லதா ராமகிருஷ்ணன் (இந்தியா)
நீங்கள் மணிமேகலையை நம் பிடிக்குள் எப்படியாவது கொண்டுவந்து சேர்க்கிறீர்கள். அதுதான் எனக்கு வேண்டியது. நாம் அவளை நம்முடைய கட்சிக்கு கொள்கைப்பரப்பு அதிகாரியாக நியமித்துக் கொண்டால் வரும் தேர்தலில் நம்முடைய கட்சி மிகச் சிறந்த வெற்றிக்கனியை ஈட்டித் தரும்…. ( எரிச்சலுற்றவராய்) முட்டாளே, அவளைத் தலைமைப் பொறுப்பில் தலையாட்டிபொம்மையாய் வைத்துக்கொண்டு ஒரு புதுக் கட்சியையே ஆரம்பிக்கலாம் |
நாடகம் (எழுதியவர் : லதா ராமகிருஷ்ணன்)
(தோழர் வெளி ரங்கராஜனுடைய மணிமேகலை நாடகம் பார்த்த பாதிப்பில் எழுதப்பட்ட நாடகம் இது. முதலில் ஆங்கிலத்தில் MANIMEKALAI ON THE MOVE என்ற தலைப்பில் எழுதி MUSE INDIA என்ற இணைய இதழில் வெளியானது. பின், சென்னையிலிருந்து வெளியாகும் புதுப்புனல் என்ற மாத இதழில் அகோபர் 2009 இதழில் நானே தமிழில் மொழிபெயர்த்த இந்தத் தமிழ்வடிவம் இடம்பெற்றது.
காட்சி – 1
இடம்: மங்கலான ஒளியூட்டப்பட்டிருக்கும் அரங்க. வரிசையாக இருக்கைகள் அமைந்துள்ளன. சன்னமான மெல்லிய இசையிழைகள் அரங்கில மிதந்துகொண் டிருக்கின்றன.
கதாபாத்திரங்கள்: மணிமேகலை, நிகழினி மற்றும் பார்வையாளர்கள்
(திரு.வெளி ரங்கராஜன் இயக்கத்தில் உருவான மணிமேகலை நாடகத்தின் கடைசிப் பகுதி மேடையில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.. பிரதான பெண் பாத்திரமான மணிமேகலை, ஒரு அழகிய இளம்பெண், அழியாப் புகழ் பெற்ற தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்தின் கதாநாயகன் தன் மனதைப் பறிகொடுத்த மாதவியின் மகள் ஒரு துறவியின் உடையில் காட்சியளிக்கிறாள். அவள் உலக இன்பங்களுக்காகவும், புலனின்பக் கிளர்ச்சிகளுக்காகவும் தன் மனதை ஏங்கவிடலாகாது என்றும், மாறாக, மானுடம் பயனுற சேவை செய்வதிலே தன் மனதை ஒருமுகப்படுத்தவேண்டுமென்றும் கூறி அவளுடைய கையில் மணிமேகலா தெய்வம் சற்று முன்பு கொடுத்திருந்த அட்சயபாத்திரத்தை ஏந்திக் கொண்டிருக்கிறாள். அந்த தெய்வாம்சம் பொருந்திய பாத்திரத்தின் உதவியோடு அவள் எத்தனை பேருக்குத் தன்னால் உதவ முடியுமோ அத்தனை பேருக்குப் பசிப்பிணியைத் தீர்த்து உதவிபுரிய வேண்டும் என்பது மணிமேகலா தெய்வத்தின் கட்டளை.
மேடையில் சிலருக்கு அந்தப் பாத்திரத்திலிருந்து உணவு வழங்கி முடித்த பிறகு மணிமேகலை மேடையிலிருந்து கீழே இறங்கி பார்வையாளர்கள் மத்தியில் அங்கொன்றும், இங்கொன்றுமாய் சிலருக்கு உணவளித்தவாறு நகர்கிறாள். அப்படி மணிமேகலையிடமிருந்து உணவு கிடைக்கப் பெற்றவர்களில் நிகழினியும் ஒருத்தி. இவ்வாறே அரங்கின் வாயில் வரை சென்றுவிடும் மணிமேகலை வாயில் வழியாக வெளியேறி பார்வைப்பரப்பிலிருந்து மறைகிறாள். பார்வையாளர்களிடமிருந்து பதற்றமும், பரபரப்புமாய் பல்வேறு குரல்கள் கிளம்புகின்றன.)
குரல்கள்: ஹோ, எங்கே மணிமேகலை? எங்கே அவள்?
ஒரு ஆண் குரல்: (ஆர்வமாக) அந்த உணவு நாம் இங்கே வழக்கமாகச் சாப்பிடுவதிலிருந்து வேறுபட்டு இருந்ததா? எப்படியென்று சொல்ல முடியுமா?
பெண் குரல் ஒன்று: அவள் எங்கே காற்றோடு காற்றாகக் கலந்துவிட்டாளா என்ன?
ஒரு குழந்தை: அந்த அக்கா பாத்திரத்தை என் கையில் கொடுத்திருந்தால் எத்தனை நன்றாயிருந்திருக்கும்! நாள் முழுக்க அதை வைத்துக்கொண்டு சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்க முடியும்!
