நன்றி இக்பால் செல்வன் ( கோடங்கி)
பெண்ணின் திருமணத் தேடல்களில் வெண்ணிறம் என்பது அனைத்து இந்திய ஆண்களின் எதிர்ப்பார்ப்பாக போய்விட்டது. வெண்ணிறம் கிடைக்காத பட்சத்திலேயே மாநிறம், கருநிறம் எனப் போகின்றது ஆண்களின் தேடல்கள். இதை நம்மவர்கள் என்று தான் உணரப் போகின்றார்களோ? அதுவரைக்கும் தொலைக்காட்சிகளில் Fairness Cream விளம்பரங்களும், திருமண சந்தையில் வெள்ளை பெண் வேண்டும் என்ற மானங்கெட்ட விண்ணப்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
நம் ஊரில் உள்ளவர்கள் எதோ ஆஸ்கார் உலக சினிமாவுக்கான விருது என்ற எண்ணத்தை ஆழமாக பதிந்து கொண்டுள்ளனர். ஆனால் அகாதமி அவார்டுகள் எனப்படும் ஆஸ்கார் விருதுகள் அமெரிக்க சினிமாவுக்கு கொடுக்கப்படும் விருதுகள். ஒரே ஒரு விருது மட்டும் சர்வதேச படத்துக்கு கொடுப்பார்கள். அது அந்தளவுக்கு கௌரவமான ஒன்றாக கருதப்படுவதும் இல்லை. அதை விட பன்மடங்கு சிறப்பு வாய்ந்த சர்வதேச திரைப்பட விழா விருதுகள் பல உள்ளன.
ஆலிவுட் படங்களாகட்டும், பிற மொழி படங்களாகட்டும் இரண்டையுமே எனக்கு அறிமுகமானது தூர்தர்சன் தொலைக்காட்சி ஊடாகத் தான். மாநில மொழி திரைப்படங்களையும், சில பழைய ஆங்கில படங்களையும், நிறையவே இந்தி படங்களையும் ஒளிபரப்புவார்கள். அவ்வாறு தான் பிறமொழி படங்களை நான் சிறு வயது முதலே அறிந்துகொண்டேன்.
ஆனந்த விகடன் போன்ற ஜனரஞ்சக பத்திரிக்கைகள் அவ்வவ்போது எழுதும் பாரசீக உட்பட வெளிநாட்டுப் படங்கள் குறித்த கட்டுரைகளே பிற மொழி படங்களை பற்றி எனக்கு அதிகம் தகவல்களை தந்தன. அது போக, கல்லூரிக் காலங்களில் வகுப்புக்களை மட்டம் போட்டு விட்டு படம் பார்க்கப் போகும் போது எல்லாம் கம்மி விலைக்கு Ticket கிடைப்பது என்னவோ பெரும்பாலும் ஆலிவுட் ( டப்பிங் ) படங்கள் ஓடும் தியட்டர்களில் தான். சில நேரம் சத்யம், தேவி தியட்டர்கள் தான் கதி என கிடப்போம்.
ஒருமுறை இதையும் தாண்டி மலையாள, கன்னட படங்களை அறிமுகம் செய்து வைத்தான் எனது நண்பன். அப்போது எல்லாம் பிறமொழி படங்கள் மீது கடுப்பே மிஞ்சும், ஒன்று மொழிப் பிரச்சனை மற்றொன்று நமது வழக்கமான ரசனைகளுக்கு மாறாக அவை இருக்கும். ஆன போதும் ஆனந்த தியேட்டரில் எதாவது ஒரு பிறமொழி படங்களை பார்ப்பதை எனது நண்பன் வழக்கமாகி வைத்திருந்தான். அவ்வாறே நானும் தொடங்கினேன். சில சமயம் அலயன்ஸ் பிராங்கைசில் எதாவது பிரஞ்சு படம் போட்டால் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை என்றாலும் எதாவது காட்சித் துண்டுகளுக்காகவாவது போய்விடுவேன். காலப் போக்கில் அதுவே நல்ல பிற மொழி படங்களையும் ரசிக்க வைக்கத் தொடங்கியது.
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா தொடங்கிய பின்னர், பெரும்பாலான படங்களை தவமிருந்தாவது பார்த்து விடுவோம். அப்போது எல்லாம் இணையம் அவ்வளவு பிரபலம் இல்லை. நெட் செண்டர்களுக்கு போய் படம் பார்க்கும் அளவுக்கு கணனி ஞானமோ, பணமோ, நேரமோ கிடையாது. அவ்வாறாக பிறரின் திணிப்புக்களில் தொடங்கிய சர்வதேச திரைப்படங்கள் குறித்த பரிச்சயம் இன்று என்னை பல படங்களை பார்க்க வைத்திருக்கின்றது.
இந்த முறை நான் அதிகம் எதிர்பார்த்தது “12 Years a Slave”, “Dallas Buyers Club”, “Nebraska” ஆகிய திரைப்படங்களைத் தான். இந்த மூன்று படங்களுமே இம்முறை ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்தமையால், ஒரு வித ஆர்வம் தொற்றிக் கொண்டது. இருந்த போதும் அதிகளவு விருதுகளை குவித்தது என்னவோ “Gravity” திரைப்படம் தான். எனக்கு என்னவோ அந்த படத்தில் அவ்வளவாக மனம் ஒட்டவில்லை. ஆன போதும் முதன்முறையாக அல்போன்சோ குவாரன் என்ற ஒரு லத்தீன் அமெரிக்க இயக்குநருக்கு சிறந்த இயக்குநர் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியே. “Dallas Buyers Club” என்ற குறைந்த பட்ஜட் திரைப்படத்துக்கு மூன்று விருதுகள் கிடைத்தன. இந்த திரைப்படம் எய்ட்ஸ் மற்றும் தற்பாலினத்தோர் குறித்த மிக அருமையான கதைக்களத்தை தாங்கி வந்திருந்தது.
ஆஸ்கார் அகாதமி விருதுகள் பெரும்பாலும் அமெரிக்காவின் வெள்ளை இனத்தவருக்கு போலி புகழை தரவல்ல ஒரு வீண் விளம்பர வைபவம் என்றே நான் எப்போதுமே கருதுவதுண்டு. ஆனால் இம் முறை மக்களின் சினிமா ஒன்று வெற்றி பெற்றிருந்தது மகிழ்வை தந்தது. சிறந்த திரைப்படத்துக்கான விருது “12 Years a Slave” படத்துக்கு வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் இத் திரைப்படம் கிட்டதட்ட $140,000,000 டாலர்களை வசூலித்தது. அது போக சிறந்த திரைப்படம், சிறந்த துணை நடிகை, மற்றும் சிறந்த திரைக்கதை ஆகியவற்றுக்கான மூன்று ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றுள்ளது.
ஏன் இந்த திரைப்படத்தை பற்றி எழுதுகின்றேன் என்றால் அடிமை முறை அமுலில் இருந்த காலத்தில் வாழ்ந்த கறுப்பின மக்களின் வலிகளையும், ரணங்களையும் பிரதிபலிக்கும் ஒரு திரைக்காவியம் என்றே சொல்லலாம். 1853-யில் வெளியான 12 Years a Slave என்ற புத்தகம் அந்தக் காலத்தில் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய புத்தகம். இதனால் ஏற்பட்ட கருத்து மாற்றமே ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுக்கும் அடிமை முறையை ஒழிக்க எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு என்ற நாட்டுக்கும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க வரலாற்றிலேயே இந்த யுத்தம் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. ஆபிரகாம் லிங்கனின் தலைமையில் நடந்த இந்த யுத்தத்தின் முடிவில் தான் அமெரிக்கா தனது எல்லையை விரிவுபடுத்திக் கொண்டதோடு, கறுப்பின கொத்தடிமை தொழிலாளர்களுக்கு விடுதலையும் கிடைத்தது.
இவ்வாறு வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இந்த புத்தகம் காலப் போக்கில் மறக்கப்பட்டது. இதன் அச்சுப் பிரதிகள் எல்லாம் அழிந்தே போய்விட்ட நிலையில், 1968-யில் லூசியானா மாநிலத்தில் ஒரு பண்ணையில் வளர்ந்த சியு ஏகின் ( Sue Eakin ) என்ற 12 வயது வெள்ளையின சிறுமியினால் விளையாட்டாக பண்ணை வீட்டு பரணில் கண்டு எடுக்கப்பட்டது. அதன் பின் அவரின் தொடர் முயற்சியால் அந்த புத்தகம் குறித்து பல மேலதிக தகவல்களை சேகரித்து மீண்டும் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தின் கதை தான் 12 Years a Slave என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகி உலக அளவில் திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது
குறிப்பாக இந்த திரைப்படத்தில் நடித்த அறிமுகமாகி இருக்கும் லுபிடா நியோங்கோவுக்கு சிறந்த துணை நடிகை விருது கிடைத்துள்ளது. முக்கியமாக அவர் விருதை வாங்கிய பின் மேடையில் பேசியது அழகைக் கொண்டாடுவதாக போலித்தனங்களை சுமந்து கொண்டு திரியும் நமக்கு எல்லாம் கன்னத்தில் ஓங்கி அறைந்தது போல இருந்தது.
