ச.விசயலட்சுமி(இந்தியா)
இறைவி படம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.தலைப்புக்குள்ளே என்ன சொல்ல வருகிறார்கள் என கவனித்தபோது இது பெண்களுக்கான படம் என அழுத்தி உச்சரிக்கப்பட்டது.கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பீட்ஸா பார்க்கவில்லை.ஜிகர்தண்டா பார்த்திருந்தேன்.
பெண்களுக்காக மட்டுமே பேசிவிடும் படம் என்றால் கமர்ஷியலாக படம் ஹிட் அடிக்குமா?அதற்கான வரவேற்பு மனநிலை உண்மையில் இருக்கிறதா?இத்தனை ஊடகங்களும் காமிராக்களும் விழித்துக் கொண்டிருக்கும் காலத்தில் பட்டப்பகலில் கௌரவக் கொலைகள் எனப்படும் ஆணவக் கொலைகள் நடக்கிற சமூக அரசியல் சூழலில் இதெல்லாம் சாத்தியமா?
இயல்பாகவே என்னுள் எழுந்த கேள்விகள் இவை.திரைத்துறையில் படம் தோல்வி அடையக்கூடாது என்கிற ஆர்வம் இயக்குநரின் மீதான நம்பிக்கையால் முன்னின்றது. கார்த்திக் நீங்க படத்தை சிறப்பாக எடித்திருக்கிங்க.பாராட்டுக்கள்,யு சான்று பெற்ற படம் என யோசிக்க வேண்டாம்.குடும்பத்தோடு பார்க்கவேண்டிய படம்.சுத்தியலை எடுத்தும் சிலையை எடுத்தும் ஏன் சார் மண்டையப் பொளக்கறீங்க குழந்தைகள் பார்க்க வேண்டாம் என இயக்குநர் முடிவெடுத்து விட்டதாக நினைக்கிறேன்.பொதுப்புத்தியில் பூஜாதேவ்ரியா கதாபாத்திரம் பேசும் வசனம் அச்சத்தை ஏற்படுத்தும்..வசனத்திற்கு பாராட்டுகள்.கதாபாத்திரத்திற்கு கூர்தீட்டி பின் மழுங்கவைத்து கொலை செய்துவிட்டீர்கள் கார்த்திக்.அவ்வளவு வசனம் பேசியவளை சேதுபதியிட்ம் சித்தப்பாவிடம் பேசிய வசனங்களோடு நிறுத்தியிருக்கலாம்,மீண்டும் விஜய்சேதுபதி மழையில் நனைந்து தேடிவர துண்டெடுத்து பூஜா தலைதுவட்ட,அவளைத் தேடிவந்த ஆணைக் கண்டவுடன் சேதுபதிக்கு சந்தேகம் வர அதை உறுதிப் படுத்த புரிஞ்சிக்கோங்க என்கிற ஒற்றை வார்த்தையில் வெளியேறுபவனை பூஜா சன்னல் வழியாக எட்டிப் பார்ப்பதும் கண்கலங்குவதும் அவள் அதற்குமுன் பேசிய அத்தனை வசனங்களையும் குழிதோண்டி புதைத்துவிட்டது. அஞ்சலி பாத்திரப்படைப்பு உறுதியாக தெரிந்தாலும் காதலுக்கும் சமூககட்டமைப்பு திணிப்பதையே ஏற்றுக் கொள்கிற சராசரி பெண்.கணவன் கேட்டதும் காதலை சொல்வதும் கூட படுத்தனாவுக்கு மட்டும் பதில் சொல்லமாட்டேன் என்பதும் எதனால் இந்த சொல்லமாட்டேன் என்கிற வசனத்தால் தைரியமான உறுதியான பெண்ணாக நம்ப செய்கிறீர்கள்.முதல் காதல் என சொன்னவளுக்கு ஏற்றுக்கொள்ள விருப்பமில்லாமல் தடுப்பது எது?
சூர்யாவின் மனைவி தேர்ந்தெடுத்த மறுமணத்தைத் தடுக்க கணவன் மீது மிச்சமிருக்கும் நம்பிக்கையும் அன்பும் காரணமாகிறது.சூர்யா தம்பிக்காக கொலைசெய்து மனைவி மறுமணம் செய்துகொள்வதற்காக வெறுத்துவிட்டு விலகும்படியான ஏகவசனம் ஏன்?அடுத்தநாள் செய்தியைப் பார்த்து அறிந்து கொண்டு தானே கணவனை விட்டு விலகியிருக்கலாமே?மீண்டும் கணவனால் வெறுப்பின் உச்சத்தில் அவளது வாழ்க்கையை முடிவெடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏன் வந்தது கார்த்திக். வடிவுக்கரசி சுயநினைவின்றி படுக்கையிலேயே, கடைசி வரை பாவம். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு படத்திற்கு மெருகு சேர்க்கிறது,படம் மழையோடு பயணப்பது கவிதை..படம் முழுவதும் வசனம் அருமை…இரட்டை அர்த்தம் பன்ச் டயலாக் பாடல் என அலுப்புத்தட்டாமல் ரசிகர்களைப் பார்த்துக் கொள்கிறீர்கள். ப்ளாக் அண்ட் ஒயிட் ஸ்ரீப்ரியா,ஸ்ரீவித்யா,லட்சுமி படங்களை மீண்டும் பார்க்க வேண்டும் என ஆர்வத்தைத் தூண்டும் படம் இறைவி…ஆர்.சி.சக்தியின் சிறை படத்தில் வெளிப்படும் துணிச்சல் கமர்ஷியலாகவும் வெற்றி பெற்றதாக நினைவு…வழக்கமான படமாக இல்லாமல் போனதில் மகிழ்ச்சி.கலைத்துறைப்பெண்ணின் பார்வைக்கும் சராசரிப் பெண்ணின் பார்வைக்குமான வாழ்க்கை குறித்தான அனுபவமும் வித்யாசமும் இறைவி..ஆண்களே இப்படித்தான் என்கிற வசனங்கள் வறட்சியானவை…தாய்மையோடான ஆண்கள் சமகால வாழ்வில் இருக்கிறார்கள்.