(நிகழினி, பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்துகொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, பிரமிப்பில் வாயடைத்துப் போனவளாய் தன்னுடைய உள்ளங்கைகளைப் பார்த்துக்கொள்கிறாள்! )
இன்னொரு குரல்: ஹேய், அங்கே பார், அவளுடைய கைகளில் எதுவுமேயில்லை..!
நிகழினி: ஆனால், எல்லாமே இருக்கின்றன, என்னுடைய கைகளில், உங்களுடைய கைகளில், அவர்களுடைய கைகளில்… நம்மால் அவற்றைப் பார்க்க முடியவில்லை என்பது உண்மையிலேயே மிகவும் வருத்தமளிக்கும் ஒன்று தான்…. ஏனெனில், நம்மால் மட்டும் அவற்றைப் பார்க்க முடிந்தால் நாம் அவற்றை நமது நன்மைக்கும், மற்றவர்களின் நன்மைக்கும் பயன்படுத்த முடியுமே…
(அவள் தனக்குள் முணூமுணுத்துக்கொண்டு மெதுவாக அரங்க வாயிலை நோக்கி நகர்கிறாள்)
திரை
காட்சி – 2
இடம்: நிகழினியின் இல்லம். அங்கே அவளுடைய அறையில் ஒரு கட்டில், புத்தக அடுக்கு, மேஜை, நாற்காலி இருக்கின்றன. அறையின் ஒரு மூலையில் குடிநீர் மண்குடுவையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதிகாலைப் பண் சன்னமாகப் பின்னணியில் இசைத்துக்கொண்டிருக்க, கூடவே பறைகள் கீச்சிடும் ஒலிகள், நாள் தொடங்கும் ஒலிகள் சில இணைந்து கேட்டுக்கொண்டிருக்கின்றன.
கதாபாத்திரங்கள்: மணிமேகலை, நிகழினி.
(அதிகாலை. நிகழினி, ஆழ்ந்த உறக்கத்திலிருப்பவள், கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு எழுந்து போகிறாள். கதவின் பக்கம் வந்ததும் சற்றே பயமும், கவலையுமாய், உள்ளிருந்தவாறே குரல் கொடுக்கிறாள்)
நிகழினி : யார் அது?
(வெளியேயிருந்து கிசுகிசுப்பாய் ஒரு குரல் பதிலளிக்கிறது) ”நான் தான். மணிமேகலை. தயவு செய்து கதவைத் திற…”
நிகழினி : என்ன? மணிமேகலையா! கடவுளே! ( விரைந்து கதவைத் திறக்க, மணிமேகலை உள்ளே விரைந்தோடி வருகிறாள்)
நிகழினி : ( வியப்பும் திகைப்பும் கரைபுரண்டோட) ஹோ, நன்றி மணிமேகலை! என் வீட்டிற்கு வந்தமைக்கு மிகவும் நன்றி! ஆனால், நேற்று எங்கே போய்விட்டாய் நீ?
மணிமேகலை: பிராத்திக்கவேண்டி கடற்கரைக்குச் சென்றிருந்தேன். ஆனால், பிரார்த்தித்து முடித்து நான் கண்ணைத் திறந்தபோது இருள் கவிந்திருந்தது. என்னைச் சுற்றி ஆண்கள் கணிசமான எண்ணிக்கையில் நின்றுகொண்டிருந்தனர். வேட்கையும், வன்மமும் நிறைந்த கண்களோடு நின்றுகொண்டிருந்தனர். எப்படியோ, அவர்களிடமிருந்து விலகி அந்த இடத்தைவிட்டு நீங்கி வந்தேன் நான்…
நிகழினி : ( திக்பிரமையடைந்தவளாய்) ஆனால், நீ எப்படி இங்கே…?
மணீமேகலை: ( மென்மையாக முறுவலித்தவாறே) ஏன் கேட்கிறாய்? உனக்கு நான் வந்தது பிடிக்கவில்லையா? என் வருகையை நீ விரும்புவாய் என்று நான் கருதினேன்..
நிகழினி : ( வேகவேகமாக) – உன்னை மனமார வரவேற்கிறேன் மணிமேகலை! ஆனால், இங்கே, என்னைத் தேடி உன்னை வரச்செய்தது எது என்று விளங்கிக் கொள்ள முடியவில்லை.
மணிமேகலை: ஒருக்கால், உன்னுடைய விழிகளில் கண்ட தேடலாயிருக்கலாம்… நேற்று நான் என்னிடமுள்ள இந்த தெய்வீகப் பாண்டத்திலிருந்து ( அட்சயப்பாத்திரத்தை சுட்டிக்காட்டுகிறாள்) உனக்கு உணவு வழங்கியபோது உன்னுடைய கண்களில் மட்டுமீறிய பசியைப் பார்த்தேன். நிச்சயம் அது ஒற்றை நபருக்கு மட்டுமானதாக இருக்கமுடியாது…. இந்த அட்சயப்பாத்திரத்தையே என்னுடைய கைகளிலிருந்து பிடுங்கிக் கொள்ள எத்தனை ஏங்கினாய் நீ! ( அன்போடு மீண்டும் புன்னகை செய்கிறாள்). எனவே, உன்னையும் என்னோடு அழைத்துச் சென்றால், சரியான நபர்களுக்கு உதவி செய்ய, உணவளிக்க என்னால் இயலும் என்று எனக்குத் தோன்றியது…. என்னோடு நகர்வலம் வருவாயா நிகழினி?
