விலகிச் செல்லும் திருடர்களும் மின்னும் நட்சத்திரங்களும்

இளம்பிறை (இந்தியா)

சாணி மெழுகிய சிறுதரை வளைத்து
கவிழ்ந்து கிடக்கும் இந்தக் கூரையின்
ஈர்க்குக் கட்டங்களில் புகும்
நிலவொளிக் கோலத்தில்
சிரங்குகளைச் சொறிந்தபடி
வரிசையாய் படுத்திருப்போம்
“பெண் பிள்ளைகள் வாசலில் படுக்கக்
கூடாதெ”ன்ற
அப்பாவின் கட்டளையால்

தூக்கத்தில் புரண்டு
அடுக்குப் பானைகளை
உதைத்துத் தள்ளி நொறுக்கியதிலிருந்து
மூங்கில்தட்டியில் சாக்குக் கட்டிய
கதவோரம் மாற்றப்பட்டது
அக்காவின் பிய்ந்த பாய்.

பனைமட்டையடைத்த
முன்தாழ்வாரத்தில்
ஒண்டிநிற்கும் குஞ்சுத்தாய் கோழி
“பக் பக”; கெனக் கத்தும் போதெல்லாம்
பாம்பு புகுந்திருக்குமோ என்ற
பயம் ஒளித்து
கோழிக்குத் துணிச்சல்போல்
தனக்குத்தானே…
தைரியம் சொல்லிக்கொள்ளும் அம்மா.

மூன்றுபடை மண்சுவர் மீது
கவிழ்ந்து கிடக்கும் பானைச் சட்டிகள்
அண்டா குவளை…நெல் மூட்டைகள் என
பரவலாகத் திருடு போய்க்கொண்டிருக்கின்றன
ஊருக்குள்.

குலதெய்வம் ஐயனார் கூடவே இருப்பதால்
நம் வீட்டுப்பக்கம்
திரும்பக் கூட முடியாது திருடனால்
உறங்கியிருப்போம் என்று
அப்பாவிடம் பெருமை கொண்ட
அம்மாவை மடக்கினாள்
ஒளி பார்த்து விழித்திருந்த தங்கை

எப்படி வருவான் திருடன்??
சுண்ணாம்பும் வெல்லமும் குழைத்து
ஒட்டையடைத்து…உலை கொதிக்கும்
சோற்றுப் பானை…
விளிம்பு நெளிந்து வெடித்தத் தட்டுகள்
ஏதை எடுப்பான் இஙஇகு வந்து??

“குடிக்கிற குவளையைச் சொல்..!
கருப்புக்கட்டியும்
பதநீரும் போதவில்லை யென்று
சுவரில் அடித்து…

நாங்கள் கோரமாக நெளித்த
“குவளைகளை எடுத்து வந்து
இதை நீ கூப்பிட்டுக் கொடுத்தாலம்
வாங்கிக் கொள்வானா திருடன்?
பேசாமல் படும்மா…ஐயனாராம் ஐயனார்”

பதிலுக்கு அதட்ட
சிரித்தால் அறவே பிடிக்காத
அப்பாவும் எங்களுடன்
வெகுநேரம் சிரித்த
ஒலியடங்கியபின்

நிலிவல் தெரிந்த
ஆலமரத்தடியில்
அழுதுகொண்டிருந்தாள் அம்மா
அவளின் கண்ணீர்த்துளிகள்
எண்ண முடியாத நட்சத்திரங்களாக
மின்னிக் கொண்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *