து வெளிவந்து, இந்த உலகத்தைப் பார்த்த 10 நொடிக்குள் என் நுரையீரலுக்குள் காற்று நுழைந்து நுரையீரல் செயல்பட்டாக வேண்டும். இப்ப என் நுரையீரலுக்குள் காற்று நுழைந்ததும், நுரையீரல் சுவத்துக்குள் போய் காற்று முட்டும். அந்த இடம் பெரிதாகும். அதற்குத் தகுந்தாற்போல் எனது மைய நரம்பு மண்டலம், உடனடியாக எதிர்வினை செய்யும். ஏனெனில் எனது உடல் வேறுபட்ட வெப்ப நிலையை சந்திப்பதால், நான் தடுமாறி விடுவேன் என வெளிச் சூழலுக்கும், வெப்பத்துக்கும் தகுந்த மாதிரி செயல்படும்”.
முதல் சுவாச முத்தம்
நான் அம்மாவிடம் இருந்து வெளிவந்த உடன், அப்பத்தான் நான் முதல் சுவாசத்தை முத்தமிடுகிறேன்.எனக்கும் அம்மாவுக்கும் உள்ள தொப்புள்கொடி உறவான, நஞ்சுக்கொடியை நீங்கள் வெட்டுகிறீர்கள். அம்மாவின் துணையின்றி நான் தனித்து இருக்கிறேன். எனது நுரையீரல் மற்றும் இரத்த ஓட்ட மண்டலத்தில், என்னைக் கேட்காமலேயே, பரிணாம விதிப்படி, என்னுள் ஏராள ஏராளமான மாற்றங்கள். உங்களால் கற்பனை கூட செய்ய முடியாத படி, குறைந்த மணித்துளிகளில் என்னுள் அளப்பரிய மாற்றங்கள்.இதெல்லாம் யார் நிகழத்துவது? கட்டளையிடுவது யார்? வேறு யார்..என்னுள் உறைந்து கிடந்தது, உள்ளே இருந்து இயக்குனராய் பணிபுரியும் என் பரம்பரையின் மரபணுக்கள்தான்.
முதல் பரிமாற்றம்
எனது நுரையீரல் காற்று நுழைவதால் விரிவடைகிறது. அதன் சுவர்களில், நுனியில் இருக்கும் காற்று சிற்றறைகள் காற்றால் நிரப்பப் படுகின்றன. இதனால் அங்குள்ள காற்றின் நிமித்தம் இரத்தம் நுரையீரலை நோக்கி ஓடிவருகிறது. அங்கே நுரையீரல் சுவர்களிலுள்ள சிற்றறைகளில் காற்றின் பரிமாற்றம் நடைபெறுகிறது. நுரையீரல் மேல் ஓடிவரும் தந்துகி குழாய்களில் காற்றின் பரிமாற்றம் அதாவது, கரியுமில வாயு,வெளிஏற்றப்பட்டு அதிலிருந்து ஆக்சிஜன் உள்ளிழுக்கபப்ட்டு இரத்தத்திற்குள் உள்வாங்கப்படுகிறது. ஒரு முறை மூச்சு விடறதே. பெரும்பாடா இருக்கு.ஆனா இது நடக்காட்டி நான் உயிரோடு இருக்க முடியாது.எனவே இது என் வாழ்வின் முதல் விஷயமும், அத்தியாவசியமான் உயிர் வாழ்தல் விஷயமுமாகும்.
முதல் நூறும்…தொடரும் முப்பதும்..
என்னோட மூச்சு சுவாசம் துவக்கத்தில், நிமிடத்திற்கு 15-100 என்றுதான் இருக்கும். பின்னரே ஒரு சில நிமிடங்களுக்குப் பிறகு அது சரி செய்யப்பட்டு, நிமிடத்திற்கு 30-50 என ஒழுங்காக சீராக இருக்கும். இனி என் நுரையீரல் பணி சீராக்கப்பட்டு இயங்கும். எனவே, இதயத்துக்கு கீழே இருக்கும் டக்டஸ் வெனோசஸ் ( னுரஉவரள ஏநnடிளரள ) என்ற ரத்தக் குழாய் அடைபட்டு விடும். கல்லீரல் தமனி தனியாகச் செயல்படத் துவங்கும்.
உயிரின் திறவு கோல் ..இதய அறைகள்
நான் அம்மாவோட கருவறைக்குள் இருந்தபோது, இதயத்தின் மேல் அறைகளின் சுவரில் இருந்த சிறப்பான வால்வும் , வேறு சில இரத்த குழாய்களும் பொறந்ததும் காணாம போயிடுது. ஏன்னா இனி அவர்களுக்கு வேலை இல்லை. அதுவும் நான் பூமியிலயே வந்து விழுந்த ஓரிரண்டு மணித்துளிகளில் புதிய மாற்றங்கள் இதயத்தில் நடக்குது. நீங்க தொப்புள்கொடியில ஒரு கிளிப் போட்டதும், அம்மா கிட்டே இருந்து வந்த இரத்தம் நின்னு போகுது. எனவே நுரையீரலுக்கு வரும் இரத்தத்திற்கு என சிறப்பு இரத்த குழாய்கள் தேவையாய் இருக்கு.
நிறம் மாறும் நான்
நான் பொறந்ததும், தொப்புள் கோடி வெட்டியதும்/கட்டியதும், அந்த நொடியிலேயே, இதயத்தின் மேலறையில் உள்ள, போராமன் ஓவல் என்ற துளை அடைபடுகிறது. அடுத்த நொடியிலேயே, மேலறையில் சுத்த ரத்தமும், அசுத்த ரத்தமும் இயதத்தில் தனித்தனியாக வந்து போக வழிவகை செய்யப்படுகிறது. வலது வென்டிரிக்கிலிலிருந்து ரத்தம் சுத்தம் செய்யப்படுவதற்காக/காற்று பரிவர்த்தனைக்காக நுரையீரலுக்குச் செல்லுகிறது. மீதி ரத்தம், இடது வென்டிரிக்கிலிலிருந்து பெருந்தமனிக்கு செல்கிறது. டக்டஸ் ஆர்டிரியோசஸ் என்ற குழாயின் இணைப்பு காணாம போயிடும். நுரையீரலின் தந்துகிகள் உடனே உருவாயிடும்; செயல்படவும் செய்யும். என் உடல் வயலட் வண்ணத்திலிருந்து ரோஸ் நிறத்துக்கு மாறிவிடும்.
நான் இந்த பூமியப்பார்த்த 3-4 நிமிடங்களில் இத்தனை சிக்கலான விஷயங்களும் நடந்து முடிஞ்சுடும். அப்பத்தான் நான் உயிரோடு இருக்க முடியும். இன்னும் கூட கொஞ்சம் சின்ன சின்ன மாற்றங்கள் என்னுள்ளே நடக்கின்றன. நான் அம்மாவின் கருவறைக்குள் இருந்த போது என்னுடைய உடல் வெப்பம், பெரியவர்களைப் போல இரு மடங்கு இருக்கும். ஏன்னா நான்தண்ணிக்குள்ள இருக்கிறனா..அதான் வெப்ப சீரமைப்புக்காகவே இது. இப்ப வெளியே.வந்துட்டனா..அவ்வளவு வெப்பம் வேண்டாம். அதான் கொஞ்சம் கொஞ்சமா சூட்டை இழக்கிறேன். என் உடல் குளிர்கிறது. இது தாங்கமுடியாமல் எனக்கு நடுங்குகிறது. இதன் மூலம் என் உடல் சூட்டை உண்டுபண்ணுகிறது. என் உடலில் , அம்மாவின் கருவறைக்குள் இருந்த போது இருந்த எனது பழுப்பு கொழுப்பு இப்ப எனக்குத் தேவையே இல்லே. அதனை எரித்துதான் உடல் சூடு செய்கிறேன். இனி உங்க கூட இந்த உலகுக்கு தகுந்தாற்போல ஓட்டத்துக்கு தயாராயிட்டேன்