உரிமையை மீட்கும் பெண்கள்

மித்திலன்

i28_21995649

‘காதலர் தினம்’, ‘அப்பாக்கள் தினம்’, ‘அம்மாக்கள் தினம்’ என மேற்கு நாடுகளிலிருந்து வணிக உத்தியாக உலகெங்கும் தூவப்பட்டிருக்கும் ‘தினங்கள்’ ஏராளம். இந்த தினங்களால் பயன்பெறுவது வாழ்த்து அட்டைக் கம்பெனி முதலாளிகளும், ஒரு புதிய விளம்பர உத்தியாகப் பயன்படுத்திக்கொள்ளும் விளம்பர ஏஜன்ஸிகளும்தான். ஆனால் இந்த தினங்களிலேயே கொஞ்சம் உருப்படியானது வருடம்தோறும் மார்ச் எட்டாம் தேதியன்று அனுசரிக்கப்படும் ‘சர்வதேச பெண்கள் தினம்’. பல தினங்களைப் போல இதுவும் ஒரு சடங்காக மாறிவிட்டாலும், இன்றும் பெண்கள் மீதான வன்முறைகள், தீங்குகளைக் குறித்து சில குரல்களை இந்த தினம் ஆங்காங்கே எழுப்பிவருகிறது. போர்க்களத்தில் நிற்பதைவிட ஆபத்தானது பெண்ணாய் இருப்பது என்று சொல்கிறார் ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை அதிகாரி ஒருவர் (Major-General Patrick Cammaert). அவர் சொல்வதில் காரணமிருக்கிறது.

சமீபத்தில் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருந்தது. இந்திய ஆண்களில் நான்கில் ஒருவர் தம் வாழ்வில் ஏதோ ஒரு முறையாவது பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர். ஐந்து ஆண்களில் ஒருவர் தம் மனைவியை அல்லது துணைவியைக் கட்டாயக் கலவிக்கு ஆளாக்கியிருக்கிறார். 38% ஆண்கள் மனைவியைத் தாக்கியிருக்கின்றனர், 65% ஆண்கள் குடும்ப ஒற்றுமைக்காக பெண்களை அடிப்பதில் தவறில்லை என்று நம்புகின்றனர்.

“வீட்டில எலி வெளியில புலி,” என்பதில் தொடங்கி “அவ அடிக்க நான் அழ நான் அழ அவ அடிக்க…” என்பன போன்ற மனைவி ஜோக் வரையில் எல்லாம் ஆண்கள் தங்கள் கொடுங்கரங்களை பொதித்துக்கொள்ளும் மென்கையுறைகள். மனைவியைத் தட்டி வைக்கும் இந்திய ஆண்களில் 4 சதவிகிதத்தினரே திருட்டு வேளையில் ஈடுபட்டிருக்கின்றனர், 7 சதவிகிதத்தினரே ஆயுதங்களை வீட்டுக்கு வெளியே பயன்படுத்தியிருக்கின்றனர்.

இந்த ஆய்வு டெல்லி வாழ் பெருங்குடியினரை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இந்தியாவின் தலைநகரிலேயே இப்படி என்றால் மற்ற ஊர்கள் எப்படி இருக்கும் என்ற கவலை இந்தியாவை அறியாத வெளிநாட்டினருக்கு வேண்டுமானால் எழலாம். ஆனால் நமக்கு நன்றாகவே தெரியும், இந்தியாவில் வாழ்க்கைத் தரம் உயர உயர தனிமனித மட்டும் சமூக விழுமியங்கள் தாழ்வடையும் என்று. சிற்றூர்கள் மற்றும் கிராமங்களின் பெண்களின் நிலை இந்த அளவு மோசமாக இருக்காது. என்றாலும் இந்தியாவில் எங்கும் இவர்களுக்கு ஆண்களுக்கு இருக்கிற பாதுகாப்பு இருக்காது என்பதை உறுதிபட சொல்லி விடலாம்.

பெண் விடுதலை என்பதை ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்தே தமிழகத்தில் உள்ள பெண்ணியலாளர்களில் பெரும்பாலானவர்கள் செயல்படுவதாக ஒரு தோற்றம் இருக்கிறது. அப்பட்டமான உண்மையை சொல்வதானால், பெண் விடுதலை என்பது வன்முறையிலிருந்து விடுதலை என்ற நிலையை அடையவே வெகு தூரம் போக வேண்டியிருக்கும் போலிருக்கிறது. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் பங்கு, சம உரிமை, சம வாய்ப்பு என்பதெல்லாம் போக்கு காட்டும் கோஷங்களாக வெற்றி பெற்று, உலகெங்கும் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் தீனக்குரலை மறைத்து விட்டிருக்கின்றன.