கென்யாவைச் சேர்ந்த லுபிடா நியோங்கோவை பார்க்கும் நமக்கு முதலில் தோன்றுவது அவரின் கறுத்த மேனி தான். ஒருவர் இவ்வளவு கறுப்பாக இருக்க முடியுமா? அதுவும் ஒரு பெண் கறுப்பாக இருந்து விட்டால், இந்த சமூகம் அவளை எவ்வாறு நோக்கும். அதுவும் வெள்ளை நிற மோகம் கொண்ட வெளி உலகுக்குள் புகும் போது, அழகின் இலக்கணம் என்பதையே வெள்ளை நிறம் என்பதை எழுதா விதியாக பாவித்துக் கொண்டிருக்கும் இந்த கேடு கெட்ட உலகில் இவ்வளவு கறுப்பு நிற மங்கை அனைவரையும் பொறாமை கொள்ள வைக்கும் அளவுக்கு பேரழகியாய் தோன்றி, தனது முதல் படத்திலேயே ஆஸ்காரை தட்டிச் சென்றுள்ளார் இந்த இளஞ்சிட்டு. கறுப்பின் அழகு வெளுப்பின் அழகு என்ற பாடலின் உள்ளர்த்தம் இப்போது தான் புலப்பட்டது. லுபிடா நியோங்கோ எவ்வாறு தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினார், எத்தனை வலிகளையும், கேலிப் பேச்சுக்களையும் கடந்து இந்த நிலை எட்டியுள்ளார் என்பதை அவரது சில நிமிடப் பேச்சுக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளது.
இதற்கு முன்னரும் பல கறுப்பின பெண்கள் விருதுகளை வாங்கி இருந்த போதும், என்னவோ லுபிடா நியோங்கோவின் பேச்சை உலகம் முழுவதும் அழகின் இலக்கணத்தின் பொருளை விளங்கிக் கொள்ளாமல் வர்த்தகப்படுத்தப்பட்டு வரும் முகப் பூச்சுகளிலும், வெள்ளை நிறங்களிலும் தேடிக் கொண்டிருக்கும் நமக்கு ஒரு பாடமாகவே அமைய வேண்டும்.
தனது பதின்ம வயதில் தான் கறுப்பாக இருந்ததை நினைத்து அழாத நாளில்லை, கடவுளை தொழாத தருணங்கள் இல்லை என அவர் மேடையில் உருகிப் பேசியது இவரைப் போல உலகில் எத்தனைப் பெண்களை போலி அழகுத்தனங்களை திணித்து நாள் தோறும் தோல்வியடைச் செய்து வருகின்றோம். கொஞ்சம் மாநிறத்தோடு போனால் வெற்றி கிடைக்கவில்லை, வேலை கிடைக்கவில்லை, முகப்பூச்சை பூசி வெளுத்துக் கொண்டு போனதும் வெற்றி காலடியில் கொட்டுவது போல நமது தொலைக்காட்சிகள் காட்டும் போது எல்லாம் நமது வீடுகளுக்குள் எத்தனை பெண்களின் தன்னம்பிக்கையை தகர்த்து எறிந்து கொண்டிருக்கின்றோம் என்றே தோன்றியது.
“ஒவ்வொரு நாளும் கறுப்பாக இருந்ததுக்கு வருந்தாத நிமிடங்களே இல்லை ” என அவர் தொடர்ந்து பேசினார். ஆனால் அவரின் சிந்தனையை மாற்றியமைத்தது அலக் வெக் என்ற சூடானைச் சேர்ந்த அழகி தான் எனவும், தனது பிம்பத்தை அவரிடத்தில் கண்டதாக அதுவே இன்று இவரை வெற்றியின் உச்சியில் அமர்த்தியுள்ளது எனவும் கூறினார்.
கல்கி கோச்சலின் என்ற பாலிவுட் நடிகை பிரஞ்சு பெற்றோருக்கு இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு நன்றாக தமிழும், இந்தியும் பேசத் தெரியும். ஒருமுறை இந்துஸ்தான் டைம் பத்திரிக்கையில் எழுதுகின்றார் ” இந்தியாவில் பிறந்து வளர்ந்ததால் இங்குள்ள இனவெறித்தனம் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும், ஆனால் சில சமயங்களில் என்னாலே அதனை சகிக்க முடிவதில்லை. சிறிய நகரங்களுக்கு போகும் போது, அங்குள்ள ஆண்கள் அரைகுறை ஆங்கிலத்தில் என்னைப் பார்த்து “Hey baby”, “Sexy lady.” எனக் கூறுவதைக் கேட்கும் போது கோபம் கோபமாக வரும். சில பத்திரிக்கையாளர்கள் என்னிடம் பேட்டி காணும் போது, நான் ஏன் ஆலிவுட்டில் நடிக்கவில்லை, இந்தியா உங்களுக்கு பிடித்திருக்கின்றதா என எதோ நான் நேற்று தான் இந்த நாட்டுக்கு வந்தது போல கேள்விக் கேட்கின்றனர்” என தனது மனக் குமுறலை கொட்டித் தீர்த்துள்ளார்.
