ஏப்ரல் 25,26 ம் திகதிகளில் மலையகம் கொட்டக்கலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச்சந்திப்பும் பெண்ணிய உரையாடலும் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மலையகத்தில் நடத்தப்பட்ட முதலாவது பெண்ணிய உரையாடலும் பெண்ணிய சந்திப்பும் இதுவே எனக் கூறப்படுகிறது. இச்சந்திப்பை ஊடறுவும் மலையகப் பெண்களும் இணைந்து நடத்தினார்கள். மலையகம், மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் கொழும்பு ஆகிய இடங்களிலிருந்தும் இந்தியா, மலேசியா சுவிஸ் போன்ற நாடுகளிலிருந்தும் பெண்கள் கலந்து கொண்டார்கள்.இச்சந்திப்பில் இலங்கையில் உள்ள அனைத்து பாகங்களிலிருந்தும் பெண்கள் பங்கேற்றமை ஏற்பாட்டாளருக்கு மிகுந்த உற்சாகத்தையும் சந்தோசத்தையும் ஏற்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. முதல் நாள் அமர்வுகளில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்ட சந்திப்பாக இருந்தது மட்டுமல்லாமல் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டமை இவ் உரையாடலின் வெற்றி எனக் கருதப்படுகிறது. பல பெண்களின் தொடர்புகளை மட்டுமல்ல அவர்களிடையே ஒரு புரிந்துணர்வையும் உறவையும் வளர்க்க இவ் உரையாடல் உந்துகோலாக அமைந்தமையை பல பெண்கள் மகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டியுமிருந்தனர்.
இவ் உரையாடலின் முதல் அமர்வு
குறித்த நேரத்தில் சரியாக 9.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது . பெண்ணிய உரையாடலை தொடங்கி வைத்து
வரவேற்புரையை நிகழ்த்திய –சந்திரலேகா , -பாடல்கள் – சுகனயா மகாதேவா, லாவண்யா மகாதேவா, மற்றும் சகுந்தலா
தொடக்கவுரை (றஞ்சி)
-கடந்த வருடம் (2014) இல் இந்தியாவில உள்ள சென்னை பல்கலைக்கழக்த்தில் ஊடறுவும் இந்திய பெண்களும், பெண் செயற்பாட்டளரும் இணைந்து நடத்திய பெண்ணிய உரையாடலை அடுத்து இந்த வருடம் ஒரு பெண்ணிய உரையாடலை எமது தாயகத்தில் அதுவும் மலையகத்தில் நடத்துவது பெரு மகிழ்ச்சியை தருகிறது . ஊடறு என்பது சிறிய 2 பேரால் நிர்வகிக்கபடுகின்ற ஒரு சிறிய இணையத்தளம் என்றாலும் அதற்கு பின்னால் பல பெண்களின் பங்களிப்புகள் உள்ளன . பெண்களுக்காக பெண்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வருகின்றது இயன்றவரை முடிந்தளவு பெண்களுக்காகவும், சமூகத்திற்காகவும் சிறிய வேலைகளை ஊடறு செய்து வருவதோடு 10 வருடங்களை தாண்டி ஊடறு தொடர்ச்சியாக வெளிவருவதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும் ஊடறுவினால் வெளியிடப்பட்ட நூல்கள் பற்றியும் கூறியதோடு எழுதிய எழுதுகிற பெண்கள் இவ் உரையாடலில் கலந்துகொண்டுள்ளமை மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர்கள் எல்லோரையும் காணும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து நான் காத்திருந்ததையும் மகிழ்ச்சியடன் தெரிவித்து தொடக்கவுரை முடிவுற்றது.