நன்றி – http://www.bbc.co.uk/tamil/global
துபாயில் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகும் வீட்டுப் பணிப்பெண்கள்: புதிய அறிக்கை
ஐக்கிய அரபு எமிரேட்டில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலை செய்யும் வெளிநாட்டுப் பெண்கள் பலர் பலவிதமான துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டு வருவதாக ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு வெளியிட்டுள்ள புதிய அறிக்கை கூறுகிறது.
உரிமை கோரி வீட்டுப் பணிப்பெண்கள் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டம்
உரிமை கோரி வீட்டுப் பணிப்பெண்கள் நடத்திய ஒரு ஆர்ப்பாட்டம்
வீட்டுப் பணிப்பெண்கள், பிள்ளை வளர்க்க உதவும் பணிப்பெண்கள் போன்றவர்களுக்கு பேசப்பட்ட சம்பளம் கொடுக்கப்படுவதில்லை என்றும், அவர்களுடைய பாஸ்போர்ட் பறித்துவைத்துக்கொள்ளப்படுவதாகவும், வேலை செய்கிற நேரத்தில் அவர்களுக்கு ஒழுங்கான மருத்துவ உதவிகள் கிடைப்பதில்லை என்றும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் உடல்ரீதியாகவும் பாலியல்ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகிறார்கள் என்றும் ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் அறிக்கை கூறுகிறது.
“நான் இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தேன். முதலாளியம்மா ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்றார். இஸ்திரிப் பெட்டியில் சூடு குறைவாக இருக்கிறது போல என்று சொன்னேன். என் அருகில் வந்த அவர், கொதித்துக் கொண்டிருந்த இஸ்திரிப் பெட்டியை எடுத்து என் கையில் வைத்து அழுத்திவிட்டார்.” என அபுதாபியில் ஒரு வீட்டில் வேலைபார்க்கும் ஃபிலிப்பைன்ஸைச் சேர்ந்த பெண்ணொருவர்தனது மோசமான அனுபவத்தை பகிர்ந்துகொண்டிருந்தார்.தாங்கள் ஒரு நாளில் 21 மணி நேரம் வரையில் வேலைவாங்கப்படுவதாக சில பெண்கள் தெரிவித்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை என்று வேறு சிலர் கூறியிருந்தனர். போதுமான சாப்பாடு கிடைக்கவில்லை என்றும்கூட பணிப்பெண்கள் குறிப்பிட்டிருந்தனர்.
நான் இஸ்திரி போட்டுக் கொண்டிருந்தேன். முதலாளியம்மா ஏன் இவ்வளவு நேரம் ஆகிறது என்றார். இஸ்திரிப் பெட்டியில் சூடு குறைவாக இருக்கிறது போல என்று சொன்னேன். என் அருகில் வந்த அவர், கொதித்துக் கொண்டிருந்த இஸ்திரிப் பெட்டியை எடுத்து என் கையில் வைத்து அழுத்திவிட்டார்.அபுதாபியில் வீட்டு வேலை செய்யும் பிலிப்பைன்ஸ் பெண்ணொருவர்
ஐக்கிய அரபு எமிரேட்டில் குறைந்தது 1,46,000 வெளிநாட்டவர் வீட்டுப் பணிப்பெண்களாக வேலைபார்க்கிறார்கள்என்று ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மதிப்பிடுகிறது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்பெரும் எண்ணிக்கையில் துபாய், அபுதாபி போன்ற ஊர்களில் வீட்டுப் பணிப்பெண்களாக வேலைபார்த்துவருகின்றனர்.
அவர்களில் 99 பேரிடம் பேட்டி எடுத்து ஆதாரங்களைத் திரட்டி அவ்வமைப்பு, “நாங்கள் உன்னை ஏற்கனவே விலைக்கு வாங்கிவிட்டோம்” என்ற தலைப்பிலான இந்த 79 பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது.வீட்டு உரிமையாளர்களுடன் தமக்கு பிரச்சினை வருகிறபோது வெளிநாட்டுத் பணிப்பெண்கள் பாதிப்பிலிருந்து தப்பிக்க ஒரு வழியுமே இல்லாமல் இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
ஏனென்றால் அதற்கான சட்ட வழிகளும் இல்லை, இருக்கக்கூடிய சட்டங்களும் அதன் பயன்பாடும் முதலாளிகளுக்கு சாதகமாகவே இருக்கின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்டின் தொழிலாளர் சட்டங்களின் வழியாக வேறு துறைகளில் வேலைபார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு கிடைக்கின்ற பாதுகாப்பு கூட வீட்டுப் பணிப்பெண்களுக்கு கிடைப்பதில்லையாம். பெட்ரோலிய செல்வத்தில் திளைக்கும் இந்த நாடு வெளிநாட்டுத் தொழிலாளர்களை நடத்தும் விதம் மாற வேண்டும் என ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் வாதிட்டுள்ளது.