வெற்றிச்செல்வி என்நெஞ்சுக்கு நெருக்கமான அன்புத்தங்கை. ஆளுமைமிக்க ஒரு படைப்பாளி. கொஞ்சும் குரல்வளம்கொண்ட அறிவிப்பாளர். ஓவியங்கள் வரைவதில் ஆர்வம்கொண்டவர். இவரது ஆறிப்போன காயங்களின் வலியை படித்துமுடித்தபோது, மனதினுள் ஏற்பட்ட உணர்வுகளை வார்த்தைகளில் வடித்திடமுடியாதுள்ளது.
முன்னரே நாங்கள் நட்பிலிருந்தபோதும், புலிகளின் குரலில் வெற்றியோடு பழகியநாட்கள், கூடிப்பணிசெய்த நாட்கள் பற்றிய நினைவுகள் என்னை வலுவாக ஆட்கொண்டுள்ளன இப்போது…
பகல்வேலை முடித்தபின் ஒன்றாக ஒரேஅறையில் தங்கியிருந்து நாங்கள் இரவுகளில் பலவித கருத்துக்களை, உள்ளக்கிடக்கைகளை பரிமாறிக்கொண்ட அந்த நாட்கள்….வசதிகள் குறைந்த வாழ்க்கையிலும் பெருநிறைவு கொண்டிருந்த நாட்கள் பேட்டிகள் பெறுவதற்காக சேர்ந்து பயணித்த நாட்கள்….மேடைகளில் இணைந்து கவிதைகள் பொழிந்தநாட்கள்…இணைந்து பங்கேற்ற கலந்துரையாடல்கள்…சேர்ந்து தயாரித்த நிகழ்ச்சிகள்……ஓய்வுஒழிச்சலின்றி சுழன்ற அந்தநாட்கள்… அவை மீண்டும்வராதா எனநினைக்கையில், இப்போது கண்ணீரை வரவைக்கின்றன…
ஒற்றைக்கையோடு காலையில் எனக்காக சுவையான ரீ போட்டுத்தரும் வெற்றியின் அன்பு இன்னமும் தொண்டைக்குள்ளும் மனதுக்குள்ளும் இனிக்கிறது.
இயலாது என்ற வார்த்தையை அவர் உச்சரித்து நான் பார்த்ததில்லை. தனக்கு ஒவ்வாத எதையாவது யாராவது சொன்னால் தலையை சாய்த்து ஒரு சிரிப்பின்மூலம் தன் பதிலை வெளிப்படுத்திவிடுவார் வெற்றிச்செல்வி. யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் தன்னுடையவேலைகளை தானே செய்துகொள்ளும் அவரின் மனோதிடம்……சீரான கண்பார்வையும் உடல்வலுவும் உள்ளவர்களே நடமாடஅஞ்சும் ஏ-9 நெடுஞ்சாலையில் எங்கள் வெற்றி துணிச்சலுடன் உந்துருளி ஓட்டும் திறன்…
ஒருதடவை பணிநிமித்தமாக மன்னாருக்கு நானும் வெற்றியும் மூன்றுநாட்கள் பயணித்தோம். மன்னார் வெற்றியின் சொந்தமாவட்டம். எங்களை அலுவலகவாகனத்தில் அழைத்துப்போனவர் தர்மண்ணை என நாம் அன்புபாராட்டிய தர்மலிங்கம். (அவர் பின்நாளில் புலிகளின் குரல்மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சில் கொல்லப்பட்டுவிட்டார்.)
மன்னாரின் ஒவ்வொரு இடத்தையும் அழகான விளக்கத்துடன் காட்டிய வெற்றி, துயிலுமில்லம் அழைத்துசென்று தனது மாவீரனான அண்ணன் தர்மேந்திராவின் கல்லறையையும் காட்டினார்.
தர்மேந்திராவின் கல்லறையின் தலைமாட்டில் மன்னார் மாவட்டத்தின் முதல்மாவீரன் நிதியின் கல்லறையையும் பார்த்தோம்……….
வெற்றியின் வீட்டுக்கும் போனோம். தன் போராளி மகள் நீண்டகாலத்தின்பின் வீட்டுக்கு வந்தபரவசம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும். என்னையும் தம்பிள்ளையாக கணித்து அன்புகாட்டிய அந்த உள்ளங்கள்……….
அந்த சின்னஞ்சிறு அடுப்படியில் பலகைக்கட்டையில் உட்கார்ந்து உணவு உண்டபோது, வயிற்றை நிரப்பியதுவெறும் உணவுமட்டுமல்ல..அவர்களின் அன்பும்;தான்….இப்போதும் அந்தச்சுவை என்நாக்கில் ஒட்டியிருப்பதாக உணர்கிறேன்…
இந்தஉணர்வுமிகுதியுடன்தான் இதனை எழுத முடிகிறது.
தடுப்புமுகாமில் வெற்றியும் ஏனையபோராளிகளும் அனுபவித்த துயரங்கள் எம்இனத்துக்காக அவர்கள் அனுபவித்தவை. தன்னலமற்றுநின்றதால் ஏற்பட்ட வலிகள் அவை. அந்தவலிகளும் துன்பங்களும் எமக்கும் வலிதருபவையாகவே உள்ளன.
தன்னுடையதும் தன் தோழிகளதும் துயரங்கலந்த அந்த நாட்களை வெறுமனே புலம்பாமல், மனதை தொடும்வகையிலும் நகைச்சுவையாகவும் பல இடங்களில் பதிவுசெய்துள்ளார் வெற்றிச்செல்வி. இந்தப்பதிவை அவர் வெளியிடுவதற்கு வெறுமனே அவரது படைப்பாற்றல் மட்டும் காரணமல்ல. அவரது துணிச்சலும்தான் காரணம்.
தன் மற்றக்கண்ணின் பார்வையையும் இழந்துவிடக்கூடாதே என்கின்ற முனைப்புடன், தற்போது சிகிச்சை பெற்றுவரும் வெற்றி விரைவில் நலம்பெறவேண்டும் என வேண்டுவதோடு,
இன்னும்இன்னும் வெற்றி தன்படைப்புப்பணியில் சாதனைகளைப்படைப்பார் என்ற என் நம்பிக்கையுடனான எதிர்பார்ப்புகளை முன்வைக்கின்றேன்.