ஆழியாள் 28ஃ09ஃ2016
அறஃபா மலையிலிருந்து
மூன்று சாத்தான்களை
விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்
தைக்காத வெண்ணாடை தரித்தவர்கள்
‘போ…….போ
நீ போ…
நரகத்துக்கே போய்விடு’ என்று
கல் கொண்டடித்து
கூக்குரலிட்டுத் துரத்துகிறார்கள்
மூன்று சாத்தான்களும்
பல நூறாய்
உருவெடுத்து,
உருமாறி
ஓடித் தப்பின
வழிப்பட்ட ஊரில் இளைப்பாற
ஒரு குட்டிக் கம்பளத்தை
உதறி விரித்தன
உதறலில்
பவளத் திவலைகள் தெறிக்கப்
பெருநெருப்புக் கம்பளம்
உருண்டோடி
நெடும் நிலவிரிப்பாயிற்று
நிலங் கொடுநெருப்பாயிற்று
பீதி வாத்தியங்கள்
ஊர் நடுவே முழங்க,
செங்கம்பளத்தில்
மரணம்
வெகுகம்பீரமாய்க்
கால்களைப் பதித்தது
தீச் சுவாலை
எல்லாவற்றையும்,
எல்லோரையும்
துரத்தித் துரத்தித் தீண்டிற்று
ஊரோ
அக்கினிச் சூளையாய்
ஒளிர்ந்திற்று
புகையும்,
ரணமும்,
அலறல்களும்
களிவெறியேற்றின
அலெப்போ
ஏழடுக்கு நரகமாகிற்று
அலெப்போ
ஆறாக் கங்குகளின்
மனக்கிடங்காயிற்று
ஓ…
முள்ளிவாய்க்காலாயிற்று
அலெப்போ.