பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பது (International Day for the Elimination of Violence against Women) ஒரு துன்பியல் நிகழ்வை ஞாபகப்படுத்தும விதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் , 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது அது வருடந்தோறும் நவம்பர் 25ஆம் நாளை பெண்களிக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாளாக கடைபிடிக்க வேண்டும் என்பதே அந்த தீர்மானம். பின்னர் அவ்வாண்டு டிசம்பர் 17 ஆம் ஐ.நா.பொதுக்குழு மேற்கண்ட நாளை பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு நாளாக அறிவித்தது.
அந்த துன்பியல் நிகழ்வு என்ன என்பதை பலரும் அறிந்து கொள்ள வேண்டும். 1960 காலகட்டம் அது. டொமினிக்கன் குடியரசை ராபெல் ட்ரூஜிலோ ((Rafael Trujillo) சர்வாதிகாரி ஆண்டு வந்தான். இவனது ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்போர் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படுவர். ட்ரூஜிலோவின் ஆட்சியில் பெண்கள் எண்ணிலடங்கா சொல்லணாத்துயரை எதிர்நோக்கினர். பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட காட்டு மிராண்டித்தனத்தை கண்டித்து மிரபல் என்ற குடும்பப்பெயரை கொண்ட மூன்று சகோதரிகள் குரல் கொடுத்தனர். இச்சகோதரிகள் ஒன்றிணைந்து சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக அரசியலிலும் குதித்தனர். இதை ஒடுக்க நினைத்த ட்ரூஜிலோ அவர்களை கொல்வதற்கு உத்தரவிட்டான். 1960 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி மிரபல் சகோதரிகள் கொடூரமாக ஒரே இடத்தில் கொல்லப்பட்டனர். சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்களுக்கெதிராகவே இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள் “மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்” என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கொடுமையின் சின்னமாக மாறினார்கள்.அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினத்தையே ஐக்கிய நாடுகள் சபை பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கும் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.அன்றைய தினத்தைத் தொடர்ந்து 16 நாட்களுக்கு பாலியல் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு உலகளாவிய ரீதியில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.இந்தச் செயற்பாடுகள் சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10 ஆம் தேதி வரை தொடரும்.
பெண்களுக்கெதிரான வன்முறை அவர்களின் உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ ஏற்படுத்தப்படும் துன்புறுத்தல் ஆகும் இதில் பல வன்முறைகள் பெண் என்ற காரணத்தால் சமூகம் ஏற்றுக்கொண்டு நியாயப்படுத்துவவைகளே அதிகமானவை. குறிப்பாக வீட்டு வன்முறைகள், பாலியல்பலத்காரம், பாலியல் சுரண்டல்கள், பாலியல் துஸ்பிரயோகம் என்பன சமூகத்தினால் அங்கிகரிக்கப்பட்டவையாகவே இன்னமும் நமது சமூகத்தில் காணப்படுகின்றது. திராவகம் வீசுதல், சீதனக்கொடுமைகள், வீட்டில் மனைவியை,சகோதரியை,தாயை பிள்ளையை துன்புறுத்தல்,கர்ப்பிணிகளை கொலை செய்தல்,பெண் கடத்தல் சம்பவங்கள், கௌரவ கொலைகள், வேலைத்தளங்களில் வன்முறைகள், பெண் சிசு கொலை இப்படியாக இன்னும் பல. இதன் காரணமாக இன்றைய பெண்கள் விவரிக்க முடியாத மன அழுத்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது முற்றிலும் உண்மை. இதைத் தான் “பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்று சொல்லும் பொழுது உலகில் நாகரீகமான சமுதாயம் என்று எதுவுமேயில்லை” என கோபி அனான் ஒரு முறை வருத்தம் தொனிக்க சொல்லி இருந்தார்.
பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவேண்டுமாயின் பெண்கள் தொடர்பாக சமூகம் கொண்டுள்ள படிமம் மாற்றியமைக்கப்படவேண்டும். அம்மாற்றம் ஒவ்வொரு மனிதனின் நடத்தை மற்றும் மனப்பாங்கில் உள்ளாந்த மனமாற்றம் வரவேண்டும். அப்போது தான் நிலையான அபிவிருத்திக்கு சாத்தியாமான சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்பதே யதார்த்தமாகும். எனவே பெண்கள் அமைப்புக்கள் சமூக மட்டத்தில் இவ்விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவும் வன்முறையாளர்களைச் சமூகம் அடையாளம் கண்டு சட்டத்தின் முன் தண்டனை வழங்க சுதந்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதன் மூலமாகவே பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவரமுடியும்.
இன்று பெண்களுக்கெதிராக வன்முறைகளை எதிர்ப்போராக ஒரு குறிப்பிட்ட பிரிவினரே தன்னை அடையாளம் காட்டிக்கொள்கின்றனர். அவர்களிடம் உங்களுக்காக போராடும் உரிமையை விட்டு விட்டால் அவர்கள் களப்போராளிகளாக இல்லாமல் பெண்ணியவாதிகள் என்ற போர்வையிலேயே தன் சுய பிம்பத்தை மறைத்து கொள்வார்கள் என்பதை பெண்கள் உணர வேண்டும்.
முதற்கண் பெண்கள் தமக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்து வாய் திறக்க வேண்டும். தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் மற்றுமொரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்ற உத்வேகமே இப்படியான சம்பவங்களை முடியுமானவரை தடுக்க வழி கோலும். சகோதரிகளே எத்தனை காலம் தான் வாய் மூடி மௌனியாக இருக்கப்போகின்றீர்கள்? பெண் கொடுமையை எதிர்த்து சர்வாதிக்கெதிராக குரல் கொடுத்து மரணத்தை தழுவிய மிரபல் சகோதரிகள் போன்று தியாகம் செய்யச்சொல்லவில்லை. உங்களுக்கோ அக்கம் பக்கத்தில் உங்களுக்குத் தெரிந்த, தெரியாதவர்களுக்கோ ஏற்படும் வன்முறைகள் குறித்து சரி வாய் திறக்கலாமே!
இந்தக் கட்டுரையை தோழி ஒருவர் ஊடறுவுக்கு அனுப்பி வைத்துள்ளார் இது அவரால் எழுதப்பட்டதா? அல்லது வேறு எங்காவது இணையத்தளங்களில் இருந்து எடுக்கப்பட்டதா எனத் தெரியவில்லை அதனால் இதை அனுப்பித்த தந்த தோழிக்கும் வேறு இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கும் எமது நன்றிகள் -ஊடறு ஆர்