மயானகாண்டம்“(பிந்தியபதிப்பு) – ஓர் பார்வை

 யோகா கௌமி (அளவெட்டி யாழ்ப்பாணம்)

வரலாற்றின் ஊமைஅலறல்களை அடுத்துவரும் சந்ததிக்கு எடுத்துச் செல்வது என்பது காலத்தின் கண்டிப்பான தேவைப்பாடு. சிலசெயல்களைப் பிறர் செயற்படுத்துகையில் காலமறிந்து செய்த செயல் என்று பாராட்டத் தோன்றும். அதுவும் காலத்தைப் பிரதிபலிக்கும் இலக்கியங்கள் என்றும் வரவேற்கத் தக்கவை. இன்றும் அவ்வாறான ஒரு நிறைவான இலக்கியத்தைப் படிக்க நேரிட்டது. நான்கு கவியாளர்கள் இணைந்து வார்த்தை கோர்த்து வலிகளைக் கட்டமைத்து உணர்ச்சிப் பிரவாகங்களை வார்த்து வைத்த கவித் தொகுப்பு நூல் “மயானகாண்டம்“(பிந்தியபதிப்பு) என்றால் மிகையில்லை.

ஈழத்தில் வெளிவரும் எந்தப் படைப்பிலும் இழையோடி நிற்கும் பிரதான இழப்புக்களின் ரணம் இக் கவிதையாளர்களின் சிந்தனைவெளிகளிலும் புரையோடிப்போயிருக்கின்றது. கிரிஷாந், பிரியாந்தி, கிருபா, லிங்கேஸ் ஆகிய நான்கு கவிஞர்களின் கவித்திரட்டாக வெளிவந்திருக்கும் இந்நூல் போர்தந்த வடுக்களின் இருநிலை அனுபவங்களை உள்ளும் புறமுமாக விவரித்து நிற்கின்றது.

கவிகளுக்கான மையப் பொருண்மை என்பது நம் சமூகத்திடமிருந்தே எடுக்கப்பட்டு நம் சமூகத்திடமே கையளிக்கப்பட்டுள்ளது. நான்கு கவிஞர்களும் வினா எழுப்பி விடை கூறும் கவி மரபையும் கையாண்டிருக்கின்றனர். கிரிஷாந்தின் முதற் கவிதையான என் தந்தையின் வீடு கவிதையின் இறுதிவரிகள் பெரும்விடையை கொண்டு முற்றுப் பெற்றிருக்கக் காணலாம்.

”வீடென்பது
கிடைப்பதா பெறுவதா?
என் மகனே
வீடென்பது பேறு”

தானே தோன்றிய  சொற்தொடர் ஒவ்வொன்றும் இனிக்கும் கவிதைத் துணிக்கை என்னும் மேற்கோளை இந்நுலைப் புரட்டுகையில் பல பக்கங்களிலும்   நினைவுகூர்ந்தேன்.

”நான் சப்தங்கள் கழன்ற ஓவியம்”(காடுகளும் நிறங்களும்- பக்கம்11)
”எனதன்பே உறக்கம் மீள்தல் சாவே நிரந்தரம்” (வழிதொடருதல்- பக்கம்23)
“இன்மைகளின் ஏகாந்தப் பிராந்தியத்தில் வானமற்று விரிகிறது அகரூப வெளி ”-  (ஆயிரமாவது இரவும் அடுத்து வந்த பகலும்- பக்கம்25)
”வனைந்தவனே சிதைக்கின்றான் பாத்திரங்களை”- (வனைந்தவனே சிதைக்கின்றான்-பக்கம்48)

சில வார்தைகளுக்கு உள்ளத்தை சல்லடையாக்கும் வித்தை தெரியும். அந்தவகையில் “நிர்வாணம்“ கவிதையில்

”நிர்வாணம்
அவர்களுக்கு மதம்
உனக்கு மரணம்”

என்பது சட்டென்று சுட்டுவிடும் வார்த்தைகளாய் பிரியந்தி முடித்திருக்கக் காணலாம். பெண்மையின் மௌனவலி பேசும் படலங்களாகவும், இயற்கையின் வார்ப்பாகவும் காலம் தந்த காயங்களின் பேருண்மை உரைப்புக்களின் தொகுப்பாகவும் இவர் கவிதைகள் அமைந்திருக்கின்றது.

மரணம் மலிந்த தேசமொன்றில் வாழும் உவ்வொரு கவிஞனுக்கும் இருக்கின்ற உணர்ச்சிக் கொந்தளிப்பு கிருபாவின் கவிதைகளில் வேரூன்றிக் கிடக்கின்றது.

”கிளைகள் வேரறுப்புச் செய்யும்
காலம் ஒன்றில்
பகலின் பாதியைத்
தின்றிருந்தது இரவு”
என்னும் வரிகளே இதற்குத் தக்கசான்று.

யதார்த்தம் எதுவென்று சுட்டிக் காட்டவும் இக் கவிதைகள் தயங்கவில்லை. லிங்கேசின் ”புதைந்துவிட்ட எச்சங்கள்” கவிதையில் வரும்

”தாகமும் பசியும் தலைதூக்கும்
ஒவ்வொரு நொடியும்
மானமும் பற்றும் மண்ணுள்
புதைந்துவிட்டன”

என்னும் வரிகள் நம் சந்தர்ப்பவாதத்தையும் வாழ்தலிற்காய் நாம் இழந்து கொண்டிருப்பவற்றையும் அப்பட்டமாய் எடுத்துரைக்கின்றன.

முப்பத்தொரு கவிதைகளிலும் கையாளபட்டுள்ள சொற்பிரயோகங்கள் புதுக் கவிதை மரபிற்கு பலம் சேர்ப்பனவாகவும் அமைந்துள்ளன. உண்மையில் கவிதை ஒரு  பிரபஞ்ச மொழி அது மேல்நிலைச் சிந்தனைகளின் பயணம் என்கின்ற பேருண்மையை இக் கவிதைத் திரட்டில் உணர்ந்து கொண்டேன்.
இதுபொன்றதொரு படைப்பு நம்மவர்களால் படைக்கப்பட்டு வரலாற்றின் சாட்சியங்களாய் உயிர்கொள்வது வரவேற்கத்தக்கதே! படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.

-பிரம்மராட்சசி-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *