-மலையகத்திலிருந்து தயானி விஜயகுமார் –(thanks http://kalkudahnation.com/54083)
சமகாலத்தில் இலங்கையில் பெண்களுக்கெதிரான வன்முறைச் சம்பவங்கள், பாலியல் துஸ்பிரயோகங்கள், வீட்டு வன்முறைகள், கடத்தல், கொலை, போன்ற பல்வேறு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இதன் காரணமாக, பெண்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதோடு, சுதந்திரமாக வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைப் பொருளாதாரத்தில் அதிகளவு பங்களிப்பினை வழங்கும் இவர்களின் வாழ்க்கை நிலை பாதுகாப்பற்றுக் காணப்படுவது கவலைக்குரியது. அத்தோடு, சிறுவர்களைப் பராமரிக்க வேண்டிய பாரிய பொறுப்பு பெண்களிடம் காணப்படுவதால், தங்களின் உரிமையுடன் சிறுவர்களின் உரிமையினைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைக்குள்ளாகியுள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில், பெண்களின் உரிமைகளை அனுபவிக்கவும் அவர்களின் பிரச்சினை, விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ள அரசியலில் பெண் பிரதிநிதித்துத்துவத்தை அதிகரிக்க வேண்டியது மிக அவசியமாகும். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பில் இலங்கை சர்வதேச பாராட்டினைப் பெற்றதொரு நாடாகும். அவ்வகையில், சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் உலகில் முதலாவது பெண் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டதோடு, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் ஜனாதிபதியாக கடமையாற்றியதும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பில் சர்வதேச கீர்த்தியைப் பெற்றுக்கொண்ட செயற்பாடாகும். உலக வல்லரசாகக்காணப்படும் அமெரிக்காவில் கூட பெண் ஜனாதிபதியொருவர் இதுவரையில் தெரிவு செய்யப்படாத நிலையில், அபிவிருத்தியடைந்து வரும் நாடான இலங்கையில் பெண்கள் அரசியலில் முக்கியத்துவம் பெற்றது விசேட அம்சமாகும். ஆரம்ப காலத்திலிருந்து இலங்கையில் பெண்களின் பிரதிநிதித்துவமானது வித்தியாசமான முறையின் அடிப்படையில் உள்வாங்கப்பட்டு வருகின்றது. அதாவது திடீரென உறவினர் இறந்து விட்டால், அவ்வெற்றிடத்தினை நிரப்ப வேண்டிய சூழ்நிலைக் காரணமாக பெண்கள் அரசியலில் நுழையக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. 1931ஆம் ஆண்டு ருவன்வெல்ல தேர்தல் தொகுதியில் எட்லின் மொலமுரே என்பவர் அரச சபைக்குத்தெரிவு செய்யப்பட்டார்.
இவர் இலங்கையில் சட்டசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் பெண்மணி என்பது சுட்டிக்காட்டத்தக்கது. இவர் தந்தையின் மறைவிற்குப் பின்னர் இடைத்தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதைப்போல இலங்கையின் முதல் பிரதமர் உட்பட பல்வேறு பெண் பிரதிநிதிகள் உறவினர் இறப்பின் பின்னர் அரசியலில் உள் நுழைந்துமை சுட்டிக்காட்டத்தக்கது. இருப்பினும், அனைத்து பெண் பிரதிநிதிகளும் உறவினரின் இறப்பினால் அரசியலில் நுழைந்தனர் என்று கூறி விட முடியாது. விலியன் குணவர்த்தன. குசுமா குணவாத்தன. அனோமா கமகே போன்ற அரசியல் தலைவர்கள் கணவன் உயிருடன் இருந்த காலத்திலே அரசியலில் நுழைந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. அரச கொள்கை உருவாக்கத்திலும் உயர் நிர்வாகத்திலும் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவான வீதத்திலேயுள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் 6 சத வீதத்திற்கும் குறைவான பெண் பிரதிநிதித்துவம் காணப்படும் அதே வேளை, மாகாண சபையில் 6 சத வீதமாகவும் உள்ளூராட்சி மன்றத்தில் 1.6 சத வீதமாகக்காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டு Inter parliamentary union பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பாக 140 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் இலங்கை 128ஆவது இடத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு, சர்வதேச மட்டத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பில் நோக்கும் போது, ருவண்டா 64%, பொலிவியா 53%, கியூபா 49% என்ற அடிப்படையில் காணப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில், 25 சத வீதத்தினைக்கூடப் பூர்த்தி செய்யாத இலங்கையில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இலங்கை அரசியல் யாப்பில் சமத்துவம், பாரபட்சத்தினைத்தடுத்தல் எனும் அடிப்படை விடயங்களை உள்ளடக்கிய போதும், பெண் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான விசேடமான முறைகள் காணப்படாமை குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்தோடு, உறுப்புரிமை 12(2) சமயம், பால், நிறம், பால், ஜாதி, பிறப்பிடம் காரணமாக எவ்வித பாரபட்சத்திற்கும் உள்ளாகக்கூடாது எனக்கூறியுள்ளது. நடைமுறையில் பெண்கள் பாரபட்சத்திற்குள்ளாகின்றனர். அரசியல் சலுகைகளை பெற்றுக்கொள்வதில் ஆண்களுக்கு கிடைக்கும் சலுகைகள் பெண்களுக்கு கிடைப்பதில்லை. எனவே, இவ்வாறான முறை மாற வேண்டுமாயின், அரசியலமைப்பில் பெண் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். சம காலத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை 25 சத வீதமாக அதிகரிப்பது தொடர்பில் சட்டமூலமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஐம்பது சத வீதத்திற்கு அதிகமான பெண்கள் வாழும் நாட்டில் 50 சத வீதப்பிரதிநிதித்துவம் அவசியமெனும் நிலையில், 25 சத வீதம் குறைவானது எனக்கூறப்பட்டாலும், தற்போதிருக்கின்ற ஆறு வீத பிரதிநிதித்துவத்தை விட, இது கூடுதலான தொகை என்பதால் இவ்வதிகரிப்பு வரவேற்கத்தக்கதாகவுள்ளது. இன்றைய காலத்தில் அதிகளவான பெண் பிரதிநிதித்துவத்தினை வழங்கிய நாடுகளானது கோட்டா முறையினைப் பின்பற்றி வருவதினைக் காணலாம். அவ்வகையில், 48 சத வீதமான நாடுகள் கோட்டா முறையினைப் பின்பற்றி வருகின்றன.
இம்முறையினைப் பயன்படுத்துவதன் மூலம் கணிசமானளவு பெண் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க முடியும். இந்தியா, ஈராக், நேபாளம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ருவண்டா போன்ற நாடுகளில் கோட்டா முறை அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்நாடுகளில் பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருகின்றன. இவ்வாறான முறையினை இலங்கை அரசியல் யாப்பில் புகுத்துவதன் மூலம் தற்காலத்தில் காணப்படும் 6 சத வீதத்திற்கும் குறைவான நிலையினை மாற்றி, படிப்படியாக பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க முடியும். அத்துடன், தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் மற்றும் போனஸ் ஆசனம் என்பவற்றினை வழங்குவதில் பெண்களைக் கவனத்திற்கொண்டு அவர்களுக்கான வாய்ப்பினை வழங்க வேண்டும். பெண்களின் அரசியல் ரீதியான பிரதிநிதித்துவத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான விசேட சட்டங்களை உருவாக்குவததுடன், சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை அமுல்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வகையில், இலங்கை கையொப்பமிட்டுள்ள அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம், UN Convention Against Torture And The Cruel, CAT, CEDEW, UN Declaration on The Elimination of Vioance Against Women என்பவற்றில் கூறப்பட்டுள்ள அரசியல் பிரதிநிதித்துவத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். ஆண்களுடன் ஒப்பிடும் போது, பெண்கள் குறைவான தலைமைத்துவக் கொள்கைகளையுடையவர்களாகக் காணப்படுகின்றனர். எனவே, கிராமிய மட்டம் தொடக்கம் பாராளுமன்றம் வரை பெண்களின் அரசியல் பங்குபற்றுதல் தொடர்பான விழிப்புணர்வினையும் தலைமைத்துவத்தின் அவசியத்தையும் வலியுறுத்துதல். இவ்வாறான பயிற்சிகள், விழிப்புணர்வுகள், கருத்தரங்குகள் தற்காலத்தில் ஓரளவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. United Nations Development Programme வறிய பெண்களின் அரசியலில் பிரதிநிதித்துவத்தினை இலங்கையில் ஏற்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தும் பொருட்டு, கருத்தரங்குகளை மேற்கொண்டு வருகின்றது. இதில் வறிய பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது. The Sinhala Tamil Rural Women’s Networks எனும் அமைப்பு மாகாண மட்டத்தில் வறிய பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கின்றது.
இவ்வாறான முயற்சிகள் மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளும் முயற்சிகளாகக் காணப்படுகின்றன. இவற்றினை தேசிய ரீதியில் முன்னெடுக்க வேண்டும். இலங்கையில் பெரும்பாலான அரசியல் கட்சிகளில் 90 சத வீதத்திற்கு மேலான ஆண் வேட்பாளர்களே அதிகமாக பிரதிநிதித்துவம் செய்கின்றனர். இவ்வாறான நிலையினை மாற்றி, பெண் பிரதிநிதிகளையும் சமத்துவமான அடிப்படையில் பிரதிநிதித்துவம் செய்வதன் மூலம் பெண் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க முடியும். இவ்வாறான விடயங்களை மேம்படுத்துவதற்கான முயற்சியினை அழுத்தக்குழுக்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பன மேற்கொள்ள வேண்டும். அத்துடன், அரசியல் கட்சிகள் பெண்களை குறித்த விகிதாசாரத்தில் வேட்பாளர்களாக நியமித்தால், அக்கட்சிகளுக்கு பரிசாக நிதியுதவி வழங்க வேண்டும். இவ்வாறான முறை பிரான்ஸ் நாட்டில் பின்பற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. பாலியல் ரீதியான தாக்கங்களுக்குள்ளாகுவதன் காரணமாக பெண்கள் அரசியலில் ஈடுபடத்தயங்குகின்றனர். பெண்கள் பாடசாலை, குடும்பம், பல்கலைக்கழகம் என்பவற்றில் பாலியல் உபாதைகளுக்குள்ளாகுவதோடு, மாத்திரமின்றி அரச நிறுவனங்களிலும் (பாராளுமன்றம், மாகாண சபை, உள்ளூராட்சி மன்றங்கள்) என்பவற்றிலும் பாலியல் தொந்தரவுக்குள்ளாகக் கூடிய நிலை உருவாகியுள்ளது. பாலியல் ரீதியாக தொல்லைகள் ஏற்படுகின்ற போது, பொது விடயங்களில் தலையிடத் தயக்கம் காட்டுகின்ற நிலையேற்படும். எனவே, இவ்வாறான நிலையினை இல்லாதொழிக்க பெண்களுக்கு பாலியல் தொல்லைகளைக் கொடுக்கும் நபர்கள் மீது கடுமையான சட்டவிதிகளை ஏற்படுத்துவதுடன், இறுக்கமான தண்டனைகளையும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்தும் போது, உளவியல் பாதிப்புக்குள்ளாகாமல் அச்சமின்றி அரசியலில் நுழைவதற்கான வாய்ப்பேற்படுகின்றது. நகரத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது, கிராமத்தில் வாழும் பெண்கள் கல்வி, சுகாதாரம், பொருளாதார விடயங்களில் பின்தங்கிய நிலையிலே காணப்படுகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில், அரசியலைப் பற்றிச்சிந்திக்க முடியாத சூழ்நிலையேற்படுகிறது. பெண்களின் அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் பொழுதே வெளியுலகைப்பற்றி சிந்திக்க வேண்டிய நிலைப்பாடு உருவாகும்.
எனவே, பெண்களுக்கான அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொள்வது அரசின் கடமையாகும். மாத்திரமின்றி, பெண்களின் வேலைவாய்ப்பினை அதிகரிப்பதற்கான முயற்சியினை மேற்கொள்ள வேண்டும். அதாவது, பெரும்பாலான பெண்கள் தங்கி வாழ வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் போது, சுயமாகச் சிந்தித்துச் செயற்பட முடியாத நிலையேற்படுவதுடன், ஆண்களின் கீழ் தங்கி வாழக்கூடிய நிலையேற்படுகின்றது. எனவே, வறுமைய்யொழிப்பு, வேலைவாய்ப்பு, பொருளாதார அபிவிருத்தி என்பவற்றினை ஏற்படுத்துவதன் மூலம் பெண் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க முடியும். அத்துடன், கணிதம், பொறியியல், பௌதீக விஞ்ஞானம் போன்ற பாடங்களைக் கற்பதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இதன் மூலம் பெரும்பாலான ஆசிரியர்கள், எழுதுவினைஞர்கள், விற்பனைப்பெண்கள், தொழிற்சாலைத் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் உருவாகும் நிலைமையேற்படும். தற்காலத்தில் சிறியளவிலான பெண்களே தொழில் நிர்வாகிகளாகவும், முகாமையாளர்களாகவும் காணப்படுகின்றனர். இந்நிலை மாற்றமடையும் போது, கல்வி கற்ற ஒரு பெண் சமுதாயம் உருவாகும். அச்சமுதாயம் தங்களின் உரிமைகளை வென்றெடுக்கும் பொருட்டு அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பேற்படும். பெண் பிரதிநிதிகள் குறைவான வகையில் தேர்தலில் போட்டியிடும் போது, அவர்களுக்கு வாக்களிக்கும் வீதம் குறைவாகக் காணப்படுகின்றது. குறிப்பாக, பெண்களே பெண் பிரதிநிதிகளைத்தெரிவு செய்யத்தயங்குகின்றனர். 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத்தேர்தலில் 556 பெண் பிரதிநிதிகள் போட்டியிட்ட போதிலும், வெறுமனே 11 பேர் மாத்திரம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் 52 வீதத்தினைக் கொண்டுள்ள பெண்களின் இவ்வெண்ணிக்கையானது, மிகக்குறைவான வீதமாகும். இவ்வாறான நிலை மாற வேண்டும். அத்தோடு, பெண்கள் அரசியலில் பிரவேசிக்கும் போது, அவர்களுக்கான கௌரவத்தினை வழங்குவதோடு, அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். பெண்களுக்கான கௌரவத்தினைப் பாதுகாக்கும் பொருட்டு, அரசு உத்தரவாதமளிக்க வேண்டும். ஆண் பிரதிநிதிகளுக்கு வழங்கும் அனைத்துச் சலுகைகளையும் பெண்களுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்கும் போது, பெண்கள் அரசியலில் நுழைவதற்கான வாய்ப்பு அதிகமாகமேற்படும். பெண்கள் அரசியலில் நுழைவதற்கு அஞ்சுவதற்குக்காரணம், அரசியல் ரீதியான வன்முறைகளாகும். இவ்வாறான வன்முறைகள் ஏற்படுவதினைத் தடுப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். அரசியலில் பெண்கள் வருவதற்காக ஏற்படும் தடைகளை அரசு களைய நடவடிக்கையெடுக்க வேண்டும். அத்தோடு, ஊடகங்கள் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இவை நாடு தழுவியதாகக் காணப்பட வேண்டுமென்பது முக்கிய விடயமாகும். பெண்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும். ஆண்களுக்கு கீழே தான் தனது செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனும் விடயங்களை மாற்றியமைக்க வேண்டும். பெண்கள் பொது விடயங்களில் ஈடுபடுவதற்கு குடும்ப உறுப்பினர்கள் சுதந்திரம் வழங்க வேண்டும். கலாசார ரீதியல் காணப்படும் விடயங்களைக் காரணங்காட்டி பெண்களை ஓரங்கட்டுவதனைத் தவிர்க்க வேண்டும். பெண்கள் சுயாதீனமாகச் சிந்திப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். உயர் வர்க்கப்பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை விட, மத்திய தர மற்றும் அடிநிலை வர்க்கப்பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது. நடுத்தர வர்க்கப்பெண்கள் குடும்ப பொறுப்புக்கள், பொருளாதாரச் சிக்கல்கள், சமூகக்கட்டுக்கோப்புக்கள் காரணமாக, அரசியலில் ஈடுபட முடியாத நிலையேற்படுகின்றது. அடிநிலை வர்க்கப்பெண்கள் அன்றாட வாழ்கையே போராட்டமாக இருக்கின்ற நிலையில், அரசியல் பிரதிநிதித்தவம் தொடர்பாகச் சிந்திக்க முடியாத நிலையில், அவர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கீழ்நிலைப்பெண்கள் சிறிய கட்சியின் கொள்கையினை ஆதரித்தல், கோஷமெழுப்புதல், ஊர்வலம் செல்லுதல் போன்ற அடிப்படையில் அரசியலில் பங்குபற்றுகின்றனர். இருப்பினும், அவர்கள் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பில் சிந்திப்பதில்லை என்றே கூறலாம். சம காலத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் தாக்கஞ்செலுத்துகின்றன.
குறிப்பாக, வேட்பு மனுப்பத்திரம் தயாரிக்கின்ற போது, பெண் அபேட்சகர்களின் பெயரை உள்ளடக்குவதில் தொகுதியமைப்பாளர்கள் விருப்பம் கொள்ளாமை முக்கிய பிரச்சினையாகவுள்ளது. பெண்கள் அரசியல் கட்சியின் உறுப்பினராக இருக்கின்ற போதும், குறித்த அரசியல் கட்சிக்காகச் சேவையாற்றுகின்ற போதிலும், பெண் என்ற காரணத்தினால் வேட்புமனுப்பத்திரத்திலே பெண்களைப் புறக்கணிக்கின்ற போக்கு அதிகமாகக் காணப்படுகின்றது. அத்துடன், உறவினர், நண்பர்கள் கவனிப்பு வேட்புமனு வழங்குவதில் தாக்கஞ்செலுத்துவதால் அனுபவம், தலைமைத்துவம், அரசியல் பயிற்சிமிக்க பெண்கள் அரசியலில் நுழைவதற்கான வாய்ப்புக்கள் மட்டுப்படுத்தப்படுகின்றது. இலங்கையில் கிராம மட்டங்களிலிருந்து தேசிய மட்டம் வரை அரசியல் தலைவர்களின் குடும்பத்தலைவர்களே அரசியல் பிரதிநிதிகளாக வருவதற்கான வாய்ப்புக்களே பெரிதும் காணப்படுதனை நடைமுறையில் காணலாம். இதனால் அடிமட்ட மக்களின் அரசியல் பிரவேசத்திற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுகின்றது. பெண் உறுப்பினர்கள் தேர்தலில் போட்டியிட்டாலும், அவர்களுக்கு உற்சாகமூட்டி, நிதியுதவி வழங்கி, களமமைத்துக் கொடுப்பவர்கள் மிக அரிதாகவே காணப்படுகின்றனர். குறிப்பாக, குடும்ப மட்டத்திலிருந்து கூட பெண்களுக்கு ஆதரவு கிடைக்காமை முக்கிய சவாலாகவுள்ளது. அத்துடன், ஆண்கள் தான் அரசியலில் செல்வாக்குச்செலுத்த வேண்டும் எனும் மனநிலையில், ஆண்களோடு பெண்களும் வாழக்கூடிய நிலை இந்நாட்டில் காணப்படுவதால், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதில் பெண்களே நாட்டம் கொள்வதில்லை எனும் நிலை காணப்படுகின்றது. சமகாலத்தில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடக்கம் தேசிய மட்டத்திலான தேர்தல்கள் நடைபெறும் காலங்களில் வேட்பாளர்கள் வாக்கு வங்கிகளை நிரப்பிக் கொள்வதற்காக பொருட்கள் மற்றும் சேவைகளை வாக்காளர்களுக்கு வழங்கி வருவது முக்கியமானதொரு செயற்பாடாக மாறியுள்ளது. குறிப்பாக டீ சேர்ட், தொப்பி, வீட்டுப்பொருட்கள், விவசாயப்பொருட்கள், மூக்குக்கண்ணாடி, பாடசாலை உபகரணங்கள், கூரைத்தகடுகள், பணம் மற்றும் மதுபானம் போன்றவற்றைப் பகிர்ந்தளித்தல் என்பன தேர்தல் சட்டத்திற்கு ஒவ்வாததாயினும், இது பிரசித்தி பெற்றதொரு உபாய முறையாக மாறியுள்ளது. இவ்வாறான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான பொருளாதார வசதிகள் பெண்களிடம் காணப்படாமை ஒரு குறைபாடாகவுள்ளது. இவ்வாறான சலுகைகளுக்கு சில சமூகப்பிரிவினர் இசைவாக்கமடைந்துள்ளதால், பெண் வேட்பாளர்கள் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாததால், தோல்வியடைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது. ஊடகங்கள் வேட்பாளர்களை வெற்றியடையச் செய்வதற்கு முக்கியமான வகி பாகத்தினை மேற்கொள்கின்றன. சில ஊடகங்கள் கட்சி சார்பாகச் செயற்படுகின்ற போது, விளம்பரங்களை மேற்கொள்ளத்தடைகள் காணப்படுகின்றன. அத்துடன், விளம்பரப்படுத்துவதற்கு போதுமான நிதி வசதிகள் காணப்படாமையும் முக்கிய சவாலாகவுள்ளது.
சமகாலத்தில் தேர்தல் சமூக வலைத்தளங்கள் தேர்தல் வெற்றியினைத் தீர்மானிப்பதில் மிக முக்கிய பங்களிப்பினைச் செலுத்துகின்றன. சமூக வலைத்தளங்கள், அதனைப்பயன்படுத்துதல் தொடர்பில் அடிமட்ட பெண்களுக்கு போதியளவு அனுபவம், அறிவு காணப்படாமையால் காலத்திற்கேற்ப பிரசாரத்தினை மேற்கொள்வதில் தோற்று விடுகின்றனர். அவ்வாறு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முற்பட்டாலும், தேசிய மட்டம் வரை செல்லாது குறிப்பிட்ட வரையறைக்குள் முடங்கி விடுவதால் போதியளவான பயன்பாட்டினைப் பெற முடியாதுள்ளது. மேற்குறிப்பிட்டளவில் பெண்கள் அரசியலில் நுழைவது சிக்கல் நிறைந்ததாகக் காணப்படுகின்ற போதிலும், மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், பால்நிலை சமத்துவம் வளர்ச்சியடைந்து வருகின்ற இக்காலக்கட்டத்தில், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அரசியலில் பெண்களின் பிரதிநிதித்தவத்தினை அதிகரிக்க வேண்டுமாயின், அரசின் கட்டமைப்பு, பெண்களின் வாழ்நிலை கட்டமைப்பு என்பவற்றில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். அரசியல் கட்டமைப்பில் பெண்களின் அரசியலில் பெண்களின் பிரதிநிதித்தவத்தினை ஏற்படுத்துவதன் பொருட்டு சில மாற்றுத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். உதாரணம்: கோட்டா முறை, தேசியப்பட்டியல் உறுப்பினர்களில் பெண்களை இணைத்தல். பெண்களின் வாழ்நிலை கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த வேண்டுமாயின் கலாசார, குடும்ப ரீதியில் காணப்படும் தடைகளைக் களைய வேண்டும். சர்வதேச மட்டத்தில் பெண் பிரதிநிதிகளை அதிகளவாகக் கொண்ட நாடுகளில் இலஞ்சம், ஊழல் என்பன குறைவான அளவில் காணப்படுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன.
இவ்வாறான நிலையில், பெண் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் பொது மக்கள் அதிகளவு கவனஞ்செலுத்த வேண்டும். குறிப்பாக, பெண்களே பெண்களுக்கு வாக்களிக்கும் பட்சத்திலாவது பெண் பிரதிநிதித்துவத்தினை அதிகரிக்க முடியும். அத்தோடு, பெண்களைப் பலவீனமானவர்கள் என்று எண்ணும் நிலையினை மாற்ற வேண்டும். ஆண்களைப் பொறுத்த வரையில், பெண்களைக் காத்திரமானவர்களாக நோக்கப்படாத நிலை காணப்படுகின்றது. இந்நிலைப்பாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தி சமத்துவ வாய்ப்புக்களைக் கொடுக்க வேண்டும். இவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த முயற்சித்தாலும், இலங்கையில் சம பெண் பிரதிநிதித்துவம் சாத்தியமாகுமா? என்பது வினாக்குறியே. காரணம், ஆண் தலைமைத்துவ ஆட்சிமுறைக்கு மக்கள் பழக்கப்பட்டு விட்டதால், பெண்களே பெண் பிரதிநிதிகளுக்கு வாக்களிக்க முடியாத நிலையேற்படுகின்றது. இருப்பினும், பெண் பிரதிநிதித்துத்தினை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பெண் களமைப்புக்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருவது வரவேற்கத்தக்கதாகும். பைக்சன் என்பவர் “ ஜனநாயக ஆட்சி என்பது பெண்களது அரசியல் பிரதிநிதித்தவத்துடன் தொடர்பு படுகின்றது” எனக்கூறுகின்றார். ஜனநாயகத்தின் பண்புகளின் சமத்துவமென்பது முக்கிய எண்ணக்கருவாகக் காணப்படுகின்ற போதிலும், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் சமத்துவ சிந்தனையை அரசுகள் பின்பற்ற மறுக்கின்றமை குறைபாடான ஒரு விடயமாகும்.
தற்காலத்தில் பாராளுமன்றத்தில் 21.8 சத வீதமான பெண்கள் அரசியல் நடவடிக்கைகளில் பங்குபற்றுவதாக 2014ஆம் ஆண்டு Stockholm University மற்றும் Inter Parliament Union நடாத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உலக சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்ட சனத்தொகையைக் கொண்டுள்ள பெண்களின் இவ்வரசியல் பங்குபற்றுதலானது, பால்நிலை சமத்துவத்தினை ஏற்படுத்துவதினைக் காணலாம். இன்று அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது எமது நாட்டுக்குரிய பிரச்சினையாக மாத்திரமின்றி, சர்வதேச பிரச்சினையாகவே காணப்படுகின்றது. தெற்காசிய நாடுகளைப் பொறுத்தளவில், குறைந்தளவான பெண் பிரதிநிதித்தவத்தினைக் கொண்ட நாடாக இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவ்வாண்டு பெப்ரவரி மாதம் பெண் பிரதிநிதித்துவத்தினை 25 சத வீதமாக அதிகரிப்பதற்கான சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டது. ஆனால், இச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் இதுவரையில் ஒரு தேர்தலும் இலங்கையில் நடைபெறவில்லை. அவ்வாறு தேர்தல் நடைபெறும் போது, பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்படுமா? உயர்மட்ட பெண்கள் தான் மீண்டும் அரசியலில் நுழைவார்களா? சாதாரண மக்களின் அரசியல் பிரவேசத்திற்கு களமமைத்துக் கொடுக்கப்படுமா? போன்ற பல்வேறு விடயங்களைக் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.