சமூகத்தின் பொறுப்புணர்வை கேள்விக்குள்ளாக்கியுள்ள நெடுங்கேணி தாண்டிக்குளம் சம்பவங்கள். பதிலளிக்கப் போவது யார்?

சந்தியா இஸ்மாயில்

– பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு

 வடக்குக் கிழக்குப் பகுதியில் யுத்தத்திற்குப் பின்னர் சமூக ரீதியில் தனித்து விடப்பட்ட பெண்களும் அவர்களது குழந்தைகளதும் வாழ்வாதாரப் பிரச்சினை என்பது மேலோங்கியே உள்ளது. யுத்தத்தால் கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட மற்றும் காணாமல் போன குடும்பங்களில் பெண்களே எஞ்சியவர்களாக உள்ளார்கள். அவர்களே தமது குடும்பத்திற்கான பொருளாதார பலத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் எமது நாட்டைப் பொறுத்தவரை பெண்களுக்கான தொழில் வாய்ப்பு மற்றும் உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பன போதுமானதாக இல்லை.

நாளாந்தம் உயர்ந்து செல்கின்ற விலைவாசிகளோடு பெண் தலைமைத்துவக் குடும்பப் பெண்கள் போராட வேண்டியவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறான பொருளாதார ஈட்டத்தினை நிறைவேற்றச் செல்லும் போது அவர்களுக்கான மற்றும் அவர்கது பி;ள்ளைகளுக்கான பாதுகாப்பு முழுமையாக இல்லாத சூழலிலேயே பெண்கள் மற்றும் சிறுவர்களது வாழ்க்கை தற்போது காணப்படுகின்றது. இதற்கு வறுமை முக்கிய காரணமாகின்றது. இதுமட்டுமன்றி தற்போது யுத்தம் இடம்பெற்ற பகுதிகிளில் ஆண் அங்கத்தவர்கள் இல்லாத குடும்பங்களில் வன்முறை இடம்பெறுகின்ற தன்மை அதிகரித்து வருகின்றமையையும் அவதானிக்க முடிகின்றது.

சிதினங்களக்கு முன்னர் வவுனியா தாண்டிக்குளத்தில் வறுமை காரணமாக பெண்ணொருவர் தனது 03 குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி விட்டு தானும் தற்கொலை செய்ய கிணற்றில் குதித்துள்ளார். அவரை அயலவர்கள் காப்பாற்றி உள்ளார்கள். அவர் தற்போது விசாரணைக்கு முகங்கொடுத்து வருகின்றார். அவரது 03 குழந்தைகளும் இறந்து விட்டன. குறித்த பெண் தொடர்பான தகவல்களை ஆராய்ந்த போது அவருக்கு 05 பிள்ளைகள் இருப்பதாகவும் அனைவரும் பதின்மூன்று வயத்pற்கு உட்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களில் முதல் இரண்டு பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளும், அடுத்த மூவரும் பெண் பிள்ளைகளாவார். சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று மூத்த மகன் பாடசாலை சென்றிருந்தார். அடுத்தவர் பாதிக்கப்பட்ட பெண்ணது தாயாருடன் இருந்துள்ளார். இறந்த குழந்தைகள் மூவரும் பெண் குழந்தைகளேயாவார். ஒரு குழந்தைக்கு வயது மூன்றரை எனவும் அடுத்த இருவரும் இரண்டு வயதிற்கு உட்பட்டவர்; எனவும் கூறப்படுகின்றது. இதேபோலவே நெடுங்கேணி சேனைப் பிளவு பிரதேசத்தைச் சேர்ந்த 07 வயதுச் சிறுமியொருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதால் உடல் மற்றும் உள ரீதியில் பலத்த தாக்கத்துக்குள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்விரு சம்பவங்கள் தொடர்பாகவும் சமூக அங்கத்தவர் என்ற வகையில் எம்மொவ்வருவரது கடமை மற்றும் பொறுப்புணர்வை நாமே கேள்வி கேட்க வேண்டியுள்ளது.