நிறம் ஒரு குறையல்ல, நிறம் ஒவ்வொருவரின் அடையாளம். அழகுக்கும் நிறத்துக்கும் சம்பந்தம் இல்லை. அழகு ஒருவர் தம்மை எவ்வாறு துணிவுடன், பரிசுத்ததுடன், குறைவில்லாமல் வெளிப்படுத்திக் கொள்கின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது என்பதை இவர் இன்னொருமுறை நிரூபித்துவிட்டார். இனி இவரின் நிறத்தில் தனது பிம்பத்தைக் காணும் லட்சக்கணக்கான பெண்கள் கறுப்பு நிறத்தால் மனம் புழுங்காமல், தாழ்வுணர்ச்சிக் கொள்ளாமல் புறப்படக் கூடும். குறிப்பாக இந்தியாவில் உள்ள பெண்கள் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் ஒவ்வொருவரின் தன்மானத்தையும், தன்னம்பிக்கையையும் இந்த சமூகம், இந்த பொருளாதார வலயம், இந்த ஊடகங்கள் காலில் போட்டு மிதித்து அழிக்கப் பார்க்கின்றன. அதனை உடைத்து கூட்டுக்குள் இருந்து கிளம்பும் வண்ணத்துப்பூச்சிகளை போல புறப்படுதல் மிக மிக அவசியமாகும்.
இந்த முறை ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் எனது எண்ணத்தையும் கருத்தையும் நிறைத்து நீங்கா இடம் பிடித்தவள் லுபிடா நியோங்கோ என்ற அந்த இளம் பெண் தான் என்பதில் துளி கூட ஐயமில்லை. ஆஸ்கார் போக உலகம் முழுவதும் அவர் கிட்டத்தட்ட 24 விருதுகளை இந்த வெற்றிப் படத்தில் நடித்தமையால் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிறம் ஒரு குறை என்று அவர் அன்றே புழுங்கிப் போய் கிடந்திருந்தால், அவரது குடும்பமும் ஊக்கம் தராது விட்டிருந்தால், இன்று உலகம் இவரை அறிந்திருக்கப் போவதுமில்லை, வரும் தலைமுறையினர் பலருக்கும் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக உதித்திருக்கப் போவதுமில்லை என்பது உண்மை.
இந்திய மக்களின் பொது நிறமான கரும் நிறமும், மாநிறமும் ஒதுக்கப்பட்டதாகவே ஆக்கிவிட்டனர். காலம் காலமாக ஆரியர், கிரேக்கர், இஸ்லாமியர், ஐரோப்பியர் என அயலகத்தில் இருந்து வந்தவர்களின் வருணம் வெள்ளை என்பதால், அதிகாரத்தின் நிறம் வெள்ளை என்பது எழுதாத சட்டமாகி விட்டது. இருபதாம் நூற்றாண்டின் கல்வியும், சமூக மாற்றங்களும் கூட நிற பேதங்களை நீக்கிவிடவில்லை. வெளிர் நிற மோகத்தை பிற்காலத்தில் வந்த சினிமா, பத்திரிக்கைகள் முதல் இன்றைய இணையம் வரை நன்கு வளர்த்துவிட்டன. அந்த ஊடகங்களில் முக்கிய பங்காற்றியவர்கள் பலரும் ஆதிக்கச் சாதியினர் என்பதால் அவற்றை மாற்ற ஒருவரும் முயலவில்லை.
பெண்ணின் திருமணத் தேடல்களில் வெண்ணிறம் என்பது அனைத்து இந்திய ஆண்களின் எதிர்ப்பார்ப்பாக போய்விட்டது. வெண்ணிறம் கிடைக்காத பட்சத்திலேயே மாநிறம், கருநிறம் எனப் போகின்றது ஆண்களின் தேடல்கள். இதை நம்மவர்கள் என்று தான் உணரப் போகின்றார்களோ? அதுவரைக்கும் தொலைக்காட்சிகளில் Fairness Cream விளம்பரங்களும், திருமண சந்தையில் வெள்ளை பெண் வேண்டும் என்ற மானங்கெட்ட விண்ணப்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
மிகச் சிறந்தக் கட்டுரை. என் வலைப்பூவில் இக்பாலுக்கும் ஊடறுவுக்கும் நன்றியுடன்
வாசிப்புக்காக …
“தொலைக்காட்சிகளில் Fairness Cream விளம்பரங்களும், திருமண சந்தையில் வெள்ளை பெண் வேண்டும் என்ற மானங்கெட்ட விண்ணப்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.” (y)