நேர்காணல் :-யோகி (மலேசியா)
தோழி கல்பனாவை நான் சந்தித்தது முதல் முறை என்றாலும், பழகுவதற்கு அவர் புதியவர் மாதிரி தோன்றவில்லை. கண்களைப் பார்த்து பேசுகிறார்; அத்தனை தெளிவாகவும் விவரமாகவும் இருக்கிறது அவருடனான உரையாடல். கேள்விகளை முன்வைக்கும் போதும், அவரிடம் பதில்களை பெரும்போதும் மிகவும் நிதானமாகவே பேசுகிறார். ஒவ்வொருவரையும் மிக அழகாக அவதானிக்கிறார். சென்னையில் வசிக்கும் அவர் தற்போது பல களப்பணி செய்யும் தன்னார்வ நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும், பயிர்சியாளராகவும் இருக்கிறார். பெண்களுக்கான நில உரிமை குறித்த முனைவர் பட்ட ஆய்வினை காந்தி கிராமிய பல்கலைக் கழக அரசியல் அறிவியல் மற்றும் வளர்ச்சி நிர்வாகத் துறையில் மேற்கொண்டு வருகிறார். தமிழக விவசாயப் பெண்களின் கூட்டமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். பினாங்கில் ஊடறு இணையத்தளம் ஏற்பாடு செய்திருந்த பெண்கள் சந்திப்பில் கல்பனா முதல்முறையாக கலந்துகொண்டு ‘எதிர்காலத்தை நோக்கிய பயணத்தில் பெண்’ என்ற தலைப்பில் தனது கட்டுரையை சமர்பித்தார். ஊடறுக்காக அவரை நேர்காணல் செய்யதது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விடயமாக இருந்தது. தனது பதில்களின் வழி தோழி கல்பனா மனதிற்கு இன்னும் நெருக்கமாகியிருக்கிறார். இனி கேள்வியும் கல்பனாவின் பதில்களும்…
?. கல்பனா என்பவர் சமூகத்தில் யாராக அறியப்படுகிறார்?
சமூக செயல்பாட்டாளராகவும் ஊடகங்களில் கல்வியாளராகவும், பெண்களுக்கான அரசியல் ஆலோசகராகவும் அறியப்பட்டிருக்கிறேன். நிறுவனங்களுக்கு பயிர்ச்சியாளராகவும், திட்டங்கள் உருவாக்குபவராகவும் அறியப்படுகிறேன். மேலும், அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மனித உரிமை செயல்பாட்டாளராக காணப்படுகிறேன். (சில நேரங்களில், பலருக்கு படித்த, மேட்டுக் குடி அதிகாரத் தோரணையிலும் காணப்படுகிறேன்.)
?. பெண் சுதந்திரம் என்று பேசும்போது பல சர்ச்சைகள் எழுகின்றதே? உண்மையில் பெண் சுதந்திரம் என்றால் என்ன?
பெண்ணானவள் குடும்பத்தின், அதன் மூலம் உருவாக்கப்படும் சமூகத்தின் சொத்தாக (உயிராக அல்ல) கருதப்படும் நிலை உள்ளதால், பெண்ணின் சுதந்திரம் இந்தக் கட்டுக் கோப்பினை உடைத்துவிடும் என்ற பயத்தினாலேயே பல சர்ச்சைகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. சமூகம் ஒரு கட்டுக்குள் இருக்கும் போது தான் அமைதி, ஆக்கம், வாழ்க்கை பாதுகாக்கப்படும் என்ற புரிதல் எல்லா அமைப்பினாலும் வலிந்து ஊட்டப்படுகிறது. குடும்பம் அதற்கான ஆதாரம். (family is the fundamental unit of society- UN Declaration).குடும்ப பராமரிப்பில் பெண்ணின் தனிப்பட்ட வாழ்வு (private domain) என்பது திருமணம் என்ற அமைப்பின் மூலம் கணவனிடம் ஒப்படைக்கப்படுகிறது. பின்பு, குழந்தைகள், சுற்றத்தார் என விரிவடைகிறது. இதே நிலைதான் பெண் குழந்தைகளுக்கும் பாதுகாத்து வளர்க்கப்படுகிறது. மேற்சொன்ன சமூகப் புரிதலை அசைக்கும் வண்ணம் நிகழ்த்தப்படும் எந்த சிந்தனையும், செயலும் குறிப்பாக பெண்ணால் நிகழ்த்தப்பட்டால் சர்ச்சைகளே ஏற்படும். பெண்ணியம், பெண் சுதந்திரம் பேசும், செயல்படும் ஆண்களும் உள்ளனர். ஆனால், அவர்கள் சர்ச்சைகளுக்கு உள்ளாக்கப்படுவதில்லை. சீர்திருத்த வாதிகளாக மட்டுமே கருதப்படுவர். பெண் சுதந்திரம் விழையும் பெண், போராளியாக அமைதியைக் குலைப்பவளாகவே காட்சி தருகிறாள். உண்மையில், பெண் சுதந்திரம் என்பது, பெண் சுயமாக சிந்தித்து செயல்படுவது. அவளுக்கான வாய்ப்புகளை அவள் தேடி பயணிக்கும் போது எந்த தடைகள் வந்தாலும், சமாளிக்கும் தைரியம், துணிச்சல், அறிவாற்றல் என அனைத்தையும் பெறுதல். இந்த சுதந்திர பயணத்தில் அவள் பிறர் உரிமைகளையும் மதித்து வளர்க்கும் பக்குவம் பெறும் போது, பொதுவெளியிலும் தனக்கான ஆளுமையைப் பெறுகிறாள்.
?. பெண்களால் ஏன் ஒரு பேச்சாளராக முத்திரை பதிக்க முடியவில்லை.
நிறைய பெண் பேச்சாளர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மொழிநடை ஆண் உலகு சார்ந்ததாக இருப்பதால் போட்டி அதிகமாக இருக்கிறது. முத்திரை பதிப்பது என்பது போட்டி சூழலைச் சார்ந்த்தது. போட்டி மன நிலை அல்லது சூழல் ஆண்களின் உலகம். பெண் பேச்சு கனிவானது, ஆழமானது, உருவகமானது, உயிர்ப்புள்ளது. அதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லையே தோழி !
?. அண்மையில் நடந்த ஒலிம்பிக் விளையாட்டில் இந்திய வீராங்கனைகளுக்கு நிகழ்ந்த, அக்கரையின்மை தொடர்பாக அரசு எம்மாதிரியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முன்மொழிவீர்கள்?
அரசு என்பது ஒரு இயந்திரம். அதற்கு ஆண்-பெண் வேறுபாடு கிடையாது. ஆனால் அரசை இயக்கும் ஆட்சியாளர்களுக்கு இந்த பாகுபாடு உண்டு. அதனாலேயே அக்கரையின்மையும் நிகழ்கிறது.
விளையாட்டுத் துறையில் பெண்களுக்கான தனிக் கொள்கையை அரசு வகுக்க வேண்டும். பெண் வீராங்கனைகளுக்கான சிறப்பு நிதி உருவாக்கப்பட்டு பெண்களாலேயே நிர்வகிக்கப்படவேண்டும். பெண் வீராங்கனைகளுக்கான சிறப்புத் திட்டங்கள் உருவாக்கி அனைத்து தரப்பு பெண்களும், குறிப்பாக கிராமப் புறப் பெண்களும் பங்கேற்க செய்ய வேண்டும்.இன்றும், நமது நாட்டில் விளையாட்டு மைதானங்கள், விளையாட்டுப் பொருட்கள் ஆண்களுக்கானதே. இந்நிலை மாற வேண்டும்
?. தமிழ் படைப்புலகில் கவிதைகளில் கவனம் கொள்ளும் அளவுக்கு சிறுகதைகளை பெண்களால் இயற்ற முடியவில்லையே? அம்பைக்குப் பிறகு அந்த இடத்தை யார் நிரப்புவார்கள் என நினைக்கிறீர்கள்?
தமிழ் படைப்புலகம் சமீப காலங்களில் பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றது. தமிழ் சமூக அரசியலானது, கதை, சிறுகதை, நாவல் என அனைத்திலும் ஊடுறுவி கேள்விக்குள்ளாக்கப்படும் காலம் இது. சாதி, ஆணாதிக்கத்தின் கூறுகளை கேள்விக்குள்ளாக்கும் தன்மை கொண்டது இந்த அரசியல். இத்தனை சவால்கள் அம்பைக்கும் அவர் எழுத்து காலத்தை சார்ந்த பிற பெண் எழுத்தாளர்களுக்கும் இருக்கவில்லை என்பது எனது கருத்து. பாமா, சிவகாமி, பூமணி, கோ.தர்மன் போன்றோரின் நாவல்கள் தமிழ் படைப்புலகிற்கு பெருத்த சவால்களைத் தந்துள்ளன. அவர்கள் வெளிப்படுத்தியுள்ள சூழல் சிறுகதை படைப்பையும் அசைத்துப் பார்க்கக் கூடியது.முற்றிலும், புதிய புனைவுடன், கடை கோடி பெண்ணையும் ஈடுபடுத்தி உருவாக்கப்படும் சிறுகதை வலி நிறைந்ததாகவே இருக்கும். யாரும் வலிகளை படிக்க விரும்புவதில்லை. புதிய வாசகர் வட்டம் தேவை.
?. தமிழ்நாட்டில் திருநங்கைகளை உண்மையாகவே அங்கிகரிக்க படுகிறார்களா?
திருநங்கைகளுக்கு அரசால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. சில திருநங்கைகள் வாழ்வில் தனிப்பட்ட அளவில் முன்னேற்றமும், மாற்றமும் ஏற்பட்டுள்ளது. ஊடகத்திலும் ஓரளவு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக அங்கீகாரத்திற்கு இன்னும் வெகு தூரம் உள்ளது. ஆண்-பெண் பாகுபாடு நீங்கும் போது தான், திருநங்கைகளுக்கான சமூக அங்கீகாரமும் கிட்டும்.
?. விளிம்பு மனிதர்களின் குரல்கள் நாளுக்கு நாள் ஒடுக்கப்படுவதும் நசுக்கப்படுவதும் அதிகரித்துள்ளதே? இதில் டிஜிட்டல் இந்தியா என்று பிரதமர் மோடி அறிமுகப்படுத்தியிருப்பது எந்த அளவுக்கு சாத்தியப்படுகிறது?
மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்குமான ஆதரவு குரல். விளிம்பு நிலை மனிதர்களுக்கான குரலை ஒடுக்கவோ அல்லது அதனையும் வியாபாரமாக்கவோ தான் அது பயன்படுகிறது.
எந்தக் குரலையும் காவிமயம் என்ற ஒற்றைக் குரலாக்குவதற்கான திட்டமே டிஜிட்டல் இந்தியா திட்டம். இந்தியாவில் அது தொழில் நுட்பம் மட்டுமே அல்ல.
?. ”தலித் என்பதாலும் பெண் என்பதாலும் இரண்டு நிலைகளிலும் பாதிக்கப்படுகிறாள் தலித் பெண். இவைகளில் இருந்து ஒரு சேர விடுபட வேண்டிய நிலையே ‘தலித் பெண்ணியம்”என்கிற இந்த வாசகங்களை குறித்த உங்கள் சிந்தனை என்ன?
உண்மை. தலித் பெண்ணியம் என்கிற உருவாக்கம் பொதுப் பெண்ணிய உருவாக்கத்தை வெகுவாகவே அசைத்து ஆட்டியிருக்கிறது. சாதி, ஆணாதிக்கம், முதலாளித்துவம், இன்னும், இன்னும் பலவாக உள்ள கட்டமைப்புகளை அடித்து நொறுக்கும் அதிகாரம் பெற்றது தலித் பெண்ணியம். இதில் ஒரு சிக்கல் ஆண்களால் கட்டமைக்கப்பட்ட அடையாள அரசியல். தலித் பெண்ணியம் இந்த அதிகாரக் கட்டமைப்பிலிருந்து விடுபட்டால் மட்டுமே மாற்றம் சாத்தியப்படும்.
?.ஆண்-பெண் சம உரிமை இன்றும் நிறைவேற்றப்படாத ஒன்றாகவே இருக்கிறது. பெண்களுக்கான சொத்துரிமை, இந்த 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ஒரு சதவீதமாக இருக்கும் தற்போதைய நிலை குறித்த உங்கள் எண்ணங்கள் என்ன?
தற்போதைய சொத்துரிமை என்பது பெண்ணை அவள் பிறந்த வீட்டில் ஒரு பங்குதாரராக மட்டுமே அங்கீகரிக்கச் செய்துள்ளது. இந்திய திருமணத்தின் போது வரதட்சனை, சீர் வரிசை என அனைத்து செலவுகளையும் செய்யும் கடமை, பிறகு வாழ்நாள் முழுவதும் தாய்வீட்டு சீதனம் என பெரும் சுமையை பெண்ணிற்கும் அவளது தாய்வீட்டிற்குமே வழங்கியுள்ளது. இந்த நிலையில் சொத்துரிமை சட்டம், பெண்ணை அவள் தாய் வீட்டிலிருந்து சொத்து சண்டை போட்டு பிரிப்பதற்கும் அல்லது மனமிரங்கி சகோதரர்களுக்கு சொத்தினை விட்டுத் தருபவளாக மாறுவதற்குமே வழி வகுத்துள்ளது. பெண்ணின் பெரும்பான்மை உழைப்பையும் நேரத்தையும் சுரண்டும் கணவன் அல்லது அவனது பெற்றோர் வீட்டில், சொத்துரிமை என்பது கணவனைச் சார்ந்த்தாகவே உள்ளது. கணவன் இறந்தால், சொத்து கணவன் பெயரில் இருந்தால் மட்டுமே பிள்ளைகளுக்கு இணையாக ஒரு பாகத்தை பெண் பெருகிறாள். இந்தியாவில் பெரும்பால சொத்துக்கள் கூட்டு குடும்ப சொத்தாகவோ அல்லது மாமனார், மாமியார் பெயரில் உள்ள சொத்தாகவோ இருக்கின்றது. இந்நிலையில் அந்த வீட்டின் மருமகளாக உள்ள பெண்ணிற்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால், அவர்கள் சொத்தினை பாதுகாக்கவும், நிலத்தில் உழைக்கவும் மற்ற யாரையும் விட பெரும் கடமையும் சுமையும் பெண்களுக்கு உள்ளது. பல குடும்பங்களில் அடிமைத் தொழிலாகவே நடந்து வருகிறது. நிலமற்ற, சொத்தற்ற ஏழைக் குடும்பங்களில் பெண்ணே சொத்தாக, உழைக்கும் உற்பத்திக் கருவியாக பாவிக்கப்படுகிறாள்.
?. வனச்சட்டத்தின்படி பழங்குடியின மக்களுக்கு வனப்பகுதிகளில் பொருட்கள் சேகரிக்க சகல உரிமையிருந்தபோதும் வனத்துறையினர் பழங்குடியினப் பெண்களை,சிறுமிகளை “சோதனை” என்ற பெயரில் பாலியல் துன்புறுத்தல் நடைபெறுகிறது. இது போன்ற துயர நிகழ்வுகளில் களப்பணியாளராக நீங்கள் எவ்விதம் பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவக்கூடும்? உங்களின் ஆலோசனை என்ன?
பெண்களுக்கான, குறிப்பாக பழங்குடியினப் பெண்களுக்கான இயக்கங்களோ, ஆதரவு அமைப்புகளோ இல்லாத இடங்களில் இந்த வன் கொடுமைகள் நிகழ்கின்றன.
தமிழ்நாட்டில்,’பழங்குடியின் இருளர் சம்மேளனம்’ என்ற மக்கள் இயக்கம் இப்பிரச்சனைகளைக் கையாண்டு வருகின்றது. மேலும், மக்கள் மன்றம் போன்ற தன்னார்வ அமைப்புகளும் தலையீடு செய்து வருகின்றனர். பழங்குடியினப் பெண்களுக்கான கல்வி உரிமை உறுதி செய்யப்படும் போது தான் இக்கொடுமைகளுக்கு விடிவு.அவ்வாறான சம்பவங்களைத் தடுக்க அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண்களுக்கான இயக்கங்களுடன் தொடர்பு கொண்டு, சட்ட அமலாக்கத்தை கண்காணிக்க முடியும். சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று அங்கு நிகழும் சூழலை ஆய்வு செய்ய முடியும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மறுவாழ்விற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து தொடர்புகளை ஏற்படுத்தி தர இயலும். அரசுத் துறை மற்றும் அதிகாரிகளுடன் வாதாடி அவர்களுக்கான உதவிகளை பெற்றுத் தர முடியும்.
?. உங்கள் திருமண வாழ்க்கையை குறித்து ஊடறு தோழிகளுக்காக பகிர்ந்துகொள்ளுங்கள்.
சாதி மறுப்பு, காதல் திருமணம் செய்தவள் நான். ஒரு இடைநிலைச் சாதியில் பிறந்து, நான்கு சகோதரிகள், இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் இந்து மத குடும்பச் சூழலில் வளர்ந்து, கிறிஸ்துவ மீனவ சமூகத்தை சேர்ந்த சதீஸ் என்பவரை 1993ல் எனது 19 வயதில் திருமணம் செய்தேன். மிகுந்த மன உளைச்சலும், உயிருக்கு அச்சுறுத்தலுமான சூழலிலும், வாட்டும் வறுமையிலும் திருமண வாழ்வைத் தொடர்ந்தேன்.என் கணவர் சார்ந்த மீனவர் சமூகமே(கன்னியாகுமரி –கோடிமுனை கிராமம்) எனக்கு உண்மை உலகை அடையாளம் காட்டியது. குடும்பம், தனிச்சொத்து என்ற கட்டமைப்புகளுக்கு ஆட்படாமல், கடலையே தாயாக, அனைத்து சொந்தங்களையும், உறவுகளையும் இணைத்த ஒரு சமூக வாழ்க்கையை அங்கு கண்டேன். இந்து மதத்தின் கட்டுக்கள் எதுவும் அங்கு இல்லை. ஆண்-பெண் இணைந்து பேசுவதும், சிரித்து பொதுவெளியில் விளையாடுவதும் புதிய சுதந்திர அனுபவமாக உணர்ந்தேன். அன்றே தீர்மானித்தேன் இதுவே என் சமூகம் என்று.