ஏனெனில், தற்போது தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட பெண் தொடர்பாக எமது பார்வையானது எவ்வாறு உள்ளதெனப் பார்த்தால், குறித்த பெண் ஒரு மனநோயாளி எனவும் அவர் மனநோய் காரணமாகவே பிள்ளைகளைக் கிணற்றில் தள்ளி விட்டுள்ளார் என்ற கருத்துப்பட செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் குறித்த தாய் பற்றி அறியுமிடத்து அவர் தனது குழந்தைகளது பராமரிப்பிற்காகப் பொறுப்புணர்வுடன் நடந்துள்ளதை தெரிந்து கொள்ள முடிந்தது. கணவன் வேறொரு வாழ்க்கைக்குச் சென்று விட்ட பின்னர் குறித்த பெண் வறுமையால் பெரிதும் துன்பப்பட்டுள்ளார். இத்தாய் தனது பிள்ளைகளை வளர்ப்பதற்காக உதவி கேட்டு அரச, அரச சார்பற்ற மற்றும் தொண்டு நிறுவனங்களையும் நாடியுள்ளார். கிராம சேவையாளர், பிரதேச செயலாளர், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் என அவர் தேவை நாடிய இடங்களில் அவரது பிள்ளைகளுக்காக அவர் எதிர்பார்த்த உதவி எட்டவில்லை. உறவினர்கள், சுற்றத்தார் மற்றும் சமூகத்தினரால் கவனிக்கப்படாத இப்பெண் ஏற்கனவே மனரீதியில் பாதிக்கப்பட தன்மையினைக் கொண்டிருந்தார். இருப்பினும் பிள்ளைகளது விடயத்தில் தன்னால் இயன்றவரை தேவைநாடிச் செல்லக் கூடிய அனைத்து இடங்களுக்கும் சென்றுள்ளார். அனைவரும் வழமையான கட்டமைப்பினூடாகவே இவரது கோரிக்கையையும் அணுகியிருந்தனர். இப்பெண்ணினது விசேட தேவைப்பாட்டினை எவரும் கவனத்தில் கொள்ளாத காரணத்தால் இவர் விரக்தியுற்று சமூகத்தின் மீது நம்பிக்கையற்று தற்கொலைக்குத் துணிந்துள்ளார். ஆனால் இறுதியில் நாம் அவருக்கு மனநோயாளி என்ற மிகவும் மட்டகரமான பெயரையே சூட்டியுள்ளோம். எமது பொறுப்பற்ற தன்மை காரணமாகவே 03 பச்சிளம் குழந்தைகளது உயிர்கள் பறிபோயுள்ளன. அதேபோலவே பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட சிறுமியினது குடும்ப நிலை பற்றிப் பார்த்தால்அக்குடும்பமும் தந்தையால் கைவிடப்பட்ட குடும்பமாகவே காணப்படுகின்றது.

சிறுமியினது தாய் நாட் கூலி வேலை செய்து தனது 03 பெண் குழந்தைகளையும் வளர்த்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இங்கு பாதிக்கப்பட்ட இருவரதும் வறுமைக்குட்பட்டவர்கள். இவர்கள் எதிர்காலத்தில் சமூக ரீதியில் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் எத்தகையது என சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். வறுமைப்பட்ட இருவரும் குறிப்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் உட்பட மூவரும் ஆணாதிக்க மற்றும் அதிகார பலத்துடன் போராட வேண்டி ஏற்படும். இவ்வேளையில் எமது பங்கு எவ்வாறு இருக்கப் போகின்றது? என்பதை தனிநபர் ஒவ்வொருவரும் சிந்தித்தல் அவசியமாகும். எதிர்காலத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் சமூகத்தோடு மீள் இணையும் போது எமது சமூகம் பாதிக்கப்பட்டவர்களை அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்வதில்லை. குறிப்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் மற்றும் அவரது சகோதரிகள் மீதான எம்மவர்களது கண்ணோட்டமும் கரிசனையாக இருக்கப்போவதில்லை. குறிப்பாக பாதிப்புள்ளானோரை மற்றும் அவரது குடும்பத்தை குறிப்பாக சிறுமியின் தாயின் மீதே சமூகம் தாக்கிப் பேசும். இவ்வாறான துர்ப்பாக்கிய நிலை இறுதியில் பெண்களுக்கே வந்து சேருகின்றது.

