யாழினி யோகேஸ்வரன் (இலங்கை)
உயிர்த்த பறவை ஒன்று
உயிர்ப்பின்றி வாழ்கின்றது
இறந்த காலங்களெல்லாம்
துயர் மறந்து வாழ்ந்த அது
உயிர்த்த பொழுதினில் மட்டும்
உளம் நொறுங்கிப் போனது
இடர் கொண்ட இப் பறவை
குறைப்பட்டு வாழ்க்கை தனில்
விடிவில்லா விளைநிலம் கண்டு
விக்கித்துப் போயிற்று
கூப்பிடு தூரத்தில் எதுவுமில்லை
கூவி அழைக்க….
பூங்காடுகள் எங்கும்
சருகாகிப் போயின
நட்சத்திரங்களைத் தொலைத்து
வான்மேகம் அழுதது
கார்முகில் தோட்டங்கள் எல்லாம்
கண்கட்டி மறைகின்றன
உயிர்த்த பறவையின்
வாழ்வும் அதற்கான இருத்தலும்
தூரப்படுத்தப்படுகின்றது
மிக மிக தூரப்படுத்தப்படுகின்றது
மறுபடி இந்தவாழ்வு
மரணித்துப் போகாமல்
மனம் திறந்து பேசுவோம் இனி என
உத்வேகம் கொண்டது
உயிர்த்த பறவை ஒன்று.