லக்ஷ்மி
22.10.2014
ஒக்டோபர் 19ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சம உரிமை இயக்கத்தின் ‘வசந்தத்தை தேடுகிறோம்…” கலைவிழா பாரிஸில் நடைபெற்றது. இவ்விழாவில் 300 பேருக்கு மேல் கலந்து கொண்டிருந்தனர். பல்வேறு நாடுகளில் இருந்தும் கலைஞர்களும் பார்வையாளர்களும் வருகை தந்திருந்தனர். பாரிஸில் முதன்முதலாக தமிழ்மொழி பேசுபவர்களும் சிங்களமொழி பேசுபவர்களும் இணைந்த ஒரு கலை நிகழ்வை நடாத்தியிருப்பது என்ற வகையில் இது முக்கியத்துவம் பெறுகின்றது.
புகைப்படக் கண்காட்சி, ஆவணப்படம், வாழ்த்துரைகள், பாட்டு, நடனம், நாடகம் என்று பல்வேறு விதமான கலை வடிவங்களின் களமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
ஒரு பார்வையாளராக எனது அவதானிப்பை இங்கு பதிவு செய்கிறேன்.
1. பொய்க்கால் குதிரை ஆட்டம்
கலைஞர் : தொல்காப்பியன் உமாபதிசிவம்
பொய்க்கால் குதிரை ஆட்டத்தை அளிக்கை செய்த கலைஞர் நன்றாக செய்திருந்தார். அவர் தெரிவு செய்திருந்த பாடல் அவருடைய தகப்பனார் இயற்றிய பாடல் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நன்கு இசையமைக்கப்பட்டிருந்தது. பாடலின் வரிகள் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்த குடியின் பெருமையைச் சொல்வதாகவும் வாளும் வேலும் கொண்டு எதிரியை வெற்றி கொண்ட சாகசத்தையும் கண்ணகியின் கற்பின் பெருமையையும் உள்நுழைத்திருந்தது.
இந்த இடத்தில் எனக்கு ஒரு கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. சமத்துவம் என்பது இன, மத, மொழி அடிப்படை என்று கொள்கையுடன் உள்ளவர்களுக்கு பெண்களுக்கும் ஆண்களுக்குமான சமத்துவம் என்பது இரண்டாம் பட்சமாகக்கூட கருதக் கூடிய நிலையில் தன்னும் இருக்கிறார்களா? கலைக்கு அரசியல் இல்லை என்கிறார்களா அல்லது மக்களிடம் செல்கின்ற கலை என்றால் இப்படித்தான் இருக்கும் அதில் எல்லாம் நீங்கள் நுண்ணவதானிப்புச் செலுத்தினால் மக்கள் விரோத அரசியலாகிவிடும் என்கிறார்களா? புரியவில்லை. சம உரிமை இயக்கத்தின் சமத்துவக் கொள்கைக்கு பங்கம் விளைவிக்கின்ற எந்த நிகழ்வும் அங்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று நிகழ்வுக்கு முன்னராக அமைப்பாளர்கள் தெரிவித்திருந்ததும் ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது.
இந்தச் சமத்துவத்தில் பால் சமத்துவம், வயது சமத்துவம், ஆண்டான்-அடிமை சமத்துவம், எல்லாமே குதிரையில் தாவிச் சென்றது.
வர்க்கப்புரட்சி வெற்றியடைந்த பின் அனைத்து ஒடுக்குமுறைகளிற்கும் தீர்வு கிடைத்து விடும் என்ற பழைய வாய்ப்பாடுகள் எல்லாம் பல விதமான ஆய்வுகளிற்குட்படுத்தப்பட்டு, சமூகத்தில் அனைத்துத் தளங்களிலம் சமத்துவத்தைப் பேணும்பொழுதுதான் அதிகாரம் ஒடுக்குமுறை இயந்திரமாக செயற்படாதிருப்பதற்கான சாத்தியங்கள் உண்டு என்பது தெளிவாகி உள்ளது.
இங்கு இடதுசாரித்துவத்தை தாங்கள் அணிந்துள்ளதாகக் கருதுபவர்கள், ஏனைய ஒடுக்குமுறைகளைப் பேசுகின்ற இசங்கள் மீதான ஒரு தொடர்பற்ற நிலையைத் தொடர்ந்து பேணி வருவது காத்திரமான ஒரு சூழலாகத் தெரியவில்லை.
பிரச்சாரங்கள் மட்டுமே சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டு வராது. பிரச்சாரங்கள் வெறுமனே அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப ஆட்சேர்ப்புக்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடும். ஆனால் சமூகத்தில் ஏற்படுத்தப்படுகின்ற மாற்றம் என்பது பிரக்ஞை சார்ந்தது. பிரக்ஞையற்ற செயற்பாடு ஆரோக்கியமான விளைவுகளைத் தரும் என்று எண்ணுதல் அபத்தம்.
2. கவிதை வாசிப்பு
கவிஞர் இம்ரான்
இலங்கைத் தீவில் சகலரும் இன, மத, மொழி பாகுபாடின்றி வாழ்வதற்கான சூழலை நாமே தொலைத்தோம் என்று அழகான கவி வரிகளில் ஆழமாக எடுத்துச் சொன்னார் கவிஞர். மனித நீதியை நிலைநாட்டுவதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்திருத்தலே அவரவர் உரிமையை நிலைநாட்ட வழிவகுக்கும் என்றும் சொன்னார்.
அந்த ஆழமான வரிகளிடையே தோன்றிய ஒரு செய்தி என்னை ஆச்சரியப்படுத்தியது.
“நாங்கள் என்ன ஆபிரிக்கக் காட்டிலா வாழ்கிறோம்?”
உலகின் உலர்வலயப் பிரதேசங்கள் பலவற்றிலும் காடுகள் இருக்கின்றன. அங்கும் காட்டு மிருகங்கள் இருக்கின்றன. ஆனால் ஏன் கவிஞர் எல்லாவற்றையும் கடந்து ஆபிரிக்காவைத் தெரிவு செய்தார் என்பது எனக்குச் சிக்கலானது. ஆபிரிக்கர்களை இழிவாகக் கருதுகின்ற, அவர்கள் நாகரீகத்தில் தாழ்ந்தவர்கள் என்கின்ற கருத்தாக்கத்திற்கு கவிஞர் தன்னையுமறியாமல் சென்று விடுகிறார். நாங்கள் ஆபிரிக்கர்களை விட உயர்ந்தவர்களாகவல்லவா இருக்கவேண்டும் என்ற தொனியானது, கவிதையில் கூற வந்த இன, மொழி, மத பாகுபாடற்று வாழவேண்டும் என்ற தன்மையை சிதறடித்துவிடுவதாகவே நான் கருதுகிறேன்.
இங்கு நம்மவர்கள் அரேபியர்களையும் ஆபிரிக்கர்களையும் அடையான்இ கறுவல் என்று விழிக்கும் போதிருக்கும் நிறவாதத் தொனியையும் இதனையும் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. நாங்கள் மட்டும்தான் சிறந்தவர்கள் என்று எண்ணுகின்ற எந்த இனமும்இ எந்த மொழியும்இ எந்த மதமும், எந்த மனிதரும் அடக்குமுறையின் மூலமே தமது இருத்தலை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இந்த இடத்தில் நாம் சுதந்திரம் பற்றிப் பேச முடியாது.
3. ஏகலைவன் – நாட்டுக்கூத்து
எழுத்து இயக்கம் – சைமன் விமலராஜன்
ஐரோப்பாவின் மெலிஞ்சிமுனை கூத்துப்பட்டறையினால் தயாரித்து அளிக்கப்பட்டது.ஏற்கனவே புராண இதிகாசக் கதைகளில் சொல்லப்பட்டு வருகின்றது போலன்றி, தனது மானசீகக்குருவான துரோணருக்கு தனது கட்டைவிரலைத் தானம் செய்ய மறுத்து அதற்கான காரணத்தையும் விளக்குவதாக அமைந்திருந்தது.
ஏற்கனவே ஏகலைவனின் கதை தெரிந்திருந்தவர்களிற்கு இது ஒரு மாற்றுக்குரல். ஒடுக்கப்படுபவர்கள் காலாகாலத்திற்கும் அப்படியே இருக்கப்போவதில்லை. அதிகாரங்களின் சதிகளை உணர்ந்துகொள்ளும் நாள் ஒன்று அவர்களுக்கு வரும் என்பதனை உணர்த்தியது. ஆனால் நாட்டுக்கூத்து என்ற கலைவடிவத்தை இந்த மேடையேற்றம் பிரதிபலித்ததா என்றால், ஒப்பனைகள் தவிர்த்து, இல்லை என்று எவ்வித அங்கலாய்ப்பும் இன்றிக் கூற முடியும். கூத்திற்கான அதிர்வுகளோ தாளக்கட்டுகளோ எதுவும் கேட்கவில்லை.
4. முன் திட்டங்களின்றிய பரீட்சார்த்த கள அளிக்கை
சுவிஸில் இருந்த வருகை தந்திருந்த இரு கலைஞர்கள் (விஜயன் – பற்றிக்) இந்த அளிக்கையை வழங்கினார்கள். அவர்களுடைய அளிக்கை ஆரம்பமாவதற்கு முன்னராக, தாங்கள் இருவரும் தனிப்பட்ட முறையிலேயே இந்த அளிக்கையை அரங்கேற்ற வந்ததாகவும், சமஉரிமை இயக்கத்தின் குறிப்பேட்டில் பதியப்பட்டிருப்பதுபோல் அதன் அரசியல் கொள்கைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு இங்கு பிரசன்னமளிக்கவில்லை என்று குறிப்பிட்டனர்.
ஆனால் வாழ்க்கை என்பதே அரசியல்மயப்பட்டதுதான். எனவே நாங்கள் எதை எப்படித் தேர்வு செய்கிறோம் என்பதில் நிச்சயம் அரசியல் உண்டு. இவர்களின் ஆற்றுகை முழுவதும் அங்க அசைவுகளினாலும் ஒலிக்குறிப்புகளினாலும் தீர்மானிக்கப்பட்டிருந்தன. இந்த அளிக்கையானது பார்வையாளரின் புரிதலுக்கேற்ப உணர்ந்து கொள்ளப்படக்கூடிய ஒன்றாக இருப்பதானால் இதற்கான எண்ண அலைகளை தவிர்த்துள்ளேன்.
5. போர்க்களத்தில் சுற்றுலா – நாடகம் (உரையாடல் மொழி – சிங்களம்)
நாடகத்தின் இயக்குனர் விஜித குணரத்ன.
ஆறு நடிகர்கள் இதில் பங்கு பற்றி இருந்தனர். நடிகர்கள் ஒவ்வொருவரும் அந்தப் பாத்திரங்களை பிரக்ஞையுடன் கையாண்டார்கள் என்பதும் எவ்வித மிகைப்படுத்தலும் இன்றி அவர்களுடைய நடிப்பு இருந்ததென்பதும் கண்கூடு.
மேடையமைப்பு, ஒலி,ஒளி, slide projection, நடிப்பு அத்தனையும் பிரமாதம். நடிப்பு என்பது தங்கள் அளவில் வெளிப்படுத்துவது மட்டுமல்ல, பார்வையாளரையும் இறுதிவரை தங்களுடன் கட்டிப் போட்டிருப்பது என்பதை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தினார்கள். அங்கு மொழி என்பது ஒரு பெரிய சிக்கலாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் பார்வையாளர்கள் மேடையைவிட்டு விலகுவதற்கான கணங்கள் அங்கிருக்கவில்லை. இப்படியான ஒரு நாடகத்தை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு நிச்சயம் நன்றி சொல்ல வேண்டும்.
இயக்குனர் விஜித குணரத்னவிற்கு நன்றியும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் தெரிவிப்பது தவிர்க்கமுடியாதது.
6. திறவுகோல் – நவீன நாடகம் (உரையாடல் மொழி – தமிழ்)
நாடகத்தின் இயக்குனர் தேவதாசன்
இந் நாடகம் பிரான்ஸ் நாட்டுக் கலைஞர்களால் அளிக்கை செய்யப்பட்டது.
இதில் ஏழு பெரியவர்களும் இரண்டு சிறுவர்களும் நடித்திருந்தார்கள். நாடகத்தின் மையப்புள்ளி, நிறையப் புள்ளிகளைக் கொண்டிருந்தது.
அ) பெண்குழந்தைகள் மீதான பாரபட்சமான வளர்ப்பு முறை
ஆ) ஆதிக்க சாதியினரின் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை
இ) போர்ச்சூழல்
ஈ) குழந்தைப் போராளி
உ) பெண் ஒடுக்குமுறை
ஊ) அதிகார சக்திகளினால் சிறை வைக்கப்பட்டிருக்கும் நீதி
நாடகத்தின் இறுதியில் ஒடுக்குமுறைக்குள்ளானவர்கள் அதனை உணர்ந்து அதிலிருந்து வெளியேறும் முதல் படியை எடுத்து வைக்கிறார்கள். சிறுவர்கள் அவர்களது பாத்திரத்தை மிகவும் கச்சிதமாகச் செய்தார்கள். நவீன நாடகம் என்று குறிப்பிட்டிருந்தாலும் அதற்கான போக்கினை என்னால் அடையாளம் காண முடியவில்லை. மிகைப்படுத்தப்பட்ட நடிப்பும் சமூகத்தை முன்னுக்கு கொண்டு போகவேண்டுமென்னும் அக்கறையுடன் கூடிய வார்த்தைகள் மட்டும் ஒரு கலைவடிவத்திற்கு போதுமானதல்ல. பார்வையாளர்களைச் சென்றடைவதற்கும் இவை போதாமைதான்.
ஒலி, ஒளி, மேடையமைப்பு குறித்து இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாமோ என்று தோன்றியது. நாடகத்திற்கு வழங்கப்பட்ட இசை பின்னணியில் போனதுபோல் முன்னணியில் நின்றது. அந்த இசைக்கும் நாடகத்தின் மனநிலைக்கும் இருந்த தொடர்பென்ன என்பது எனக்குப் பிடிபடவே இல்லை. மேடைமேல் நிமிர்ந்து நெடிதாகவும் வளைந்தும் தொங்கியும் நின்ற ஒலிவாங்கிகள் பார்வையாளருக்கு மேடைச் சட்டகத்தின் மீதான குவிப்பை முறித்துப் போட்டன.
பாரம்பரியக் கலைவடிவங்கள் பேணப்பட வேண்டும். ஆனால் அவை அடிமைக் கலாச்சாரத்தைப் பேணுகின்றவையாக இருக்கின்ற பட்சத்தில் அவற்றின் உள்ளடக்கங்கள் மீது கரிசனை கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பு, சமூகத்தை முன்னகர்த்துகிறோம் என்கிற பணியை முன்னெடுப்பவர்களுக்கு நிச்சயம் இருக்கவேண்டும். கலை என்பது மக்களது என்று கூறி தப்பித்துக் கொள்வது நியாயமாகப் படவில்லை.