யாழினி யோகேஸ்வரன்
தனிமைப்பாடுகள் நிச்சயப்படுத்தப்பட்டன
ஒருவித அடக்குமுறைக்கும்
கெஞ்சுதல்களுக்கும் இடையிலான தேடுதலில்
வாழ்ந்துகொண்டிருப்பதாய் உணரப்படுகிறது மனம்.
நிச்சயங்கள் முழுமையாய் அறியப்பட்டும்
உணரமுடியாததாய்
உயிர் பெற்று அலைந்தெறிகிறது
அகப்பட்ட மனம்.
உணர்வுகள் அற்ற இடைவெளியில்
வாழ்வு புறந்தள்ளப்படுகிறது
அர்த்தமற்றதாயும் ஆழமற்றதாயும்
மேலெழுந்தவாரியான பாதைகள்
பயண முடிவிடத்தை
திட்டவட்டமாய் அறியப்படுத்துகின்றன.
குறுகிப் போன குவிந்த வாழ்வு
ஓட்டை விழுந்த வெற்றுப்பானை என
குமுறலோடு குனிந்து கொள்கின்றது.
குறைத்து மதிப்பிட முடியா இந்த வாழ்வு
குறிப்பிட்டுச் சொல்ல முடியாததே.