1994-ல் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தேன். அவள் பெயர் சந்தியா. இன்று அவளுக்கு 23 வயது. 1995ல், என் கணவரின் சகோதரர் மூலம், மீனவப் பெண்களுக்கான களப் பணியாளராக சமூகப் பணியில் நுழைந்தேன். கடந்த இருபது ஆண்டுகளில் பல தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் பயணித்தேன். ஒரிசா, மத்திய பிரதேசம், ஆந்திரா, சத்தீஸ்கர், ஆகிய மாநில கிராமப்புறங்களுக்கும் சென்று கள ஆய்வுகள் செய்துள்ளேன். மீனவப் பெண்கள், பழங்குடியினப் பெண்கள், விவசாயப் பெண்கள், கால்நடை பராமரிக்கும் பெண்கள், கல்லுடைப்போர், நெசவுத் தொழிலாளர்கள், பனைத் தொழிலாளர்கள், நரிக் குறவர்கள், நகர்புற குடிசை வாழ் பெண்கள், ஆடை உற்பத்தியாளர்கள் என பலதரப்பு பெண்கள், ஆண்கள், குழந்தைகளைச் சந்தித்து அவர்களுக்கான வளர்ச்சித் திட்ட பணிகளைச் செய்து வருகிறேன். அரசு அமைப்பு வெளியிடும் கொள்கைகள், கல்வி உரிமைச் சட்டம், உள்ளாட்சிகளுக்கான அதிகாரப்பரவலாக்கத்திற்கான சட்டத் திருத்தங்களிலும் பங்களித்துள்ளேன். மனித உரிமைகளுக்காக வாதாடும் பயிர்சியாளராகவும், அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கு திட்டமிடும் ஆலோசகராகவும், செயல்பட்டு வருகிறேன். ஒன்றுமறியாத, ஒன்றுமில்லாத ஒரு பெண்ணாக வாழ்வைத் தொடங்கியவள் இன்று சமூகப் பணியாளராக உருமாறியிருப்பது என் பெற்றோர், சகோதர, சகோதரிகளுக்கு ஒரு ஆச்சரியமே.
?. மலேசியாவில் ஊடறு நடத்திய பெண்கள் சந்திப்பு தொடர்பாக உங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்?
ஊடறு பெண்கள் சந்திப்பு முதல் நாளுக்கு முந்தைய நாள் மாலையே நானும், தோழிகள் மாலதி, விஜி, ரஜினி, பாரதி இந்தியாவிலிருந்து பினாங்கு வந்து சேர்ந்தோம். அன்று மாலை கொடுத்த நெத்திலி கருவாடு குழம்பு சோறும், சுற்றி சிரித்து கும்மாளமிடும் புதிய தோழிகளும், மிகுந்த நிறைவத் தந்தது. இரவு, திட்டமிடல் கூட்டத்திலும் அனைத்து தோழிகளும் எந்த பாகுபாடும் இன்றி ஓர் இணையாக அமர்ந்திருந்து கதைத்தது (இலங்கைத் தோழிகளின் மொழியில்) பெரும் ஆர்வத்தை எனக்குள் தூண்டிவிட்டது. ஒன்றாக உண்டு, படுத்து, பகிர்ந்து வாழ்ந்த அந்த இரண்டு நாட்கள் என்றும் மறக்க இயலாதவை. முக்கியமாக, பல தலைப்புகளில் பெண்களின் தற்காலச் சவால்களை பகிர வைத்ததும், எதிர்கால சூழலை கணித்து முன்னெடுக்க வேண்டிய ஆலோசனைகளை கலந்துரையாடியதும் மிகச் சிறப்பு. மலேசிய நிகழ்வு முடிந்து கிட்டத் தட்ட இரண்டு மாதங்களாகியும் அது தொடர்ந்த பதிவுகளும், பகிர்வுகளும் நிகழ்ந்து கொண்டே இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. இதுவே உண்மையில் பெண்கள் சந்திப்பு, மலேசிய, இலங்கைத் தோழிகளே நீங்களே என்றும் எங்களை வழி நடத்தும் தலைவிகளாக இருங்கள்!