– அரங்க மல்லிகா
லக்ஷ்மிராமகிருஷ்ணன் எழுத்து இயக்கத்தில் அம்மணி திரைப்படம் பார்த்தேன். மிக நீண்ட வருடங்களுக்குப்பிறகு எளியவர்களின் வாழ்க்கை, வாழிடம் ,வாழ்வியலுக்குரிய தொழில் ,வறுமை, இடநெருக்கடி ,வறுமையிலும் அன்பின் பகிர்வு ஆகியன கதையை வலுவாக்கியிருக்கிறது.அம்மணி என்ற வயதான பாட்டியின் குப்பைப்பொறுக்கும் தொழிலாளியாக அறிமுகப்படுத்தியிருப்பது தனித்துவமான யாரும் நினைத்துப் பார்க்காத கதையம்சம் . கதையை நகர்த்தும் அவர் பண்பு அலாதி. வயதானவர்களைக்குடும்பத்தினர் வெறுத்து ஒதுக்கும் அன்பற்ற மனமும் அவர்களைப் பாரமாகப் பார்ப்பதும் அனாதை இல்லத்திற்கு விரட்டுவதும் என ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கும் இரக்கமற்ற செயலை ப் பதிவு செய்துள்ள காட்சிகள் மனதை உலுக்குகின்றன.
இருப்பினும் அவர்களின் புறக்கணிப்பைச் சிறிதும் பொருட்படுத்தாது குப்பைப்பொறுக்கி பணம் சேர்க்கும் உழைப்பாளியாக யாரையும் சார்ந்து வாழக்கூடாது. தெருவில் படுத்துக்கிடக்கும் நாய் போல வாழப்பழகிக்கொள்ளும் பக்குவம் வேண்டும். இது தனித்து வாழும் ஒவ்வவொரு பெண்ணுக்குமான எச்சரிக்கை .பெண்கள் அரசு பணியில் இருந்தாலும் குழந்தைகளுக்காக கடன் பெற்று வாழவைப்பதும் ஓய்வு பெறுங்காலத்தில் சேமிப்புப்பணம் வரும் எனக்காத்திருக்கும் பிள்ளைகள் சுயநலத்தோடு அவளை தனித்து அலையவிடுவதும் யதார்த்தின்அவலம்.ஒவ்வொரு பெண்ணும் குடும்பத்துக்காக கணவன் இல்லாமல் உழைப்பதும் அடையாளமற்று வாழ்வதும் தேவையில்லை என உணரச்செய்து தனக்கான வாழ்க்கையை யாருக்காகவும் இழந்திடாது மகிழ்ச்சியோடு வாழ்வதற்குரிய தேர்வு தேவை என அழுத்தமாக அம்மணியாக வாழும் பதிவை லக்ஷ்மிராமகிருஷ்ணன் மிக நன்றாகச்
சொல்லியிருக்கிறார்.
சொல்வதெல்லாம் உண்மைதான்.