அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நடிகை குஷ்பு தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் பற்றி பல்வேறு விமர்சனங்கள் அவதூறுகள் கொச்சைப்படுத்தல்கள்; என முகநூலிலும் தொலைக்காட்சிகளிலும் மிகக் கேவலமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குஷ்பு அப்படி என்ன தான் கூறி விட்டார் ஒரு பெண் என்ற ரீதியில் அவர் தனது கருத்தைச் சொல்லும் உரிமை அவருக்கு இருக்கிறது.
உலகம் பூராவும் விடுதலைப்புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்றே கூறி தடையும் விதித்துள்ளது பல நாடுகள். அந்த தடையை விதித்த நாடுகளையோ அல்லது அந்த அரசாங்கங்களையோ இவர்களால் இவ்வளவு கேவலமாக கொச்சைப்படுத்தி விமர்சிக்க முடியுமா? குஷ்பு ஒரு பெண் அதுவும் ஒரு நடிகை என்பதனால் தான் தங்களது வக்கிரப்புத்திகளையும் பாலியல் வசைகளையும் கொட்டித் தீர்க்கின்றனர் தமிழத் தேசிய வெறியர்கள். இதே குஷ்புவை விடுதலைப்புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் பல நிகழ்ச்சிகளுக்கு அழைத்து நிகழ்ச்சி செய்து பணம் சம்பாதித்தவர்கள். என்பதையும் வசதியாக மறந்தும் விடுகின்றனர்.
கருத்து சுதந்திரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கின்ற அடிப்படை உரிமை . அந்த உரிமை மீறப்படும்போது கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகின்ற போது அவன் அடிமையாக்கப்படுகின்றாள்/கின்றான்
தமது கருத்துக்கு எதிராக எழும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் தைரியமும் மனப்பக்குவமும் பலருக்கு கிடையாது. சமூகத்தின் அல்லது ஒரு தேசத்தின் முன்னேற்றத்திற்கு கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் அவசியமானது. இவற்றினால்தான் ஆரோக்கியமான திறன் செயல்களும் , மாற்றங்களும் சாத்தியமாகின்றன.
நாம் கியுபா போராட்டத்தை விமர்சிக்கலாம் கறுப்பின மக்களின் போராட்டத்தை விமர்சிக்கலாம்.ஏன் கஷ்மீர் போராட்டத்தை விமர்சிக்கலாம் ஆனால் தமிழர் போராட்டத்தை விமர்சித்தால் பாலியல் வக்கிரங்களும்,வசைகளும் கேவலமான விமர்சனங்களும் தான். அதனால் தான் நாம் முள்ளிவாய்க்கால் வரை பல்லாயிரக்கணக்கான அப்பாவி உயிர்களை பறி கொடுத்தோம். தமிழ் பெண்களின் இருப்புச் சார்ந்த வெளிகளிலிருந்தும் உடலை ஆக்கிரமிக்கும் சிந்தனைகளிலிருந்தும் இந்த தமிழ் தேசிய ஆணாதிக்கர்கள் தங்களுடைய ஆதிக்கத்தை பெண்களின் மீது செலுத்தி வருகின்றனர். இவை வன்மையாக கண்டிக்கபட வேண்டியது
தமிழத் தேசிய வெறியர்களால் குஷ்பு மீது வைக்கப்பட்ட பாலியல் ரீதியான விமர்சனங்களுக்கு எதிராக எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஊடறு ஆர்.