-மு.ஈ. ரமேஸ்வரி ராஜா
துடுக்கானவள்,
அடங்காதவள்,
ஆக்ரோஷமானவள்,
அசைக்க முடியாதவள்…
என்னை துரத்திய கால்களின்
இடுக்குகளில்
சிக்காமல் இருக்க
எனது எதிர்
பாய்ச்சல்களில்
கங்காருக்கும்
பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்…
எனது நகர்வுகளின்
ஓரத்தை சரித்துப்போட
திட்டமிட்டும்
திட்டமிடாமலும் வந்துபோன
இழுக்குகளை
சற்றும் தயங்காமல் சுளுக்கெடுத்தும் நிமிர்த்தியிருக்கிறேன்…
எனது கேமாராவின் வெளிச்சத்தில்
முகம் நுழைக்கவும்
எனது பேனாவின் ஈரங்களில்
விலாசத்தை
நனைத்து
காயவைக்கவும்
குறுக்கு சாக்கு
தேடிப்பாய்ந்த
நோட்டுகளை
எட்டி உதைத்தும் சாமர்த்தியம் செய்திருக்கிறேன்…
அப்பா,
பெரிய அண்ணன்,
சின்ன அண்ணன்
என மூன்று
உடல்களையும்
கிடத்தி வைக்கயிலே
என் வீட்டு
பெண்களின்
அழகைப் பறிக்க
வந்த சடங்குகளின்
கரங்களை
திமிரியும் முறித்திருக்கிறேன்…
என் தாய் மொழியை
பழித்துக்
கிழித்துப்போட
வந்த வெற்றுக் காகிதங்களை
எச்சரிக்கை ஏவுகணைகளைக்
கொண்டு நிரப்பியும் அனுப்பியிருக்கிறேன்…
துடுக்கானவள்,
அடங்காதவள்,
ஆக்ரோஷமானவள்,
அசைக்கமுடியாதவள்
என என் பெண்ணிய சக்தியை
முன்னெடுக்கும்
நான்…
தாய்மைக்குள்
புகும்போது மட்டும்
மௌனித்து விடுவது
ஏன்…?
என் கண் முன்னே
கடந்து போகும்
யாரோ ஒரு
குழந்தையிடம்
தோற்றுப்போவதில்
என்னை வெல்வதே
இல்லை நான்…..
அது என்னை கிள்ளிப்போவதிலும்
நான் அதை இரசித்து
அழுவதிலும்
என் அப்பாற்பட்ட
சக்தியிடம் மண்டியிடுகிறேன்
எனக்கும் ஒன்றை
கொடுத்திருக்கலாமே என்று…
துணை இணைந்த
எனது பதினாறு வருடங்களில்
சட்டென என்
வயிற்றை தொட்டு
வேவு பார்த்த
அட்டகாசங்களை
தடுப்பதற்கு என்னால்
என்ன செய்ய
முடிந்தது…..?
என் கருவறையின்
உள்ளே புகுந்து
அதன்
நுழைவாயில்களை ஆராய்ந்தும்
அலசியும்
கரிசனையை புகுத்துவதுபோல்
காரித் துப்பிய
வாயின் தாடைகளை
நான் உடைத்து
நொறுக்காமல்
விட்டது ஏன்……?
என் மாமியார்
வீட்டு டீவியின்
சீரியல்களில்
தடங்கலின்றி
ஓவ்வொரு நாளும் தூவிப்போகும்
மலடி அர்ச்சனைகளை
பஷ்பம் செய்ய
முடியாமல் எனது
நான்கு சுவர்களுக்குள் புகுந்து என்
முகம் பார்க்கும்
கண்ணாடியை
என் முன்னே
நான் கதறச்செய்தது
சரிதானா……..?
நான் சக்தி
கொண்டவளா
இல்லை சமாளிக்கத்
தெரிந்தவளா….?
தாய்மையின் ஏக்கத்தில்
நுழையும்போது
எனது சக்தியோடு முரண்பட்டு நிற்பதை
நான் உணராமல்
இல்லை…
இந்த முரண்பாடு
எனக்கு மட்டும்தானா
இல்லை
கற்பத்திலிருந்து
துறத்தப்பட்ட பிற
பெண்ணிய
சக்திகளுக்கும்
உண்டா….?
வயது கடக்கிறது
கேள்வியும் தொடர்ந்து
கொண்டே இருக்கிறது
நான் யார்…..?
துடுக்கானவள்,
அடங்காதவள்,
ஆக்ரோஷமானவள்,
அசைக்க முடியாதவள்…