நிகழினி : ஓ! கண்டிப்பாக வருகிறேன் தோழி… ! ஆனால், உனக்கு எப்படி என்னுடைய பெயர் தெரியும்?!
மணிமேகலை: நான் உன்னை நிகழினி, அதாவது, இனி நிகழப் போவது என்று தானே குறிப்பிட்டேன்! தவிர, பெயரில் என்ன இருக்கிறது…?
நிகழினி : தனது தலையை மறுப்பதாய் அசைத்தவாறே) பெயரில் தான் எல்லாமே இருக்கிறது என்றும் நம்மால் சொல்ல முடியுமல்லவா! அது எப்படியோ, உன்னால் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்கவியலுமா என்ன?!
மணிமேகலை: ஹா, அது சாத்தியமில்லை. ஏன் கேட்கிறாய்?
நிகழினி : ( தனக்குத் தானே பேசிக் கொள்பவள் போல்) ஏனெனில், உலகெங்கும் ஏழைகள், வாழ்வின் அடிப்படை வசதிகள் கூட கிடைக்கப் பெறாதவர்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள்… எங்கள் நாட்டை எடுத்துக்கொண்டால், நாங்கள் கிரிக்கெட் விளையாட்டிற்கும், ஏவுகணைகளுக்கும், விண்கலங்களுக்கும் கோடிகோடியாகச் செலவழிக்கிறோம்… ஆனால், ஏழைகளுக்கு சுகாதார வசதியோடு கட்டப்பட்ட கழிப்பறைகள் கிடையாது.; சுத்தமான பொதுக் கழிப்பறைகள் கிடையாது. ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் இடையேயான அகழி விரிவடைந்துகொண்டே போகிறது…(திடுமென நினைவுக்கு வந்ததுபோல்) இன்னுமொன்று… உன்னுடைய அந்த அற்புதப் பாண்டம் உணவு மட்டும் தான் கொடுக்கவியலுமா? அல்லது, வேறு பொருட்களையும் தரக்கூடியதா? ( தொலைவிலிருந்து துயரார்ந்த இசை ஒலிக்கிறது).
மணிமேகலை: உணவு மட்டும் தான். ஏன் கேட்கிறாய்..?
நிகழினி : காரணம், வேறு பல அடிப்ப்படைத் தேவைகள் கூட அநேகருக்கு இன்னும் கிடைத்தபாடில்லை… எடுத்துக்காட்டாக, மெய்யன்பு… நீயும், இளவரசன் உதயகுமாரனும் பிரிந்தது – அன்பு முகிழ்க்கும் தருணத்திலேயே, காதலின் ஆரம்பக் கட்டத்திலேயே பிரிந்துவிட்டது நல்லது தான்.
மணிமேகலை: ஹோ, இல்லை. அதன் வலி சமயங்களில் என்னைக் கொன்றுவிடுகிறது, தெரியுமா…( அவள் முகத்தில் வலியும், வேதனையும் மண்டுகிறது)
நிகழினி : நான் சொன்னதும் இதைத் தான். இந்த வலி வேதனை எல்லாம் நீங்கள் இருவரும் ஒன்றாக முடியாததால் தான்… எனவே, இருவரும் பரஸ்பரம் ஒருவரைப் பற்றி மற்றவர் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் பொய்த்துப் போகாமல் அப்படியே நிலைத்திருக்கும்… இறுக மூடிய உள்ளங்கை போல். அதனுள் இருப்பது என்ன என்பதைப் பற்றிய நமது எதிர்பார்ப்புகள், ஊகங்கள் எல்லாம் எப்போதும் உயிர்த்திருக்கும்… எனவே, ஏமாற்றத்திற்கு அங்கே இடமில்லை. மேலும், நீ இன்னமும் இளமைப்பொலிவோடும், செல்வச்செழிப்போடும் இருக்கிறாய். ஆம், அந்த தெய்வீகப் பாத்திரத்தைப் பெற்றிருக்கும் உனக்கு எந்தக் கோடீஸ்வரியும் இணையாக முடியாதே! உனது உடல், அதன் மர்மங்களும், ரகசியங்களும் அறியப்பட்டு, உன்னுடைய மேனியின் மறைகுறிப்புகள் பொருள்பெயர்க்கப்பட்டு, அதன் தோலின் நிறம் மங்கி, செழுமை வரண்டு சுருங்கி உன் உடலின் சாறுகள் ஒட்டுமொத்தமாய் உறிஞ்சிக்கொள்ளப்பட்ட பின், காலம் உன் உடலின் உச்சப்பகுதிகள் ஊடுருவப்பட்டு காலம் உன்னை முழுவதும் சக்கையாக்கிப் பிழிந்து போட்ட நிலையில் ஏற்படும் அளப்பரிய வலி வேதனை துக்கத்திலிருந்து உன்னை நீயே காத்துகொண்டுவிட்டாய்!
(மேடையில் எரியும் விளக்குகள் மெதுவே சாம்பல்பூத்ததாக, பின்னணியிசை ஒருவித ஒப்பாரியாக மாறுகிறது).
மணிமேகலை: அழுகிறாயா நிகழினி?
நிகழினி : நாம் எல்லோருமே, அவரவருக்கென்ற சில நேரங்களில் அழுகிறோம் தானே? ஒரு மனிதருக்கோ அல்லது ஒரு பண்டத்திற்கோ அல்ல… இழந்துவிட்ட ஒவ்வொரு கணத்திற்காகவும்… இழக்கப்போகும் ஒவ்வொரு கணத்திற்காகவும்… ஹோ, மறந்துவிட்டேன், உனக்கு சாப்பிடுவதற்கு ஏதேனும் கொண்டுவருகிறேன்… இவ்வலவு நேரம் ஏதேனும் சாப்பிட்டாயோ, இல்லையோ….சே, எத்தனை முட்டாள் நான்! உன்னிடம் அட்சயபாத்திரமே இருக்கிறது.. அதை மறந்துவிட்டு நான் கேட்கிறேன்…மேலும்…
மணிமேகலை: இல்லை, அதிலிருந்து எனக்கு உணவு எடுத்துக்கொள்ள முடியாது… மற்றவர்களுடைய பசியை போக்க மட்டுமே அந்தப் பாத்திரம்…
நிகழினி : அப்படியா! இந்தமாதிரியான செயல்நுட்பம் ஏதேனும் நம்முடைய சுயநலம் மிக்க, பேராசை பிடித்த ஆட்சியாளர்களைக் கண்காணிக்கவும், அவர்களுடைய அக்கிரமங்களைத் தடுத்துநிறுத்தவும் புழக்கத்தில் இருந்தால் எத்தனை நன்றாயிருக்கும்!
(இருவரும் மனமார, வாய்விட்டுச் சிரித்தவாறே சமையலறைக்குச் செல்கின்றனர்.)
திரை
காட்சி 3
இடம் : சாலையோரம்
கதாபாத்திரங்கள்: மக்கள், ஊடகவியலாளர்கள், அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணியர், மணிமேகலை, நிகழினி, ஒரு குழந்தை, ஏழைப் பெண்மணி, முதியவர், வேறு சிலர்.
(மணிமேகலையும் நிகழினியும் ஒரு வீதியில் ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களைச் சூழ்ந்துகொண்டு பலதரப்பட்ட மக்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். ஏழைமக்கள், அரசியல்வாதிகள், குழந்தைகள், அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணியர்… ஊடகவியலாளர்கள் மணிமேகலையிடமிருந்து ஒரு வார்த்தையேனும் பெற தங்களுக்குள் முண்டியடித்துக் கொள்கின்றனர். நாலாபக்கங்களிலிருந்தும் கேள்விக்கணைகள் வருகின்றன. {நாம் வானொலி அலைவரிசைகளிலும், தொலைகாட்சி அலைவரிசைகளிலும் தினசரி கேட்கும் விளம்பரங்களின் மெட்டுக்கள் பின்னணீயிசையாக சன்னமாக ஒலித்துக்கொண்டிருக்கவேண்டும்.
ஊடகவியலாளர் – 1: மணிமேகலை மேடம்… நீங்கள் இங்கே வந்திருக்கும் நோக்கம் என்ன?
ஊடகவியலாளர் – 2: இங்கிருந்து நீங்கள் எங்கே செல்வதாக உத்தேசம்?
ஒரு பத்திரிகையின் நிரூபர்: உங்களுடைய எதிர்காலத் திட்டங்கள் என்ன…?
( ஊடகவியலாளர்களின் கேள்விகளும், அணுகுமுறையும், மைக்கை வாய்க்குள் திணிப்பதாய் நீட்டுவதும் – எல்லாம் தொலைக்காட்சி அலைவரிசைகளில் காணக்கிடைப்பதுபோல் அமைய வேண்டும்).
ஒரு குழந்தை: அக்கா, உன் கையிலுள்ள அந்த அழகான பொம்மையை எனக்குத்தாயேன்!
ஒரு ஏழைப் பெண்மணி: (மன்றாடும் குரலில்) அதைப் போல் இன்னொன்று உங்களிடம் இருக்கிறதா..? எனக்கு மட்டும் நாளொன்றுக்கு ஒரு வேளை வயிறாற சோறு கிடைக்குமானால் நான் அந்த அசிங்கம்பிடித்த வேலையைச் செய்ய வேண்டிய தேவையேயில்லை… கண்டகண்ட ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டியதில்லை… எவனெவன் கிட்டேயோ பல்லிளிக்க வேண்டியதில்லை…(மணிமேகலை அந்த அனாதரவான பெண்ணின் விழிகளில் திரண்டு கன்னத்தில் வழிந்தோடும் கண்ணீரைக் கனிவோடு துடைத்துவிடுகிறாள்
கையில் தடியோடு தள்ளாடி நிற்கும் ஒரு முதியவர்: அந்தப் பாத்திரத்தில் சமைத்த சாதம் தான் கிடைக்கும், இல்லையா? ஏனென்றால், இந்தத் தள்ளாத வயதில் என்னுடைய மகன்கள் என்னை அவர்களோடு வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவர்களுக்கு நான் பாரமாகி விட்டேன்..இந்த மாதிரி ஒரு பாத்திரம் மட்டும் எனக்குக் கிடைக்குமானால் என்னுடைய பிரச்னை களில் பெரும்பாலானவை காணாமல் பொய்விடும்…( குரலில் இயலாமையும், நடுக்கமுமாய் பேசியவாறு, மணிமேகலை அந்த முதியவரின் கையை வாத்சல்யத்தோடு பிடித்துக்கொள்கிறாள்)).
