சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு
உலகின் எந்த மூலையிலும் சிறுமிகள், யுவதிகள், முதியவர்கள் என்ற பேதமின்றி பெண்கள் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறான துன்புறுத்தல்கள் இலங்கை சமூகத்திலும் மூலை முடுக்கெல்லாம் பரவலாகிக் கொண்டிருக்கின்றன. அது இன, மத, சாதிய வேறுபாடின்றி தெவுந்தர முனையிலிருந்து பருத்தித்துறை முனை வரையிலும், பருத்தித்துறையிலிருந்து தெவுந்தர முனை வரையிலும் பரவலாகிக் கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்பு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வித்தியா யோகநாதன் எங்களுக்கு சொல்லும் செய்தி இதுதான். உலகின் எந்த இடத்தை எடுத்துக் கொண்டாலும், பெண் என்பவள் பெண்ணாக இருப்பதனால் பாரிய நெருக்குதல்களுக்கு உள்ளாவதை நாங்கள் அறிவோம். தமது தாயாக, மகளாக, அவளை பார்க்கத் தவறிய சமூகத்தில் அவளது பெண்மை சம்பந்தமான பிரச்சினைகளை அவள் எதிர்கொள்கிறாள். இன்று வித்தியாவின் மரணத்திற்கு எதிராக வீதியில் இறங்கியிருக்கும் பாடசாலை மாணவ மாணவிகள், பெற்றோர்கள், மூத்தோர்கள், புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளரகள் ஆகியோரின் நியாயமான கோரிக்கையானது, இந்த கொடுமைகளுக்கு எதிராக செயற்படுங்கள்! என்பதுதான்.
ஆனால், தென் பகுதியின் ஊடகங்களும், அரசியல்வாதிகளும், வடபகுதி அரசியல்வாதிகளும் இந்தக் கொடுமையை தமது அரசியல் இலாபத்திற்காக வேறு கோணத்தில் திசை திருப்ப முயற்சிக்கின்றனர். வடக்கில் வாழ்வதும் மனிதர்கள்தான் என்ற அடிப்படையில், அவர்களது உண்மையான பிரச்சினைகளை அறிந்து அது சார்ந்த அரசியல் உரையாடலை கட்டியெழுப்புவதற்கு பதிலாக அதனை வெவ்வேறு கோணத்தில் அலசுவதால், புதிய பிரச்சினைகளை கையசைத்து வரவழைக்க தயாராவது தெரிகிறது. என்றாலும, இன்றைய நாளில் வன்கொடுமைக்கு பலியாகி கொல்லப்படுவதற்கு காரணம் நாறிக்கிடக்கும் தவறான சமூக முறைதான். அதற்கு வித்தியாவும், கொடகெதன சகோதரியும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, கொல்லப்பட்டு கிருலபன ஓடையில் மிதந்த புதல்வியும், விஜேராம யுவதியும், க்ரிசாந்தி குமாரசுவாமியும், கிளிநொச்சியின் சாரண்யாவும் ஒன்றாக பலியாகின்றனர்.
இது சிங்கள மொழி பேசுபவர்களினதோ, தமிழ் மொழி பேசுபவர்களினதோ தவறல்ல என்பதையும், இது மேற்படி சமூக முறையின் தவறுதான் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே நாளை, வித்தியாவைப் போன்று உங்கள் தாய், சகோதரி, புதல்வி மேற்படி வன்கொடுமைக்கு ஆளாவதை தடுக்க முடியாது. சமூகம் என்ற வகையில் சிந்தித்து, அதற்கு வடக்கு கிழக்கு என்ற பாகுபாடு காட்டாது; சிங்களவர், தமிழர், முஸ்லிம் என பிளவுபடாதிருந்தால் மாத்திரமே அதனை தடுக்க முடியும். இது இலங்கை பெண் மீதான ஒடுக்குமுறை. இலங்கை சமூகத்தின் துன்பியல். எங்களையும் உங்களையும் வருத்தும் சமூக பொருளாதார ஒடுக்குமுறையின் கதை. எனவே, அதன் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ளுமாறும், அதற்காக அணிதிரளுமாறும், அதற்கெதிராக தொடர்ந்து போராடுமாறும், செயற்படுமாறும் உங்ளிடம் வேண்டிக் கொள்கின்றோம்.