சிமாமந்தா எங்கோசி அடிச்சி-தமிழில் – பிரேம்
–நன்றிhttps://thetimestamil.com/
“பெண்ணியம் என்று தனியாக ஏன் சொல்ல வேண்டும்?” என்று சிலர் கேட்கிறார்கள். “மனிதவுரிமைகளில் நம்பிக்கை கொண்டவர்கள், அல்லது இது போன்ற வேறு பெயர்களை ஏன் பயன்படுத்தக் கூடாது?” ஏனென்றால் அது அவமதிப்பான பெயர் மாற்றம். பெண்ணியம் என்பது மனித உரிமையின் ஒரு பகுதி என்பது உண்மைதான், ஆனால் ‘மனித உரிமைகள்’ என்ற பொது அடையாளத்தைப் பயன்படுத்தும் போது பாலரசியலின் மிகக் குறிப்பான, தனித்த சிக்கல்களை அது இல்லாமாலாக்கி விடுகிறது. பெண்கள் என்ற உண்மையை மறந்துவிட்டுச் செல்வதற்கான ஒரு பாசாங்கான தந்திரமாகத்தான் அது இருக்கும். பாலரசியலின் வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான் என்பதை மறுப்பதற்குத்தான் அது உதவும். மனிதப் பிறவியாக இருப்பதன் துயரம் பற்றியதல்ல இதன் அரசியல், ஒரு பெண் பிறவியாக இருப்பதின் துயரம்தான் இந்த அரசியலின் அடிப்படை. மனித சமூகத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அதில் ஒன்றை கீழ்நிலைப்படுத்தி, அடக்கி வைத்திருப்பதுதான் உலகின் வரலாறு. இந்த வரலாற்று உண்மையை ஒப்புக்கொண்டால்தான் நாம் தீர்வுகளை நோக்கிக் செல்ல முடியும்.
பெண்ணியம் என்ற கருத்தாக்கத்தைக் கண்டு சில ஆண்கள் அச்சமடைகின்றனர். ஆண்கள் வளர்க்கப்பட்டுள்ள முறை அவர்களுக்குள் உருவாக்கும் பாதுகாப்பற்ற நிலையால்தான் இந்த அச்சம் உருவாகிறது. ஆண் என்ற அடையாளத்தை இழந்தால் எந்த பெருமதியும் அற்றவர்களாக மாறிவிடுவோம் என்ற உணர்வு அவர்களுக்குள் பதிய வைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இந்த அச்சம் ஏற்படுகிறது.
வேறு சில ஆண்கள், “ஆமாம் இது ஆர்வமூட்டும் ஒன்றுதான், ஆனால் அந்த முறையில் நான் சிந்திப்பதில்லை, பாலின வேறுபாடு பற்றி நான் சிந்திப்பதே இல்லை.” என்று சொல்லக்கூடும்.
அப்படி இருக்க முடியாது.
இதுவும் பாலரசியலின் ஒரு பகுதிதான். பல ஆண்கள் பால் வேறுபாடு பற்றிச் சிந்திப்பதில்லை. அல்லது பால் வேறுபாட்டை கவனத்தில் கொள்வதில்லை. என் நண்பன் லூயிஸ் சொன்னது போல பல ஆண்கள் சொல்கிறார்கள். கடந்த காலத்தில் நிலைமை கொடுமையாக இருந்திருக்கலாம். ஆனால் தற்போது எல்லாம் சரியாகிவிட்டது. பல ஆண்கள் நிலைமையை மாற்ற எதையும் செய்வதில்லை. நீங்கள் ஒரு ஆண், ஒரு உணவு விடுதிக்கு போகிறீர்கள் பணியாளர் உங்களை மட்டும் வரவேற்கிறார், “இந்தப் பெண்ணை ஏன் நீங்கள் வரவேற்கவில்லை?” என்று கேட்க உங்களுக்குத் தோன்றுகிறதா? இது போன்ற சிறிய நிகழ்வுகள் நடக்கும் போதெல்லாம் ஆண்கள் பேசியே ஆகவேண்டும். பாலரசியல் கலக்கத்தை உருவாக்கக்கூடும் என்பதால் அது பற்றிய உரையாடலை முடித்து வைக்கப் பல வழிகள் உள்ளன.
சிலர் உயிரியல் பரிணாம விதிகள் பற்றிய உதாரணத்தைத் தருவார்கள், மனிதத் குரங்குகளில் பெண் குரங்குகள் ஆண் குரங்குகளுக்கு முன் தலை வணங்குகின்றன – என்பது போன்ற பல உதாரணங்கள். ஆனால் நம்முடைய நிலை வேறு: நாம் மனிதக் குரங்குகள் இல்லை. மனிதக் குரங்குகள் மரத்தில் வாழ்கின்றன, மண்புழுக்களைத் தின்கின்றன. நாம் அப்படியில்லையே.
‘ஆண்கள், பாவம். ஆண்களும் கூட பல துயரங்களை அடைந்துள்ளனர். இப்போதும் ஆண்களுக்கு துயரம் உண்டு.’ இப்படி சிலர் கூறுவார்கள்.
ஆனால் இப்போதுள்ள சிக்கல் அதைப் பற்றியதல்ல. பாலின அரசியலும் வர்க்க அரசியலும் வேறு வேறு. வறுமையில் இருந்தாலும் ஆணுக்கு ஆணாக இருப்பதன் சிறப்புரிமைகள் உள்ளன. அதற்கும் பொருளாதாரத்திற்கும் தொடர்பில்லை. கருப்பின ஆண்களிடம் பேசும் போது, ஒடுக்குமுறை அமைப்புகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதை எந்த அளவுக்குத் தடுத்துவிடுகின்றன என்பதை நான் நிறையவே தெரிந்து கொண்டிருக்கிறேன். ஒருமுறை பாலரசியல் பற்றி ஒரு ஆணிடம் பேசிக்கொண்டிருந்தேன், அவர் என்னிடம் கேட்டார், “நீங்கள் ஏன் பெண்ணாக இருக்க வேண்டும்? ஏன் நீங்கள் ஒரு மனிதப் பிறவியாக இருக்கக் கூடாது?” இது போன்ற கேள்விகள் ஒரு தனிமனிதரின் மிகக்குறிப்பான அனுபவங்களை மறுத்து மொழியற்றுப் போகும் நிலைக்குத் தள்ளத்தான் உதவும். நான் ஒரு மனித உயிர்தான், ஆனால் பெண் என்பதனாலேயே எனக்கு இந்த உலகில் நடப்பவை எனச் சில உள்ளன. இதே ஆண் கருப்பின ஆண் என்ற வகையில் தனக்கான அனுபவங்களை எப்போதும் பேசுகிறவர்தான். (‘ஏன் உங்கள் அனுபவங்கள் ஆண் என்ற வகையிலோ மனிதர் என்ற வகையிலோ அமையாமல் கருப்பின ஆண் என்ற வகையில் அமைகின்றன’ என நான் கேட்டிருக்க வேண்டும்.)
அணங்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள சிமாமந்தா என்கோசி அடிச்சியின்
“நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக
இருக்க வேண்டும்”
தமிழில் – பிரேம்
நூலிலிருந்து சிறு பகுதி…
நன்றி: அணங்கு பதிப்பகம்