(மணிமேகலையைச் சுற்றிலும் மக்கள் திரளாகச் சூழ்ந்துகொண்டிருக்க அவள் அந்தக் கூட்டத்தின் நடுவே மூச்சுத் திணறலோடு செய்வதறியாது நின்றுகொண்டிருக்கிறாள். நிகழினி அவளைக் கூட்டத்திலிருந்து பத்திரமாக மீட்டு வெளியே இழுத்து ஒரு ஆட்டோவில் உட்காரவைக்கிறாள்.அந்த ஆட்டோ மிக விரைவாக அங்கிருந்து அகன்று வேகமெடுத்துச் செல்கிறது. மக்கள் கூட்டம் அதைப் பின்தொடர்ந்து அலைபாய்ந்து ஓடுகிறது).
{திரை}
காட்சி – 4
இடம்: மேடையில் மூன்று ஒளிவட்டப்பகுதிகள்.
கதாபாத்திரங்கள்: இரண்டு அல்லது மூன்று ரௌடிகள். இரண்டு அல்லது மூன்று பேராசைக்கார அரசியல்வாதிகள், ஒரு சில நல்ல மனிதர்கள், சமூகப் பிரக்ஞையாளர்கள்:
(மேடையில் மூன்றுநிறங்களிலான ஒளிவட்டங்களின் மூலம் மூன்று வெவ்வேறு இடங்கள் சுட்டப்படுகின்றன. ஒவ்வொரு வட்டத்திலும் இரண்டு அல்லது மூன்று நபர்கள் தீவிர விவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் காட்சியளிக்க வேண்டும்)
முதல் ஒளிவட்டம் – முதல் நபர்: ஆக, விஷயம் முடிவாகிவிட்டது. சரிதானே? நாம் மணிமேகலையைக் கடத்தப்போகிறோம்.
இரண்டாம் நபர்: அதாவது, அவளுடைய அந்த அற்புதப் பாத்திரத்தோடு சேர்த்து அவளைக் கடத்திக்கொண்டு வரப் போகிறோம். புரிகிறதா?
முதல் நபர்: சரியான திட்டம்!
(இருவரும் அந்த ஒளிவட்டப் பகுதியை விட்டு வெளியேறிச் செல்கிறார்கள். அந்த வட்டப்பரப்பு மெதுவாக ஒளியிழந்து இருள்சூழ்ந்ததாகிறது. மேடையில் அந்த வட்டப்பகுதி இருந்த பரப்பு பார்வையாளர்கள் கண்ணுக்கு வெற்றிடமாகிறது).
இரண்டாம் வட்டப்பகுதி – முதல் நபர்: என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன் என்பதான வழக்கமான வசனங்களையெல்லாம் உதிர்க்கத் தேவையில்லை. நீங்கள் மணிமேகலையை நம் பிடிக்குள் எப்படியாவது கொண்டுவந்து சேர்க்கிறீர்கள். அதுதான் எனக்கு வேண்டியது. நாம் அவளை நம்முடைய கட்சிக்கு கொள்கைப்பரப்பு அதிகாரியாக நியமித்துக் கொண்டால் வரும் தேர்தலில் நம்முடைய கட்சி மிகச் சிறந்த வெற்றிக்கனியை ஈட்டித் தரும்….
இரண்டாம் நபர்: ( எரிச்சலுற்றவராய்) முட்டாளே, அவளைத் தலைமைப் பொறுப்பில் தலையாட்டிபொம்மையாய் வைத்துக்கொண்டு ஒரு புதுக் கட்சியையே ஆரம்பிக்கலாம் என்று நான் ஒரு மகத்தான திட்டத்தை வகுத்துக் கொண்டிருக்கிறேன். அந்த அட்சயபாத்திரம் தான் நம்முடைய கட்சியின் சின்னம். எப்படி?!
மூன்றாவது நபர்: (உணர்ச்சிவசப்பட்டு படபடவென்று கைத்தட்டியவாறே) சரியான ஸிக்ஸர் இது! நான் எப்படியாவது அவளைக் கடத்திக்கொண்டுவந்து விடுகிறேன் மாஸ்டர்… அந்த இன்னொரு பெண்ணை என்ன செய்வது?
இரண்டாவது நபர்: எதற்கும் லாயக்கில்லாத அந்த உதவாக்கரைப் பெண்… தேவைப்பட்டால் அவளையும் நம்முடிஅய கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட வேண்டியது தான்…. அல்லது, அவளை நன்றாக அச்சுறுத்தி மணிமேகலைப் பக்கமே அண்டவிடாமல் செய்துவிட்டால் இன்னும் நல்லது.
( அந்த இரண்டாம் ஒளிவட்ட நபர்கள் அங்கிருந்து வெளியேறிச் செல்ல, அங்கேயுள்ள வெளிச்சம் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்து அங்கே இருள் சூழ்கிறது).
மூன்றாவது ஒளிவட்டப்பகுதி: (ஆண்களும் பெண்களுமாய் ஒரு குழுவினர் அங்கே மிகத் தீவிரமாக எதையோ விவாதித்துக்கொண்டிருக்கின்றனர்.)
ஒரு பெண்: நாம் எப்படியாவது மணிமேகலையைக் காப்பாற்றியாக வேண்டும். நாம் இதற்காகத் தானே போராடிக்கொண்டிருக் கிறோம்…இல்லையா…? மக்கள் எல்லோருக்கும் அடிப்படைத்தேவைகள் நிறைவேற்றப்படவேண்டும் , அடிப்படை வசதிகள் கிடைக்கவேண்டும்…
ஒரு ஆண்: இந்தப் பெண் பலப்பல நூற்றாண்டுகளைக் கடந்து இத்தனை நீண்ட தூரம் பயணமாகி, இத்தனை அதலபாதாள கால, இட வெளிகளைக் கடந்து நம்முடைய மக்களின் பசிப்பிணியைத் தீர்க்க வந்திருக்கிறாள். இவளைப் பாதுகாக்க வேண்டியது நம்முடைய கடமையல்லவா? நாம் இனியும் நேரங்கடத்தக்கூடாது… நாம் அவளைத் தேடிச் செல்வோம், வாருங்கள்… என்ன வந்தாலும் சரி, நாம் அவர்களிருவரையும் காப்பாற்ற வேண்டும்
(மூன்றாம் ஒளிவட்டப்பகுதியிலிருக்கும் மனிதர்கள் வெளியேறிச் செல்ல அந்தப் பகுதியில் படிப்படியாக ஒளிமங்கிக் கொண்டே வந்து இருள் சூழ்கிறது)
திரை
காட்சி – 5
இடம்: ஒரு மறைவிடம் போன்ற பகுதி
கதாபாத்திரங்கள்: மணிமேகலை, நிகழினி, இளவரசன் உதயகுமாரன், செய்தி வாசிப்பாளர், கடற்கரையில் சில மனிதர்கள்.
(தொலைக்காட்சியில் செய்திகள் வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.)
செய்தி வாசிப்பாளர்: மணிமேகலை தன் விருப்பம்போல் பல்வேறு இடங்களுக்குச் சென்று மக்களுக்கு உணவளிக்கக் கூடாது என்று ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடும் என்பதால் இந்த விஷயத்தைத் தனது நேரடிப் பொறுப்பிலும், கண்காணிப்பிலும் எடுத்துக்கொள்வதென்று அரசு தீர்மானித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்களோடு மணிமேகலையை இணைத்துக் கொள்வதில் போட்டிபோடுகின்றன. அவர் மிகவும் அழகாக இருக்கிறார் என்பதால் திரைப்படத்துறையினர் அவரைத் தங்கள் படத்தில் நடிக்கவைக்க பெருமுயற்சி செய்கின்றனர். வரலாற்றாசிரியர்களும், அகழ்வாராய்ச்சியாளர்களும் மணிமேகலை வாழ்ந்த காலம் பற்றிய தகவல்களைச் சேகரிக்க அவரிடம் பேட்டி காண விரைந்துகொண்டிருக்கின்றனர்.
மணிமேகலை: (துயரார்ந்த முகபாவத்தோடு) – இந்நிலையில், நாம் என்ன செய்யப்போகிறோம் நிகழினி? என்னால் நீ பிரச்னையில் மாட்டிக்கொள்வதை, துன்பத்திற்காளாவதை நான் விரும்பவில்லை. நான் இங்கிருந்து போய்விடுகிறேன்… இந்த தெய்வாம்சப் பாண்டத்தை வீணாக்க நான் விரும்பவில்லை… அதை இங்கே சிறந்த முறையில் பயன்படுத்தவே விரும்புகிறேன்… ஆனால், அதற்கு எனக்கு வழியிருக்காதுபோல் தோன்றுகிறது… ( யோசனையோடு அண்ணாந்து பார்க்கிறாள்)
நிகழினி: மனதைத் தளரவிடாதே மணிமேகலை…நாம் ஏதாவது வழியைக் கண்டுபிடிப்போம்… ஆனால், இன்று இங்கே எத்தனையோ இலவச உணவளிக்கும் திட்டங்கள் இருக்கின்றன. எப்படியிருந்தாலும், பசியால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்பது உண்மை தான்.. உணவில்லாமல் இறப்பவர்கள் இன்றும் உலகத்தில் கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. தவிர, நாளொன்றுக்கு ஒரு வேளை வயிறாற உணவு கிடைப்பதற்காக மாதம் முப்பது நாட்களும் மாடாய் உழைத்து ஓடாய்த் தேயும் மனிதர்களும் இங்கே ஏராளம்…வயிற்றுப்பிழைப்புக்காக தங்கள் படைப்பாற்றலைப் பறிகொடுப்பவர்கள், சமூகப் பிரக்ஞையை பரணில் எறிந்துவிடும் கட்டாயத்திற் காளானவர்கள் இங்கே எக்கச்சக்கமாய்…அவர்களை அவர்களுடைய வாழ்வுச்சுமையிலிருந்து விடுவித்து வாழ்க்கையை முழுநிறைவாக அனுபவித்து வாழ அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர, உன்னுடைய அட்சய பாத்திரம் இங்கே மிகவும் அவசியம் மணிமேகலை…ஆனால்…(மணிமேகலையை மெய்யான கவலையோடு பார்க்கிறாள் நிகழினி).
மணிமேகலை: என்னால் இங்கே அதிக நேரம் இருக்க முடியுமா தெரியவில்லை. என்னுடைய பணியை நான் இங்கே அமைதியாகத் தொடர்ந்து செய்துவர அவர்கள் விடமாட்டார்கள்… அவர்கள் உன்னையும் விடமாட்டார்கள்..மேலும், இங்கேயுள்ள போக்குவரத்து நெரிசலும், மாசடைந்த சுற்றுச்சூழலும் என்னால் தாங்கமுடியாததாக இருக்கிறது.இங்கள் பகுதியில், நான் வாழ்ந்த காலத்தில், நிலைமை இத்தனை மோசமாக இல்லை… நான் மணிமேகலா தெய்வத்தைத் தொழுதுகொள்கிறேன்…அது எனக்குக் கண்டிப்பாக ஏதேனும் நல்வழியைக் காட்டும்
( கண்களை மூடிக்கொண்டு, நிமிர்ந்து அமர்ந்து கொண்டு தியானிக்கத் தொடங்குகிறாள் சில கணங்களில் மணிமேகலை கண்களைத் திறந்து நிகழினியைப் பார்த்துப் புன்முறுவலிக்கிறாள். நிகழினி அவளைக் கண்களில் கேள்விக்குறியோடு பார்க்கிறாள்.
மணிமேகலை: அற்புதமான ஆத்மா மணிமேகலா தெய்வம், நிகழினி! எனக்குத் தேவைப்படும் போதெல்லாம் உதவிசெய்யத் தவறவே தவறாது… என்ன தெரியுமா! இந்த அட்சயப்பாத்திரத்தை இங்கேயே விட்டுவிட்டு உடனடியாக பூமியை விட்டு நீங்கி வரும்படி மணிமேகலா தெய்வம் என்னிடம் கூறிவிட்டது. யாரேனும் உன்னிடம் வந்தால் என்னுடைய இந்தக் கடிததத்தை அவர்களிடம் கொடுத்துவிடு, போதும். என்னுடைய அட்சயபாத்திரம் உன்னுடைய பொறுப்பில் தான் இருக்க வேண்டும் என்று இதில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறேன்.
நிகழினி: ( கவலையோடு பார்த்தவாறு) ஆனால், இதை யாரேனும் என்னிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கியெடுத்துக் கொண்டு போய்விட்டால்…? யாரேனும் இதை தூக்கியெறிந்து சுக்குநூறாக உடைத்துவிட்டால்…?
மணிமேகலை: அப்படியெல்லாம் நீ கவலைப்படத் தேவையில்லை நிகழினி. யாராலும் இந்த தெய்வாம்சம் பொருந்திய பாண்டத்தை உடைக்க முடியாது. எத்தனை ஆயிரம் கரங்கள் வேண்டுமானாலும் இதைத் தொடலாம், கையில் ஏந்திக் கொள்ளலாம்… ஆனால், மற்றவர்களின் பசி குறித்து உண்மையான அக்கறை கொண்ட கைகளால் மட்டுமே இதிலிருந்து உணவை எடுக்க முடியும். யார் இதைத் தொட்டுப்பார்க்க விரும்பினாலும் தயங்காமல் அனுமதியளிப்பாயாக. வஞ்சக எண்ணத்தோடு யாரேனும் அப்படிச் செய்ய முனைந்தால் அட்சயபாத்திரம் காலியாகவே தான் இருக்கும். யாரேனும் இதை உன்னிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொண்டு போனால், அபகரித்துக் கொண்டு போனால், அல்லது, அரசு அதிகாரிகள் வந்து இதை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டு இதை உன்னிடமிருந்து எடுத்துக்கொண்டு போனால், இது உன்னிடம் திரும்பிவந்துவிடும்! நீ எங்கேயிருந்தாலும் சரி, இது அந்த இடத்திற்குத் தன்னிச்சையாக வந்துவிடும்! இன்னொரு முக்கிய விஷயம் – நான் மணிமேகலா தெய்வத்திடம் இந்தப் பாண்டத்தில் உரிய திருத்தங்கள் செய்யும்படியும் வேண்டிக்கொண்டிருக்கிறேன், அதுவும் ஒப்புக்கொண்டுவிட்டது. எனவே, இதைக்கொண்டு மக்களின் பசிப்பிணியை மட்டுமல்லாமல் அவர்களுடைய எண்ணிறந்த பிறவேறு தேவைகளை, நிறைவேறாத ஆசைகளை – அதாவது, நியாயமானவைகளை- உன்னால் நிறைவேற்றித்தர முடியும். அது நியாயமானவை தானா என்று முடிவு செய்யும் பொறுப்பு முழுக்க முழுக்க உன்னுடையது. மகிழ்ச்சி தானே?
நிகழினி: கண்களில் நீர் ததும்ப மணிமேகலையை நெருங்கி அவளுடைய கரங்களை இறுகப் பற்றிக் கொள்கிறாள் – அன்புமிக்க தோழீ…
மணிமேகலை: ( நிகழினியை அன்போடு தழுவிக்கொண்டு) இதை பரிட்சித்துப் பார்க்க நீ விரும்புகிறாயா? செய்து பார். நான் இன்னும் சிறிது நேரத்தில் போய்விட வேண்டும்..
