கெகிறாவ ஸஹானா
கால்களைத் தூக்கி
மடித்து வைத்தபடி
வானிலே வட்டமிட்டு
ஊனைத் தேடுகின்றேன்.
அது என் வாழ்க்கை.
கொடுநகமும் கூர்வாளும்
என்னுடம்பு.
என்றாலும் மற்றநேரங்களில்
ஒரு வலையாய் விரிந்து
அன்புப் போர்வையை வீசுகிறேன்
பூமியின்மீது.
கூட்டம் கூட்டமாய் உயிரைப் பறிக்கும்
ஊமை வித்தைகள்…
சிரித்துக்கொண்டே குழிக்குள் தள்ளும்
கொடுங்காட்சிகள்..
அன்பாய்ப் பழகியோரை ஏமாற்றுவதற்கே
வழிபார்க்கும் அயலவன்….
சகோதர இரத்தத்தை உறிஞ்சிக்குடித்து
கடைவாயைத் தடவும்
சிங்கத்தின் உறவுப் பற்கள்;…
ஐயோ! மனித வாழ்க்கை என்ன
என்னுடையதைவிட
இவ்வளவு இழிவானதா?