மேற்கூறப்பட்ட இரு சம்பவங்களும் வறுமை மற்றும் சமூகத்தினரின் பொறுப்பற்ற தன்மை காரணமாக இடம்பெற்ற இரு துயரச் சம்பவங்களாகும். போருக்கு பிற்பட்ட மீள் கட்டுமானத்தில் இராணுவம் மற்றும் முதலாளித்துவ வர்க்கம் இரண்டும் ஆணாதிக்க அதிகார வர்க்கத்தோடு இணைந்து இருப்பதனால் பெண்கள் மற்றும் சிறுவர்களது பாதுகாப்பு மற்றும் சமத்துவம் என்பன மழுங்கடிக்கப்படுகின்றன. தனிப்பட்ட பொறுப்புணர்வு இன்மை, வறுமை, கட்டமைப்புகளின் ஒழுங்கின்மை போன்ற காரணங்களால் பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அசமத்துவப் போக்கானது வலுப் பெற்று வருகின்றது. குறிப்பாகப் போருக்குப் பின்னரான சூழலில் பெண்களை அசமத்துவ நிலையில் வைத்திருப்பதானது வளம் மற்றும் பொருளாதார சமத்துவத்தை அவர்களுக்கு வழங்காது விடுகின்றது.

இதனால் சமாதானப் பெறுபேற்றைப் பெண்கள் அனுபவிக்க முடியாது வன்செயல்களால் நாளுக்கு நாள் ஆளாகின்றனர். யுத்ததத்தின் பின்னரான அபிவிருத்தி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படும் எந்தத்திட்டமும் இவ்வாறான பெண்களுக்கும் பயனளிக்கவில்லை என்பதை இவ்விரு சம்பவங்களும் எடுத்துக் காட்டுகின்றன இவற்றைக் களைய வேண்டுமானால் பெண்களது பொருளாதார பலத்தைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தல் வேண்டும். தற்காலத்தில் ஆண்களால் கைவிடப்படுகின்ற குடும்பங்களது பொருளாதார நிலையும் பாதுகாப்பு நிலையும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இவ்வவுனியா சம்பவங்கள்; போன்று மேலும் பல சம்பவங்கள் நடைபெறுவதற்கு இவை காரணமாக அமைந்து விடும். ஆகவே, ஏற்கனவே யுத்தத்தால் மனவடு களையப்படாது வாழுகின்ற பெண்களை மேலும் வலுவிலக்கச் செய்கின்ற செயற்பாடுகளையே எமது பொறுப்புணர்வற்ற செய்கைகளினால் நாம் செய்து வருகின்றோம். பெண்கள் சிறுவர்களுக்கான தனியான அமைச்சு, ஒவ்வொரு மாவட்டத்திற்குமான தனியான சிறுவர் பாதுகாப்பு மற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பொறுப்பான பதவிகள் வழங்கப்பட்டிருந்தும், பெண்கள் விடுதலை மற்றும் பெண்கள் சமவுரிமை தொடர்பாக வெளிநாட்டு உதவிகளைப் பெறும் அமைப்புகள் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்ற இத்தருணத்தில் வாய் மூடி இருப்பதானது அவற்றின் இருப்புப் பற்றி கேள்வி கேட்க வைக்கின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்கு சமூகத்தின் அங்கத்தவர் என்ற ரீதியில் எமது ஒவ்வொருவரதும் பங்கு எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதே எம்முன்னால் உள்ள கேள்வியாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *