நேர்காணல் – றஞ்சி
நன்றி -நிறமி மற்றும் , கபிலன் சிவபாதம் )
புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினர் தங்களை பல் துறைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர் அந்த வகையில் நடிப்புத்துறையில் தன்னை ஈடுபடுத்தி பல திரைப்படங்களில் நடித்துவருபவரும் சிறந்த நடிகைக்கான விருது பெற்றவருமான “தேனுகா” கந்தராஜாவுடன் ஊடறுவின் வாசகர்களுக்காக ஓர் உரையாடல் –
?. A Gun & A Ring திரைப்படம் பற்றியஉங்களுடையஅனுபவம்பற்றிகூறமுடியுமா
நான் நடித்த முதல் முழு நீளதிரைப்படம் A Gun & A Ring. ஒருமுழுமையான திரைப்படக்குழுவினருடன் கமராக்கு முன்நின்று நடித்தது இதுவே எனது முதல் முறையாகும். “கண்டம்” திரைப்படப் பிடிப்புக்காக நான் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது ஒருவர் என்னைஅடையாளம் கண்டுகொண்டு“A Gun& A Ring படத்தில் நடித்தது நீங்களா ?” என்றுகேட்டார். அவர் புலம்பெயர்ந்து அவுஸ்ரேலியாவில் வசிப்வர். இது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம். அபி என்ற அந்த கதாபாத்திரம் பலரின் மனதில் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். என்னுடன் நேரில் பார்த்து பேசுபவர்கள் சிலவேளைகளில் அபி என்ற அந்த கதாபாத்திரத்தை “தேனுகா” ஆகிய என்னுடன் ஒப்பிட்டு பார்த்துவிட்டு “திரையில்” பார்த்த “அபி”க்கும் உங்களுக்கும் சரியான வித்தியாசம்”
என்றும் சொல்லியுள்ளார்கள்.
அதுஅந்த கதாபாத்திரத்திற்க்கு கிடைத்த வெற்றி.
?. நீங்கள் ஜேர்மன் நாட்டில் பிறந்தவரா? உங்களுடைய பெற்றோர்கள் இலங்கையரா
நான் யாழ்ப்பாணத்துக்கு அருகில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் பிறந்தேன். எனக்கு சிறுவயதாக இருக்கும் போதே போரின் காரணமாக குடும்பமாக ஜேர்மன் நாட்டிற்கு இடம் பெயர்ந்துவிட்டோம்.
?.ஒரு நடிகையாக வரவேண்டும் என்று நீங்கள் எப்போதாவது ஆசைப்பட்டதுண்டா
இது ஒரு நல்ல கேள்வி. ஒரு நடிகையாக வரவேண்டும் என்ற ஆவல் எனக்குள் எப்பொழுதுமே இருந்தது. இப்படியான ஆசைகள் அனைவருக்குமே இருக்கின்ற ஒன்று என்று அலட்சியமாக இருந்து விட்டேன். எனவேதான் நடிகையாக ஆகுவதற்கான முயற்சியில் மிகவும் காலதாமதமாக்கி விட்டேன். அதன் பின்னர்தான் முறையாக நடிப்புபயிற்சி பெற்றுக்கொண்டேன். அதற்கு முன்னர் பரதநாட்டியம்க ற்றுக்கொண்டிருந்தேன். நிறைய மேடைகளில் பரதநாட்டியம் ஆடியதாலோ என்னவோ எனக்கு நடிப்பின் மீது இன்னும் ஆர்வம் அதிகரித்தது.
?.உங்கள் நடிப்புக்கு கிடைத்த விருதுகள் பற்றி
´A Gun and A Ring´ படத்தில் நடித்தற்காக எனக்கு நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருதும், இலண்டனில் சாதனை தமிழா விருதும்,கனடா தமிழ் திரைப்பட சங்கத்தின் விருதும் கிடைத்தன.
´Ceres and the silent witness`என்ற திரைப்படத்தில் “Ceres “ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்க்காக டொரோண்டோவில் நடைபெற்ற சர்வதேச தமிழ்திரைப்பட விழாவில் “சிறந்த” நடிகைக்கான விருதும் கிடைத்துள்ளன.
?.எத்தனை மொழிகள் நீங்கள் பேசுவீர்கள்
எனக்கு தமிழ் ஜேர்மன் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேசுவேன்
?.நடிகையாகும் உங்களுடைய விருப்பத்திற்கு உங்களை சுற்றியுள்ள சமூகத்திடமிருந்து என்ன மாதிரியான கருத்துகள் வந்தன? எதிர்மறையான கருத்துகள் வந்ததா
அனேக இடங்களில் இந்த கேள்விக்கு முகம் கொடுத்திருக்கிறேன் ஆனால் என்னை பொறுத்தமட்டில் சமூகத்தில் உள்ளவர்கள் எல்லோரும் என்னை பாராட்டியும் வாழ்த்தியும் தான் உள்ளார்கள் அப்படியும் ஏதாவது எதிர்மறையான கருத்துக்கள் வரும் பட்சம் எனக்கு எனது குடும்பத்தினர் என்ன நினைக்கின்றார்கள் என்பதுதான் முதல் முக்கிமானது மற்றும் உற்ற நண்பர்கள். அவர்கள் என்னை எப்போதும் ஊக்கப்படுத்தியே வந்துள்ளார்கள். எனது அம்மா கர்நாடக சங்கீத ஆசிரியை. சிறுவயதிலிருந்தே என்னை பரதநாட்டியத்தில் உற்சாகப்படுத்தியவர். எனக்கு எது நல்லது எது கெட்டது என்று பகுத்து ஆராய்ந்து முடிவெடுக்கும் ஒரு கட்டத்திற்கு நான் இப்பொழுது வந்துவிட்டேன். என் இலக்கினை நானே தீர்மானித்து அதனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றேன். நான் என்னவாக போகின்றேன் என்பது பற்றி நான் தெளிவாக இருக்கின்றேன்.
இலக்கினில் தெளிவில்லாதவர்கள் தான் வெளியிலிருந்து வரும் எதிர்வினையான கருத்துகளிற்கு செவி சாய்ப்பர்கள். ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு எதிர்மறையான கருத்திற்கும். அந்த எதிர்மறையான கருத்துக்கள் எங்களில் தாக்கம் செலுத்த விடுவதா இல்லையா என்பது எங்களில் தான் தங்கி உள்ளது.
?. நடிப்புத்துறையில் உங்களுக்கு ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்.
நான் சமீபத்தில் நடித்த 3 திரைப்படங்களில் தயாரிப்பு பணிகளிலும் செயலாற்றும் வாய்புக்கிடைத்தது.இதன் மூலம் திரைக்கு பின்னால் நடக்கின்ற விடயங்களையும் உன்னிப்பாக அவதானிக்க கூடியதாக இருந்தது. ஒரு நடிகையாக மட்டும் இருக்கும் போது கமராக்குப் பின்னால் நடக்கின்ற பல சுவாரசியமான விடயங்களை தவறவிடுகின்றோம். திரைப்படத்தில் பங்காற்றும் ஏனையவர்களின் கடின உழைப்பை பங்களிப்பை அவர்கள் திரைப்பட உருவாக்கத்தின் மேல் கொண்டுள்ள காதலை பார்க்கும் போது மகிழ்ச்சியாவும் உந்து சக்தியாகவும் இருக்கும். இந்த படங்களில் உலகின் பல இடங்களில் இருந்து வந்த திறமையான கலைஞர்களுடன் பங்காற்றியது அருமையான மறக்க முடியாத அனுபவம்.
?.கமராக்கு முன்னாலோ,மேடையிலோ நீங்கள் சந்தித்த சங்கடமான சம்பவங்கள் பற்றி கூறுங்கள்.
கமெராக்கு முன் நின்று நடிப்பது இலகுவான விடயமல்ல. இருந்த போதும் சங்கடமான தருணங்கள் என்பன எனக்கு மேடையிலும் சரி கமராவிற்கு முன்னும் சரி இதுவரை இருந்ததில்லை. சிலவேளைகளில் நகைச்சுவையான சம்பவங்கள் நடப்பதுண்டு. ஒரு படத்தில் கர்ப்பமான பெண்ணாக நடிக்கவேண்டி வந்ததால் நாள் முழுவதும் பெரிய வயிற்றுடனே சுற்றிக்கொண்டிருந்தேன். இரண்டு நாட்களுக்கு பின்னர் புதிதாக வந்த ஒரு உதவி ஒளிப்பதிவாளர்
நான் உண்மையாகவே கர்ப்பமாக இருப்பதாக நினைத்துக்கொண்டு கனநேரம் நிக்கவேண்டாம் கட்டாயம் இருங்கள் என்று கதிரையிடன் வந்து நின்றார்.
அந்தச் சம்பவம் நகைச்சுவையாக இருந்தது.
?.என்ன மாதிரியான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது உங்களுடைய கனவு
நடிப்பை பொறுத்த வரையில்
பலவிதமாக கதாபாத்திரங்கள் செய்யவேண்டும் என்பது எனது விருப்பம். நடிக்கும் வரை எல்லாமே கனவுதான், என்ன அனேக கனவுகள் நிஐத்தின் அருகில் உள்ளமையால் அவற்றை பெரிய கனவென நினைப்பதில்லை.
ஆனாலும் ஒரு சாகசப் பெண் பாத்திரத்தில் நடிக்கவேண்டும் என்பது என்னையே சுவாரஸ்யப் படுத்தும் ஓர் கனவு. உதாரணமாக ஒரு அமானுஷ்ய சக்தி கொண்ட கதாபாத்திரத்தில் தீயசக்திகளை எதிர்த்து நிற்கும் பெண்ணாக நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
?.இதுவரை நடித்ததில் உங்களிற்கு பிடித்த கதாபாத்திரம் எது
“Broken Dreams’’ என்ற சைகோத்ரில்லர் திரைப்படத்தில் Dr Christina Henning என்ற கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. நிஜத்திற்கும் மாய உலகிற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் என்பதால் நடிப்பதற்கான பெருவெளியை கொண்டிருந்ததும் ஓர் காரணம். இந்த படமும் இத்துடன் நான் நடித்த இன்னொரு படமன “கண்டமும்” விரைவில் ஐரோப்பிய நகரங்களில் திரைக்கு வர இருப்பது மகிழ்வு தரும் விடயம்.
?.உங்களின் கதாபாத்திரத்தின் வசனங்களை எப்படி மனப்பாடம் செய்கின்றீர்கள்?எப்படி நினைவில் வைத்துக்கொள்கின்றீர்கள்
என்னை பொறுத்த மட்டில் வசனங்களை உடன் உடன் நினைவில் வைத்துக்கொள்வதென்பது கடினமான விடயம்.தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் சொல்லுமளவிற்கு மனப்பாடம் செய்வதை தவிர வேறு வழி இல்லை. ஒவ்வொருவரும் தங்களுக்கு என்றொரு முறையை வைத்துக்கொள்கிறார்கள். நான் முழுமையாக ஸ்கிரிப்டை புரிந்து கொண்டும் முன் பின் வரக்கூடிய காட்சிகளை தெரிந்து கொண்டும்
என்னை தயார் படுத்துகிறேன்.
?.தமிழ்திரைப்படங்கள்தவிர்ந்தவேறுமொழி தொலைக்காட்சிகளில் நடித்தஅனுபவங்கள்உண்டா? உதாரணமாகஜேர்மன்தொலைக்காட்சிகளில்
ஜேர்மன் தொலைக்காட்சியில் சிறுவேடங்களில் நடித்துள்ளேன். கூடுதலாக இந்திய பெண் வேடங்களில் நடித்துளேன். எதிர்காலத்தில் வேறுமாதிரியான வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றேன்