i28_21995649

போர்க்களத்தில் நிற்பதைவிட ஆபத்தானது பெண்ணாய் இருப்பது என்று இக்கட்டுரையின் துவக்கத்தில் சொல்லியிருப்பது எவ்வளவுக்கு உண்மை என்பதை உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். உலகெங்கும் கல்வி மறுக்கப்படும் குழந்தைகளில் மூன்றுக்கு இருவர் பெண்கள், எந்தப் போரிலும் மாளும் உயிர்களில் நான்குக்கு மூன்று உயிர்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் உரியது என்று நீள்கிறது இந்தப் பட்டியல்- ஒவ்வொரு ஆண்டும் ஆறு கோடி சிறுமிகள் பள்ளிக்கு சென்று வரும் வழியில் பாலியல் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள், வயதுக்கு வந்த பெண்களில் ஐந்துக்கு ஒருவரை எவனாவது ஒருவன்  வன்முறைக்கு எத்தனிப்பான், நான்குக்கு ஒரு பெண் தன் கணவனிடம் ஒரு தடவையோ திரும்பத் திரும்பவோ தாக்கப்படுவாள். பெண் குழந்தையை கருப்பையிலேயே அழித்து விடுவது அவளுக்கு நாம் செய்யும் குறைந்தபட்ச நன்மை என்று தோன்றுகிறது.

பெண்களின் வாழ்வுநிலை ஆதாரங்களை செம்மைப்படுத்துவதால் தெற்கு ஆசியாவில் மட்டும் ஊட்டச்சத்து போதாமையால் மரணமடையும் குழந்தைகளில் 134 லட்சம் பேர் காப்பாற்றப்படுவார்கள். இது போல் இன்னும் பல தகவல்களை சொல்லிக்கொண்டு போகலாம், ஆனால் நாம் இப்படி பெண்களுக்கு உரிமைகள் தருவதில் உள்ள நன்மைகள் என்று அடுக்கிக் கொண்டு போவதைவிட அவமானமான செயல் வேறொன்றும் இல்லை. “அம்மாவை நம்மோடு வைத்துக் கொண்டால் பாத்திரம் தேய்த்துத் தருவாள், வீட்டைப் பெருக்கி சுத்தமாக வைத்துக் கொள்வாள், நம் பிள்ளைகளை க்ரெஷில் விடும் செலவு மிச்சம்,” என்று ஈவு இரக்கமில்லாமல் சோற்றுக் கணக்கு போடுவதைப் போன்ற செயல் இது. பெண்களுக்கு வன்முறையில் இருந்து விடுதலை கிடைப்பது நம் மானுடத்தை நாம் தக்க வைத்துக் கொள்ளும் செயலாகும். பெண்ணாகப் பிறந்த காரணத்துக்காக வன்முறைக்கு ஆளாக்கப்படுவது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. இதற்காகப் பெண்ணியம் பேச வேண்டியிருப்பது மனித இனம் எவ்வளவு கீழ்மையான நிலையை அடைந்திருக்கிறது என்பதைத்தான் சுட்டுக்கிறது என்று நினைக்கிறேன்.

இந்தியாவில் சட்டப்படி பெண்கள் நம் அரசியல் அமைப்பில் சம நிலையில் இயங்கும் உரிமை பெற்றிருந்தாலும், அவர்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களின் கைப்பாவைகளாகவே செயல்படும் நிலை இருக்கிறது. இது மாற்றம் கண்டாக வேண்டும். இன்றும் நம் வணிகப் பத்திரிகைகளில் வெளிவரும் நகைச்சுவைத் துணுக்குகள், வணிகச் சிறுகதைகள் அனைத்திலும் பெண்கள்தான் நகைச்சுவைப் பொருட்கள். கல்லூரிக்குச் செல்லும் இளம்பெண்களை வக்கிரமாக விவரிக்கும் பல வர்ணனைகளை நவீன வணிகச் சிறுகதைகள் எழுத்தபட ஆரம்பமான காலம் முதல் இப்போது வரை படிக்கலாம். தமிழ் சினிமாவில் பெண்களை இயல்பான ஆளுமைகளோடு சித்தரித்து வெளிவந்த படைப்புகளை விரல்விட்டே எண்ணிவிடலாம்.

ஆப்பிரிக்காவில் லைபீரியாவில் ஒரு சர்வாதிகார அரசை அகற்றி ஒரு பெண்ணின் தலைமையில் மக்களாட்சி அமைய பெண்களின் ஆற்றல் பெரும்பங்காற்றியிருக்கிறது; ருவாண்டா மக்களவையில் ஆண்களைவிட பெண்களே அதிகம் இருக்கின்றார்கள். வளரும் நாடுகள் எங்கும் பெண்கள் முன்னெப்போதையும் விட இப்போது உரிமைகளை வென்றெடுக்கத் துவங்கியிருகிறார்கள் என்பது ஒரு நல்ல செய்தியாகும்.

நன்றி சொல்வனம் பெண்கள் சிறப்பிதழ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *