“காதலை நான் முழுமையாக காதலிக்கவில்லை” (சௌந்தரி சிறிய நேர்காணலின் ஒலிவடிவம் )
சௌந்தரி கணேசன் அவர்கள் ஆஸ்திரேலிய தமிழ் சமூகம் நன்கு அறிந்த ஒலிபரப்பாளர்; சொல் வீச்சாளர்; நேர்படப் பேசும் சிலரில் ஒருவர். அவரின் புதிய முகம்: கவிதாயினி. நீர்த்திரை எனும் அவரின் கவிதை நூல் சிட்னி நகரில் வெளியிடப்படவிருக்கும் இவ்வேளையில் அவரோடு ஒரு சந்திப்பு. சந்தித்தவர்: றைசெல் நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெறும் இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை, Rochester Street, Homebush, NSW. நாள்: 24 மே – ஞாயிறு மாலை 5 மணி
கொஞ்சமும் பதட்டமில்லாமல் இருக்கின்றேன். எந்தவிதமான ஆரவாரமும் இல்லை. சிட்னியில் என்னை நேசிக்கின்ற உறவுகள் நிறையவே உள்ளார்கள் ஆகவே அனைத்தும் நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கையுடன் செயல்படுகின்றேன்.
எனது ஏற்புரையில் எனது சிட்னி உறவுகளுக்கு நன்றியைத் தெரிவிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு இத்தருணத்தில் நன்றியைக்கூறக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
என்னைப்போன்ற அறிமுக எழுத்தாளர்களுக்கு ஒரு நல்ல பதிப்பாளர் கிடைப்பது மிகவும் அவசியம். அந்தவகையில் எவ்வளவோ தொலைவிலிருந்தும் எனது கவிதைகளைத் தொகுப்பாக்க வேண்டுமென்று தானாகப் பிரியப்பட்டு என்னை ஊக்கப்படுத்தி எந்தவிதத் தயக்கமுமில்லாமல் எல்லாவற்றையும் முன்னின்று செயல்படுத்திய எனது நண்பரும் வளரி சஞ்சிகையின் ஆசிரியருமான திரு அருண் சுந்தரராஐன் அவர்களுக்கு எனது நன்றியைக் கூற ஆசைப்படுகின்றேன்.
இன்றுவரை என்னோடு ஒருபோதும் அவர் தொலைபேசியில்கூட பேசியிருக்கவில்லை. நான் கறுப்போ சிவப்போ என்றுகூட அவருக்குத் தெரியாது. மின்னஞ்சல் மூலமாக மாத்திரம் என்னோடு தொடர்புகளை மேற்கொண்டு எனது அனுமதிற்காகக் காத்திருக்காது தனது சுயவிருப்பில் திருத்தங்களையும் அணிந்துரையையும் ஏற்பாடு செய்து என்னைத் தொடர்ச்சியாக ஊக்கிவித்து குறித்த நேரத்திற்குள் எனது கவிதைகளை நூலாக்கிய அருண் சுந்தரராஐனுக்கு திரும்பத் திரும்ப வியந்தும் நயந்தும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.அதேபோல் இந்த இனிய தருணத்தில் அணிந்துரை எழுதிக் கொடுத்த பார்த்தசாரதி அவர்களையும் நினைவு கூருகின்றேன்.
இனிவரும் எனது நூல்களையும் அருணின் உதவியுடன் தொடர்ந்தும் வெளியிடுவதே எனது நோக்கமாகும் அதேபோல் யாராவது உங்களது எழுத்துக்களை நூலாக்க விரும்பினால் தயவுசெய்து அருணைத் தொடர்பு கொள்ளுங்கள் எந்தவிதமான சிக்கல்களும் இன்றி உங்களது நூல் அரங்கேறும் என்பதை நான் நம்பிக்கையோடும் அன்போடும் தெரிவிக்கின்றேன்.மற்றும் எனது விருப்பத்திற்காக நானாகத் தெரிவுசெய்து வெளியிடுகின்ற எனது நூலை காசு கொடுத்து வாங்கிப்படியுங்கள் என்று கூறுவதில் எனக்கு ஒருபோதும் உடன்பாடில்லை.ஆனாலும் இந்த நூலை மண்டபத்தில் பெற்றுக் கொள்பவர்கள் கொடுக்கின்ற ஒவ்வொரு பணமும் கரவெட்டியில் உள்ள எனது பாடசாலையான விக்னேஸ்வராக் கல்லூரியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள சிறார்களின் கல்வி வளர்ச்சிக்கு எனது தந்தை பொன் கணேசனின் பெயராலும் எனது நண்பர்களின் பெயராலும் வழங்கப்படும் என்பதையும் தெரிவிக்கவேண்டும் என்று தோன்றுகின்றது.
மற்றும் என்னோடு பயணிக்கும் எனது முகப்புத்தக நண்பர்களுக்கும் அவர்களது அன்புக்கும் என்றும் எனது நன்றி