நிகழினி: (திகைப்போடு) என்ன?
மணிமேகலை :ஆமாம். இது சரியாக வேலை செய்கிறதா என்று தயவுசெய்து சோதித்துப் பார்.
நிகழினி: தயவு செய்து நீயும் கண்களை மூடிக்கொண்டுவிட வேண்டும்!
( மணிமேகலை அப்படியே செய்கிறாள். பிறகு, நிகழினி கண்களை மூடிக்கொண்டு பிரார்த்திக்கிறாள். பின், கண்களைத் திரந்துகொண்டு அண்ணாந்து வானத்தைப் பார்த்து யாரையோ கீழிறங்கி வரச்சொல்வதுபோல் கைகளால் சைகை செய்கிறாள்
மேடை சில கணங்கள் முழுவதுமாய் இருளில் மூழ்குகிறது. பின், வண்ணவண்ண விளக்குகள் ஒளிமயமாய்ப் பளீரிட, மணிமேகலையின் எதிரில் இளவரசன் உதயகுமாரன் அழகே உருவாய் அன்புததும்ப நிற்கிறான்!
நிகழினி: (கனிவோடு) இப்பொழுது நீ கண்களைத் திறந்து பார்க்கலாம் மணிமேகலை!
மணிமேகலை மெதுவாகக் கண்களைத் திறக்கிறாள். எதிரே உதயகுமாரன் நிற்பதைக் கண்டு எல்லையற்ற பிரமிப்பும் ஆனந்தமுமாய் கூவுகிறாள்)
மணிமேகலை – உதய்!
(பின், அவள் நிகழினியின் பக்கம் திரும்பிப் பார்க்க, நிகழினி அன்பும், பரிவதிர்வும் நிரம்பிய புன்னகை பூக்கிறாள்
நிகழினி: (மேடையில் அங்குமிங்கும் மெதுவாக நடந்தபடி பின்வரும் வார்த்தைகளை தனக்குத்தானே பேசிக்கொள்வதாய் உச்சரிக்கிறாள்) உண்மைதான், காதலுக்கு இருண்ட பக்கங்களும் உண்டு.. ஆனால், அது அத்தனை அச்சுறுத்தும் இருட்டு கிடையாது மணிமேகலை…! நீ அந்த அற்புத வாசகத்தைக் கேள்விப்பட்டதில்லையா.. அன்பை அனுபவித்து இழத்தல் என்பது அன்பை அனுபவங் கொள்ளாமலேயே இருப்பதை விட ஆயிரம் மடங்கு மேல்! தயங்காதே மணிமேகலை, உதயகுமாரனிடம் செல். உன்னை முழுமொத்தமாக அவனுக்குக் கொடு. அவனையும் அப்படியே உடல், பொருள் ஆவியனைத்துமாக உள்வாங்கிக் கொள். உனக்கு நான் மனமார என் நன்றியைத் தெரிவிக்கும் மிகச் சிறந்த வழி இதுவாகத் தான் இருக்கமுடியும்! அத்தனை அன்புமயமான மனுஷி நீ.. அப்படியிருக்க, நீ விரும்பும் அன்பிலிருந்து உன்னை நீயே வலுக்கட்டாயமாக விலக்கிக்கொண்டு ஏன் உடலளவிலும், மனதளவிலும் உன்னை பட்டினியால் வாட்டிவதைத்துக் கொள்ளவேண்டும் மணிமேகலை? நான் என்னால் முடிந்த எல்லோருக்கும், என்னால் முடிந்த மிகச் சிறந்த வழியில் உதவுவேன் என்று உனக்கு மனமார உறுதியளிக்கிறேன். நீ என்னை நம்பலாம்… அன்புமிக்க மணிமேகலை, உங்கள் இருவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்!
(குதூகலமே உருவான ஒரு குழந்தையைப் போல் மணிமேகலை நிகழினியை கட்டிக்கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிடுகிறாள்!)
( பின், அந்தக் காதலர்கள் ஆனந்தப் பரவசத்தில் சுற்றிச் சுழன்று அந்த கடற்கரை வெளியெங்கும் இன்னிசையின் பின்னணியில், நடனமாடியவாறே, கடற்கரையில் அமர்ந்திருக்கும் மனிதர்களைப் பார்த்து மகிழ்ச்சியோடு கையசைத்தவாறு கடலுக்குள் இறங்கிச் செல்கிறார்கள். கரையில் நிகழினியைச் சுற்றி குழந்தைகள் நின்றுகொண்டிருக்க அவர்கள் அட்சயபாத்திரத்தைத் தொட்டுப்பார்க்க அனுமதித்தபடி அவள் அதனுள் கையை நுழைத்து விதவிதமான பொம்மைகளை மெதுவாக வெளியே எடுத்து, சுற்றிலுமுள்ள குழந்தைகளிடம் ஒவ்வொன்றாய் வினியோகித்த வண்ணம் அன்பும், சோகமும் நிறைந்த விழிகளால் கடலையும், அதன் அலைகளையும் பார்த்துக்கொண்டிருக்கிறாள்)
நாடகம் நிறைவடைகிறது
very nice Drama latha wow