(ஆத்ம நேசங்களுடன் )
மாத்தளை ஜெஸீமா ஹமீட்
25,26 ஆம் திகதிகளில் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் மலையகப் பெண்களும் ஊடறுவும் இணைந்து நடத்திய பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்” எனும் தொனிப்பொருளிலான மாபெரும் மகாநாடு பெண்கள் தொடர்பான ஆய்வுகள்,கவிதைகள்,கலைநிகழ்ச்சிகள்,விவாதங்கள் என பல நிலைகளிலும் பெண்ணியம் பேசப்பட்டு மிக வெற்றிகரமாக முடிந்தது.
இது மலையகத்தில் நடத்தப்பட்டாலும் ஒரு தேசிய நிகழ்வாக அல்லாமல் ஒரு சர்வதேச மயப்பட்டதாகவே இடம்பெற்றது.காரணம் இந்நிகழ்வை தலைமையேற்று நடத்திய ஊடறு இணயப்பக்கத்தின் அமைப்பாளர் ரஞ்சி சுவிட்ஸ்சர்லாந்திலிருந்து வருகை தந்திருந்தார்.அதேபோல் இந்தியாவிலிருந்து புதியமாதவி,ரஜனி,ச.விஜயலட்சுமி,நர்மதா,ஓவியா ஆகிய பெண் கவிஞர்களும் ஆய்வாளர்களும் வருகை தந்திருந்தனர்.அதேபோல் மலேசிய பத்திரிகையாளர் யோகியும் தன் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.
பெண்களின் சோகங்கள்,சுயத்துக்கான தேடல்கள்,அவர்தம் அடிப்படை பிரச்சினைகள்,பாலினப்பாகுபபாடு,பாலியல் வதைகள்,உரிமை மீறல்கள்,முஸ்லிம்,தமிழ்ப் பெண்களின் கல்வி,தொழில்,கலை இலக்கியம் மற்றும் இலங்கை மலையகப் பெண்களின் இன்றைய நிலைப்பாடுகள் மட்டுமன்றி இந்திய மலேசியப் பெண்களின் இருப்பு குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.ஆணாதிக்க சமூகத்தின் பல்தளங்களில் நின்றும் பெண்படும் பாடுகளை உலகுக்கே கேட்கும் வண்ணம் இவர்கள் கை கோர்த்தவிதம் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
இதில் கலந்துகொண்ட சர்வதேசப் பெண்கள் தூர தேசங்களிலிருந்த போதும் இலங்கைப் பெண்களின் துயர் துடைக்கவும் அது தொடர்பாக ஆக்கப்பூர்வமாக பேசவும்,lசெயற்பாடுகளை முன்னெடுக்கவும் குரல் கொடுத்தமை என் நெஞ்சை விட்டகழாத இனிய பதிவுகள்.சர்வதேசப் பெண்களை இணைப்பதில் ரஞ்சி துணை நின்றது போலவே மலையகப் பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஒருங்கிணைத்து இச்செயற்பாட்டை முழுமையடையச் செய்வதில் கொட்டகலை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் அதிபர் திருமதி சந்திரலேகா கிங்ஸ்லி அவர்கள் செய்த முயற்சி அனைவரின் பாராட்டுதலுக்கும் உரித்தானது.
இலங்கையின் பெண் ஆய்வாளர்களாக நின்று சந்திரலேகா கிங்ஸ்லி,நளினிராஜ்,ஜெஸீமா ஹமீட்,லறீனா ஹக்,லுணுகலை சிறீ, ஷாமிலாமுஸ்டீன்,சரோஜாசிவச்சந்திரன் ,விஜயலட்சுமி சேகர்,கெகிறாவ ஸஹானா,எஸ்தர், சுதாஜினி,விரிவுரையாளர் சோபனா,யோகித்தா ஜோன்,சுகன்யா மகாதேவா, லாவண்யா மகாதோவா,யாழினி யோகேஸ்வரன்,பிறெவ்பி,நளினி ராஜ்,பவநீதா,சுலைஹா பேகம்அரபா மன்சூர், என பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் பெண் ஆர்வலர்களின் பட்டாளமே பெண்கள் சார்ந்த அத்தனை பிரச்சினைகளையும் ஆணிவேராய் அக்குவேராய் அலசி ஆராய்ந்தமை, எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் இந்த ஆய்வுகளை ஆவணப்படுத்தி,பின் அவற்றை மையப்படுத்தி மலையகப் பெண்களுக்கான பல களச்செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
இரண்டு நாள் செயலமர்வாக இனிதே நடந்த இம்மகாநாட்டிற்கு மலையகத்தின் பல்வேறு அமைப்புக்களையும் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கலந்து சிறப்பிக்க அறுசுவை உணவுடன் வயிறும் மனமும் நிறைந்த ஒரு ஆத்ம திருப்தி அத்தனை பேருக்கும் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.இம்மகாநாட்டின் விளைவுகள் ஏழைப் பெண்களின் வாழ்வில் ஒரு துளி வெளிச்சத்தையேனும் ஏற்படுத்துமாயின் அதுவே எங்கள் வெற்றியும் பிரார்த்தனையுமாகும்.