ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து இன்றுடன் “25” வருடங்கள் (1991 மே 19)

sivaramani

சிவரமணி 1991 மே 19ம் திகதி யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சிவரமணியின் கவிதைகள் எப்பொழுதும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கும்,வாழ்ந்து கொண்டிருக்கிறது 

இறப்புக்களும் பிணக்குவியல்களும் சகஜமாகிப் போன ஈழ மண்ணில், போலியே நிஜமெனக் காட்டும் சீரழிந்த சமூகத்தில் மனிதநேயமிக்க உணர்வுகளை சமூகம் பற்றிய கருத்துக்களை நுட்பமாக தனது கவிதைகளில் வெளிப்படுத்திய ஆளுமை மிக்க பெண்கவிஞர் சிவரமணியின் நினைவு நாள்.அவள் இறந்து இன்றுடன் 25 ஆண்டுகள். மே மாதம் 19ம்திகதியான இன்று.  தனது உணர்வுகளுக்கு வடிகால் தேடும் ஒரு சாதகமான அரசியல் சூழ்நிலையை கூட இந்த சமூகம் ஏற்படுத்தியிருக்கவில்லை ஆதலால் அவது உணர்வுகள் மரணத்தில்குவிந்தது…

sivaramani 2sivaramani 2.jpegselvi sivaramani.jpeg

 கவிதை 1

எமது விடுதலை

தேசங்கள் பலதிலும் மனிதர்கள்
இன்னும்
பிச்சைப்பாத்திரங்களை
வேலைக்கு அமர்த்தியுள்ளனர்
நாமும் பெறுவோமா
தோழர்களே
பிச்சை பாத்திரத்தோடு
நாளை ஒரு விடுதலை

நாம் எல்லாம் இழந்தோம்

எனினும்
வேண்டவே வேண்டாம்
எங்களில் சிலரது விடுதலை
மட்டும்
விலங்கோடு கூடிய
விடுதலை மட்டும்
வேண்டவே வேண்டாம்.! 

கவிதை    2

இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றி விட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது.

கலைகளிலாயினும் உயித்தெழுகிற விருப்புக்களுடன்
என்னுள் நுழைந்து
என்னைத் தேடி வெளிக்கொணர்ந்து
இடைவெளியின்றிக்
காலத்துக்குப் பின்னால்
நானே காலமாகிவிடத்
துடிக்கிற முனைப்புடன்
முளைத்தலில் இருந்தே
தாழ்ந்த குரலிலான கட்டளைகளைத்
தூண்டுதல் என நினைத்துச்
சுயத்தினை இழந்து போனேன்

பிரபஞ்சம் பெருவெளியில்
ஒரு சிறு அணுத்துண்டாய்
என்முகத்தையும் தொலைத்துவிட்டு
இருந்தேன் சப்பாணியாய்

தவறவிட்ட கணங்களின்
புரியாமை மூடுதலில்
முளைத்துவந்த சிறகுகளும்
மறந்தே போயிற்று.

நடத்தல் எனக்கு இயலாததல்ல
மூன்றாவதாய் எனக்கொரு
பாதம் தேவையில்லை
கைத்தடியைத் தூரே எறிந்துவிட்டு
எழுந்து நடக்கத் தொடங்கியிருக்கிறேன்
சொர்க்கமோ தேவதைகளோ
எனக்கு வேண்டாம்.
முட்டியோ மோதியோ
தலைகீழாய் நின்றபடியோ
என் தரிசிப்புக்குச் சுதந்திரம் இருப்பின்
அதுவே போதும். 

காலத்தின் பின் தொடர்தல்
என்னையும் நிர்வாணமாக்கும்
என்கிற நம்பிக்கைக் கீற்றில்
கணங்களைக் கொழுத்தி
என்னைப் பட்டைதீட்டிக் கொள்கிறேன்.

மூச்சறுத்த மரணத்தின் சுவடுகள்
என் பாதங்களுக்கிடையில்
மூச்சையுற
என் வெளிச்ச நோக்குகை
இன்மையை விரட்டுகிறது.

ஒரு கடிகாரத்தின் முட்களாய்
ஒரு வசந்தகாலக் குயிலாய்
வெயிற் காலத்தில் புழுங்கி வியர்க்கிற
ஒரு மனித மேனியாய்
இருந்து கொள்ள நினைக்கிறேன்

முற்றுப் புள்ளிகள்
முணுமுணுக்கிறது என்பதற்காக
தகர்ந்து போகாமல் இருப்பதில்லை
நிரந்தரங்கள்

கழுத்தை நெரித்தாயினும் கொன்றுவிட்டுத்

தூரக் கொண்டு போய்ப்
புதைத்துக் கொண்டிருக்கிறேன்
நிரந்தரங்களை
வாடைத் தவிர்ப்புக்காய்
அத்திசைக்காற்றுக்கு
ஜன்னைலைச் சுத்தியுள்ளேன்

நான் கொழுத்துகிற
மெழுகுவர்த்திகள் அணைக்கப்பட்டாலும்
ஒவ்வொரு விடியலிலும்
தரிசனம் தருகிற ஒரு சூரியன்
என்னுள்ளும் ஒரு சூரியனான
இருத்திலிட்டுப் போகிறது.

தேடலின் வியாபிப்பில்

உள்ளவைகள் சிறியனவாக
புதிய தரிசனங்களில்
ஏன் பழைய முகங்கள்
உதிர்ந்து போகின்றன.

புலன்கள் இசைக்கிற
தொலைவுகளுக்கப்பால்
என் மனக்குதிரை
மிக அவதானமாக
புதியன தேடலில்
மிகமூர்க்கத்தனமான
சவாரி செய்து கொண்டிருக்கிறது.

திசைகள் தறிபட்டு

எல்லைகள் நழுகிப் போய்த்
தொலைவு நீளுகிறபோது
நான் பரிநிர்வாணமாய்
நடந்துகொண்டிருப்பேன்
அனைத்திலும்

இருட்டு அவசர அவசர
ஆடைகளைக் கழற்றிவிட்டு
நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது.

——————————–


 சிவரமணியின் நினைவாக ஊடறுவில் வெளியாகிய பதிவுகள்

*** 2006  – சேலை கட்டிக் காப்பாற்றிய  சில நாகரீகங்களைத் தவிர…

***  2007 – சிவரமணி வாழ்ந்த ,விகசித்த, இறந்த

*** 2008 – நீங்கள் உறங்க வேண்டாம்.

*** 2009 – குருதி தோய்நத முகமற்ற மனித உடலும் 

 *** 2010 – சிவரமணி” என்ற பெரும் கவிஞர் இறந்த நாள் “மே 19″

*** 2011 – 20 வருடங்கள் – தொலைவில் ஒரு வீடு

*** 2012 –  இருட்டு அவசர அவசரமாக ஆடைகளைக்கழற்றி விட்டு நிர்வாணமாகிக் கொண்டிருக்கிறது.-சிவரமணி

*** 2013– ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)இன்றுடன் 22 வருடங்கள்

*** 2014– சிவரமணி நினைவாக…(ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)

*** 2015 சிவரமணி நினைவாக…எனது பரம்பரையம் நானும்(ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து (1991 மே 19)

*** 2016 -ஈழத்து பெருங்கவிஞை சிவரமணி இறந்து இன்றுடன் “25” வருடங்கள் (1991 மே 19)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *